100 வயதான பழுத்த காந்தியவாதியும், பத்மபூஷன் விருது பெற்றவருமான  கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்ற தியாகச் செம்மலைப் பற்றி ரவி சுப்பிரமணியம் அவர்களின்  இயக்கத்தில் நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்ற ஆவணப்படம் 2026 பெப்ரவரி 8 அன்று வெளியானது. 

 

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

 

( நன்றி விக்கிபீடியா )  https://tamil.wiki/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D)

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஜூன் 16, 1926 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகிலுள்ள அய்யங்கோட்டை கிராமத்தில் ராமசாமி, நாகம்மாள் இணையருக்குப் பிறந்தார்.  கிருஷ்ணம்மாள் பட்டிவீரன்பட்டி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். மதுரையில் பள்ளிப்படிப்பை ஆங்கில வழியில் பயின்றார்.  அதன் பிறகு அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். மதுரை மாவட்டத்தின் முதல் பெண் பட்டதாரியாக ஆனார். கிருஷ்ணம்மாள் தனது ஆசிரியர் பயிற்சியினைச் சென்னையில் முடித்தார்.

வார்தா ஆசிரமத்தில் சந்தித்த சங்கரலிங்கம் ஜெகந்நாதனை காந்தியின் ஆணைப்படி இந்திய விடுதலைக்குப்பின் 6, ஜூலை1950-ல் மணந்தார்.  மகன் பூமிகுமார். மகள் சத்யா. இருவரும் மருத்துவர்கள். பிப்ரவரி 2013-ல் சங்கரலிங்கம் ஜெகந்நாதன் காலமானார்.

2 பிப்ரவரி 1946-ல் காந்தி மதுரை வந்திருந்தபோது அவரை மூன்று நாட்கள் அருகிலிருந்து கவனிப்பதற்காக கிருஷ்ணம்மாளை நியமித்தார். அவ்வாறு காந்தி மீதும் காந்தியம் மீதும் ஈடுபாடு கொண்டார்.

காந்தி கிராமம் பல்கலை நிறுவனரான டி.எஸ் செளந்தரம் விடுதலைப்போரில் ஈடுபட்டபோது கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனும் உடன்பணியாற்றினார்.

1948-ல் உருவான காந்தி கிராம ஆசிரமத்தின் செயலாளர் ஆனார். காந்தி கிராம ஆசிரமத்தில் இணைந்த பெண்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஏற்றார்.

1950 முதல் சர்வோதயா இயக்கத்தினருடன் இணைந்து சமூகப்பணிகளை மேற்கொண்டார்.

1957-ல் முதுகுளத்தூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிருஷ்ணம்மாள்  மீள்குடியேறவும், நிவாரணம் பெறவும் உதவினார்.

1958-1962-களில் அரசு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அலுவலகம் அமைத்து அங்கே கிராம சேவகர் – கிராம சேவிகா என்னும் பணியாளர்களை நியமித்தது.  அதன் தலைவராக கிருஷ்ணம்மாளை நியமித்தார்கள்.   காந்தி கிராமம் வழியாகப் பல்லாயிரம் கிராம சேவிகாக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

1950-1952 ஆண்டுகளில் வினோபா பாவே பூதான இயக்கத்தை தொடங்கியபோது கணவன் மனைவி இருவரும்  வினோபாபாவேவுடன் பாத யாத்திரையாக சென்றார்கள். பின் தமிழ்நாட்டில் அவ்வியக்கத்தை தனியாக முன்னெடுத்தார்.

டிசம்பர் 25, 1968-ல் நாகைமாவட்டம் கீழ்வெண்மணியில் நாற்பத்தியிரண்டு விவசாயிகள் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு சர்வோதயா அமைப்பிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறினார். கீழ்வெண்மணியில் மக்களுக்கு ஆதரவாகப் போராடி சிறைசென்றார்.

கீழ்வெண்மணி அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டு “உழுபவனின் நில உரிமை இயக்கம்”(லாப்டி) (LAFTI: Land for Tillers’ Freedom) என்னும் அமைப்பை ஜெகந்நாதனுடன் இணைந்து 1981-ல் தொடங்கினர்.

