புன்னகை நின்றது. இளம் புதிய பெண்கள் மற்றும் ஆண்கள் புத்திசாலித்தனமான சரியான பரந்த புன்னகை - பங்கு புகைப்படம் © khorzhevska #187745902

       புன்னகை என்னவிலை?

          எனது குடும்ப மருத்துவரின் கிளினிக்கிற்குள் நுழைகிறேன். ஓ, இந்த ரிசப்ஷனிஸ்ட் புதியவள் போல…. “ஹலோ மாடம், வாங்க. என்ன உடம்பிற்கு?” என ஒரு புன்னகையுடன், இனிய சொற்களுடன் நீண்டநாள் பழகியவள் போல அவள் விசாரித்த விசாரிப்பிலேயே பாதி இடுப்புவலி சரியாகிவிட்டது போலிருந்தது. எனது முகம் கோணியதையும் நான் சிரமப்பட்டுப் புன்னகைத்ததையும் பார்த்தவள், விரைவாக எனது குறிப்புகளை வாங்கிக் கொண்டு, ‘செக்’ பண்ணி, மூன்றாவது நம்பர் டோக்கனை என்னிடம் தந்து வசதியாக அமரச் செய்தாள். இத்தனைக்கும் க்ளினிக்கில் ஒன்றும் ஈயோட்டிக் கொண்டிருக்கவில்லை. சுமாரான கூட்டம் இருந்தது. அது அவளுடைய இன்முகத்தைச் சிறிதும் பாதிக்கவில்லை.

          என் பின்னால் என்னைவிட வயதான தாத்தா. பேரன் அழைத்து வந்திருந்தான். “என்ன தாத்தா? இன்னிக்கு எப்படி இருக்கீங்க?” என அவரிடமும் புன்னகையோடு விசாரித்து, ” ஆமாம், என் பெயர் சுசீலா. இன்னிக்கு ஜமுனா லீவ். அவளுக்கு நிச்சயதார்த்தம்,” என்றபடி அவருடைய ஃபைலைப் புரட்டி, டோக்கனைக் கொடுத்தாள். அதற்கும் ஒரு கனிவான புன்னகை. பதினெட்டு வயதுப் பேரன், “தாங்க்யூ மேம்,” என்றபடி நகர்ந்தான். நடுவில் டாக்டரின் அறையிலிருந்து நர்ஸ் வெளியில்வந்து இவளை ஏதோ கேட்க, காபினெட்டைத் திறந்து அவளுக்குச் சில பேப்பர்களை எடுத்தும் கொடுத்தாள். ஒருவரிடமும் சிடுசிடுக்கவில்லை. சுசீலாவும் இப்படித்தான். இதுவே இந்த டாக்டருக்கும் க்ளினிக்கிற்கும் இந்த ஏரியாவில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. தேர்ந்து ஆய்ந்தெடுத்துத்தான் ரிசப்ஷனிஸ்டை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் டாக்டர். வாழ்க!

     வாரம் ஓர் அலசல் – உலக புன்னகை தினம் - வத்திக்கான் செய்திகள்     என்ன சொல்ல வந்தேன் தெரிகிறதா? பொதுநலப் பணிகளில் இருப்பவர்களும் ஈடுபடுபவர்களும் ஒரு சிறு புன்னகையோடு தமது வேலைகளைச் செய்தால் அது மற்றவர்களுக்கு எத்தனை ஆறுதலை, மகிழ்ச்சியை, நட்பை, நெருக்கத்தைத் தருகிறது தெரியுமா? இது சின்ன சைக்காலஜி பாடம். யாரும் சொல்லித்தர வேண்டாம். நாமே உணரலாம். ஒரு சிறு பரிவான புன்னகை நட்பை, அன்பைத் தெரிவிக்கும்; ஆறுதலளிக்கும். நாம் உணர்வது போலத்தானே மற்றவர்களும் உணர்வார்கள்.

          மனோதத்துவவியல் படித்த எனது ஒரு மூத்த நண்பர் (இப்போது இல்லை) அடிக்கடி சொல்லுவார்: ‘ஒரு சிறு புன்னகையைப் போல ஆறுதலும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிப்பது வேறொன்றுமில்லை; அதேபோல நாம் சோர்ந்த தருணங்களில் முதுகில் பரிவோடு தட்டிக் கொடுக்கும் ஒரு தட்டுதல் போல உற்சாகப்படுத்துவதும் வேறொன்றும் கிடையாது’ என்று! துக்கத்திலும் கூட, ஒரு சிறு முதுகுத் தட்டலோ, தலை வருடுதலோ, கையைப் பற்றிக் கொள்ளுதலோ, தொடுதல் உணர்வின்மூலம் மிகுந்த ஆறுதலை உணர்த்துகிறது.

