புத்தகம் : Defy Your Gravity (English)
எழுதியவர்: Neha Goel & Drishti Goel
Publisher : Notionpress.com
பக்கங்கள் : 241
விலை : ரூ. 460

புத்தகங்கள் என்னைத் தேடி வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் நான் எதிர்பாராமலே ஏதாவது ஓரிரண்டு புத்தகங்கள் நண்பர்களிடமிருந்தோ அல்லது நண்பர்களின் நண்பர்களிடமிருந்தோ வந்து சேர்ந்து விடுகின்றன. அப்படி என்னை நாடி வரும் புத்தகங்களைத்தான் படித்து உங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.

ஜனவரி 2026-இல் பிட்ஸ் பிலானி இலக்கியத் திருவிழாவிற்கு சென்ற போது, அங்கே என்னுடன் அழைக்கப்பட்டிருந்த மற்ற நான்கு எழுத்தாளர்களில் ஒருவர்தான் திருமதி நேஹா கோயல் அவர்கள். பிட்ஸ் பிலானியில் நிர்வாகவியல் பட்டப்படிப்பை முடித்த அவர் பல முன்னணி நிறுவனங்களில் பிராண்ட் மேனேஜ்மென்ட் பொறுப்புகள் வகித்த பின்னர், மடைமாறி இளைஞர்கள் மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னேற்றப் பயிற்சி வழங்கும் பொறுப்புகளில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாகவே “Defy Your Gravity” என்ற இந்த வழிகாட்டு நூலை, பொறியியல் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தன் மகள் நேஹா கோயலுடன் இணைந்து எழுதி வெளியிட்டிருக்கிறார்.

பிலானியிலிருந்து சென்னை திரும்பியவுடன் நேஹா கோயலின் இந்நூலை ஆவலுடன் படித்து முடித்தேன்.
சுய முன்னேற்ற நூல்களும் ஊக்கப்படுத்தும் நூல்களும் இப்போது எனக்கு தேவையில்லாததே. இவற்றை எல்லாம் கல்லூரிப் ருவத்திலும் அதைத் தொடர்ந்த காலத்திலும் உங்களைப் போலவே நானும் நிறையவே படித்து முடித்தாகிவிட்டது.
ஆனாலும் இதில் என்ன புதிதாய் இருக்கப் போகிறது என்ற கேள்வியுடன்தான் படித்தேன்.

இந்நூல் ஒரு தாய் தன்னுடைய மகனுடன் பேசுவது போலவும், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் தான் கற்ற பாடங்களைப் பகிர்ந்து கொள்ளும் பாவனையிலும் எழுதப்பட்டுள்ளது.

விஷயம் மிகவும் கனமானதென்றாலும், நடை மிகவும் எளிதாக அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு.

சிந்தனையைத் தூண்டும் விதம் பல இடங்களில் புதிய புதிய கருத்துக்கள் வந்து விழுந்திருக்கின்றன. இளைஞர்களின் மனதில் புதிய ஜன்னல்களையும் கதவுகளையும் திறக்கும் விதம் எழுதப்பட்டிருக்கிறது. நேஹா மற்றும் திருஷ்டியின் மெனக்கெடல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புலப்படுகிறது.

15 லிருந்து 30 வயதைச் சேர்ந்தவரா நீங்கள் ? அல்லது உங்கள் மகனோ, அல்லது மகளோ, அல்லது வேறு உறவினரோ, நண்பர்களோ அந்தப் பருவத்தைச் சேர்ந்தவரா ? அவர் வாழ்க்கையின் மீது பிடிப்பும் நம்பிக்கையும் குறைந்தவராகத் தென்படுகிறாரா ?

அப்படியானால் உங்களுக்கு நிச்சயம் இந்தப் புத்தகம் பயன்படும்.

நீங்களும் படித்து உங்கள் குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்ய வேண்டிய நூல் இது.