கி.சரஸ்வதி அம்மாள்
நீதிபதி கிருஷ்ணசாமி ஐயரின் மகள். சிறந்த சிறுகதை எழுத்தாளர். ‘அதிலும் ஒரு லாபம்’, ‘சம்பந்தி உபசாரம்’, ‘தெய்வத்திற்கு மேலே’, ‘ஆசி மொழிகள்’ குறிப்பிடத்தக்கவை.
கலைமகளில் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய ‘நிழலும் ஒளியும்’ பரிசு பெற்றது. ‘நாவலில் நாயகன், நாயகி வாழ்க்கை சுழற்சியை மட்டுமல்ல அந்த கிராமத்தின் 15 வருட கால சுழற்ச்சியையே கண்டுவிடுகிறோம். இந்த நாவலை ஒரு கிராமத்தின் கதை என்றே சொல்லிவிடலாம்’ என்கிறார் விமர்சகர் வெங்கட்சாமி நாதன்.
1950-களில் இந் நாவல் வெளியானது.’ கதையின் போக்குக்கு எழுத்தாளர் முழுவதும் பொறுப்பாளியாக மாட்டார். கவிதையும் கதையும் தங்கள் போக்குக்கு தாங்களே காரணம். நம்முடைய சாதாரண வாழ்க்கையில் எவ்வளவோ அனுபவங்கள் இருக்கின்றன.அனுபவத்தை நம் போக்கில் நாம் ஏன் சொல்லக்கூடாது? இவற்றிலும் ஒரு சுவாரசியம் இருக்கலாமல்லவா ! இதுதான் இந்தக் கதை தோன்றியதற்கான காரணம்’ என்று ‘நிழலும் ஒளியும்’ நாவல் புத்தக வடிவம் பெற்றபோது முகவுரையில் சரஸ்வதி அம்மாள் கூறியுள்ளார்.
ஆனந்தவிகடனில் 1956-இல் ‘கன்றின் குரல்’ என்ற நாவலை எழுதினார். இளம் மாணவன் தன்னை விட வயதில் பெரிய பெண்ணைக் காதலிப்பதை கருவாகக் கொண்ட படைப்பு.
குகப்பிரியை
இனிய நீரோட்டம் போல தங்குதடையின்றி செல்லும் தமிழ் நடைக்குச் சொந்தக்காரர் என்று கல்கியால் பாராட்டப்பட்ட எழுத்தாளர் குகப்பிரியை. இயற்பெயர் ஸ்வர்ணாம்பாள். 1946-50 களில் ‘மங்கை’ என்ற பெண்கள் இதழை நடத்தியவர். ‘புதுமைப் பெண்’ இதழின் ஆசிரியராகவும் இருந்தார். 1933-இல் ஆனந்தவிகடன் நாவல் போட்டி அறிவித்தது. பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய். குகப்பிரியை எழுதிய நாவல் ‘சந்திரிகா’ பரிசு பெற்றது. ‘தேவகி’, ‘ஜீவகலை’, ‘மல்லிகா’, ‘கானல் நீர்’, ‘ஒலி’, ‘இன்பத் தொல்லை’, ‘தம்பி மனைவி’ இவரது பிற நாவல்கள். ‘திப்பு சுல்தான்’, ‘மார்த்தாண்ட வர்மன்’. ‘சாம்ராட் அசோகன்’ இவர் எழுதிய நாடகங்கள்.பல பதிப்புகள் வந்தது இவர் எழுதிய ‘ஸ்ரீ மகாபக்த விஜயம்’ ஆன்மிக நூல். அறுபது பக்தர்கள் வரலாறு கூறும் படைப்பு. இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன
‘ பச்சை மோதிரம்’ குகப்பிரியையின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் மாமியாரை மகள் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறாள் செல்லம்.தனது பச்சை மோதிரத்தை மாமியார் திருடிவிட்டதாகவும் பழி சுமத்துகிறாள்.குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த குருவிக் கூட்டிலிருந்து மோதிரத்தை கண்டுபிடித்து மனைவியிடம் கொடுக்கிறான் கணவன். ஜப்பசி மாத அடைமழையுடன் தொடங்குகிறது கதை.
