துக்ளக்

யார் இந்த துக்ளக்? இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா? | Unknown Facts About Muhammad Bin Tughluq - Tamil BoldSky

கி.பி 1316-ல், டெல்லி சுல்தானகத்தை ஆட்டிப்படைத்த, இந்தியாவின் முதல் இஸ்லாமிய மாமன்னன், அலாவுதீன் கில்ஜி காலமானான். அதிகாரத்திற்கான சதுரங்க ஆட்டம் தொடங்கியது. அலாவுதீனின் நம்பிக்கைக்குரிய தளபதியான மாலிக் காபூர், அரியணையைத் தன் வசப்படுத்தத் துடித்தான். அலாவுதீனின் மூத்த மகன்களைப் புறக்கணித்துவிட்டு, வெறும் 6 வயதே ஆன சிறுவன் ஷிஹாபுதீன் உமரை பெயரளவு மன்னனாக அமரவைத்தான். தானே அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக்கொண்டு ‘ரீஜண்ட்’ ஆகச் செயல்பட்டான்.

மாலிக்காபூரின் ஆதிக்கம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. வெறும் 35 நாட்களில், அரண்மனைக் காவலர்களே அவனைத் தீர்த்துக்கட்டினர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலாவுதீனின் மூத்த மகன் முபாரக் ஷா விடுவிக்கப்பட்டான். ஆரம்பத்தில் தன் தம்பி உமருக்குப் பாதுகாவலராக இருந்த முபாரக் ஷா, விரைவிலேயே ‘பொம்மை மன்னனாக’ இருந்த தம்பியின் கண்களைப் பறித்துவிட்டு, தன்னைச் சுல்தானாக அறிவித்துக் கொண்டான். குத்புதீன் முபாரக் ஷா என்ற பெயரில் 1316 முதல் 1320 வரை ஆட்சி செய்தான். இவன் ஆடம்பரத்திலும் கேளிக்கைகளிலும் மூழ்கிக் கிடந்ததால் கில்ஜி வம்சம் பலவீனமடைந்தது. முபாரக் ஷாவின் நம்பிக்கைக்குரிய நண்பனான குஸ்ராவ் கான், 1320-ல் மன்னனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான்.

கொலையாளியான குஸ்ராவ் கான் அரியணையில் அமர்ந்ததை டெல்லி பிரபுக்களால் ஏற்க முடியவில்லை. அந்த நேரத்தில் பஞ்சாப் பகுதியின் ஆளுநராக இருந்தவன் காஜி மாலிக் (கியாசுதீன் துக்ளக்). அவன் அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலிய படையெடுப்புகளை 29 முறை வெற்றிகரமாக முறியடித்த ஒரு பெரும் வீரன். டெல்லியின் பிரபுக்கள் அவனை உதவிக்கு அழைக்க, காஜி மாலிக், தனது படைகளுடன் டெல்லியை நோக்கிப் படையெடுத்தான். 1320-ல் நடந்த போரில் குஸ்ராவ் கானைத் தோற்கடித்து, கியாசுதீன் துக்ளக் என்ற பெயருடன் துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தானாக அரியணை ஏறினான்.

கியாசுதீன் வெறும் போர் வீரன் மட்டுமல்ல, ஒரு சிறந்த நிர்வாகியும் கூட. அவன் டெல்லிக்கு அருகே ஒரு பிரம்மாண்டமான கற்கோட்டையை உருவாக்கினான், அதுவே இன்று நாம் காணும் துக்ளகாபாத். விவசாயிகளின் நலனுக்காகத் தனி கவனம் செலுத்திய அவன், கால்வாய்களை வெட்டி பாசன வசதிகளை மேம்படுத்திய முதல் சுல்தான் அவன். 

கியாசுதீனின் ஆட்சி மிகக்குறுகிய காலமே (1320-1325) நீடித்தது. வங்காளப் போரில் வெற்றி பெற்றுத் திரும்பும்போது, அவனுக்கு வரவேற்பு அளிப்பதற்காக அவன் மகன் ஜூனா கான் (முகம்மது பின் துக்ளக்) ஒரு மர மேடையை அமைத்திருந்தான். அந்த மேடை சரிந்து விழுந்ததில் கியாசுதீன் துக்ளக் உயிரிழந்தான். இது ‘விதி’யா அல்லது ஜூனா கானின் திட்டமிட்ட சதியா என்பதை வாசகர்களின் ஊகத்துக்கு விட்டு விடுவோம்.  

‘முரண்பாடுகளின் மூட்டை’ முகம்மது பின் துக்ளக். தந்தையின் மறைவுக்குப் பிறகு ஜூனா கான், முகம்மது பின் துக்ளக் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தான்.