          இதனைப் பல உயர்பதவிகளிலிருக்கும் பெரியவர்கள்கூட உணர்வதில்லை. என் சிறுமிப் பருவத்தில், எல்லாருக்கும் செல்லக்குழந்தையாதலால் பிடிவாதமும் அதிகம் உண்டு என்பார்கள். ஒருமுறை என் தாயின் சிற்றப்பா வீட்டிற்குச் சென்றிருந்தோம்; எனக்கு நான்கோ ஐந்தோ வயது; ஏதோ ஒரு காரணத்திற்காக அடம்பிடித்து அழுதேன். தாய் எத்தனை சமாதானப்படுத்தியும் நிற்கவில்லை; அந்தச் சிற்றப்பா (சின்னத் தாத்தா) ஒரு அதட்டல்போட்டு என்னை அவருடைய அறைக்கு அழைத்துப் போனார். தீபாவளியில் ‘கேப்’ என்று வெடிப்போமே அதில் இரண்டைத் தரையில் போட்டுத் தனது கைத்தடியால் அவற்றை பட் பட்டென்று குத்தி மிக அருகே வெடிக்க வைத்தார். என்னைப் பார்த்து விழித்து, “இப்போ வாயை மூடு!” என கர்ஜித்தார். நான் சர்வாங்கமும் ஒடுங்க, நடுங்க என் தாயின் புடைவைக்குள் அடைக்கலம் புகுந்தேன். இப்போது எண்ணிப்பார்த்தால் தோன்றுகிறது. ஒரு சிறு புன்னகை, கனிவான சொற்கள். உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன், இல்லாவிட்டால் ஒரு விளையாட்டு – இப்படி ஏதோ ஒன்று அந்த நிலைமையை அழகாக மாற்றிவிடக்கூடும். அப்பாவைக் கண்டால் மிரளும் குழந்தைகளே அந்தக் காலத்தில் அதிகம்! அப்பாவிடம் கேட்காமல் அம்மாவிடம் எதற்கும் பர்மிஷனும் கிடைக்காது!! ஆணாதிக்கமோ?!

          அடுத்தாற்போல பல நிறுவனங்கள் – வங்கிகள், தபால் அலுவலகம், பெரிய பெரிய டிபார்ட்மென்டல் கடைகள், இன்னபிற. சிலசமயங்களில் ‘துடிப்பான’ இளம் ஊழியர்கள் பணியாற்றும் வங்கிகளில் நாம் மூத்த குடிமக்கள் என்றும் பாராமல் என்னவோ நாம் இவர்களிடம் கடன் கேட்டு வந்தவர்கள் போல நம்மை நடத்துவார்கள், இன்சொல், புன்னகை என்றால் என்ன விலை எனக் கேட்கும் நவீன ரகங்கள். ஒரு பெண்மணி – தன் நிம்மதியைக் குலைக்க வந்தவர்களாகவே ஆக்ரோஷத்துடன் நம்மைப் பார்ப்பார். எனக்குத் தெரிந்து ஒரேயொரு பெண் வங்கி ஆஃபீசர் மட்டுமே நான் நுழையும்போதே இனிமையான புன்னகை காட்டி வரவேற்பார். வங்கியின் அனைத்து ‘ரூல்’களும் அவருக்கு அத்துப்படி. இனிமையான சில இளைஞர்களும் இளைஞிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

          சில இளம் வாடிக்கையாளர்களும் மூத்த குடிமக்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வார்கள். நாம் வெளியேறக் கதவைத் திறந்தால், தாம் முந்திக்கொண்டு உள்ளே நுழைவது, அது தவறு எனச் சுட்டிக் காட்டினால், ஒத்துக்கொள்ளாமல், நேரமாகிவிட்டது. வங்கிமூட ஐந்து நிமிடங்களே உள்ளன எனக் கூறுவது எல்லாம் இவற்றில் அடக்கம்!! இவர்களிடம் பணிவையும் விலைகொடுத்தே வாங்க வேண்டும்!! இங்குமட்டுமில்லை. மேலை நாடுகளிலும் இப்படிப்பட்ட இளம் தலைமுறைகள் உருவாகி வருகின்றன. பெற்றோர் வளர்க்கும் விதத்தில்தான் அனைத்தும் இருக்கிறது.

