பாகம் 4 – நிலவறை மர்மம்
சென்ற வாரம்:
எகிப்தியப் பிரமிடுகளில் மிகவும் பிரசித்திப் பெற்றவை கிசா பிரமீடுகள்.
நாம் செல்லவிருக்கும் கிசா நெக்ரோபொலிஸ் பகுதியில் உள்ள இவை 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இந்த பிரம்மாண்டமான பிரமிடுகள் முறையே காஃபு, காஃப்ரே, மென்கவுர் என்ற மூன்று அரசர்களுக்கானது.
நேரில் அவைகளைப் பார்க்கும்போது மேலதிக விவரங்களைச் சொல்கிறேன்.
இனி :
நீலவானத்தில் சில வெண்மேகக் கூட்டங்கள். நிலத்தில் பொன்னிற மணற்பரப்பு. அதில் வானத்தை உச்சி முகரும் பிரமிடுகள். கண்களை அசர அடிக்கும் பிரம்மாண்டம்!
இந்த மணற்பாங்கான வளாகத்தில், அரசர்களுக்கான மூன்று மிகப்பெரிய பிரமிட்களும், ராணிகளுக்கான மூன்று சிறிய பிரமிட்களும், ஸ்பிங்ஸ் (SPHINX) எனப்படும் மனிதத் தலையும், சிங்க உடலும் கொண்ட உருவமும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். இவை யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நினைவு சின்னங்கள்.
நம் தஞ்சை பெரியகோயில் கட்டுமானம் போலவே இங்கும், இந்த உயரத்திற்கு, இத்தனை பெரிய, வலுவான கற்களை எப்படி ஏற்றி வைத்தார்கள்? அதுவும் இந்தப் பாலைவனத்திற்கு நடுவே – என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது; சொல்லப்போனால், ஒரு கற்பாறைக்கும் அடுத்ததற்கும் இடையே, சிறிய இடைவெளி கூட இல்லை என்பது ஆச்சரியமூட்டுகிறது!
நாங்கள் தி கிரேட் பிரமிட் என்று அழைக்கப்படும் காஃபு பிரமிட் நோக்கி நடந்தோம். அந்த பிரமிட் பற்றிய தகவல்களை கைடு அமுன், சொல்லியபடி வந்தார்;
4500 வருடங்களுக்கு முன், விண்ணை முட்டும் கட்டுமானம்
“454 அடி உயரம், 755 அடி சதுர பீடம் கொண்ட இந்த பிரமிட் துவக்கத்தில் 481 அடி உயரம் இருந்ததாம்.
இதை கட்டி முடிக்கக் கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஆனது. அரசர் காஃபு’வின் ஒன்றுவிட்ட சகோதரர்தான் இந்த பிரமிடின் ஆர்க்கிடெக்ட் ஆக இருந்தார், என்று சொல்லப்படுகிறது. 55,00,000 டன் சுண்ணாம்பு கற்களும், 8000 டன் கிரானைட்டும் இதைக்கட்ட உபயோகிக்கப்பட்டது. 2,00,000 பேர் இங்கே வேலை செய்தார்களாம். இப்போது புரிகிறதா இந்த காஃபு பிரமிட்டின் பிரம்மாண்டம்?!” என்றார் அமுன்
இந்த மொத்த பிரமிடுகள் மீதும் தடிமனான வழுவழு வெள்ளை சுண்ணாம்பு பூச்சு இருந்ததாம். சூரிய வெளிச்சத்தை வாங்கி, பல கிலோமீட்டர்களுக்கு பிரதிபலிக்கச் செய்ததாம். காலவெள்ளத்தில் இந்த சுண்ணாம்பு பூச்சு அழிந்துவிட்டது. சொற்பமாக, காஃபரே பிரமிடு உச்சியில் சிறிய அளவு தொப்பி போல மிச்சம் உள்ளதை இன்றைக்கும் காணலாம்.
இப்படி அடுக்கப்பட்ட தொகுதி கற்களில் சிலவற்றின் எடை 80 டன் அளவிற்கு உள்ளனவாம். இதையெல்லாம் எப்படி தூக்கி அடுக்கினார்கள் என்பது காலதேவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
கி.மு 2560ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பிரமிட், அடுத்த 3800 நீண்…ட வருடங்களுக்கு உலகளவில் மனிதன் கட்டியதில் உயரமான கட்டுமானமாக (Tallest Man Made structure) இருந்து வந்ததாம்.
இந்த சாதனையை இங்கிலாந்தின் லிங்காலின் (LINCOLN) கதீட்ரல் 1311ஆம் ஆண்டு முறியடித்தது.
