


குமுதம் வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகையா?
என் குடும்பத்தில் உள்ளோருக்கு அதிக தெய்வ பக்தியும் சென்டிமென்ட்களும் உண்டு. ஒரு சமயம், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஜெயேந்திரர் மடத்தை விட்டு வெளியேறிய செய்தி காற்றில் தீயாய்ப் பரவிய சமயத்தில், நாங்கள் வீட்டுக்குள்கூட, மறந்து போயும் அந்த நிகழ்வு பற்றி ஏதும் தவறாகப் பேசிவிடாமல் கவனமாக இருந்தோம்.
குருஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்குவது நம் கடமை என்றும் தவறாகப் பேசுவது மகா பாவம் என்பதும் எங்கள் குடும்பத்தின் கொள்கை.
அன்றைக்கு வழக்கம்போல் (குமுதம்) ஆபீசுக்குப் போய்விட்டு வந்த கணவர் கோபாலனின் முகத்தை ஆவலுடன் பார்த்தேன்.
பொதுவாக சில தம்பதிகளைப் பொருத்தவரையில் ஆபீஸ் விஷயங்களை வீட்டில் பேசினால் எரிச்சல் வரும்.. வாக்குவாதத்தில் கொண்டுவிடும்.
“போரடிக்காதீங்க. உங்க ஆபீஸ் விஷயங்களை உங்களோட வைச்சுக்குங்க” என்று சொல்லும் குடும்பத் தலைவிகளைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இங்கே நேர் எதிர்.
நானோ.. அலுவலகத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளக் காலை முதலே காத்திருக்க ஆரம்பிப்பேன். (சில சமயங்களில் அங்கிருந்து இவர் போன் செய்து அவசர வேலை ஏதும் சொல்வதும் உண்டு).
அதோடு, ஆபீசுக்குப் போனது முதல் வந்தது வரை இம்மி பிசகாமல் சொல்வார் (பத்து மணிக்கு ஆபீசில் நுழைஞ்சேன். 11க்கு டீ வந்தது. பதினொன்றரைக்கு ரங்கராஜன் சார் கூப்பிட்டு இன்ன அசைன்மென்ட்டைக் குடுத்தார். பதினொண்ணே முக்காலுக்குக் கிளம்பிட்டேன்” என்கிற ரீதியில் சொல்வார்.
பத்திரிகை ஆபீஸ் நிகழ்வு என்றால் அனைத்துமே சுவாரஸ்யம்தானே?
ஒரு சமயம்…
“இன்னிக்கு நான் ஆபீஸ் போனபோது பயங்கரமான.. அதிர்ச்சிகரமான ஒரு காட்சியைப் பார்த்தேன். ரா. கி ரங்கராஜன் தரையில் மல்லாந்து கிடந்தார். அவர் பக்கத்தில் கிட்டத்தட்ட அவர் மார்மேல் அமராத குறையாக ஜ ரா சுந்தரேசன் உட்கார்ந்து கையில் எதையோ தூக்கி அவரைத் தாக்கத் தயாராக இருந்தார்” என்று சொன்னபோது நடுங்கிவிட்டேன்.
ஐயோ. அவர்களுக்குள் சண்டையா?
அப்படி ஏதும் இல்லையாம்.
“திரும்பிப் பார்த்தேன். கார்ட்டூன் ஓவியர் உட்கார்ந்து கவனிச்சுக்கிட்டிருந்தார்.. ‘இப்டிதாம்ப்பா இந்த வார கார்ட்டூன் வரணும்,’ என்றதோடு, எந்த நபரின் படத்துக்கு மேல் எந்த அரசியல்வாதியின் பெயரை எழுத வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். அதாவது கார்ட்டூன் படத்துக்கான டெமான்ஸ்ட்டிரேஷன்.”
இதில் ஜோக் வேறு அடிப்பார்களாம். “நீ வேற என்ன மாதிரி வரைஞ்சுப்புடாத. (அரசியல் தலைவர் பெயரைக் குறிப்பிட்டு) அவர் வரணும் கார்ட்டூன்ல)” என்று விவரிப்பாராம்.