          மருந்துக் கடைகள், பெரிய டிபார்ட்மென்டல் கடைகளில் சில்லரை கிடைக்காது. 480 ரூபாய்க்குப் பொருள் வாங்கிவிட்டு ஐநூறை நீட்டினால் சில்லறை இல்லை. இப்போது கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் வந்துவிட்டன. முன்பெல்லாம் இது பெரிய தலைவலி. மருந்துக் கடைகளில் கூட ஓரிரு ரூபாய்ச் சில்லறைக்கு சாக்லேட் கொடுப்பார்கள்! நமக்கோ சர்க்கரை வியாதி!! ஏதாவது கேட்டால் சிடுசிடுப்பார்கள்!!

          பெயர் தெரியாத வெளிநாட்டு ஊர்களில், மொழியும் தெரியாமல் தடுமாறும்போது முனைப்பாக இன்முகத்துடன் நமக்கு உதவும் மனிதர்களைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். இப்போதோ அப்படி யாருமே உதவ முன்வருவதில்லை. இதன் சட்ட சம்பந்தமான பின் விளைவுகள் என்ன என்பதை நினைத்து விலகி விடுகிறார்கள். சில ஆண்டுகளின் முன்பு நான் ஒரு அமெரிக்க விமான நிலையத்தில் தடுக்கிவிழுந்து எழ இயலவில்லை. எல்லாரும் கூட்டம் கூட்டமாக அவரவர் வழியில் சென்றார்களே தவிர உதவிக்கு ஒருத்தரும் வரக்கூட இல்லை. ஒரேயொரு பெண்மணி, “நான் ஒரு நர்ஸ். பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்; உங்களுக்கு உதவலாமா?” என எங்களருகே வந்து, இன்முகத்துடன், “பெரிய பிரச்சினை இல்லை என நினைக்கிறேன். இருப்பினும் எமர்ஜென்சிக்குச் செல்லுங்கள்,” எனக்கூறிவிட்டு, என்னால் நடக்க முடியுமா எனப் பார்த்துவிட்டே சென்றார். மனிதாபிமானம் ஆங்காங்கே இன்னும் இருக்கத்தான் செய்கிறது. எத்தனை நாட்களுக்கு?

                    இனிய உளவாக இன்னாத கூறல்

                    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

          சிலரைப் பார்த்தபோதே அவர்களுடைய புன்னகைபூத்த இன்முகம் நமது நட்பிற்கு வித்திட்டு விடும்.

ஜூமில் இவ்வாறு பார்த்தே பரிச்சயமானவர் நண்பர் மதுவந்தி எனப்படும் வீரராகவன் அவர்கள். எல்லாருக்கு ஒரு நட்பான புன்னகை, இன்சொல், எந்தச் சூழ்நிலையிலும் ஒரு ‘பாசிடிவ்’ ஆன கருத்துப் பரிமாற்றம். நேரிலே இதுவரை சந்திக்கவே இல்லாத என்னையும் நெருங்கிய நண்பராக்கிக் கொண்டார். பூபாளத்திற்குச் சந்தாவைப் புதுப்பிக்கும்போது தவறாமல் அவர் கூறுவது “உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது இதையல்ல. படைப்புகளை எழுதி அனுப்புங்கள்” என்பார். தினமணி – தமிழ்மணியில் அவ்வப்போது வரும் எனது கட்டுரைகளை ஸ்கேன் செய்து முதலில் அனுப்பிவிடுவார், உடன் ஒரு குறிப்புடன். ஒருமுறை திரு எவ்வுளூர் (இக்காலத்துத் திருவள்ளூர்) அந்தாதியிலிருந்து ஒரு பாடலின் நயத்தைப் பற்றி எழுதிய கட்டுரைக்குப் பின் வருமாறு எழுதியிருந்தார். ‘எனக்கும் இந்த ஊர்தான், அதனால் தான் பெருமாளின் பெயரான வீரராகவனை எனக்கும் வைத்திருக்கிறார்கள்’ என்றார். அருமையான சங்கீதப் பாடல்களின் பரிமாற்றங்கள், இலக்கிய நயங்கள் நட்பைப் போற்றி வளர்த்தன. தில்லி சென்றால் வீட்டிற்குச் சென்று சந்திக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு அவசரத்தில் நம்மை விட்டுச் சென்றுவிட்டாரே! இனி இப்பேர்ப்பட்ட நண்பர்களையெல்லாம் காண்போமா? நட்பெனும் அழகான பந்தலின் ஒரு கால் உடைந்து விட்டதே! புன்னகைக்கு விலைபேசாது வாரிவாரி வழங்கிய வள்ளல் அவர். அந்தப் புன்னகை பூத்தமுகமே பெரும் அடையாளமாக நம் மனங்களில் ஆழப்பதிந்து நிற்கும் நட்பு அது.

          வாழ்க்கையில் இப்படியும் ஒரு பாடத்தை எங்களுக்கு வழங்கிவிட்ட இறைவா, என்ன அநியாயம் இது?

                              ———————————–