குமுதினி
தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மொழிகளில் மிகுந்த புலமை மிக்க எழுத்தாளர்.இயற்பெயர் ரங்க நாயகி. தாகூரின் ‘யோகயோக்’ நாவல் நாயகி பெயரை புனைப்பெயராக்கிக் கொண்டார். இளமையில் காய்ச்சல் வந்து கேட்கும் திறன் பாதிப்புக்குள்ளானார்.
’திவான் மகள்’ இவர் எழுதிய ஒரே நாவல். ‘குடும்பக் காதல்’ இவர் எழுதிய முதல் நாடகம். ‘விசுவாமித்திரர்’, ‘டில்லி சென்ற நம்பெருமாள்’, ‘துலுக்க நாச்சியா’ர், ‘புத்திமதிகள் பலவிதம்’ உள்ளிட்டவை இவர் எழுதிய நாடகங்கள். நகைச்சுவை எழுத்தில் வல்லவர். சிறுகதைகளும் எழுதியுள்ளார்.’ சில்லறை சங்கதிகள் பற்றிய குமுதினியின் கட்டுரைகள் சிலாக்கியமானவை என்கிறார்’ கல்கி.
நம்மாழ்வாரின் நூறு பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இது நூல் வடிவம் பெற்றது.ஜே.சி.குமரப்பாவின் ‘கிராம இயக்கம்’ நூலை தமிழாக்கம் செய்துள்ளார்.தாகூரின் ‘யோகயோக்’ நாவலையும் இந்தி எழுத்தாளர் பரசுராம் கதைகளையும் மொழி பெயர்த்துள்ளார் பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளி நாடுகளுக்கு சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
மகாத்மா காந்தி மீது அளவற்றப் பற்று கொண்டவர். காந்தி-குமுதினி இடையே கடிதப் போக்குவரத்தும் இருந்தது. கதராடை மட்டுமே அணிந்து வாழ்ந்து மறைந்தவர்.
லட்சுமி ராஜரத்தினம்
குடும்பப் பாங்கான எழுத்தின் மூலம் வாசகர்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் லட்சுமி ராஜரத்தினம். இவரது கணவர் ராஜரத்தினம். பல்வேறு பிரபல இதழ்களில் லட்சுமி ராஜரத்தினம் படைப்புகள் வந்துள்ளன
கலைமகளில் நாராயண சுவாமி ஐயர் நாவல் போட்டியில் இவரது ‘இதயக் கோயில்’ நாவல் பரிசு பெற்றது. இது அவரது புகழ் பெற்ற படைப்பு. பிரபல இளம் டாக்டர் ரங்கதுரை பெற்றோர் வற்புறுத்தலால் ஓய்வு பெற்ற நீதிபதியின் மகள் சுபத்திராவை திருமணம் செய்து கொள்கிறான். காதலி எலிஸாவை மணம் செய்து கொள்ள முடியாத கோபத்தில் சுபத்திராவை பாரமுகம் காட்டி மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிறான். சுபத்திராவின் இதயக் கோயிலில் ஒளி வந்ததா என்பதே கதை. ‘பாட்டுடைத் தலை’, ‘அகலிகை காத்திருந்தாள்’ உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள், தொலைகாட்சித் தொடர்கள் மட்டுமன்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். எண்ணற்ற ஆன்மிகக் கட்டுரைகளும் அவரது படைப்பில்
அடங்கும்.
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்று பாடிய பாடகி அவர் என்பது கூடுதல் சிறப்பு. வாழ்வின் பிற்பகுதியில் சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும் செயல்பட்டார்.திருப்புகழ் பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
கோமகள்
உள்ளத்தை மேம்படுத்தும் வகையில் நயத்தோடும் நாகரிகத்தோடும் விரசமில்லாதும் எழுதியவர். இயற்பெயர் ராஜலட்சுமி.ஐம்பது புதினங்கள், முப்பது குறும் புதினங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது கதைகள் வானொலி, தொலைக்காட்சியில் நாடகங்களாக வந்துள்ளன.