இவன் மிகுந்த கல்வி அறிவு கொண்டவன், ஆனால் இவனது திட்டங்கள் அனைத்தும் விசித்திரமானவை. தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு மாற்றியது, தங்கம் மற்றும் வெள்ளி காசுகளுக்குப் பதில் செப்பு நாணயங்களை அறிமுகப்படுத்தியது போன்ற முடிவுகள் பெரும் தோல்வியில் முடிந்தன. இதனால் இவனை ‘புத்திசாலி முட்டாள்’ என்று வரலாறு அழைக்கிறது.

Mohammed Bin Tughlaq Tamil Movie| சோ இயக்கி நடித்த சிறந்த அரசியல் நகைசுவை படம் முஹம்மது பின் துக்ளக்பின்னாளில், ‘சோ’ இவனை வைத்து நாடகம் எழுதி, அரசியல் பத்திரிக்கைக்கு துக்ளக் என்று பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.

கி.பி 1327-ல், தனது பேரரசை மையத்திலிருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக, தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கே உள்ள தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றினான். வெறும் அரசவை மட்டும் மாறாமல், டெல்லியில் இருந்த ஒட்டுமொத்த மக்களையும் 1500 கி.மீ தூரம் நடக்க உத்தரவிட்டான். கோடைகாலப் பயணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பிறகு தெற்கிலிருந்து வடக்கை நிர்வகிப்பது கடினம் என உணர்ந்து, மீண்டும் அனைவரையும் டெல்லிக்கே திரும்பச் சொன்னான். டெல்லி ஒரு சுடுகாடு போல ஆனது. பொருளாதாரத்தை மேம்படுத்த, தங்கம் மற்றும் வெள்ளி காசுகளுக்குப் பதிலாக செப்பு மற்றும் பித்தளை நாணயங்களை அறிமுகப்படுத்தினான். இது இன்றைய ‘காகிதப் பண’ முறைக்கு முன்னோடி. ஆனால், அரசு முத்திரையைப் பாதுகாப்பாக உருவாக்கத் தவறிவிட்டான். இதன் விளைவாக, மக்கள் தங்கள் வீடுகளிலேயே கள்ள நாணயங்களை அச்சடிக்கத் தொடங்கினர். சந்தையில் போலி நாணயங்கள் குவிந்தன. வெளிநாட்டு வர்த்தகம் முடங்கியது. தோல்வியை ஒப்புக்கொண்ட சுல்தான், போலி நாணயங்களுக்குப் பதில் அரசு கருவூலத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை மாற்றிக் கொடுத்ததால் கஜானா காலியானது.

நிலப்பகுதியில் வரியை மிகக்கடுமையாக உயர்த்தினான். துரதிர்ஷ்டவசமாக, அவன் வரி உயர்த்திய அதே நேரத்தில் அந்தப் பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பசியால் வாடிய விவசாயிகள் நிலத்தை விட்டு ஓடினர். இதனால் கோபமடைந்த சுல்தான் அவர்களை வேட்டையாடித் தண்டித்தான், இது பெரும் புரட்சிக்கு வழிவகுத்தது. இறுதியில், இந்தத் தோல்விகளால் இவரது ஆட்சியின் கீழ் இருந்த விஜயநகரப் பேரரசு மற்றும் பாமினி சுல்தானகம் போன்றவை சுதந்திர நாடுகளாகப் பிரிந்து சென்றன.

முகம்மது பின் துக்ளக்கின் விசித்திரமான முடிவுகளால் டெல்லி சுல்தானகம் நிலைகுலைந்தபோது, ஆட்சிக்கு வந்தவன் அவனது சகோதரன் மகனான பெரோஸ் ஷா துக்ளக், இவன் போர் புரிவதை விட, மக்கள் நலத் திட்டங்களிலேயே ஆர்வம் காட்டினான். ஏழைகளுக்காக மருத்துவமனைகள் மற்றும் பல புதிய நகரங்களை (பெரோசாபாத், ஜான்பூர்) உருவாக்கினான். இவனது கதை முந்தைய சுல்தானிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது:

முகம்மது பின் துக்ளக்கின் காலத்தில் மக்கள் அனுபவித்த துயரங்களைக் கண்டு, பெரோஸ் ஷா துக்ளக் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்தான். சுமார் 24 வகையான கொடூரமான வரிகளை நீக்கினான். இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நான்கு வரிகளை மட்டுமே வசூலித்தான். கை, கால் துண்டித்தல் போன்ற கடுமையான உடல் ரீதியான தண்டனைகளை ரத்து செய்தான்.

மக்களைக் கவர அவன் பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டான். ஏழை மக்களுக்காக இலவச மருத்துவமனைகளைக் கட்டினான். ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கவும், விதவைகளுக்கு உதவவும் ஒரு தனித் துறையை உருவாக்கினான். விவசாயத்திற்காக கங்கை மற்றும் யமுனை நதிகளிலிருந்து பல கால்வாய்களை வெட்டினான். கட்டடக்கலை மீது ஆர்வம் கொண்டவன். சுமார் 300 புதிய நகரங்களை உருவாக்கினான். அவற்றில் முக்கியமானவை: பெரோசாபாத் (இன்றைய பெரோஸ் ஷா கோட்லா, டெல்லி) ,ஜான்பூர் ,ஹிசார் மற்றும் பதேஹாபாத்.

