கண்ணன் என் தோழன் | கண்ணன் பாட்டு | பாரதியார் | Kannan En Thozhan | Kannan Paatu | Bharathiyaarகண்ணதாசனின் கிருஷ்ண பக்தி - Kannadasan - Krishna Bhakthi - ஆலய தரிசனம்

ஆன்மிக அரசியல் என்று இன்றைக்குப் பேசுகிறோம். அது 5000 வருடங்களுக்கு முன் இருந்த வார்த்தை. நமது இரண்டு இதிகாசங்களின் அடிப்படையே இதுதான்.

இதிகாச என்றாலே இப்படி நடந்தது என்று அர்த்தம். அதாவது நடந்த வரலாறு என்று பொருள். ஐந்தாம் வேதம் எனக் கூறப்படும் மகாபாரதம் அளவிலும் பெரியது, மகிமையிலும் பெரியது. வேதத்தைப் போலவே ,அறம், பொருள், இன்பம், வீடு என்று ஒவ்வொருவரும் அடைய வேண்டிய லட்சியங்களை அழகாக விளக்கியதுடன் உபநிதங்களின் ஒட்டுமொத்த கருத்தையும் உள்ளடக்கிய பகவத் கீதையை கொண்டிருப்பதால் மகாபாரதத்தை ஐந்தாம் வேதம் என்று வேதங்களுக்கு சமமாக கூறுகிறார்கள்.

எனவே இந்த இதிகாசங்கள் என்பது இரு கண்கள் போல நம்மிடம் இருக்கின்றன

ஒன்று பெண்ணாசையால் விளைந்த விபரீதங்கள். இன்னொன்று மண் ஆசையால் அமைந்த விளைவுகள். எனவே வேதங்களை அடுத்து இந்த இதிகாசங்களே எல்லாவற்றுக்கும் அதாவது நமது வாழ்வியல் முறைகளுக்கு ஆதாரமானவை ஆகும். ஆத்திக, நாத்திக  புரட்சி, பகுத்தறிவு, புதுமை ஆய்வு என பல பேர்களுக்கும் கருத்துக்களை வாரி வழங்கும் கருவூலமே மகாபாரதம்.

எனவேதான் இதன் உள்ளே இருக்கின்ற பகவத் கீதை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

கீதை நிகழ்ந்த இடம் அரசியல் களம். அது ஒரு போர்க்களம். அங்கே ஆன்மிகம் இணைந்த பிறகுதான், அர்ஜுனனின் மனது நம்பிக்கை பெறுகிறது. மனதில் இருந்த கொள்கை, எடுத்துக்கொண்ட சபதம் எல்லாம் நிறைவேற்றப்படுகிறது.

அர்ஜுனனிடம் கண்ணன் கூறுகிறான் – கீதையில் இரண்டாவது அத்தியாயத்தில், 13,14,15 ஸ்லோகங்களில்,

உடலுள்ள ஆன்மா குழந்தைப்பருவத்திலிருந்து இளமைப் பருவம் மற்றும் முதுமை வரை தொடர்ந்து கடந்து செல்வது போலவே, மரணத்தின் பொழுது ஆன்மா மற்றொரு உடலுக்குள் செல்கிறது. அறிவாளிகள் இதனால் மயங்கி விடுவதில்லை.
குந்தியின் மகனே, புலன்களுக்கும் புலபொருட்களுக்கும் இடையிலான தொடர்பு மகிழ்ச்சி மற்றும் துன்பம் பற்றிய நொடிப்பொழுதான உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது. இவை நிரந்தரமற்றவை, இவை குளிர்காலம் மற்றும் கோடை காலங்களைப் போல வந்து செல்கின்றன. பரத வம்சத்தில் தோன்றிய அர்ஜுனா, அமைதி குலையாமல் அவைகளை சகித்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் 

ஓ அர்ஜுனா, மகிழ்ச்சி மற்றும் துன்பத்தால் பாதிக்கப்படாமல் இரண்டிலும் நிலையாக இருப்பவனே மனிதர்களில் உன்னதமானவன். அத்தகையவன் விடுதலைக்கு தகுதி பெறுகிறான்,

என்றெல்லாம் அர்ஜுனனை தயக்கத்தில் இருந்து, மயக்கத்தில் இருந்து மீள வைக்கிறான் கண்ணன். தயங்கி நின்ற, தனது திறத்தை மறந்து நின்ற, அர்ஜூனன் கண்ணில், கண்ணன், தளபதியாக மட்டுமல்ல, கண்களைத் திறந்துதிறந்துவிட்ட ஞானகுருவாகவே தெரிகிறான்.
மாவீரன் அலெக்ஸாண்டருக்கு, வாழ்வியலைப் புரிய வைத்தவர் தத்துவமேதை அரிஸ்டாட்டில்.