கல்கி வெள்ளி விழாப் போட்டியில் இவரது ‘மனச்சந்ததி’ சிறுகதை பரிசு பெற்றது. முதல் நாவல் ‘பனிமலர்’ 1964-இல் வெளியானது. ‘அன்பின் சிதறல் ‘நாவல் பிரசண்ட விகடனிலும் ‘இனிக்கும் நினைவுகள்’ நாவல் கல்கியிலும் வெளியாயின. இவரது ‘அன்னை பூமி’ 1982-இல் தமிழ் வளர்ச்சித் துறையின் இரண்டாம் பரிசு பெற்றது.நிலாக் கால நட்சத்திரங்கள், ‘சந்தன மலர்கள்’, ‘பூச்சரம்’, ‘மாய வாழ்வு’ இவரது பிற குறிப்பிடத்தக்க நாவல்கள்.
கோமகளின் ‘பால் மனம்’ சிறுகதை ஆகச் சிறுகதைகளில் ஒன்று. பச்சை மெழுகாகக் கடவுள் தரும் குழந்தையை நமக்கேற்ப மாற்றியமைக்கிறோம். இறைவன் சிருஷ்டியை இஷ்டப்படி மாற்றி சமர்த்து என்று சொல்லிக் கொள்வதில்தான் எத்தனை பெருமைப் படுகிறோம் என்று கதையில் வரும் வரிகள் இன்றைய பிள்ளைகள் வளர்ப்புக்கும் பொருந்தும். இரவும் பகலும் எழுத்தே சிந்தனையாக இருந்தவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார்.
கிருத்திகா
தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவப் பாதையில் தடங்களைப் பதித்த எழுத்தாளர்.அங்கத சுவையை எழுத்தில் கையாண்ட ஒரே பெண் எழுத்தாளர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இருந்த போதிலும் இவரது எழுத்துகள் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை என்பது முரண். இயற்பெயர் மதுரம். பாரதி மீது தீவிர ஆர்வம் கொண்டவர். பாரதியின் வாழ்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.ஓவியமும் வரைவார்.
தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதத்தில் புலமை மிக்கவர். மேடையில் சரளமாக ஆங்கிலம் பேசுவதில் வல்லவர். நாகர்கோயில் அருகே பூதபாண்டி கிராமத்தில் பிறந்தவர். மும்பையில் படித்து வடமாநிலங்களில் வசித்தவர்.கணவர் பூதலிங்கம் ஐசிஎஸ் அதிகாரி.வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மனைவி மீனா, இவரது மகள்.
1952-இல் கிருத்திகாவின் முதல் நாவல் ‘புகை நடுவினில்’ வெளியானது. அதிகார வர்க்கத்தின் அரக்கத்தனம், குரூரத்தை பின்புலமாகக் கொண்ட படைப்பு. ‘வாஸவேச்வரம்’ நாவல் அதிகம் பேசப்படும் நாவலாக இன்றும் உள்ளது. வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரையை நீக்கி அவற்றின் எதார்த்தை உணர்த்தும் புதினம். ‘புதிய கோணங்கி’, ‘நேற்றிருந்தோம்’, ‘சத்தியமேவ ஜெயதே’, ‘கூண்டுக் கிளி’ உள்ளிட்டவை இவரது பிற நாவல்கள். பெரும்பாலும சமகால உயர்நிலை அதிகார அரசியலை விவாதிப்பவை.
‘யோகமும் போகமும்’,’தீராத பிரச்னை’ இவரது குறு நாவல்கள். ‘மனதிலே ஒரு மரு’, ‘மா ஜானகி’ என்ற நாடகங்களையும் எழுதியுள்ளார். விமர்சகர் சிட்டி-கிருத்திகா கடிதங்கள் தற்கால தமிழ் இலக்கியத்தைப் பேசும் பொக்கிஷங்கள்.
