எனக்கு பதட்டமாகத்தான் இருந்தது. அலுவலகத்தில் எனக்கும் என் மேலதிகாரிக்கும் கொஞ்ச நாட்களாகவே உரசல். ஓரு கட்டத்தில் அலுவலகத்திற்குச் செல்வதற்கே வெறுப்பாக இருந்தது. எனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வின் மீது அந்த ஆள் உட்கார்ந்து கொண்டிருந்தார். வேறு வேலைக்குச் செல்லலாம் என்றால் அதுவும் அத்தனை சுலபமாக இல்லை. இருந்தாலும் துணிந்து பேப்பர் போட்டு விட்டேன்.
ஆச்சு, வேலையை விட்டு விளையாட்டுப் போல் ஆறு மாதங்களாகி விட்டது. புது வேலை எதுவும் கிடைக்கவில்லை. இண்டர்வியூவில் இரண்டு ரவுண்டுகள் வரை செல்வேன், அதற்குப் பிறகு ஏனோ எந்த பதிலும் வராது.
முதல் முறையாக வாழ்வில் பயம் வந்தது. தவறு செய்து விட்டோமோ என்று தோன்றியது. அன்றைக்கும் ஒரு இண்டர்வியூ ஆன்லைனில் அட்டெண்ட் பண்ணினேன், திருப்தியாக இருந்தது, அவர்கள் ஒரு வாரத்தில் பதில் சொல்வதாகக் கூறினார்கள்.
எனக்கு ஏனோ நம்பிக்கை வரவில்லை. கிடைக்க வேண்டுமே என்ற ஆசையும், கிடைக்குமா? என்ற சந்தேகமும் போட்டி போட்டன. இந்த மாதிரி சமயங்களில் என் ரூம் மேட் சுதர்ஷன் செய்வதை செய்யலாம் என்று தோன்றியது.
இந்த மாதிரி சந்தேகங்கள், மற்றும் குழப்பங்கள் எழும் சமயங்களில் அந்தக் காலங்களில் ஏன் இந்தக் காலத்தில் கூட சிலர் திருவுளச்சீட்டு போட்டு பார்ப்பார்களே அந்த மாதிரி ஒன்று செய்வான். கம்ப்யூட்டரில் ஃப்ரீசெல் விளையாடுவான், அதில் ஜெயித்து விட்டால் சக்சஸ் என்று முடிவு செய்வான். அதைப் பார்க்கும் நாங்கள் அவனை கேலி செய்வோம். ஆனால் அவனளவில் அந்த ஃப்ரீசெல் ஜோசியம் பலிக்கவே செய்தது.
இன்று எனக்கும் அப்படித்தான் தோன்றியது. நானும் ஃப்ரீசெல் ஆடிப்பார்க்க முடிவு செய்தேன். இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கு பயம் தான் மூல காரணமோ?
என்னுடைய மடிக்கணினியில் ஃப்ரீசெல்லை திறந்தேன். அதிகம் கவனத்தோடு விளையாடினேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. சில சமயங்களில் அடுத்து மூவ் இல்லையோ என்று தோன்றும், ஆனால் வெற்றிகரமாக கிளியர் செய்தேன். மனதிற்குள் நிம்மதி பரவியது. அடுத்த ஆட்டத்தை துவங்காமல் வெளியே வந்து, என்னுடைய மெயில் பாக்ஸைத் திறந்தேன்.
என்ன ஆச்சர்யம்! நான் சென்ற வாரம் கலந்து கொண்ட நேர்முகத் தேர்வில் தேர்வாகியிருப்பதாகவும், என்னைத் தேர்ந்தெடுத் திருப்பதாகவும் மெயில் வந்திருந்தது. வாவ்!
அதில் சேர்ந்தது என் நல்ல காலம் என்றுதான் கூற வேண்டும். அங்குதான் நித்யாவை சந்தித்தேன். காதல் கொண்டோம். படித்த, வேலைக்குப் போகும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்த, என் பெற்றோர்களுக்கும், நித்யாவின் பெற்றோர்களுக்கும் எங்கள் காதலை ஏற்றுக் கொள்வதில் பிரச்சனை இருக்காது என்று நான் நம்பியதற்கு மாறாக, என் பெற்றோர்கள் அதை எதிர்த்தார்கள். எங்கள் வீட்டிற்கு வந்த நித்யாவின் பெற்றோர்களிடம் சரியாக பேசவில்லை. தங்களை அவமதித்து விட்டதாக நித்யாவின் பெற்றோர் கருத, நித்யாவிற்குமே வருத்தமும், கோபமும் வந்தது. அதை நான் கேட்கப் போக, அம்மா என்னோடு பேசுவதை நிறுத்தினாள்.
