கொலு – படி-2 – சுண்டல் வேட்டை

கொலுப் படிகள் அமைத்து பொம்மைகள் எல்லாம் வைத்தாகிவிட்ட பிறகு அலங்காரம் ஜோடனைகள் , கலர் பல்புகள் எல்லாம் இடம்பெறும்.
அடுத்த மிக முக்கியமான திட்டமிடுதல் , இந்த ஒன்பது நாட்களுக்கும் கொலு பார்க்க வருபவர்களுக்கு என்ன சுண்டல் அல்லது திண்பண்டங்கள் விநியோகிக்கப்படவேண்டும் என்ற லிஸ்ட். தயாரிப்பது. இவையெல்லாம் வெறும் விநியோகப் பொருட்களல்ல. ஒன்பது மாலைகளிலும் சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்படும் “நைவேத்தியங்கள்”
இது நிச்சயமாக அம்மா, பாட்டி அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட பணிகள். என்றாலும் கிட்டத்தட்ட அந்த லிஸ்ட் எங்களுக்குப் பழக்கமானது. முதல்நாள் காராமணிச் சுண்டல், அடுத்த நாள் வெல்லம் போட்ட பயத்தம்பருப்பு சுண்டல் ,மூன்றாம் நாள் பட்டாணி சுண்டல், சரஸ்வதி பூஜை அன்று கொண்டைக்கடலைச் சுண்டல் என்பதெல்லாம் ஸ்டாண்டர்ட். இவை தவிர மொச்சைக்கொட்டை, ,பயறு, வேர்க்கடலை, அவல் போன்றவற்றில் தயாரிக்கப்படும் பொருட்களும் பிற நாட்களில் விநியோகிக்கப்படும்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது அறுபதுகளில் கழிந்த எனது இளம்பருவ நாட்களின் கொலு நினைவில் மிக முக்கியமான நினைவாக நிற்பது , இந்த சுண்டலும் சுண்டல் விநியோகமும் ஆகும்.
ஒவ்வொரு நாளும் ஐம்பது சிறு பொட்டலங்கள் போடும் அளவிற்கு சுண்டல் தயாரிக்கப்படும். மாலை நான்கு மணியளவில் தயாரிக்கப்படும் சுண்டலை ஐம்பது அறுபது பொட்டலங்களாகக் கட்டிவைப்பது எங்கள் வேலை. கொலு பார்க்க வரும் பெரியவர் சிறியவர் அனைவருக்கும் அவை வெற்றிலை பாக்கோடு வைத்துக் கொடுக்கப்படும்.
இன்னொரு விஷயத்தை இங்கு சொல்லியாகவேண்டும். எழுபதுகளுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இது அதிசயமாக இருக்கும். தி. நகர் போன்ற எங்கள் ஏரியாவில் ஒவ்வொரு தெருவிலும் உள்ள வீடுகளில் பாதிக்கு மேற்பட்ட இல்லங்களில் கொலு வைப்பார்கள். எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பத்து இருபது தெருக்களுக்கு உள்ளவர்கள் இத்தனை வீடுகளுக்கும் சென்று வருவார்கள்.
கொலு கொண்டாடப்படும் ஒன்பது நாட்களில் ஒரு சில நாட்களைக் குறிப்பிட்டு அன்று மாலை ஆறிலிருந்து எட்டு மணிக்குள் வரவும் என்று பத்திரிகை வைத்துக் கூப்பிடும் பழக்கம் அன்று கிடையாது. கொலுவுக்கு வாருங்கள் என்று யாரும் பத்திரிகை அடித்து நான் அன்று பார்த்ததில்லை.
இளம் பெண்களும், சிறுவர்களும், இல்லத்தரசிகளும் இயல்பாக கொலு வைத்திருக்கும் இல்லங்களுக்குச் சென்று தம் இல்லங்களுக்கு வருக என குங்குமம் கொடுத்து அழைப்பார்கள். இளம் பெண்கள் புத்தாடை உடுத்தி அதைப் பிறருக்குக் காட்டி மகிழ உறவு நட்பு இல்லங்களுக்குச் செல்வார்கள். சிறுவர்கள் சுண்டல் வாங்கி உண்ணும் சுவைக்காக அறிந்தவர் வீடுகளுக்குச் செல்வார்கள்.
