ஆண்டவன் விதித்த விதிப்படி டிரோஜன் நாட்டு இளவரசனும் வீனஸ் தேவியின் மகனுமான ஏனியஸ் பல ஆபத்துக்களைக் கடந்து இத்தாலி நாட்டிற்கு வந்தான்.
அங்கே ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவ வந்த ஏனியஸிற்கும் அங்கே அரசாண்ட லத்தின் நாட்டின் மன்னனுக்கும் இடையே நல்லுரவு ஏற்பட்டு தன் மகள் லிவினியாவை அவனுக்கு மணமுடித்துத் தரவும் தயாராக இருந்தார். அப்போது கடவுள் ஜூனோவின் ஏனியஸ் மீது கொண்ட வெறுப்பால் இருவருக்கும் இடையே பகை மூண்டது. லிவினியாவை மணமுடிக்கக் காத்துக்கொண்டிருந்த மாவீரன் டர்னஸ் லத்தீனுக்கு ஆதரவாக போரில் குதித்தான்.
தன் லட்சியக் கனவை நிலை நாட்ட தீர்மானித்த ஏனியஸ் மீது போர் திணிக்கப்பட்டது.
ஏனியஸை எதிர்க்க வந்தான் மாவீரன் டர்னஸ்.
இருவரும் நேருக்கு நேர் மோத முடிவு செய்தனர்.
இருவருக்கும் இடையே போர் கடுமையாக நடந்தது.
ஏனியஸின் போர்த் திறமைக்கு முன் டர்னஸால் எதுவும் செய்ய முடியவில்லை. வாளை எடுத்துக்கொண்டு ஏனியஸ் மீது பாய்ந்தான். டிரோஜன் வீரர்கள் துடிதுடித்தனர். ஏனியஸ் அழிந்துவிட்டான் என்று புலம்பத் தொடங்கினர். ஆனால் அவன் தாக்குதலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு வந்த ஏனியஸின் கண்களில் எதுவும் தப்பவில்லை. அவன் வரும் வேகம் வாளின் தாக்கம் இரண்டையும் கணித்து தன் கையிலிருந்து குத்தீட்டியால் அவன் விலாவில் சொருகினான். வந்த வேகத்தில் அப்படியே தரையில் விழுந்தான் டர்னஸ். தன் காலடியில் விழுந்த டர்னஸைக் கொல்ல ஈட்டியுடன் பாய்ந்தான் ஏனியஸ்.
டர்னஸ் குரல் நடுங்கியது. “என்னைக் கொல்லாதே…” என்று ஏனியஸிடம் கெஞ்சினான்.
ஏனீயஸும் ஒரு கணம் தயங்கினான்.
அந்த நேரத்தில் அவன் கண்கள் டர்னஸின் உடையில் தொங்கியிருந்த பாலாஸின் பட்டையை கண்டன.
அவனுடைய கோபம் மீண்டும் எரிந்தது. “இது பாலாஸின் இரத்தத்திற்கான தீர்ப்பு!” என்று கூறி அவன் ஈட்டியை இறக்கினான்.
டர்னஸ் உயிரிழந்தான்.
அந்தத் தருணத்தில் போர் முடிந்தது.
ஏனியஸ் இத்தாலி மண்ணில் புதிய எதிர்காலத்தை தொடங்கும் மனிதனாக நின்றான்.
எதிர்காலத்தில் ரோம் என்கிற பெரும் நகரம் ஒன்று எழும் !
அதன் சாட்சியாக நின்றான் ஏனியஸ் !
வர்ஜில் 12 புத்தகங்கள் கொண்ட உலகப்புகழ்பெற்ற ஏனிட் என்ற மாபெரும் இதிகாசத்தை இப்படித்தான் முடித்திருப்பார்.
கிரேக்க மன்னன் மனைவி ஹெலனை, டிராய் நாட்டு இளவரசன் பாரிஸ் கடத்திச் செல்ல கிரேக்க படை பத்து ஆண்டுகள் போரிட்டு கிரேக்க வீரர்கள் அக்கிலீஸ், ஒடிஸியஸ் ஆகியோரின் வீர தீரச் செயல்களால் ஹெலனை மீட்டு டிராய் நாட்டை எரித்த கதையை ஹோமர் தனது இலியட், ஓடிஸி காப்பியங்கள் மூலம் படித்தோம்.
டிராய் நாட்டிலிருந்து தந்தையையும் மகனையும் அழைத்துக்கொண்டு கடவுளர் விதிப்படி ரோம சாம்ராஜ்யம் நிறுவப் புறப்பட்ட கதையை வர்ஜில் தனது 12 புத்தகங்களில் ஏனிட் என்ற பெயரில் எழுதிய காப்பியத்தை இப்போது படித்து முடித்தோம்.
ஏனியஸ் தன் பயணத்தில் அனுபவித்த துயரங்கள்தான் தான் எத்தனை எத்தனை!