நிலக்கொடை இயக்கத்தால் போதிய அளவில் நல்ல நிலங்கள் கிடைப்பதில்லை என்பதனால் வங்கிக்கடன் வழியாக நிதி திரட்டி குறைந்த விலையில் நிலங்களை வாங்கி அவற்றைத் தேவையான உழவர்களுக்குப் பிரித்துக்கொடுப்பது லாப்டியின் பணிமுறை. உழுபவர் மிகக்குறைந்த வட்டியுடன் நிலத்திற்கான விலையை வங்கியில் செலுத்தி நிலத்தை சொந்தமாக்கிக்கொள்ளலாம். இந்தமுறையில், 1982 முதல் 1986 வரை ஏறத்தாழ 175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர் நிலங்களை வாங்கி 5,000 குடும்பங்களுக்கு லாப்டி அளித்தது

கீழ்வெண்மணியில் பாதிக்கப்பட்ட எழுபத்து நான்கு குடும்பங்களுக்கு எழுபத்து நான்கு ஏக்கர் நிலத்தை அரசின் மூலம் அளிக்கும் வரை போராடினார்.

வத்தலகுண்டுவில் போராட்டம் நடத்தி உழுபவர்களுக்கான நிலத்தைப் பெற்றுத் தந்தார். லாப்டி மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்டு உழுபவருக்குக் கொடுத்தார். தனக்கு தானமாகக் கிடைத்த பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்.

கணவருடன், கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் பீஹாரில் நிலக்கிழார்களுடன் போராடி கையகப்படுத்தப்பட்ட 23,000 ஏக்கர் நிலத்தை மீட்டார்.

1986-ல் கீழத்தஞ்சை கடலோரத்தில் சூழ்நிலை சீர்கேட்டை ஏற்படுத்தும் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டபோது அவற்றை மூடுவதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தார். சட்டத்தின் உதவியுடனும், மக்கள் அமைப்புகளின் பின்புலத்துடனும் அவற்றை மூடுவதில் வெற்றிபெற்றார்.

இவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள்:
1. he color of Freedom’ –
2. சுதந்திரத்தின் நிறம்’ –
3. நடை நின்றுயர் நாயகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு (தி. சுபாஷினி, சர்வோதய இலக்கியப் பண்ணை)
4. புரட்சியில் பூத்த காந்திய மலர்கள் (சோலை, தன்னறம் நூல்வெளி)

இவர் பெற்ற விருதுகள்:

சுவாமி பிரணவானந்தா அமைதி விருது (1987)
ஜம்னலால் பஜாஜ் விருது (1988)
பத்மஸ்ரீ விருது (1989)
பகவான் மகாவீர் விருது (1996)
காந்திகிராம் கிராமிய அமைப்பு விருது (1998)
சம்மிட் பௌன்டேசன் விருது: சுவிட்சர்லாந்து (1999)
அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை (2006)
ஜெனிவா பெண்கள் அமைப்பின் சார்பாக (உலக அமைதிக்கு உழைத்த ஆயிரம் பெண்களில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பெயர் சேர்க்கப்பட்டது, 2006)
புரோப்ஸ் பரிசு: சியாட்டில் பல்கலைக்கழகம் (2008)
வாழ்நாள் சாதனையாளர் விருது, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை (2009)
அன்னல் அம்பேத்கர் விருது, தமிழக அரசு (2010)
பெண் சாதனையாளர் விருது, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி (2010)
அம்பேத்கர் சுடர் விருது, வி.சி.கட்சி (2011)
வாழும் மனிதம், ஸ்பார்க் அமைப்பு, மதுரை (2012)
சிறந்த பெண்மணி விருது, புதிய தலைமுறை, சென்னை (2013)
ஒன் வேர்ல்ட் ஃபாமிளி அவார்ட், ஜெர்மனி (2013)
கிருஷ்ணய்யர் மனிதநேய விருது, சென்னை (2013)
சிறந்த பெண்மணி விருது, பக்தவத்சலம் மகளிர் கல்லூரி சென்னை (2014)
சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றிய விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சென்னை (2014)
ராணி மெய்யம்மாள் ஆட்சி விருது, ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு அமைப்பு (2015)
தேசாஸ்னி விருது, பெங்களூர் சர்வோதய மண்டலம் (2015)
பெண் சாதனையாளர் விருது, மெகா டி.வி. (2016)
பெண் சாதனையாளர் விருது, அகில இந்திய மகளிர் அமைப்பு (2017)
தமிழன்னை விருது, விகடன் (2018)
மாற்று நோபல் பரிசு: ஸ்வீடன்: வாழ்வுரிமை விருது
2008-ல் ரைட் லைவ்லிஹூட் (Right Livelihood Award) விருது
2020-ல் இந்திய அரசு வழங்கும் பத்மபூஷன் விருதைப் பெற்றார்.