இசை ஞானமும் ஆர்வமும் கொண்ட ஜ ரா சுந்தரேசன் எப்போதுமே ஏதாவது பாட்டைப் பாடிக்கொண்டே வேலை செய்வாராம். இந்தக் கார்ட்டூன் போஸிலும்கூடக் கடைசியில் ஹம் செய்ததால்தான் என் கணவரால் அது சீரியஸ் விஷயம் இல்லை என்றே புரிந்ததாம்.
இதுபோல் தினமும் குறைந்தது ஒரு சுவாரஸ்ய சம்பவம் உத்தரவாதம். எனில் யாருக்குத்தான் அலுவலக அனுபவங்களைக் கேட்கப் பிடிக்காது?
இப்போது காஞ்சி மட சமாசாரத்துக்கு மறுபடியும் வருவோம்.
“வேதா நாளைக்கு அதிகாலைல காஞ்சீபுரம் போறேன்.. பேட்டி“ என்றார்.
அடடா. எந்த விஷயத்தைப் பற்றிப் பேசக்கூட வேண்டாம் என்று நினைப்போமோ அது பற்றிப் பேட்டியா? சற்றுக் கவலையாகவும் வேதனையாகவும் இருந்தது.
“நீங்க மாட்டேன்னு சொல்லலையா?” வியப்புடன் கேட்டேன். (மற்ற ஏதாவது அசைன்மென்ட் என்றால் மறுத்துப் பேச மாட்டார். அதற்கு அவசியமும் இல்லையே. ஆனால் இது?)
அவர் முகத்தில் நேர் மாறான உற்சாகம். “ஏன் மறுக்கணும். காலை நாலு மணிக்கு அலாரம்” என்று சொல்லியவாறு கடிகாரத்தைச் சுழற்றினார்.
அந்த வாரமே விளம்பரமும் வெளியானது “என்ன நடக்கிறது காஞ்சிபுரத்தில்..” என்று தலைப்பிட்டிருந்தார்கள்.
உண்மையில் விஷயம் என்ன தெரியுமா?
ரா.கி.ரங்கராஜன் என் கணவரிடம், “காஞ்சிபுரத்திற்குப் போய் அங்கே “பூ விற்பவர், சாலையோர உணவு விடுதி நடத்துகிறவர்கள், காய்கறிக்காரர்கள் ஆகிய எளியோரிடம் பேட்டி எடுத்துக்கொண்டு வாருங்கள். மொத்தம், நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் இருக்க வேண்டும்” என்றாராம். “ஜெயேந்திரர் பற்றி ஒரு வார்த்தைகூட வந்துவிடக் கூடாது. மற்ற எதைப் பற்றி வேணும்னாலும் அவங்க சொல்லலாம் இதுதான் நிபந்தனை” என்று சொல்லியிருக்கிறார்.
அதுதான் ‘என்னதான் நடக்கிறது காஞ்சிபுரத்தில்?’ மற்ற பத்திரிகைகள் வரிந்து வரிந்து ஜெயேந்திரரைப் பற்றி எழுத, அந்த விஷயத்தையே தொடாமல் மாற்றி யோசித்ததுதான் குமுதம். ஆனால் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் செம விற்பனை.
- ••
போன அத்தியாயத்தில் ‘பால் தவிர வேறு எதுவும் குடிக்காத சிறுவன்‘ (இப்போது Man) பற்றி எழுதினேன்.
மற்றொரு சிறுவன்(இப்போது வயது 46) பற்றி உங்களுக்கெல்லாம் சொல்லியே ஆக வேண்டும்.
என் கணவரின் நண்பர் ரமணனின் மகன் ஹரீஷ். எண்பதுகளில் சிறுவன். இப்போது வேண்டுமானால், ‘போலியோ’ என்ற பயங்கரத்தை உலகத்திலிருந்தே விரட்டிவிட்டோம் என்றாலும், அன்றைய தேதியில் விழிப்புணர்வு குறைவுதான்.