அம்மாவோடு பேசி ஆறு மாதங்களாகி விட்டது. நித்யாவும் என்னைத் தவிர்க்கத் தொடங்குகிறாளோ என்று தோன்றியது. அவ்வளவுதான், ப்ரேக் அப் தான் என்று நினைத்தேன். அன்று நான் அலுவலக கார் பார்க்கிங்கில் என்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு,லிஃப்டை நோக்கி நடக்கத் தொடங்கிய பொழுது நித்யா வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். வெளிர் நீல சூடிதார், வெள்ளையில் நீல பூக்கள் போட்ட குர்தா, காதில் நீல நிற முத்துக்கள் பதிக்கப்பட்ட பெரிய வளையம் அசைந்தாட, தோள் வரை வெட்டி விடப்பட்ட கூந்தல் லேசாக பறக்க, நடந்து வந்தாள்.
அவளுக்கு முன்னால் அவளுடைய பெர்ஃப்யூம் வாசம் என்னைத் தாக்கியது. ஒரு காதில் இருந்த இயர் ஃபோனை எடுத்து என்னப் பார்த்து “ஹாய்” என்றாள்.
“கார்ஜியஸ்” என்றேன். என் பாராட்டிற்கு முறுவலித்து, “ உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சேன்,நல்ல வேளை உன்னை இங்கேயே பார்த்துட்டேன்” என்றவள் தொடர்ந்து “இன்னிக்கு பேப்பர் போடப்போறேன்” என்றாள்
“ஏன்?”
“வேற கம்பெனி போறேன்”
“ஏன்?”என்றேன் மீண்டும். என்னைத் தவிர்க்கத்தானோ? என்று தோன்றியது. அதற்குள் லிஃப்டை அடைந்து விட்டோம். லிஃப்டிற்குள் நுழைந்து எங்கள் தளத்திற்கான பொத்தானை அழுத்தினேன். அதுவரை பேசாமல் வந்தவள்,
“ஸ்பௌசஸ் ஒரே கம்பெனியில் வேலை செய்யக் கூடாது என்பது நம் கம்பெனி பாலிசியாச்சே?” என்று கூறி விட்டு, சற்று இடைவெளி விட்டு, “ நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்தானே?” என்றாள்.
இத்தனை நேரம் அடைபட்டுக் கிடந்த என் மனசுக்குள் ஜில்லென்று தென்றல் வீசியதைப் போல உணர்ந்தேன். “ஷ்யூர்” என்று அவள் கையைப் பற்றுவதற்கும் ‘டிங்க்’ என்ற ஓசையோடு லிஃப்ட் கதவு திறப்பதற்கும் சரியாக இருந்தது.
என் கையை உதறி, “அதுக்கு ஏதாவது பண்ணனும், அம்மாவோட பேசாமல் இருந்தால் போதாது” என்று கூறியவள், இன்னிக்கு நைட் ஃபோன் பண்ணுவேன், ரிசல்ட் சொல்லணும், ஒண்ணு பண்ணேன், நீதான் எல்லாவற்றுக்கும் ஃப்ரீ செல் விளையாடி பார்ப்பாயே? இதற்கும் பார்த்து விடேன்” என்று கிண்டலாக சொல்லி விட்டுச் சென்றாள்.
அவள் கிண்டல் செய்திருந்தாலும் எனக்கு வொய் நாட்? என்று தோன்றியது. வீட்டிற்கு வந்து என்னுடைய லேப்டாப்பில் ஃப்ரீசெல் விளையாடி ஜெயித்தேன். சந்தோஷம் பீறிட நித்யாவிற்கு மெசேஜ் அனுபியதற்கு “புல் ஷிட்’ என்று பதில் அளித்தாள்.
ஆனால் மறுநாளே வானிலை மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஊரிலிருந்து ஹேமா பெரியம்மாவும், அவர் மகன் ஸ்ரீநாத்தும் வந்திருந்தாரகள். ஸ்ரீநாத்திற்கு அலுவலக விஷயமாய் சென்னையில் 15 நாட்கள் வர வேண்டியிருந்ததாம். பெரியம்மா வர ஆசைப்பட்டதால் உடன் அழைத்து வந்திருந்தான். பெரியம்மாவும், அம்மாவும் ரொம்ப க்ளோஸ்.
