மக்களின் முடிவு
சென்னையில் வெயில் எகிறி அடிக்கிறது. சூடு அதிகம் தகிக்கிறது. அதை விட தேர்தல் சூடு, தமிழ்நாடு பூராவும் பரவி நிற்கிறது. கட்சிகள் கூட்டணிகளோடு சேர்ந்து வலம் வருவதை பார்க்க முடிகிறது. தனியே நிற்பவர்களும் தளராமல் ஓட்டு சேகரிக்கிறார்கள். தலைவர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதியிலேயே நிற்கின்றனர்.
ஓட்டுகள் பிரிகின்றன. அதனால் திமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பேசப்பட்டுக் கொண்டிருந்த நிலைமை கொஞ்சம் மாறிக்கொண்டு வருகிறது. விஜயின் விசில் சத்தமும் சீமானின் பேரன்பும், பெரும் கோபமும் இளைஞர்களை ஈர்க்கின்றன. திராவிடக் கட்சிகளே இனி வேண்டாம் என்று நினைக்கும் பெரியவர்கள் கூட இந்த இரண்டு பேரை மாற்றாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஸ்டாலின் வெளியிலேயே வரமாட்டார். அவருக்குப் பேசத்தெரியாது என்பதையெல்லாம் பொய்யாக்கிக் கொண்டு தினந்தோறும் மக்கள் நடுவே உலா வருகிறார் அவர். நாளுக்கொரு அறிக்கை விட்டு சூட்டை கிளப்புகிறார். “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பது எந்த மீடியாவைத் திறந்தாலும் ஒலித்து ஒரு தேர்தல் கீதமாக மாறிவிட்டது.
எடப்பாடி பேச்சுக்குக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. தி நகரில் அவர் பேசியதைக் கேட்டு விட்டு வந்த கார்பெண்டர் பாபு, “எங்கள் வீட்டுல ஆறு ஓட்டும் ரெட்டை இலைக்குத்தாம்மா அவர் பேசப் பேசத் தான் விஷயமே புரியுது. அவர் தாம்மா முதலமைச்சரா வரணும்” என்று ஆணித்தரமாக பாபு சொன்ன போது மக்களின் மனதை எப்படிக் குறி பார்த்துச் சுடுகிறார். எடப்பாடியார் என்பது புரிந்தது.
அண்ணாமலை என்னும் ஒற்றை ஆள் கிருஷ்ணர் சுட்டு விரலால் கோவர்த்தன மலையை தூக்கியது போல பாஜகவை அசுரபலத்தோடு தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறார். அவர் செயல்கள் ஆச்சரியமாக இருக்கிறது. அந்தக் கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாதவர், தேர்தலில் எந்த தொகுதியிலும். போட்டியிடாதவர், திமுகவை அடித்துத் துவம்சம் செய்கிறார். பாஜக வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்கிறார். மத்திய பாஜகவுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கிறார். இவரை வேண்டாம் என்று சொன்னவர்கள் எல்லாம் அண்ணாமலை வந்து தனக்காக ஓட்டு கேட்க வேண்டும் என்று காத்துக் கிடக்கிறார்கள். இரண்டு சீட்டு வென்றால் அதிகம் என்ற நிலை மாதிரி அண்ணாமலை தயவால் பாஜக 20 சீட் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
விஜய் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் ! “அவருக்கு என்ன அரசியல் தெரியும், பேசத் தெரியாது, கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது” என்றெல்லாம் எவ்வளவோ சொன்னாலும் இளைஞர்கள் விஜய்யால் ஈர்க்கப்பட்டு இருப்பது உண்மை. பாட்டை மட்டும் போட்டுவிட்டு வண்டியின் மேலிருந்து விஜய் வெறும் வணக்கம் சொன்னால், கையசைத்தால், சிரித்தால், கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. விசில் பறக்கிறது. குதூகலிக்கின்றனர் இளம் ஆண்கள், பெண்கள் அனைவருமே! என் கார் டிரைவர் சொன்னார் “ விஜய்க்கு ஒண்ணும் தெரியலன்னா என்னம்மா? கத்துகிடட்டுமே! ஆபீசருங்க இருக்காங்க இல்ல, அவுங்க சொல்லி குடுப்பாங்க. இந்த திமுக, அதிமுக இரண்டுமே ஒழியணும்மா? விஜய் தான் சி எம் ஆகணும்” என்று அடித்துச் சொன்னார். அவருக்கு வயது 50 க்குமேலே! ஆக விஜய்க்கு இளைஞர்களைத் தாண்டி மற்றவர்களும் ஓட்டு போட வாய்ப்பு அதிகம்.
சீமானின் ஓட்டு சதவீதம் மெல்ல ஏறிக் கொண்டு வருவதாகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. அது உண்மையும் கூட! வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை உறுதியோடு எப்போதும் தனித்துப் போட்டியிடுகின்ற சீமானைப் பாராட்டத்தான் வேண்டும். “இலவசங்கள் தர மாட்டேன். வேலை கொடுக்கிறேன். நீ உன் பணத்தில் வேண்டியதை வாங்கிக் கொள்” என்று வெளிப்படையாக உறுதியுடன் பேசும் சீமான் மெல்ல மெல்ல பலரின் கவனத்தைக் கவர்ந்து கொண்டு இருக்கிறார். இரண்டு கழகங்களும் வேண்டாம் என்று சொல்வதில் இருந்து, அடிமட்ட மக்களின் பிரச்னையைத் தட்டி எழுப்பும் விதத்தில் இருக்கும் சீமானின் கொள்கைகள் இந்த தேர்தலில் அவரை சில இடங்களை ஜெயிக்க வைக்கலாம்.
இவை தாண்டி, சோஷியல் மீடியா மூலம் உட்கார்ந்த இடத்திலேயே எல்லோருடைய பேச்சையும் மக்களால் கேட்க முடிகிறது. அரசியல் விமர்சர்களின் பல தரப்பட்ட அலசல்களைப் பார்க்க முடிகிறது. காசு வாங்கிக் கொண்டு ஒரு தலைப்பட்சமாக பேசும் டிவிக்களை மக்கள் நம்ப மறுத்து ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். யூடியூப் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என்று பல தளங்களை மக்கள் ஆர்வமாக பார்ப்பதும், அதை வைத்து ஒரு முடிவுக்கு வருவதும் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கப்போகிறது.
ஜனநாயகம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. எல்லா மனிதனுக்கும் ஜாதி இன வேறுபாடு இல்லாமல் சமமாக வழங்கப்பட்டிருக்கிறது ஓட்டுரிமை. இது ஒரு பெரிய அங்கீகாரம். மற்றவர்கள் என்ன செய்வார்கள்? தேர்தல் சரியாக நடக்குமா? பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவார்களா? போலி ஓட்டுப்பதிவு இருக்குமா? என்றெல்லாம். பல கேள்விகள் மனதில் எழுந்து குழப்பலாம். சமூகத்தில் நாமும் ஒரு அங்கம், என் ஓட்டு என் உரிமை கடமை என்று ஒவ்வொருவரும் தனக்கு வேண்டியது எது என்று உணர்ந்து ஓட்டு போட்டால் நல்ல ஆட்சி மலர்ந்தே தீரும்.