  1. கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்  பற்றி ரவி சுப்பிரமணியம் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் கலையும் கருத்தும் இணைந்த  வண்ணம் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டார்.

அதனைப் பார்த்த பின் பிரபல பேச்சாளரான திருமதி பாரதி பாஸ்கர் பேசி அனுப்பியதன் எழுத்து வடித்தை இங்கே பார்க்கலாம். 

ஆவணப் படத்தின் சிறப்புகளையும் படத்தின் தலைவி கிருஷ்ணம்மாள் பெருமையையும் உணர்ச்சி பூர்வமாகக் கூறிய பாரதி பாஸ்கர் அவர்களுக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். 

இப்பதான் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆவணப்படத்த பாத்து முடிச்சேன். ஒரு முறை இல்ல ரவி. ரெண்டு முறை பாத்தேன். மிக மிக நெகிழ்வான தருணங்களை வழங்கிட்டிங்க. மிகையா சொல்லல. இது ஒரு சாதனை. இந்த சாதனையை செய்ய, உனக்கு சக்தியக் கொடுத்த அந்த பராசக்திக்குதான் நான் முதல்ல என் நன்றிய சொல்லணும். இத வேறெப்படி சொல்ல முடியும் நான்.

படத்தின் கடைசி காட்சிகள்ள நடந்து போகும் அம்மாவின் அந்த பாதங்களைப் பார்க்கிறபோது, தானாக கண்ணீர் தளும்பிவிட்டது. எப்படி கண்ணீர்விடாமல் இருக்க முடியும். அதே போல அந்த குக்கு சிவராஜ் சொல்கிற அந்த நெகிழ்வான தருணம், அய்யோ. இந்த படத்த பத்தி சொல்ல பல விஷயங்கள் இருந்தாலும் இந்த ஒரு விஷயத்த டீட்டய்லா பகிர்ந்துகலாம்ன்னு நினைக்கிறேன்.

கீழ் வெண்மணி கோர சம்பவத்துக்குப் பிறகு, அம்மா தொடர்ந்து நிகழ்த்தின அந்த உரையாடல் காரணமா, அந்த கொலைக்கு காரணமாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடுவுடைய குடும்பத்த சேர்ந்தவங்க வந்து 40 வருடங்கள் கழிச்சு, பாதிக்கப்பட்டவங்க குடும்பத்துகிட்ட குடுக்கறத்துக்காக ஒரு 286 ஏக்கர் நிலத்த கொண்டு வந்து அம்மா காலடில வைச்சாங்கன்னு சொல்றார் இல்லியா, அவர் அத சொல்ற விதம், அந்த இடத்துல அவரே கொஞ்சம் உடைஞ்சி அழுகையின் விளிம்புக்கு போற ஒரு இடம் இருக்குல்ல, சே! என்ன இடம் அது! அப்படியே என்னை பாடா படுத்திடிச்சி ரவி. ஒரு வகைல எல்லோருடைய மனசையும் தத்தம் அறம் சார்ந்து அவரவர் வாழ்வின் வேறு வேறு விஷயங்களுக்காக மனசாட்சிய அசைத்துப் பார்க்கிற ஒரு காட்சி அது.

எரிக்கப்பட்டவர்கள் வாரிசுகளும் எரித்தவரது வாரிசுகளும் அந்த உயர் அன்னையின் நூறாவது பிறந்த நாள்ள ஒரு மரத்தின் கீழ வந்து ஒன்ணா உட்கார்ந்து பேசினதையும் அவங்க கால்கள்ல அவர்கள் எல்லாம் விழுந்து அழுததையும் அவர் சொல்றத கேக்குறப்ப, அந்த அன்பின் பெரு உருவமான அன்னையின் செயல் அதை எப்படி நிகழ்த்தியிருக்கும் என்பது கற்பனைக்கு எட்டாததா இருக்கு.

