சிவசங்கரி – சிலிகான் ஷெல்ஃப்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

2026 மார்ச் மாதத்திற்கான சிறந்த கதையாக ம. சுவாமிநாதன் தேர்ந்தெடுத்த கதை

பிறந்தநாள் பரிசு – ராமராஜன் மாணிக்கவேல் – சொல்வனம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

  1. பிறந்தநாள் பரிசு – ராமராஜன் மாணிக்கவேல் – சொல்வனம்

நேர்மையான ஒரு நல்ல மனிதனின் மகளுடைய பிறந்தநாள் 28ஆம் தேதி. மாதக் கடைசி என்பதால் கேக் வாங்கக் கையில் காசு இருப்பதில்லை. கடன் வாங்கும் வழக்கமும் கிடையாது. எனவே அன்று தாமதமாகவே வீடு திரும்புவான். அதற்குள் குழந்தை தூங்கியிருப்பாள்.

தான் பிறந்தநாள் கொண்டாட வசதி இல்லை என்பதாலேயே, அந்தச் சிறுமி தன் தோழிகளின் பிறந்தநாள் நிகழ்வுக்குப் போகமாட்டாள். பல சமயம் பிறந்தநாள் கொண்டாடும் அந்தத் தோழி, இவளுக்கு வீட்டிற்கு வந்து கேக் கொடுத்துவிடுவாள். எப்படியாவது திரும்பக் கொடுக்கவேண்டும் என்கிற ஆசையும் இந்தப் பெண்ணிற்கு வரும்.

இந்த ஆண்டும் தாமதமாக விடு திரும்பும் தந்தை, பெண்ணின் பிறந்தநாளுக்குப் பரிசு கொண்டு வருகிறான்.  அது கேக் இல்லை புத்தகம். கதையில் நெஞ்சைக் கவரும் விஷயம் எதற்கும் கோபமோ வருத்தமோ படாத அந்தச் சிறுமியின் பாத்திரப்படைப்பு. வீடு வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனபோதே சிரித்தவள்.

பல நாட்கள் சிரமப்பட்டு கிணறு தோண்டுகிறார் தந்தை. நல்ல தண்ணீர் வந்ததும் ஊர்ப் பொதுக் கிணறாக அறிவிக்கிறார்.

அருமையான நடையும், நெஞ்சில் நிற்கும் அன்பும் புரிதலும் கொண்ட குடும்பத்தைக் கண்முன் நிறுத்தும் கதை அமைப்பும் இந்தக் கதைக்கு முதலிடத்தைப் பெற்றுத் தருகிறது

2. ராசாத்தி வலசு – இரா சேனா –  நடுகல்

இயல்பான நல்ல கணவன். குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால் எல்லோராலும் குத்திக்காட்டப்படும் மனைவி, பாத்திரம் விற்பவனோடு சென்றுவிடுகிறாள். அவனால் ஏமாற்றப்பட்டு தன் அம்மா வீடு திரும்பிவிடுகிறாள். திரும்பிவந்த மனைவியை மீண்டும் அவள் கணவன் மன்னித்து ஏற்றுக்கொள்ள சமாதானம் செய்து தரவேண்டும் என்று அந்தப் பெண்ணின் அம்மா ஊர்ப் பெரியவரிடம் முறையிடுகிறாள். என்ன கேட்பது, எப்படிக்கேட்பது, அவன் என்னவெல்லாம் கேள்வி கேட்பான், எப்படி மனைவி யை மன்னிப்பான் என அந்த பெரியவரும் மற்றவர்களும் குழம்புகிறார்கள்.

கணவன் வருகிறான்; யாரும் எதுவும் சொல்வதற்கு இடமே கொடாமல் மனைவியிடம் “சரி.. நட வூட்டுக்கு..” என்று கூட்டிப்போகிறான். எல்லாரும் சொல்ல நினைத்த எல்லாம் தேவையற்று காற்றில் கரைந்து போகின்றன.

  1. மாடல்ல மற்றவை – பிறைநுதல்  – நடுகல்

ஐந்து சகோரதர்கள். அதில் வெளியூரில் படிக்கும், விடுமுறைக்கு ஊருக்கு வந்திருக்கும் இருவர். அவர்கள் திரும்பிப்போக ரூ 20 தேவைப் படுகிறது.

நாட்களோ குறைவு. ஐந்து பேரும் சேர்ந்து கல் குவாரியில் வேலைசெய்தால்தான் பணம் புரட்ட முடியும். கஷ்டப்பட்டு அவர்கள் வேலை செய்வதைக் கண்முன் நிறுத்துகிறார் கதையாசிரியர்.