ஒருவர் இல்லத்துக்கும் இன்னொருவர் இல்லத்துக்குமாகப் படையெடுக்கும் இந்த விழா முக்கியமாகப் பெண்களுக்கானது. கொலு பார்க்கவும் அழைக்கவும் செல்லும் மாமிகளும் , இளம் பெண்களும், கன்னியரும் ,சிறுமியரும் விதவிதமான பட்டாடைகள் உடுத்தி தலை நிறையப் பூ வைத்துக் கொண்டு , கைகளில் குங்குமச் சிமிழ்களோடு தெருவில் தேவதைகள் போலச் செல்வது கண்கொள்ளாக் காட்சி. அந்தக் கால எழுத்தாளர்களுக்கு இந்தப் பின்னணி பல “ரொமான்டிக் “ சீன்களை எழுத உதவி செய்துள்ளது என்பது ஓர் உபரித் தகவல் ஆகும்.
கொலுவைக் காணவரும் பெண்கள், கோலம் போட்டு தீபம் ஏற்றி வைத்து வழிபாட்டுக்கான தலம் போல விளங்கும் கொலுப்படிகளின் முன் அமர்ந்து பாட வேண்டும் என்பது மரபு. கர்நாடக இசை கற்றுக் கொள்ளும் பெண்கள் அனைவருக்கும் அக்காலத்தில் இது ஒரு வரப்ரசாதம். ஆண்டு தோறும் கிடைக்கும் இலவச மேடைகள்.
“ ஏய் பத்மா ஒரு பாட்டுப் பாடு. அதுதான் கிளாஸ் போயி கத்துக்கறயே .. பிகு பண்ணாதே.. பாடினாத்தான் சுண்டல்” என்பது போன்ற “டயலாக்குகள்” பிரசித்தம்.
இதற்கு ஆப்போஸிட் நிகழ்வும் நடப்பதுண்டு. மிகச் சுமாராகப் பாடும் சில பெண்கள், கொலுவை சாக்காக வைத்துக் கொண்டு ,அக்கம்பக்கத்து வீடுகளில் எல்லாம் தங்கள் அபஸ்வரக் கச்சேரிகளை நாள் தவறாமல் நிகழ்த்தி குரூர திருப்தி கொள்வதுண்டு.
“ நேத்திக்குத்தான் பாடி விட்டாயே ! இன்றைக்கு வேண்டாம்” என்று இசை ஞானம் உள்ள வீடுகளில் சிலர் பயத்துடன் தடுத்தாலும் விடேன் தொடேன் என்று இவர்கள் “பாடியே” படுத்துவார்கள்.
“புதுப் பாட்டு எங்க சார் கத்துக் கொடுத்திருக்கார் .. ஒங்க ஆத்துலதான் ஃபர்ஸ்ட் பாடப் போறேன் “ என்று சொல்லி நடுநடுங்க வைப்பார்கள்.
“ மாமா! இதோ பாருங்கோ இவதான் என் பொண்ணு மங்களம்.. குரலே சரியில்ல.. சுருதி சேர்ந்து பாட மாட்டேங்கறா.. நீங்க தான் எப்படியாவது ரெண்டு பாட்டு சொல்லிக் கொடுக்கணும்,,கொலுவுக்கு ஒண்ணு .. பொண்ணு பாக்கறத்துக்கு ஒண்ணு வேண்டாமா ,,சொல்லுங்கோ !” இதுவும் பாட்டு வாத்தியார் வீட்டில் கேட்கும் காமன் டயலாக் .
அந்தக் கால ஆனந்தவிகடனில் “வாணி” போட்ட ஒரு ஜோக் – கொலுவில் ஒரு பெண் கர்ண கொடூரமாய்ப் பாடிக்கொண்டு இருப்பாள். வெளியே திண்ணையில் அமர்ந்திருக்கும் வீட்டு மாமா உள்பக்கம் பார்த்து “ ஏண்டி ! இன்னுமா சுண்டல் கொடுக்கல” என்று சத்தமா கேட்பார்.