பொய்யும் தந்திரமும், வன்மமும் வன்முறையுமா வெறுப்பு அரசியல் மண்டிக்கிடக்கிற இந்த காலகட்டத்துல காந்திஜிக்கும் அவருடைய அகிம்ஸைக் கொள்கைகளுக்கும் இன்னமும் இந்த மண்ணுல இடம் இருக்குங்கிறத அம்மாவின் இருப்பும் செயல்களும் நிரூபிக்குது ரவி. இந்தப் படத்தை உலகெங்கும் காண்பிப்பதன் மூலம், இந்தியா உலகுக்கு சொல்லும் செய்தியா இதத்தான் நாம கடத்தணும். கெட்ட போர் சூழ்ந்து பதற வைக்கும் இந்நாட்களில், இதுதான் இன்றும் இந்தியா உலகுக்கு அளிக்கிற செய்தியா இருக்கணும். இருக்கவும் முடியும்.

அவங்க பிள்ளைகள் டாக்ட்டர். சத்தியா, டாக்ட்டர். பூமிக்குமார் (அட ! அவர் பேரும் பூமியா) அவங்களப் பத்தி பகிர்ந்த விஷயங்கள், அமெரிக்கன் காலேஜ்ல படிக்கிறப்ப நடந்த சம்பவங்கள், டி. வி. எஸ். சுந்தரம் அய்யங்கார் மகள் செளந்தரம்மாள் தன் மகள் போல நம்அம்மாவை அரவணைத்து காத்தது இப்படி ஒவ்வொரு ஆஸ்பெக்ட்ட பற்றியும் விரிவா என்னால சொல்ல முடியும். ஆனா, படத்துலேர்ந்து நான் இன்னும் வெளில வர முடியல. அதனால இப்ப என்னால விரிவா எழுத முடியல ரவி. மனம் கனத்து வார்த்தைகள் மறைந்து சொற்களற்ற வெறும் மெளன உணர்வே மேலெழும்பி பரவி நிற்கிறது. என் செய்வேன்.

நம் கண்முன் இருக்கும் பெண் காந்தியின், வாழும் ஒரு காவியத்தின் மிக முக்கிய தருணங்களை தேர்ந்த கலை நுணுக்கத்தோட நீ ஆவணப்படமா கொண்டு வந்திருக்கது ரொம்ப ரொம்ப அருமையான ஒரு செயல் ரவி.

நம் மீடியாக்கள் யாரையெல்லாம் முன் நிறுத்துகின்றன என்று நினைக்கறப்போ….
ஆனால், உங்களைப் போன்றவர்கள் தான் ஒரு ஆக்கப்பூர்வ சன்ன எதிர்குரல் போல இதை செய்ய வேண்டும்.

உன்னுடைய வாழ்கைலயே நீ செய்த காரியங்களில் மின்னும் ஒரு வைர மணி மகுடம் போல இது மின்னுகிறது அப்படின்னுதான் சொல்வேன்.

இந்த பத்டதோட டெக்னிக்கஸ் ஆஸ்பெக்ட்ஸ் ல இருக்க நேர்த்தி, துல்லியம் இதெல்லாம் பாக்குறப்ப ஒவ்வொண்ணயும் ஈடுபாடா செஞ்சு ஒருங்கிணைச்ச உன் சிரத்தைதான் அதுல முழுமையா வெளிப்படுது. கேமிரா, மியூசிக், பாடல்கள், பழைய விஷயங்களை உறுத்தலில்லாம இணைக்கிறது, சலிப்பில்லாம கொண்டு போறது, சப் டெக்ஸ்ட்டா சில விஷயங்கள பொதிஞ்சு வச்சிருக்கது இதல்லாம் ரொம்ப சிறப்பா கவித்துமா வந்திருக்கு.

உன் வாழ்வின் எவ்ளோ கஷ்ட்டங்களுக்கு மத்திலயும் இந்த பதிவையெல்லாமும் உன்னால் செய்ய முடிஞ்சிருக்கே.

ஒண்ணே ஒண்ணுதான் சொல்லத் தோணுது. நல்லா இருக்கணும். நீ நல்லா இருக்கணும் ரவி.

 – பாரதி பாஸ்கர் 

குன்று போல் உயர்ந்து இருக்கும்  கிருஷ்ணம்மாள் அவர்களின் பாதத்தில் நாமும் பணிந்து கும்பிடுவோம்.

இப்படிப்பட்ட மனித தெய்வத்தை ஆவணப் படுத்திய ரவி சுப்பிரமணியன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி!