“வணக்கம், இன்று நாம் செல்வி. வைதேகி அவர்களை நேர்காணல் செய்ய வந்துள்ளோம். இவர் நாற்பது வயதில் அடைந்திருக்கும் உயரம் அசாத்தியமானது. வணிகத் துறையில் லண்டனில் முதுகலை பட்டம் பெற்ற இவர், நண்பர்களுடன் இணைந்து ஓர் விளம்பர ஸ்தாபனத்தை நிறுவி, அதன் சென்னை கிளைக்கு இயக்குனராக இயங்கி வருகிறார்.
அது மட்டும் இல்லாது வணிகவியல் கட்டுரைகளை தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறரர். அவ்வப்போது சிறுகதைகள் எழுதி வரும் இவர், இந்தாண்டு ‘வன நாயகி என்கிற நாவலை எழுதியுள்ளார். விற்பனையில் சாதனை படைக்கும் இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களும், வன விலங்குகளும் நமது கற்பனைக்கு எட்டாத வகையில் மிகவும் அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் ஒரு சினிமாவாகவும் இக்கதை வரவிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
மூன்றே மாதத்தில் நாவலை எழுதியுள்ளேன் என்று கூறும் இந்த சிங்கப் பெண்ணை வாருங்கள் சந்திக்கலாம்!” என்று அறிமுக உரையை முடித்து நேர்காணலுக்கு தயாரானார் தொகுப்பாளர். ஒளிப்பதிவாளரும் காமெராவுடன் தயாரானார். வைதேகி அவள் வீட்டு சோபாவில் கம்பீரமாக அமர்ந்திருந்தாள்.
“சொல்லுங்க மேடம், எப்படி உங்களுக்கு இவ்வளவும் செய்ய நேரம் கிடைக்குது? ஒருவேளை நீங்களும் உங்கள் நாயகி போல மந்திர சக்தி படைத்தவரா?”
“ஹ … ஹா ..ஹா… நான் என்ன மந்திரம் போட்டு எனக்கு மட்டும் 48 மணி நேர நாளை உருவாக்கினேனா என்ன? என் நேரத்தை சரியாக நிர்வாகம் பண்ணறேன் அவ்வளவு தான். இது என் திறமைக்கு கிடைத்த வெற்றி. நான் சிங்கம் எல்லாம் இல்ல, வெறும் மனிஷி தான்,” என்று சிரித்தபடியே பதிலளித்தாள் வைதேகி.
“நீங்க ஒரு எழுத்தாளர் மட்டும் இல்ல, ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரும் கூட, சமீபத்துல ஒரு ரீல் போட்டீங்க, அதுல பெண்களோட நேரம், திறமை, எல்லாம் வீட்டு வேலை செய்தே அழிஞ்சுடுதுன்னு சொன்னீங்க. திருமணங்கள் நிறைய நேரங்களில் பெண்களை சிறை படுத்துதுன்னு வேற சொன்னீங்க. அப்போ, நீங்க திருமணம் செய்து கொள்ளாம இருப்பதும் உங்க வெற்றிக்கு காரணாம்னு சொல்லலாமா?” என்று நீட்டி முழக்கினார் தொகுப்பாளர்.
“என் வெற்றிக்கு காரணம் எனது உழைப்பு மட்டுமே, அதுல மாற்றுக் கருத்தே இல்லை. அதே சமயம், நான் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொள்ளாம இருக்கிறேன், அது என்னோட தனிப்பட்ட சுதந்திரம். திருமணம் செய்யாம இருக்கறதால எனக்கு நிச்சயம் நிறைய நேரம் மிச்சப்படுது.
என் வீட்டில் சமையலுக்கு, மற்ற வேலைகளுக்கு ஆட்களை போட்டுட்டேன். வீட்டு நிர்வாகம் என் அப்பா தான் செய்யறார். இந்த காரணங்களால என்னால் என் வேலையிலும், எழுத்திலும் மட்டும் கவனம் செலுத்த முடியுது. அதனால் கூட மூன்று மாதத்தில், எனது வேலை பளுவிற்கு நடுவில், ஒரு முழுநீள மாயாஜால நாவலை எழுத முடிந்தது.” என்றாள் வைதேகி.