ஆர்.சூடாமணி
மானுட உள்ளத்தின் கனிவையும் அறத்தையும் எழுதியவர் சூடாமணி. பெண்களின் உரிமை, விடுதலை, உளநிகழ்வுகளை வெவ்வேறு கோணத்தில் சொல்ல முயல்பவை இவரது கதைகள். கலைமகள் வெள்ளி விழா சிறுகதைப் போட்டியில் இவரது ‘காவேரி’ சிறுகதை பரிசு பெற்றது. கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல் போட்டியில் இவரது ‘மனதுக்கு இனியவள்’ நாவல் பரிசு பெற்றது.
ஐந்தாம் வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டவர். வெளிஉலக தொடர்புகளை முற்றிலும் துண்டித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராது வாழ்ந்து மறைந்தவர்.ஆனால் அவரது படைப்புகளால் இன்றும் வாசகர்கள் உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார். ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் மிக்கவர். ராகவன் (அப்பா) என்ற பெயரில் எழுதினார்.
நீர்வண்ணங்களை பயன்படுத்தி அற்புதமாக ஓவியங்களை வரையும் ஆற்றல் மிக்கவர். இவரை ‘கொண்டாட மறந்த தேவதை’ என்று விமர்சகர் சு.வேணுகோபால் பதிவு செய்துள்ளார்.’நீயே என் உலகம்’, ‘தந்தை வடிவம்’, ‘இரவுச் சுடர்’,’கண்ணம்மா என் சகோதரி’, ‘தீயினில் தூசு’ உள்ளிட்டவை இவரது நாவல்கள்.
‘ நாகலிங்க மரம்’, ‘தனிமைத் தளிர்’ உள்ளிட்ட தலைப்புகளில் இவரது தேர்ந்தெடுக் கப்பட்ட சிறுகதைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. ‘இருவர் கண்டனர்’, ‘அருணோதயம்’, ‘அருமை மகள்’ இவர் எழுதிய சிறந்த நாடகங்கள். சூடாமணியின் ‘சோபனாவின் வாழ்வு’, ‘நான்காவது ஆசிரமம்’ (இலக்கியச் சிந்தனை பரிசு) வித்தியாசமான துணிச்சலான சிறுகதைகள்.
திருமணம் செய்து கொள்ளாதவர். இவரது ரூ.3.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், இலவச மருந்தகம்,வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் அமைப்புகளுக்கு வழங்கப் பட்டது.
ராஜம் கிருஷ்ணன்
சமூக அக்கறை கொண்ட கள ஆய்வாளராக விளங்கிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். சமகால சமூக அரசியல் வரலாற்றை படம் பிடித்துக் காட்டும் ஆவணங்கள் இவரது படைப்புகள்.பெண்ணிய நோக்கில் எழுதுவதை தவமாகவே கருதி இயங்கி வந்தவர். 50-க்கும் மேற்பட்ட நாவல்கள், 15-க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர். பள்ளிக் கல்வி அடையாமல் பதினைந்து வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்.கணவர் துணையுடன் இவருடைய புத்தக வாசிப்பும் அறிவுத் தேடலும் அபாரமானது.கணவரின் பணிநிமித்தம் வடமாநிலங்களில் வசித்தவர்.