இந்தக் குழந்தை ஹரீஷுக்குக் கடுமையான ஜுரம் வந்து போலியோ அட்டாக் ஆகி… எட்டு வயதுச் சிறுவன் தவழ்ந்து தவழ்ந்து சென்று தன் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வது பார்க்க மிகவும் வேதனையாக இருக்கும்.
அவர்கள் வீட்டுக்கு ஒரு நாள் போயிருந்தபோது “ஹரீஷைக்கூட்டிக்கிட்டு அவன் அம்மாவும் அப்பாவும் மும்பை போயிருக்காங்க” என்று ரமணனின் அப்பா சொல்ல, அதுதான்
சுவாரஸ்யமான பேட்டியாயிற்று.
அவர்கள் போயிருந்தது மும்பைக்கு அருகில் இருந்த ‘சாங்க்லி’ என்ற கிராமம். அங்கே ஒரு பாரம்பர்ய வைத்தியக் குடும்பம் உள்ளது. அவர்கள் போலியோ பேஷன்ட்களுக்குச் சிகிச்சை தருகிறார்கள். (நம் புத்தூர்க்கட்டு மாதிரி அதன் மருந்துகள் குடும்ப ரகசியம்)
இது பற்றிய பேட்டிக் கட்டுரை எழுதலாமா என்று ஆபீசில் கேட்டு பச்சை சிக்னல் பெற்றாயிற்று.
அவர்கள் ஊரிலிருந்து வந்தபிறகு (உள்ளூர்க்காரர்கள் மற்றும் நண்பர்கள் என்பதால்) போய்ப் பார்த்தேன்.
மாதக்கணக்கில் அந்த சாங்க்லியில் தங்கி சிகிச்சை எடுத்து வர வேண்டும் என்றும் போக வர எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்றும் அங்கேயே போய்த் தங்கி, சமைத்துச் சாப்பிட்டுவிட்டு சிகிச்சை எடுத்துத் திரும்பினார்கள் என்றும் சொன்னார்கள். எழுதிக் கொண்டு வந்தேன்.
பிரமாதமாய்ப் பேட்டி எதுவும் தேறவில்லை. சிகிச்சை பற்றி அதிகம் எழுத முடியாது. மருத்துவ நிறுவனத்துக்கு விளம்பரமாகிவிடும் என்பதால் குமுத்தில் அனுமதிக்க மாட்டார்கள்.
மற்றபடி சவசவ என்றிருந்தது. சிகிச்சைக்குப் போய்விட்டு வருபவர்களிடம் இதைவிட என்ன எதிர்பார்க்க முடியும்? தவிர அவர்களை அதிகம் தொந்தரவு செய்துவிடுவேனோ என்ற பயமும் இருந்ததால் முக்கால் மணி நேரம் இருந்து, பேசிவிட்டுக் கிளம்பினேன்.
இவரிடம் சொன்னபோது, அதை எழுதிக் குமுதத்துக்குக் கொடுக்கும் அளவுக்கு எதுவுமே தேறவில்லை என்று சொல்லிவிட்டார்.
வழக்கம்போல் மறுநாள் நண்பரைப் பார்க்கப்போனார். பேட்டி என்ற எண்ணத்துடன் பேசாமல் வெறுமனே விசாரித்துவிட்டு வந்தார்.
வீட்டுக்கு வந்து, தான் விசாரித்தறிந்த விவரங்களைச் சொன்னார் பாருங்கள். மைகாட். மி…க சுவாரஸ்யமான பேட்டிகள் ஐந்து எழுதலாம். நானும்தானே பேசினேன்? என்னைவிடக் குறைவான நேரம்தான் அங்கிருந்தார். கணவரும் மனைவியும் விவரங்களைக் கொட்டுமளவுக்கு இவர் விசாரித்திருக்கிறார்.