“அப்போ திருமணம் செய்துகிட்டு, வீட்டில் ஆரோக்கியமான உணவை விருப்பப்பட்டு செய்யும் ஒரு திருமதியால் உங்க அளவிற்கு வெற்றி அடைய முடியாதுன்னு சொல்லறீங்களா?” என்று இம்முறை அவர் வைதேகியை மடக்கினார்.
அவளது பதில் அவளுக்கே சவாலாக ஆனதை உணர்ந்த அவள் நிதானமாக பதிலளித்தாள். “அப்படி சொல்லல, ஆனால், வீட்டில் சமைச்சா தான் ஆரோக்கியம்னு சொல்ற பழக்கம் நம்ம இந்திய சமுதாயத்தை விட்டு முதல்ல ஒழியனும். இது நம் பெண்களை சமையலறையிலேயே வைக்க ஆண்கள் கையாளும் ஒரு உத்தி. இந்த ரெடி மேட் உப்புமா பாக்கெட் எல்லாமே வீட்டுல ரவையோ, அவலோ வாங்கி செய்வதை போலவே விலையிலும், ஆரோக்கியத்திலும் சமமாத்தான் இருக்கு. அதே மாதிரி தான் ரெடி மேட் தோசை மாவு, சப்பாத்தி, இடியாப்பம், நறுக்கின கறிகாய் எல்லாத்துலையும். வீட்டில் இருக்கும் பெண்கள் இதையெல்லாம் யோசிக்கணும்.”
நேர்காணல் திசைமாறிப் போவதை உணர்ந்த தொகுப்பாளர், “உங்க புத்தகத்தை பத்தி சொல்லுங்க மேடம், உங்க கற்பனா சக்தி அபாரமா இருக்கே? எப்படி இந்த கதையை உங்களால் எழுத முடிந்தது?” என்றார்.
“வன நாயகியை எழுதும்போது நான் காட்டையும் விலங்குகளையும் மட்டும் கற்பனை செய்யல, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையையும் அதில் பதிவு செய்தேன். நான் வணிக உலகில் மனிதர்களிடையே, அவர்களின் வெற்றிக்கான வேட்கை, தான் வாழ்வதற்கு மற்றவரை அழித்தல், போன்ற குணாதீசியங்களை பார்த்திருக்கிறேன். அது மிருகங்கள் கிட்டேயும் இருக்கு. இந்த அனுபவம் எனது நாவலுக்கு மிகவும் உதவியா இருந்தது.
என் சின்ன வயசுலயே என் அம்மா தவறிட்டாங்க. என்னை வளர்த்தது பாட்டி தான். அவங்களுக்கு வீடு தான் உலகம். வெளியில போகவே மாட்டாங்க. அவங்களை பார்த்து வளர்ந்த எனக்கு இந்த உலகமே வீடாக இருக்கணும்னு ஆசைப்பட்டேன். நிறைய பயணம் செய்தேன். அந்த பயணங்களும் இந்த நாவல் எழுத எனக்கு உதவி செய்தது.” என்றாள் வைதேகி.
இப்படியே எடக்கு மடக்கான கேள்விகளோடும் பதில்களோடும் ஒரு வழியாக நேர்காணல் முடிவுற்றது. வைதேகிக்கு உள்ளூர அதீத சந்தோஷம். இந்த நேர்காணலின் மறைமுக நோக்கமே அவளது முகவரின் துரித உணவுகளை விற்பது. அதனை சரிவரச் செய்து விட்டாள். அதோடு கூடுதல் சலுகையாக அவளது புத்தகத்திற்கும், வரவிருக்கும் சினிமாவிற்கும் விளம்பரம் செய்துகொண்டாள். கேள்விகளை கூட அவளது அலுவலக கூட்டாளிகளே எழுதி கொடுத்து, அது ஒரு காரசாரமான நேர்காணலாக இருக்குமாறு ஏற்பாடு செய்தனர்.
ஊடகவியாளர்களை வழியனுப்பிவிட்டு சமையலறை சென்றவளுக்கு, மேடை துடைக்கப்பட்டு, மேஜையில் சிற்றுண்டி எதுவும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. “அப்பா, என்னப்பா சாப்பிட ஒண்ணும் இல்லை!” என்றாள்.
“சமையல்காரி இன்னிக்கு லீவு மா. நான் இருந்த தோசை மாவை ஊத்தி சாப்பிட்டு விட்டேன். நீ அந்த துரித வகை உப்புமாவை பண்ணி சாப்பிடு.” என்றார்.
“அய்யோ அப்பா, அதுல கெடாம இருக்க நிறைய உப்பும், ரசாயனப் பொருட்களும் போட்டிருப்பாங்க. நான் கஞ்சி போட்டு குடிச்சுடறேன்.” என்றாள்.
இந்த பதிலை எதிர்பார்த்தவராக அவளது அப்பா சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “நீயே சாப்பிடாத ஒரு பொருளை எப்படி நீ உன் வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரை செய்யலாம்?” என்றார்.
அவளும் இந்த கேள்வியை எதிர்பார்த்தவளாக பதில் ஏதும் கூறாமல் சத்து மாவு கஞ்சியை கொதிக்க வைத்தாள்.
“சொல்லு வைதேகி, ஏன் இப்படி செய்யற?” என்றார் அவர் மீண்டும்.
“அப்பா, நான் ஒருத்தி வீடியோ போடறதால பெரிய மாற்றம் எதுவும் வந்துடாது. அதே மாதிரி வியாபாரம் வேற, என் உணவு பழக்கம் வேற. அந்த பாக்கெட்லயே அதில் இருக்கும் ரசாயானப் பொருட்களின் பெயர்கள் இருக்கு. அதை பார்த்து படிச்சுட்டு தானே மக்கள் வாங்கராங்க? அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றாள்.
“சாதாரணமா ஒருத்தர் வீடியோ போடறது வேற, நீ போடறது வேற. நீ ஒரு எழுத்தாளர், உனக்கு சமூகப் பொறுப்பு அதிகம் இருக்கணும். சமூக வலைதளங்களிலும் உனக்கு நிறைய ஃபாலோவர்ஸ் இருக்காங்க. அவங்களில் ஒரு 100 பேராவது வைதேகியே சாப்பிடராங்க நாம சாப்பிட்டா என்னன்னு வாங்கினா அதற்கு நீ தானே பொறுப்பு?”
“அப்பா, எல்லா விளம்பரங்களிலும் முதலில் போடற ‘பொறுப்புத் துறப்பு’ பலகையைப் போல, இந்த காணொளிலையும் போடுவாங்க. அதையும் மீறி மக்கள் தெரிஞ்சே அந்த பொருளை வாங்கினா அது அவங்களோட அலட்சியம். இந்த விளம்பரத் துறையே மக்களின் அவசர வாழ்க்கையையும், அலட்சியத்தையும் நம்பி தான் இருக்கு. அதோட ஒரு நாளோ, ஒரு மாசமோ, இந்த பொருட்களை சாப்பிட்டா ஒண்ணும் ஆயிடாது மக்களுக்கு. இந்த வணிகத்துல தர்மம் அதர்மம்னு ஒண்ணும் இல்லை. அதே போல தர்மத்தின் அளவுகோல் தான் என்ன? நான் இதுபோல எல்லா துறைகளிலும் உங்களுக்கு தவறுகளை காட்ட முடியும்!” என்றாள் வைதேகி. அவள் பேச்சிலிருந்த தீர்மானம், இதற்கு மேல் இதைப் பற்றி பேசும் மனநிலையில் அவள் இல்லை என்பதை குறிக்கும் விதமாக இருந்தது.
அவளது அப்பா வைதேகியின் போக்கை பார்த்து நிலைகுலைந்து போனார். சிறிது நேரம் மௌனமாக இருந்த அவர், “வைதேகி, உனக்கு தெரியாத தர்மமும் கிடையாது, நீதியும் கிடையாது. நாங்க உன்னை அப்படி வளர்க்கல…
நீ எழுதி இருக்கியே உன் கதாநாயகி யக்ஷி, 1000 யானைகளின் மண்டை ஓட்டை மாலையாக போட்டிருந்த பிரம்மாண்ட யக்ஷி, அவள் உன் கற்பனையில் தோன்றிய உருவமா? உன் நாவல் வன நாயகியில் வரும் பேசும் பக்ஷியும், தங்க நிற ஓநாயும் எல்லாமே உன் கற்பனையா? உன் பெயருக்கு என்ன அர்த்தம், அதாவது நினைவு இருக்கா? இல்லை, அதுவும் மறந்து போச்சா? உன் வெற்றிகளை சுயம்புவாகவும், உன் தவறுகளை அடுத்தவரின் அலட்சியமாகவும் சித்தரிக்கும் உன்னோட இனி பேசி எந்தப் பயனும் இல்லை.” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
அப்பாவின் பேச்சில் இருந்த ஆழத்தை கிரகிக்க அவளுக்கு வெகு நேரம் ஆனது. சோபாவிலேயே மலைத்து போய் அமர்ந்திருந்தாள்.
“பாட்டி, வைதேகின்னா என்ன அர்த்தம்?”
“அதுவா, நிமி நிமின்னு ஒரு ராஜா இருந்தான். அவன் ஒரு சமயம் ஒரு ரிஷியின் கோபத்திற்கு ஆளாகி ‘நீ தேகம் இல்லாம விதேகனா போ!’ என்று அவர் அவனுக்கு சாபம் கொடுத்துட்டார்..”
“இன்விசிபிள் மேனா?”
“ஆமாம், இன்விசிபிள் மேன் தான். அந்த ராஜா, தன் தவறை உணர்ந்து ரிஷி கிட்ட மன்னிப்பு கேட்க, ‘சரி, ஒரு கண் இமைக்கும் நேரம் நீ தெரிவ, அப்பறம் விதேகனா போயிடுவன்னு’ அவர் சொன்னார். அதனால தான் கண் இமைக்கற நேரத்தை நிமிஷம்னு சொல்லுவாங்க. இப்போ இருக்கற 60 நொடி கணக்கெல்லாம் அப்போ கிடையாது. அந்த விதேகன் வம்சத்தை சேர்ந்த ஜனக மகாராஜாவின் மகள் சீதைக்கு வைதேகி என்கிற பேரும் உண்டு. அதை தான் உனக்கு வெச்சேன்.
பூமா தேவியை போல பொறுமையும், லக்ஷ்மி தேவியை போல அதிர்ஷ்டமும், ஆளுமையும் இருக்கணும்னு உனக்கு அந்த பெயரை வெச்சேன்.” என்று அவள் பாட்டியோடு உரையாடியது காட்சியாக அவள் மனதில் ஓடியது. தொடர்ந்து அவள் கதைகள் மூலம் பாட்டியோடு சேர்ந்து பயணித்த அயோத்தியும், மிதிலையும், கிஷ்கிந்தையும், இலங்கையும், ஒன்றன் பின் ஒன்றாக நினைவிற்கு வந்தது.
ஒரு மாயத் துயிலில் இருந்து மீண்டெழுந்தது போல பாட்டியின் நினைவுகளும், இராமாயணத்தின் தர்மநெறியும் அவளுக்குள் எழுந்தது. அந்த உந்துதலோடு பாட்டி படித்து, ரசித்து, அனுபவித்த இதிகாசங்களும் புராணங்களும் நிறைந்த அலமாரியைப் பார்த்தாள் வைதேகி. அவள் கண்ணில் தென்பட்ட ‘சக்கரவர்த்தித் திருமகன்’ புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.
“அறம் வெல்லும். பாவம் தோற்கும். இதுதான் இராமாயணத்தின் சாராம்சம் வைதேகி. இதை என்னிக்கும் மறக்கக் கூடாது.” என்று பாட்டியின் குரல் அசரீரி போல அவளுக்கு ஒலித்தது.


அறம் வெல்லணும் பாவம் தோற்கணும் ! இது நடக்கணும்.
LikeLike