நிலவறை விஜயம்
வந்தியத்தேவன் பொக்கிஷ நிலவறைக்குள் இருந்த அந்த தருணங்களைப் பொன்னியின் செல்வனில் படித்த நியாபகம் உள்ளதா?
அந்த நிலவறை எப்படி இருக்கும்? எனக் கற்பனை செய்பவர்களுக்கு, நிஜமான தரிசனம்தான் இந்த பிரமிடுகளின் நிலவறை ஆகும்.
நான் வருவேன், வரமாட்டேன் என்று குழுவில் சொன்ன இருசாராரும் நிலவறை பார்க்க, காஃபு பிரமிடின் வெளிப்புற படிக்கட்டுகளின் வழியே ஏறி, சிறிய நுழைவாயிலை அடைந்தோம். டிக்கெட்டுகள் சரிபார்க்கப்பட்டு, உள்ளே நுழைந்தோம். கீழே இறங்க படிக்கட்டுகள் இருந்தன. சில இடங்களில் குனிந்து செல்ல வேண்டிய அளவுக்குக் குறுகலாக இருந்தது..
வெளிச்சத்திற்கோ, காற்று வசதிக்கோ குறைவில்லை. குறுகலான வழிகளில் சென்றாலும், விசாலமான அறைகள் வழியில் ஆங்காங்கே இருந்தன. சில இடங்களில் நம் கோயில்களைப் போலக் கற்களால் செதுக்கப்பட்ட தூண்கள், அழகான சுவரோவியங்கள், அதில் மன்னர்கள், படைவீரர்கள், பறவைகள், நட்சத்திரங்கள், விலங்குகள் எனப் பற்பல வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தன.
உள்ளே கிங்ஸ் சேம்பர், குயின்ஸ் சேம்பர், கிராண்ட் கேலரி மற்றும் அண்டர்கிரௌண்ட் சேம்பர் என்று பிரிவுகள் இருந்தன. அண்டர்கிரவுண்ட் சேம்பர் செல்ல மீண்டும் குறுகிய படிக்கட்டுகள் வழியே செல்ல வேண்டும். குகை போன்ற அமைப்பு. கைப்பிடிகளுடன், மரப் படிக்கட்டுகள் அமைத்திருக்கிறார்கள்.
பார்வையாளர்கள் வசதிக்காக மின் விளக்குகள் உள்ளன. இருட்டில் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. சில இடங்களில் குடவரை கோயில் போல உயரம் குறைந்து இருப்பதால், குனிந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த காஃபு பிரமிடில் விண்மீன்கள் ஆய்வகம் ஒன்று அக்காலத்தில் இருந்ததாம்.
“வெங்கட் சார், சுத்தமா லைட் எதுமில்லாம, ஒத்த ஆளா வெறும் டார்ச் லைட் வெளிச்சத்துல இந்த நிலவறையைச் சுத்திப் பார்த்தா சும்மா ஜிவ்வுனு இருக்கும் இல்லையா?” என்று டாக்டர் ராமநாத் கேட்க,
ஜானகி மாமி, “ஏன் டாக்டர் உங்களுக்கு இந்த கற்பனை?, தீடீர்னு உள்ள கரண்ட் கட் ஆயிடிச்சுன்னா எப்படி வெளில போறது.னு, வெங்கட் இப்பதான் என்கிட்ட கேட்டார்”
கிங்ஸ் சேம்பரில், ரெட் கிரானைட்டினால் ஆன, பூ வேலைப்பாடுகள் கொண்ட கல்லறை ஒன்று உள்ளது. உள்ளே எதுவும் இல்லை.
நெப்போலியன் போனஃபார்ட் இந்தப் பகுதிக்கு படையெடுத்து வந்தபோது இதற்குள் நுழைந்திருப்பாரா? தங்கியிருப்பாரா?
ஏன்? எதற்கு? எப்படி? என்று பிரமிடுகளைப் போல, அதன் நிலவறைகளிலும் பல மர்மங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பதில்கள் கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?
காஃபு பிரமிடின் நிலவறையை விட்டு வெளியே வந்தோம்.
கைடு அமுன் இனி மற்ற இரண்டு பெரிய பிரமிடுகளை வெளியில் இருந்து சுற்றிப் பார்த்து விட்டு வாருங்கள். நான் இங்கு காத்திருக்கிறேன். பிறகு எல்லோரும் சேர்ந்து ஸ்பிங்ஸ் பார்க்கச் செல்வோம் என்றார்.
பிரமிடுகளை விதவிதமாகப் போட்டோ எடுத்தோம். மொபைல் கேமராக்கள் பிஸியாக இருந்த தருணம் அது. வெளியில் வெயில் சற்று அதிகமாக இருந்தது. பனைஓலை தொப்பிகள் இந்தப் பகுதிக்குச் சிறந்தது.