திடீரென அவர்கள் தாய்க்குக் கால் கட்டைவிரலில் பெரிய கல் விழுந்து பெரும் காயம் ஏற்படுகிறது. கைவைத்தியமும், நாடு வைத்தியமும் பலனற்றுப்போக மருத்துவ மனையில் சேர்க்க நேரிடுகிறது. நிறையச் செலவான பிறகு வீடு திரும்புகிறாள். செவலைப் பசு காலியாக இருக்கிறது. மனதுக்குள் அழுகிறாள்.

உருக்கமான, நேர்த்தியாக எழுதப்பட்ட கதை.

  1. இலக்கிய ஏஜெண்டுடன் ஒரு சந்திப்பு – இராய செல்லப்பா – கல்கி

அற்புதமான, புதுமையான எழுத்து. ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆனால் ‘ஏஜென்ட்’ என்கிற ஒரே பாத்திரம்தான் கதைமுழுவதும்பேசிக்கொண்டே இருக்கிறது. அதில்தான் கதை நகர்கிறது. வித்தியாசமான எழுத்தும் உத்தியும்.

  1. அன்புச்சங்கிலி ரிஷி கண்ணா குங்குமம்

அலுவலக விஷயமாக ஒரு ‘மீட்டிங்’கில் பங்கேற்க மும்பை செல்கையில் அங்கெ கையிலிருந்த ரூ 10000 தொலைந்துவிடுகிறது. பல இடங்களில் தேடியாயிற்று.   பிறகு பிள்ளையார் கோவிலுக்குப் போகிறான். ஹோட்டல் அறையில் மேஜையின் மேல் மடித்து வைத்தபடி இருக்கிறது. திரைச்சீலையில் சிக்கி மறைந்திருந்த பணத்தைத் துப்புரவுத் தொழிலாளி எடுத்து வைத்திருக்கிறார். அவரைக் கண்டு, நன்றி சொல்லி பரிசாகக்  கொஞ்சம் பணம் கொடுக்கலாம் என்று நினைக்கிறான். அவர் வீட்டுக்குச் சென்று விட்டார். மறுநாள் அவருக்கு விடுப்பு என்று ஹோட்டலில் சொல்கிறார்கள். அந்தத் தொழிலாளிக்குக் கொடுக்கச் சொல்லி பணம் கொடுத்தால், அவர்கள் ஹோட்டலின் விதிமுறைகளைக் காட்டி வாங்க மறுக்கிறார்கள்.

பங்களூர் திரும்பி, வாடகைக்காரில் வீடு செல்லும் பயணம் மிக அருமையாக விவரிக்கப்படுகிறது. அந்தக் வாகனத்திலும் ஒரு பிள்ளையார் படம். வண்டியோட்டி மகனுக்கு ஒரு குறிப்பிட்ட கடையில் பரோட்டா வாங்கிப் போக நினைக்கிறார். நேரமாகிவிட்டதால் அது சாத்தியப் படவில்லை. தனது மகனுக்காக வாங்கிவந்த ‘மெக்டோனால்ட் டோநட்’ ஐ டிரைவரிடம் கொடுத்துவிடுகிறான். வீட்டில் அழைப்பு மணியை அழுத்தும்போது கண்ணில்படுவது அதன் அருகிலிருக்கும் பிள்ளையார் படம்.

  1. எடுபிடி  – கனகா பாலன்  – வாசகசாலை.

அப்பா எடுபிடி வேலை செய்து ஏதோ சம்பாதித்து வருவார். அம்மா திட்டிக்கொண்டே இருப்பாள். எத்தனையோவித வேலை எல்லாம் எடுபிடி வேலைதான். முக்கியமான வேலை எதுவும் தெரியாது. அப்பா எடுபிடியாக இருப்பதால் நிறைய அவமானப்பட்டிருக்கிறார். பையனும் அப்பாவோடு போவான். துணையிருப்பான். யார் மூலமோ சிபாரிசு வாங்கி, கஷ்டப்பட்டு பணம் கொடுத்து வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுக்கிறார்.

ஆற்றில் குளிக்கும்போது அப்பாவிடம் கேட்கிறான், “நான் வெளிநாடு போவதில் உங்களுக்கு சந்தோஷமா அப்பா?” என்று. “அங்கே நீ என்ன வேலை செய்கிறாய் என்று யாருக்கும் தெரியாது. சம்பாதித்து நல்ல உடை உடுத்தி லீவில் வரும்போது, உன் அம்மா சந்தோஷப்படுவாள்.” என்று சொல்லியபடியே ஆற்றில் முங்கி எழுகிறார் அப்பா. அவர் கண்ணீரால் ஆற்றை உப்பாக்க முடியவில்லை.