கடலின் கோபம், தெய்வங்களின் சதி, மனித மனத்தின் சோர்வு
கார்தேஜில் ராணி டிடோ மீது அவன் கொண்ட காதல், கடமையினால் எற்பட்ட பிரிவு
பாதாள உலகில் தன் தந்தையின் ஆவியிடமிருந்து எதிர்காலத்தைத் தெரிந்துகொண்டது,
பாலாஸ் என்ற வீரச் சிறுவனை மகனைப் போல ஆளாக்கி, போரில் அவன் டர்னஸால் கொல்லப்பட துயர்பட்டது,
ஏனியஸை எதிர்க்க கமில்லா என்ற வீரங்கனை வீரத்துடன் போரிட்டது, வேறு வழியின்றி ஏனியஸ் அவளைக் கொன்றது
இறுதியில் பாலாஸைக் கொன்ற டர்னஸ் என்ற மாபெரும் வீரனை ஈட்டியால் குத்திப் பழிவாங்கிப் போரை முடித்தது
என்று விவரமாக 12 புத்தகங்களில் விளக்கிய வர்ஜில், ஏனியஸின் மூலம் ரோம சாம்ராஜ்யம் ஒரு புதிய உலகத்தின் கதவு திறந்தது என்று முடிக்கிறார். அவர் இந்த காவியத்தை எழுதும்போது, ஒரு கதையை மட்டும் சொல்லவில்லை; ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆன்மாவை வடிவமைத்தார். ஆனால் விதி அவருக்கும் வித்தியாசமாக நடந்தது. அவர் தான் இறப்பதற்கு முன் இந்தப் படைப்பு முழுமையடையவில்லை என்று உணர்ந்தார். அதனால் ஏனிட் என்ற காவியத்தை “எரித்துவிடுங்கள்” என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அந்த வேண்டுகோள் நிறைவேறவில்லை.
ரோம சாம்ராஜ்ஜியத்தின் மாபெரும் சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீஸர் அந்தக் காவியத்தின் மதிப்பை உணர்ந்தார். இது ரோமாபுரியின் இதயம் என்று ஆணித்தரமாக நம்பினார். அதனால், அவர் அந்தப் படைப்பை காப்பாற்றி அதை உலகிற்கு அர்ப்பணித்தார்.
சுருங்கக் கூறினால், ஏனிட் என்பது ஒரு போர்க் கதை அல்ல. ஒரு பயணம். ஏனியஸ் என்ற ஒரு மனிதன் தன் ஆசைகளைத் துறந்து, ஒரு பெரிய நோக்கத்திற்காக வாழும் கதை.
ஏனியஸ் அடைந்த வெற்றி அவனுக்கானதல்ல, வருங்காலத்திற்கானது.
“ஒரு மனிதன் தன் வாழ்வை தியாகம் செய்தால், ஒரு சாம்ராஜ்யம் பிறக்கும்.”
அதுவே ஏனிட் சொல்லும் உண்மை.
இவ்வாறாக முடிந்த ஏனியஸ் காவியத்தின் முடிவிலிருந்து மகோன்னத ரோம சாம்ராஜ்யம் மலர்கிறது.
பின்னர் அது சரித்திரமாக விரிவடைகிறது.
ஏனியஸி
ன் மகன் அந்த இடத்தில் அல்பா லொங்கா என்ற மாபெரும் நகரத்தை நிர்மாணித்தான்.
பல ஆண்டுகளுக்குப் பின் ஏனியஸ் வம்சத்தில், ரோமுலஸ் மற்றும் ரீமஸ் என்ற இரு சகோதரர்கள் உதித்தனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து புதிய ராஜ்யத்தை உருவாக்கினர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரோமுலஸ் தன் சகோதரன் ரீமஸைக் கொல்ல வேண்டி நேர்ந்தது.
பின்னர் ரோமுலஸ் தனியாக மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். அதுதான் பிரசித்திபெற்ற ரோம சாம்ராஜ்யம். அது கி மு ஏப்ரல் 21, 753 அன்று துவங்கப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது.
ரோம் என்ற பெயர் உலக நாகரிகத்தின் சின்னமாக விளங்கியது.
ரோம் ஒரு நாளில் உருவானதல்ல என்று பழமொழி பேசும். ரோம் பல தலைமுறைகளின் கனவுகளால் கட்டப்பட்டது.
அதன் அடித்தளத்தில் ஏனீயஸின் துயரமும் தியாகமும் பதிந்திருக்கிறது.
அந்த ரோம சாம்ராஜ்யத்தின் வீரக் கதைகள் ஆயிரம் ஆயிரம். மக்களாட்சி, முடியாட்சி இரண்டும் அங்கே கோலோச்சியிருக்கிறது.
எத்தனை பெரும் சக்கரவர்த்திகள்!
ஜூலியஸ் சீசர், பாம்பே, அகஸ்டஸ் சீசர், மார்க்கஸ், டிராஜன், கான்ஸ்டண்டைன், டைபீரியஸ், போன்ற மாபெரும் சக்கரவர்த்திகளும், சிசரோ போன்ற பேச்சாளர்களும், ஏனிட் காவியத்தைப் படைத்த வர்ஜிலும் ரோம சாம்ராஜ்யத்தின் புகழை உலகெங்கும் கொண்டுசென்றனர்.