“ஏய் அங்க பாருங்க!” என்று டாக்டர் குரல் கொடுக்க ஒட்டகத்தின் மீது
சாய் மற்றும் சந்தியா இளஞ்ஜோடிகள் வந்த வண்ணம் இருந்தார்கள்.
“ஒட்டகம் தரையில் உட்கார்ந்திருக்கும் பொழுது, நாம் அதில் ஏறி அமரவேண்டும். பிறகு மேய்ப்பவர் சொல்ல, ஒட்டகம் தடாலென்று எழும் அப்பொழுது குடை சாய்ந்துவிடுவோமோ என்கிறபடி ஓர் அதிர்வு இருக்கும். ஒட்டகம் கிளம்பியதும், ஜாலிதான். இன்ஃபாக்ட், பிரமிடுகளை ஒட்டகத்தில் அமர்ந்தவாறு பார்ப்பதே ஒரு சூப்பர் அனுபவம்” என்றார் சந்தியா.
பிரமிட் காஃபுவை அடுத்துள்ள, பிரமிட் காஃபரே 136 மீட்டர் (446 அடி) உயரம் கொண்டது. கி.மு 2570 இல் அரசர் காஃபரேயால் (காஃபுவின் மகன்) கட்டப்பட்டது.
மூன்றாவது பிரமிட் காஃபரேயின் புதல்வர் மென்கௌர் அவர்களால் கி.மு 2510 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மற்ற பிரமிட்களை விட உயரம் குறைவு (203 அடி). இந்த பிரமிட் கட்டி முடிப்பதற்குள் மென்கௌர் இறந்து விட, இன்னும் சில கற்கள் பதிக்கப் படாமல் உள்ளன. ஒரு பெரிய ஓட்டையை இந்த பிரமிடில் காணலாம்
மூன்று பிரமிடுகளைத் தவிர, ராணிக்கான மூன்று சிறிய பிரமிட்கள் சுமார் 65 அடி உயரத்தில் உள்ளன. மன்னர் காஃபுவின் மனைவி, சகோதரி மற்றும் தாயாருக்காக உருவாக்கப்பட்ட இவைகள், குயின்ஸ் பிரமிட் என்று அழைக்கப்படுகின்றன.
இதைத் தவிர மாஸ்தபஸ் (MASTABS) என்று அழைக்கப்படும், இறுதிச் சடங்குகளுக்கான சில கட்டமைப்புகளும் உள்ளன. அவைகள் மன்னரின் உறவினர்களுக்காகவும், உயர் அதிகாரிகளுக்காகவும் கட்டப்பட்டவை.
பிரமிட்கள் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்
கி.மு 100 ஆம் ஆண்டு முதலே, பிரமிடுகளைப் பார்க்க, சுற்றுலா பயணிகளின் வருகை துவங்கிவிட்டது. 1196 (பொ.ஆ) இந்தப் பிரமிடுகளைச் சிதைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
1700 (பொ.ஆ) ஆம் ஆண்டு வாக்கில்தான், இந்தப் பிரமிடுகளுக்குள் அப்படி என்ன இருக்கிறது? என்கிற ஆராய்ச்சி தீவிரமடைந்தது. 1765 ஆம் ஆண்டு கிங்ஸ் சேம்பர் என்னும், அரசரின் நிலவறையை டேவிசன் என்கிற ஆங்கிலேயர் கண்டுபிடித்தார்.
1798 ஆம் ஆண்டில் ஒரு பெரிய யுத்தம், இந்த வளாகத்தில் நடைபெற்றது. அதற்கு Battle of Pyramids என்று பெயர். இதில் நெப்போலியன் போனஃபார்ட், அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த ஆட்டமன் அரசரை வீழ்த்தினார்
எகிப்து, 1801ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் கீழ் வந்தது. அரசர் மென்கௌர் கல்லறை பெட்டி 1837 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெட்டியை கப்பல் மூலம் எடுத்துக்கொண்டு, இங்கிலாந்து சென்றபொழுது, கப்பல் துரதிர்ஷ்டவசமாக நடுக்கடலில் மூழ்கிவிட்டது.
முதலாம் உலகப்போரில், நேசநாடுகளின் போர்ப்பாசறையாக இந்தப் பிரமிட்கள் செயல்பட்டன.
தி கிரேட் ஸ்பிங்ஸ் ஆஃப் கீசா

அனைவரும் நடந்து பிரம்மாண்டமான ஸ்பிங்ஸ் சிலையை அடைந்தோம்.