அப்போதெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஐந்தாறு குழந்தைகள் இருப்பார்கள். எப்படியும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும், இதுதவிர பல வீடுகள் கூட்டுக் குடும்பங்களாகவும் இருக்கும். எனவே நவராத்திரி நிகழும் ஒன்பது நாட்களும் எங்கள் ஏரியாவில் பல தெருக்களில் “கொலு டிராஃபிக் “ அதிகம் இருக்கும்.
சிறுவர் சிறுமியர் எல்லாம் ஒன்பது நாட்களும், ஒவ்வொரு நாளும் மாலையில் மினிமம் பத்து விடுகளுக்காவது விசிட் செய்து விடுவோம். வரவு -கையில் பத்து சுண்டல் பொட்டலங்கள்.
எந்த வீட்டில் என்ன சுண்டல் என்ற தகவல் ( நண்பர்கள் தயவு) தெரிந்து சுவைக்கேற்பச் செல்வதுவும் உண்டு.
ஒவ்வொரு நாளும் இரவு உண்ணப் போவதற்கு முன் “சுண்டல் பொட்டலங்கள் “ பிரிக்கப்படும். இரண்டு மூன்று பொட்டலங்களில் ஒரே வகை சுண்டல் – இருக்கும்; சில வேறு வகை இருக்கும்; சில வீட்டில் சுண்டலுக்கு பதிலாக வேர்க்கடலை அல்லது அப்பம் போன்றவை இருக்கும். நானும் என சகோதரனும் இவற்றை சற்றும் இளைக்காமல் உண்டு முடிப்போம். வயிற்றில் மிச்சம் இருக்கும் இடத்தில்தான் இரவு உணவுக்கு இடம் கொடுக்கப்படும். இன்று நினைத்தாலும் வாயில் எச்சில் ஊறுகின்றது. இதல்லவோ “ சுண்டலுக்கு மரியாதை” !
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும்தான் கொலு நடவடிக்கை என்றாலும், வீட்டுப் பெண்களுக்குத் துணையாகச் சிறுவர்கள் செல்வதுண்டு. அப்படி பல ஆண்டுகள் என அக்காவுடன் நான் கொலு “பார்க்க”ச் சென்று சுண்டல் வேட்டை ஆடியிருக்கிறேன். இது நானாகத் தேடிச் சென்ற வேட்டையல்ல; தானாக வந்து சேர்ந்த வேட்டை. காரணத்தை விளக்கினால்தான் உங்களுக்குப் புரியும்.
எங்கள் வீட்டில் என் சகோதரன் கணேஷ், மிருதங்கம் கற்றுக் கொண்டிருந்தான். நான் கற்றுக் கொள்ளாமலே ஏதோ பாடிக் கொண்டிருப்பேன். என் அக்கா வீணை கற்றுக் கொண்டிருந்தாள். பாடுவதற்கு மிகவும் கூச்சப் பாடுவாள்; அவள் வீணை கற்றுக் கொள்ள ஆரம்பித்ததே பாடாமல் இருக்கத்தான் என்பதுதான் உண்மை. கொலுவுக்குப் போகும் வீட்டில் எல்லாம் ,
“ பொண்ணே! ஒரு பாட்டு பாடு” என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். அதற்கு இவளது ஸ்டாக் பதில்
“ மாமி ! நான் வீணைதான் கத்துக்கறேன்.. பாட வராது.. “
“ தெரிஞ்ச அளவு பாடு ! கொலுவுக்கு வந்துட்டு பாடாம போகக் கூடாது. சாமி குத்தம்” என்பாள் மாமி.
உடனே என அக்கா என்பக்கம் திரும்பி, “ மாமி ! எனக்கு பதிலா இவன் பாடுவான்..டேய் ! பாடுடா “ என்பாள்.
நானும் சாமி குத்தம் நீங்க ஏதோ பாடி வைப்பேன்; (அதையும் மக்கள் இரசித்து சுண்டல் கொடுத்தார்கள் நண்பர்களே).
பல “கொலு ஆண்டுகள்” இந்த நாடகம் அரங்கேறியுள்ளது.
என தமக்கை வீணை கற்றுக் கொண்டதால் எனக்கு என்ன பயன் என்று எவரேனும் கேட்டால் , இக்கட்டுரை படித்த நீங்களே பதில் சொல்லிவிடுவீர்கள்.
ஆம்! பயன் “சுண்டல் வேட்டைதான்”
(தொடரும்)