பெரியம்மாவிடம் அம்மா எங்கள் காதல் விவகாரத்தை சொல்லியிருக்க வேண்டும். நித்யாவைப் பற்றி என்னிடமும், அப்பாவிடமும் விசாரித்தாள். தான் நித்யாவை பார்க்க வேண்டும் என்றாள். நான், ஸ்ரீநாத், பெரியம்மா, நித்யா நால்வரும் டின்னருக்கு வெளியே சென்றோம். பெரியம்மாவிற்கு நித்யாவை பிடித்திருந்தது. அம்மாவிடம் என்ன பேசினாள், எப்படி கன்வின்ஸ் செய்தாள் என்று தெரியாது. அம்மா இறங்கி வந்தாள்.
என்னுடைய பிடிவாதமும், அப்பாவின் கோபமும் சாதிக்காததை பெரியம்மாவின் சாதுர்யம் சாதித்தது. அடுத்த மாதமே எனக்கும், நித்யாவுக்கும் திருமணம் நிச்சயமாகி, மூன்றாவது மாதம் நாங்கள் தம்பதிகளாகி விட்டோம்.
“பாத்தியா? ஃப்ரீ செல் பொய் கிடையாது” என்று நான் சொன்னதற்கு,”வெவ்வெவ்வே” என்று அழகு காட்டினாள்.
இதற்குப் பிறகும் அவ்வப்பொழுது நான் ஃப்ரீசெல் ஜோசியம் பார்ப்பதும்,நித்யா என்னை கேலி செய்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
நேற்று தன்னுடைய டூ வீலரில் மார்க்கெட் சென்ற பொழுது ஒரு திருப்பத்தில் வேகமாக வந்த ஒரு காரால் தூக்கி எறியப்பட்டு மோசமாக அடிபட்ட அவள் மருத்துவமனையில் சிசியூவில் இருக்கிறாள்.
முப்பதாறு மணி நேரங்கள் கடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள். இரவு பத்து மணி வரை நான், என் பெற்றோர்கள், நித்யாவின் பெற்றோர்கள் எல்லோரும் வெய்டிங் ஏரியாவில் காத்துக் கிடந்தோம். இரவு பத்து மணிக்கு அங்கு யாரும் இல்லை. ஒன்றிரண்டு பேர்கள் காத்திருப்பு பகுதியில் இருந்த ஸ்டீல் நாற்காலிகளில் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்கள்.
ஆஸ்பத்திரியில், “நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம், ஏதாவது முக்கியமான தகவல் இருந்தால் நாங்கள் அழைக்கிறோம்” என்றார்கள். மனமில்லாமல்தான் வீட்டிற்குச் சென்றேன்.
தூக்கம் கண்ணைச் சுழற்றினாலும் தூங்க முடியவில்லை. என்னையும் அறியாமல் எப்போதோ கண்ணயர்ந்திருக்கிறேன். எழுந்து, பல் விளக்கி, முகம் கழுவி, வந்த பொழுது அம்மா தலைக்கு குளித்து, சுவாமி விளக்கேற்றி, ஒரு மஞ்சள் துணியில் ஏதோ காசு முடிந்து வைப்பதை பார்த்தேன்.
குளித்து விட்டு ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும். நேற்று ஆஸ்பத்திரிக்குச் செல்லும் அவசரத்தில் லாப்டாபை அப்படியே வைத்து விட்டு சென்றிருக்கிறேன். அதை மூடப் போகும் பொழுது, மனசுக்குள் ஃப்ரீசெல் என்று தோன்றியது.
“சீ! இந்த நேரத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம்? என்று அறிவு அதட்டியது. இருந்தாலும் மனசின் தூண்டுதலுக்கு முன் அறிவு தோற்று, மடிக்கணியை ஆன் செய்து, ஃப்ரீ செல்லைத் திறந்தேன். இந்த கேமில் நான் ஜெயித்தால் நித்யா மீண்டு வருவாள் என்று நினைத்துக் கொண்டு, விளையாடத் தொடங்கினேன். அவசரப்படாமல், நிதானமாக விளையாடினேன். பக் பக்கென்று மனது அடித்துக் கொண்டது.
இல்லை, நான் ஆடப் போவதில்லை, நித்யா நிச்சயம் மீண்டு வருவாள் என்று ஆட்டத்தை பாதியில் நிறுத்தி கணினியை மூடினேன். என் கைபேசி அழைத்தது. நித்யாவின் தந்தை. காலையிலேயே ஆஸ்பத்திரிக்குச் சென்று விட்டாராம். “ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டாள், ஷி இஸ் ஸ்டேபிள்” என்றார்.