மனித தலையும், சிங்கஉடலும் கொண்ட இந்த உருவத்தை கிரேக்கர்கள் தங்களுடைய புராண கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு ஸ்பிங்ஸ் என அழைத்தார்கள்.
இதன் மனிதமுகம் அரசர் காஃப்ரேயின் முகத்தை ஒத்துள்ளது என்கிறார்கள். காலிருந்து, வால் வரை 240 அடி நீளமும், 66 அடி உயரமும் கொண்டு பிரம்மாண்டமாக இந்த சிலை விளங்குகிறது. காலவெள்ளத்தில் இந்த சிலையின் மூக்கு உடைபட்டுள்ளது.
சூரிய உதயத்தைப் பார்க்கும்வண்ணம், இதன் முகமானது கிழக்கு நோக்கி, அமைந்துள்ளது. பண்டைய எகிப்தியர்கள் சூரிய வழிபாடு செய்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எகிப்தில் சூரிய கடவுளின் பெயர் ‘ரா’ என்பதாகும்.
உலகம் முழுவதும் இருந்து சுமார் 140 லட்சம் சுற்றுப் பயணிகள் இந்த பிரமிடுகளைக் காண வருகிறார்கள் என்றால், இவற்றின் பெருமையை என்னவென்பது!!
கிசா பிரமிட் வளாகத்தை பிரிய மனமின்றிக் கிளம்பினோம்.
மதிய உணவை ஓர் இந்திய உணவகத்தில் முடித்துவிட்டு, அடுத்ததாக எகிப்திய அருங்காட்சியகம் சென்றோம்
The Egyptian Museum of Cairo
எகிப்தில் உள்ள அருங்காட்சியங்களில், தாஹிர் சதுக்கத்தில் உள்ள இந்த மியூஸியம் உலகின் பெரிய காட்சிப் பொருளகங்களில் ஒன்று. பிரஞ்ச் கட்டிடக்கலை நிபுணர் மார்ஷல் டோர்ணன் வடிவமைக்க, இத்தாலிய கம்பெனியால் கட்டப்பட்டது. 1,70,000 மேற்பட்ட தொல்பொருட்களைக் கொண்ட இக்காட்சியகம் 15 நவம்பர் 1902 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
அருங்காட்சியத்தில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய பகுதி, உலகப் பிரசித்திப் பெற்ற ராயல் மம்மி ரூம் ஆகும். மன்னர்களும், ராணிகளும் ‘பாடம் செய்யப்பட்டு’ வைக்கப்பட்டுள்ள மம்மிகள் அறை இது.
தங்க முகமூடி (The Golden Mask of TUTANKHAMUN)
பார்க்க வேண்டிய மற்றொன்று மன்னர் துட்தங்கமுன் (TUTANKHAMUN) அவர்களின் உலகப் புகழ் பெற்ற தங்க முகமூடி ஆகும். தங்க தகடால் ஆன இந்த முகமூடியின் மொத்த எடை 10 கிலோவுக்கு மேல்!
3000 வருடங்கள் பழமையான, எகிப்திய சிற்பக் கலைக்கு மிகச் சிறந்த சான்றான இந்த முகமூடியை வேலி ஆஃப் கிங்ஸ் பகுதியில் (LUXUR) 1925ஆம் ஆண்டு ஹாவர்ட் கார்ட்டர் என்கிற புதைபொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார்.
இறந்தவர்களின் முகத்தின் மீது, அவர்கள் முகத்தைப் போலவே முகமூடியை (MASK) செய்து வைப்பது பண்டைய எகிப்தியர்களின் வழக்கமாக இருந்திருந்தது. ‘ஆவி’, தன் உடலை அடையாளம் தெரிந்து கொள்ளும் வகையாக இதைச் செய்தார்கள் – என்றார் கைடு.
.
நெடிய 5000 வருட எகிப்திய வரலாற்றை ஒரே இடத்தில் காணலாம். மனிதர்கள் மட்டுமல்ல சில முதலைகளின் மம்மியையும் (Mummified) இங்கு காணலாம் என்பது ஆச்சரியம்.
மியூசியம் விசிட் முடித்து, எங்கள் பேருந்தில் ஏறி கெய்ரோ ரயில் நிலையம் வந்து இறங்கினோம். அங்கிருந்து எகிப்தின் அஸ்வான் நகரத்திற்கு செல்லும் ரயிலில் ஏறினோம். இரவு உணவு ரயிலிலேயே வழங்கப்பட்டது. எங்களுடைய ரயில் பயணம், அஸ்வான் அணைக்கட்டை நோக்கித் துவங்கியது.
எகிப்திய பழமொழி :
தன் கடந்த காலத்தை அறியாதவன், எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது
(தொடரும்..)