ரோம் எரியும்போது பிடில் வாசித்த நீரோ என்ற கொடூர மன்னனும் இருந்திருக்கின்றான்.
ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் இருவரும் ஜூலை, ஆகஸ்ட் என்ற இரு மாதங்களுக்குத் தங்கள் பெயரைத் தந்தார்கள்.(ஜூலியன் காலண்டர்)
(ஜூலியஸ் சீசர் நண்பர் புரூட்டஸால் கொல்லப்பட்ட கதை, ஆண்டணி – கிளியோபாட்ரா காதல் காவியம் ஆகியவற்றை பிற்காலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிப் பிரபலப்படுத்தினார். )
அவர்கள் ஆட்சிக் காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் புகழ் வானளாவி நின்று உலக நாகரிகத்தின் உச்சியில் இருந்தது. சட்டம், கட்டிடக் கலை, சாலை அமைப்பு, நீர்வழிப் போக்குவரத்து, தபால் துறை போன்றவற்றை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது ரோம நாகரிகம்.
உலக அதிசயமான கொலோசியம் கி.பி. 72 இல் பேரரசர் வெஸ்பாசியின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. 80000 பேர் பார்க்கும்படி அமைக்கப்பட்டத் திறந்தவெளி அரங்கம். போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழும். அவர்களை கிளாடியேட்டர்கள் என்று அழைப்பர்.
அகஸ்டஸ் காலத்தில் ரோமாபுரி சங்க கால தமிழ் மன்னர்களுடன் வணிகத் தொடர்பு இருந்துவந்தது. தமிழக மக்கள் இன்னாட்டு மக்களை யவனர் என்று அழைத்தனர். நமது பட்டினப்பாலையில் யவனர் தமிழகத்தில் வணிகம் புரிந்ததையும், யவனப்படை சோழ மன்னர் கீழ் பணியாற்றியதையும் விளக்குகிறது.
தமிழகத்திலிருந்து முத்து, மிளகு,தந்தம் மற்றும் பருத்தித் துணிகளை வாங்கி அவற்றிற்கு ஈடாகப் பொன்னைக் கொடுத்து அதனால் தங்கள் நாடு ஏழை நாடாகிவிடுமோ என்று ரோம ஆட்சியாளர்கள் அன்றே கவலைப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
ரோம – கிரேக்க -தமிழக தொடர்பை உறுதிப்படுத்தும் வண்ணம் ரோம நாணயங்களும் கிரேக்க நாணயங்களும் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்லாமல், “எரித்திரியக் கடலின் பெரிபுளுஸ்” (Periplus of the Erythraean Sea) என்பது முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, கிரேக்க மொழியிலான ஒரு பண்டைய கடல் வழிக்கையேடு, இது செங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் தமிழகத் துறைமுகங்கள் வழியாக ரோமானியப் பேரரசுக்கு நடந்த வர்த்தகம், துறைமுகங்கள், ஏற்றுமதி-இறக்குமதிப் பொருட்கள் குறித்த மிக முக்கியமான வரலாற்றுத் தகவல்களை வழங்குகிறது
( சாண்டில்யனின் யவனராணி, கலைஞரின் ரோமாபுரிப்பாண்டியன் நாவல்கள் படித்தால் இவர்கள் பெருமை தெரியவரும்)
டைபீரியஸ் சீசர் ஆட்சிக் காலத்தில்தான் ரோம சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட பெத்லேகத்தில் ஏசு கிறிஸ்து அவதரித்தார். ரோம கவர்னர் உத்தரவுப்படி வீரர்கள் ஏசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள்.
மலை அளவு உயரே சென்ற ரோம சாம்ராஜ்யம் பின்னர் மடுவில் வீழ்ந்து சரிந்தது.
அதுவரை, பல கடவுளர்களைக் கொண்டாடிய ரோம் பின்னர் கிறித்துவ மதத்தின் தலைமையகமாக மாறியது. இன்றைக்கு போப்பாண்டவர் இருக்கும் வாடிகன் என்ற தனி நாடு ரோம் நகரில் உள்ளது.
அன்றிலிருந்து ரோம் இத்தாலி நாட்டின் தலைநகரமாக விளங்கி வருகிறது.
2500 ஆண்டுகளாக சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள இன்றைய ரோம் ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுப்பயணத் தளமாகவும், கிறித்துவர்களின் புனிதத் தலமாகவும், பீட்ஸா, பாஸ்தா போன்ற உணவுகளின் இருப்பிடமாகவும், நவீன தலைநகரமாகவும் விளங்கி வருகிறது.
ரோமாபுரியை நிறுவிய ஏனியஸையும் அவன் கதையைக் காப்பியமாகத் தந்த வர்ஜிலையும் வணங்கி வாழ்த்தி உலக இடிகாசனக்களில் ஏனிட் கதையை நிறைவு செய்வோம்.
(முற்றும்)