சத்ரபதி சிவாஜிக்கு, வீரம் நிறைந்த ஞானத்தைக் கற்பித்தது சமர்த்த ராமதாசர்.

விஜய நகர சாம்ராஜ்யம் அமைத்த மன்னர்கள் ஹரிஹரர், புக்கர் இருவருக்கும் மன மயக்கத்தைத் தெளியவைத்து, நெஞ்சில் உறுதியை ஏற்படுத்தியவர் ச்ருங்கேரி சாரதா பீடத்தின் 12 ஆவது பீடாதிபதியாக அலங்கரித்த ஶ்ரீ வித்யாரண்ய சுவாமிகள்.

மஹாகவி பாரதிக்கு , அரசியலில் குருவாக இருந்தவர், கீதா ரஹசியம் என்ற ஒப்பற்ற நூலை எழுதிய தேசியத் தலைவர் பால கங்காதர திலகர் அவர்கள். ஆன்மிக குருவாக பாரதிக்கு கிடைத்தவர் குள்ளச் சாமியார் என்பார்கள்.

கீதையை உள் வாங்கிய பாரதி – தேசியம் தெய்வீகம் கலந்த பாடல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதினான். மிகச் சிறந்த உதாரணம் – பாஞ்சாலி சபதம் என்ற காவியம்.

பாஞ்சால தேசத்தினர் பெற்ற தவப்பயன் தான் பாஞ்சாலி. பஞ்சபாண்டவரின் உயிர் போன்றவள்; அருள் தன்மையுடன் ஒளிவீசுபவள்; ஓவியம் போன்றவள்: பூமியில் உலவும் செல்வமகள்; எங்கும் தேடிக் கிடைப்பதற்கரிய திரவியம் பாஞ்சாலி.

படிமிசை இசையுறவே – நடை
பயின்றிடும் தெய்வீக மலர்க்கொடியைக்
கடிகமழ் மின்னுருவை – ஒரு
கழனியக் கனவினைக் காதலினை
வடிவுறு பேரழகை- இன்ப
வளத்தினை

என்று, அடிமைத் தளையைத் தகர்க்க எழும் பாரதச் சக்தியாகப் பாரதியால் படைக்கப் பட்டிருக்கிறாள்பாஞ்சாலி.

பாரதி, எங்கள் நாடு’ என நெஞ்சு நிமிர்த்தி, தேசிய கீதங்கள் என்ற கவிதையில்,

மன்னு மிமயமலை யெங்கள் மலையே
மானில மீதது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெதுவேறே

பன்னரு முபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூலிது போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவ மிஃதை யெமக்கிலை யீட

என மீசை முறுக்குகிறார்; தோள் தட்டுகிறார். இமயமலை,கங்கை, வேத-உபநிடதங்கள் ஆகிய மூன்று விஷயங்கள், சம்ஸ்கிருத-ஹிந்து-இந்தியத்துவத்தின் புனித அடையாளங்கள் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

இந்தியாவைப் புகழ்ந்துரைக்கும் இடங்களில் எல்லாம் இம் மூன்றையும் தவறாமல் குறிப்பிடுகிறார் பாரதியார்.
கண்ணனை வணங்கி, பாரதியை வழிகாட்டியாக எண்ணிய கண்ணதாசன் கூட, அரசியலில் தோல்வியுற்றாலும், தனது வலுவான நம்பிக்கை கொண்ட ஆன்மிகத்தால், நிம்மதி அடைந்தான் – புகழும் அடைந்தான். அவனின் பல பாடல்களில், மனிதனுக்கு நிம்மதியையும் , அமைதியையும் தரும் ஒரு பாடல் –

ஆறு மனமே ஆறு -அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்….
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும் – பெரும்
பணிவு என்பது பண்பாகும் – இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

அவனது பல பிரச்னைகளுக்கு, குறிப்பாக அவன் ஈடுபட்ட அரசியலில், நட்பு வட்டத்தில் கண்ட அரசியலில் அவன் சோர்ந்து போனபோது, அவன் நெஞ்சுக்கு நிம்மதி என நினைத்தது ஆண்டவன் சந்நிதியையே.