காந்தியின் தாக்கத்தை படம்பிடித்துக் காட்டிய இவரது நாவல் ‘வேருக்கு நீர்’ சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது. அணைத் திட்டத்தை உருவாக்கி மின்சாரத்தை கொண்டுவந்து ஒளியூட்டும் பணிகளை ‘அமுதமாகி வருக’ நாவலில் பதிவு செய்தார்.கோவா விடுதலை பெற்ற வரலாற்றை பின்னணியாகக் கொண்ட இவர் எழுதிய புதினம் ‘வளைக்கரம்’. உப்பளத் தொழிலாளர்களின் பிரச்னையாக் கொண்டு இவர் எழுதிய நாவல் ‘கரிப்பு மணிகள்’. குழந்தைத் தொழிலாளர்களின் நிலையைக் கண்டறிந்து எழுதிய படைப்பு ‘கூட்டுக்குஞ்சுகள்’. ‘பாதையில் பதிந்த அடிகள்’ மணியம்மாள் என்ற வீரப் பெண்மணியின் வரலாறு. பெண் சிசுக் கொலை குறித்த செய்திகளை மையமாகக் கொண்டு ‘மண்ணகத்து பூந்துளிகள்’ நாவலை எழுதினார். பிகார் கொள்ளைக் கூட்டத் தலைவனை துணிச்சலுடன் சந்தித்து இவர் எழுதிய புதினம் ‘முள்ளும் மலர்ந்தது’.’சுழலில் மிதக்கும் தீபங்கள்’ நாவல் தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலாசிரியர் விருதைப் பெற்றுத் தந்தது.
‘டாக்டர் ரங்காச்சாரி’, ‘பாஞ்சாலியின் சபதம் பாடிய பாரதி’, ‘சத்திய தரிசனம்’ உள்ளிட்டவை இவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள். முதன்முறையாக ஒரு எழுத்தாளர் வாழும் காலத்திலேயே நாட்டுடமை யாக்கப்பட்டது இவரது நூல்கள்தான். பொறியாளரான கணவர் கிருஷ்ணன் மறைவுக்குப் பின் வாரிசுகளும் இல்லாத இவர் முதுமையில் வறுமையில் வாடியது துயரம்.
இறுதிக் காலத்தில் முதியோர் இல்லத்தில் வசித்தார்.இவரது உடல் உறுப்புகள் அவரது விருப்பப்படி மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டன. கடந்த 2025-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் நூற்றாண்டு விழாவாக அனுசரிக்கப்பட்டது.
ஜோதிர்லதா கிரிஜா
குழந்தைகளுக்கான கதைகளை ஆரம்பக் காலத்தில் எழுதினார் ஜோதிர்லதா கிரிஜா.’ தாயின் மணிக்கொடி’ இவரது சிறுவர்களுக்கான நூல். ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடந்த இலக்கிய விழாவில் உக்ரைன் மொழியில் மொழிபெயர்கப்பட்டு இந்த நூல் வெளியானது சிறப்பு.
முதல் சிறுகதை ‘அரியும் சிவனும் ‘1968-இல் ஆனந்த விகடனில் வெளி வந்து கவனம் பெற்றார்.பின்னர் பல்வேறு முன்னணி இதழ்களில் இவரது படைப்புகள் பிரசுரமாயின. கல்வி பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்தும் ‘நாங்களும் வாழ்கிறோம்’, சுதந்திரப் போராட்டப் பின்னணியில் எழுதப்பட்ட ‘மணிக் கொடி’ (கல்கி பொன்விழா போட்டியில் பரிசு) ‘துருவங்கள் சந்தித்த போது’ (தினமணி கதிர் போட்டியில் பரிசு) ‘மறுபடியும் பொழுது விடியும்’ (தமிழ் வளர்ச்சித் துறை விருது) நாவல்கள் மூலம் எழுத்துலகில் பிரபலமானார். 25-க்கும் மேற்பட்ட நாவல்கள், 60-க்கும் மேற்பட்ட குறுநாவல்கள், 600-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் எழுதியுள்ளார்.
‘கொலை செய்வாள்’, ‘காவு’,’கவரிமான் கணவரே’, ‘இளிக்கின்ற பித்தளைகள்’, ‘நான் ஒன்றும் நளாயினி இல்லை’ உள்ளிட்டவை இவரது சர்ச்சை சிறுகதைகள். ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் மிக்க இவர் சிறந்த கட்டுரையாளரும் ஆவார். சோனியா காந்தி பற்றிய அவரது விமர்சனக் கட்டுரை பெரிதும் பேசப்பட்டது.