பெரோஸ் ஷா துக்ளக் அடிமைகளைச் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தான். அவனிடம் சுமார் 1,80,000 அடிமைகள் இருந்தனர். அவர்களைப் பராமரிக்க தனித் துறையையே (அடிமை வாரியம்) உருவாக்கினான். இது பிற்காலத்தில் அரசுக்கு பெரும் நிதிச் சுமையாக மாறியது.

1388-ல் பெரோஸ் ஷா காலமானான். அவருக்குப் பின் வந்தவர்கள் பலவீனமாக இருந்தனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, 1398-ல் மத்திய ஆசியாவிலிருந்து தைமூர் இந்தியா மீது படையெடுத்தான். அவனது படையெடுப்பு டெல்லியைச் சிதைத்ததுடன் துக்ளக் வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நிற்க.

அந்தக் காலக்கட்டத்தில், தென்னிந்தியாவின் நிலையை சற்றுப் பார்ப்போம். விஜயநகர சாம்ராஜ்யத்தின் உதயத்திற்கு முந்தைய காலம் அது. டெல்லி சுல்தானகத்தின் நிழல் தென்னிந்தியாவை நோக்கி மெல்ல நகரத் தொடங்கிய காலம் அது. 1320-களில் துக்ளக் வம்சம் டெல்லியில் ஆட்சியைப் பிடித்ததும், தெற்கில் இருந்த பலம் வாய்ந்த பேரரசுகள் பெரும் சவால்களைச் சந்தித்தன.

துவாரசமுத்திரத்தின் சிங்கம் – வீர பல்லாளன்: கர்நாடகாவின் துவாரசமுத்திரத்தை (இன்றைய ஹளேபீடு) தலைநகராகக் கொண்டு ஹொய்சாளப் பேரரசை வீர பல்லாளன் III (கி.பி 1292–1343) ஆண்டு வந்தான். டெல்லி சுல்தானகத்தின் ஆதிக்கத்தைத் தெற்கில் நுழைய விடாமல் தடுப்பதில் அவன் மிகத் தீவிரமாக இருந்தான். 1320-களில் சுல்தான்களின் படைகளைத் துணிச்சலுடன் எதிர்த்து நின்ற பெரும் சக்தியாக அவன் விளங்கினான்.

மதுரையின் வீழ்ச்சி – பாண்டியர்கள்: தமிழகத்தின் மதுரையில் பாண்டிய வம்சம் ஆட்சி செய்து கொண்டிருந்தது. சுந்தர பாண்டியன் IV மற்றும் வீர பாண்டியன் IV ஆகியோர் (கி.பி 1309–1345) மன்னர்களாக இருந்தனர். ஆனால், அதற்கு முந்தைய படையெடுப்புகளாலும், உள்நாட்டுப் பூசல்களாலும் பாண்டியர்களின் வலிமை பெருமளவு குறைந்திருந்தது. இதனால் மதுரையின் மீது அந்நிய ஆதிக்கம் எளிதாக நுழைய வழிவகுத்தது.

வாரங்கலின் வீழ்ச்சி – காகதீயர்கள்: ஆந்திராவின் வாரங்கலைத் தலைநகராகக் கொண்டு காகதீய வம்சத்தின் பிரதாபருத்திரர் (ருத்ரதேவா II) ஆட்சி செய்தான். ஆனால் 1323-ல் துக்ளக் படைகளிடம் அவன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புகழ்பெற்ற காகதீய வம்சம் நிலைகுலைந்தது. இது தக்காணப் பகுதியில் ஒரு பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.

கம்பிலி ராஜ்ஜியம்: கர்நாடகாவில் இருந்த சிறிய நாடான கம்பிலி ராஜ்ஜியம், துக்ளக்குகளை எதிர்த்து வீரத்துடன் நின்றது. இறுதியில் இது வீழ்ந்தாலும், இந்த மண்ணின் மைந்தர்கள்தான் பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசு தோன்றக் காரணமாக அமைந்தனர்.

விஜயநகரத்தின் உதயம்:இந்தக் குழப்பமான 1320-கள்தான் ஒரு மாபெரும் பேரரசு தோன்றுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தன. ஹொய்சாளர்களின் கீழ் அதிகாரிகளாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய வீரர்கள்தான், 1336-ல் புகழ்பெற்ற விஜயநகரப் பேரரசை நிறுவி தென்னிந்தியப் பண்பாட்டைக் காத்தனர்.

இந்திய நாட்டில் முஸ்லிம் ஆதிக்கம் சில நூற்றாண்டுகள் தொடர்ந்தது.

அந்தக்கதைகளை சரித்திரம் பதிவுசெய்ய விழைகிறது.