சாங்க்லி என்ற ஊரில் எந்த விதமான பெரிய வசதியும் கிடையாது. வீடு எடுத்துத் தங்கியும் கட்டுப்படியாகாது. அங்கு இவர்களைப் போலவே சிகிச்சைக்கு வந்த பத்துப் பதினைந்து குடும்பங்கள் ஒரு பெரிய சத்திரம் எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். நான்கு ஆண்கள் அத்தனை குழந்தைகளையும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வார்கள். மற்றும் நான்கு பேர் போய்க் காய்கறி மளிகை வாங்கி வருவார்கள்.
நான்கு பெண்கள் காய் நறுக்குவார்கள். நான்கு பேர் அடுப்பு வேலை. வாரம் ஒருமுறை டர்ன் மாறும். இதற்குள் யாராவது ஒரு குழந்தைக்கு அந்த செஷனுக்கான சிகிச்சை முடிந்து கிளம்புவார்கள். மற்றொரு குடும்பம் வந்து இணையும்.
சுயநலம் பார்க்காமல், அத்தனை பேரும் ஒரே விதமான வேதனையும் கஷ்டமும் அனுபவிப்பதால் வம்பு ஈகோவும் கிடையாது.
சிகிச்சை முறையிலும் நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தன. அவர்கள் அளிக்கும் பாரம்பர்ய எண்ணை தடவிக் குளிப்பாட்ட வேண்டும். அதை நான்கு பெண்மணிகள் அத்தனை குழந்தைகளுக்கும் செய்வார்கள்.
இடுப்பளவு மண்ணில் புதைய வைத்துச் சில மணி நேரங்கள் வைப்பார்கள். அந்த ஊரின் மண்ணுக்கே மருத்துவ குணம் உண்டாம்.
இரண்டு அம்மாக்கள் உட்கார்ந்து இந்தக் குழந்தைகளுக்கு மாற்றி மாற்றிக் கதைகள் சொல்வார்கள். ராத்திரிகளிலும் சிகிச்சை இருக்கும். ஷிஃப்ட் போட்டுத் தூங்குவார்கள்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருவார்களாம். எனவே பல மாநில உணவுகள் பழக்கமாயினவாம்.
“மொழிப் பிரச்னை வராதா?” என்று கேட்டேன்.
“பொதுவான பிரச்னை ஒன்றிருக்கும்போது எந்தப் பிரச்னையும் வராது என்றார்களாம். தன்னிச்சையாய் ஒருவருக்கொருவர் பேசுவது புரியும் என்றார்கள்.
இதில் மிகச் சிறப்பு என்ன தெரியுமா? இது போல் நாற்பத்தைந்து நாட்கள் வீதம் பல செஷன்கள் போய் வந்ததில் ஹரீஷுக்குத் தொண்ணூறு சதவீதம் சரியாகிவிட்டது. எழுந்து நிமிர்ந்து நின்று, தாங்கு கட்டை வைத்து இயல்பாய் நடக்க ஆரம்பித்து, நன்கு படித்து அதிகாரியாகிவிட்டான். இப்போது இரண்டு குழந்தைகள் (முறையே 10, 5 வயதுகள்).
பேட்டி வெளியானவுடன் ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்து குவிந்தன. இந்தப் பேட்டியால் பல குழந்தைகள் பலன் பெற்றார்கள். விளம்பரம் என்று நினைத்த எனக்கு வியப்பு, முழு அட்ரஸ் வெளியிட்டார்கள்.
சிகிச்சைக்கு அவர்கள் வாங்கும் கட்டணம் மிகக் குறைவு. இதுபோல் ஒன்றாய் இடம் எடுத்துத் தங்கிச் சாப்பிட்டதில் நிறையப் பணத்தை மிச்சப்படுத்தினார்கள்.
இதன் காரணமாக நிறைய மத்திய தர மக்களும் ஏழை எளியவர்களும் பயன்பெற்றார்கள். பெரிய பெரிய பணக்காரர்கள் கூட இங்கு வந்து சிகிச்சை பெற்றார்களாம்.
குமுதம் வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகையா? நீங்களே சொல்லுங்கள்..
நாட்கள் தொடரும்…
