![]()

தமிழ் நாட்டில் 60-70-80 களில் மிகவும் பிரபலமான உரை எதுவென்றால் கோனார் நோட்ஸ் என்கிற கோனார் உரை!
தமிழ் நாட்டில் அனைத்துப் பள்ளித் தமிழ்ப்பாட நூல்களுக்கும் (3 முதல் 12 வரை) கோனார் நோட்ஸ் உண்டு.
தமிழ்நாட்டில் தமிழ் படிக்கும் மாணவர்களில் கோனார் உரைபடிக்காத மாணவர்கள் எவரும் இருக்க முடியாது
கோனார் நோட்ஸ் (கோனார் உரை) என்பது ஐயம்பெருமாள் கோனார் அவர்களால் எழுதப்பட்டு, 1966 முதல் பழனியப்பா பிரதர்ஸ் மூலம் வெளியிடப்படும் பிரபலமான தமிழ் மாணவர் கையேடு ஆகும். இது பள்ளி மாணவர்களுக்கு (3 முதல் 12-ஆம் வகுப்பு வரை) எளிமையான விளக்கங்கள், கேள்வி-பதில்கள் மற்றும் இலக்கணம் ஆகியவற்றை வழங்குகிறது. தமிழ் பாடங்களுக்கு மிகவும் பிரபலமான இந்த கைடு, தற்போது அனைத்துப் பாடங்களுக்கும் கிடைக்கிறது.
கோனார் உரை என்ற அடையாளம் அவர் மறைந்த பின்னும் தொடர்ந்து இன்று வரை வருவது அதன் வணிகத்தன்மைக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.
(அதே புனித ஜோசப் கல்லூரியில்தான் நான் 1967 இல் படிக்கச் சென்றேன். ஆனால் கோனார் அவர்கள் 1966 இலேயே ஓய்வுபெற்றுவிட்டார் என்று அறிந்துகொண்டேன். அவர் புகைப்படத்தை கல்லூரி லாலி ஹாலில் பார்த்திருக்கிறேன்.அவர் இருந்திருந்தால் நானும் சுஜாதா மாதிரி.. சான்ஸே இல்லை)
சுஜாதா அவர்கள் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படித்தபோது ஐயம்பெருமாள் கோனார் தான் அவருக்குத் தமிழாசிரியராம். அவர்தான் சுஜாதாவுக்கு மரபிலக்கிய அறிமுகம் செய்து வைத்தார் என்று விக்கிபீடியா கூறுகிறது.
(நன்றி விக்கிபீடியா )
திருச்சிராப்பள்ளி திருவேங்கடக்கோனாருக்கு செப்டெம்பர் 5, 1905-ல் பிறந்த ஐயம்பெருமாள் கோனார் இளமையிலேயே அன்னையை இழந்து பெரியஅன்னையின் ஆதரவில் திருச்சிராப்பள்ளி சின்னக் கடைத் தெருவில் வளர்ந்தார். திருச்சிராப்பள்ளி ஆரியன் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து படித்தார். தேசிய உயர்நிலைப்பள்ளியில் பள்ளிநிறைவை முடித்து 1933-ல் மதுரை நான்காம் தமிழ் சங்கம் நடத்திய புலவர்தேர்வில் வென்றார்.
1942-ல் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகத் திகழ்ந்த நடேச முதலியார் ஓய்வுபெற அந்தப்பதவியில் அமர்ந்தார். 1966 வரை அங்கே பணியாற்றி ஓய்வுபெற்றார். ஐயம்பெருமாள் கோனாரின் மகன் அரங்கராசன் அவருடைய உரைகளை பதிப்பிக்கிறார். ஐயம்பெருமாள் கோனாரின் மாணவர் என்று தன்னைப்பற்றி எழுத்தாளர் சுஜாதா குறிப்பிடுகிறார்.
கல்லூரியில் தன் மாணவர்களுக்காக தமிழ்ப்பாடத்தில் எளிமையான உரைகளை எழுதினார். கல்லூரி மாணவர்களிடையே புகழ்பெற்றிருந்த அவ்வுரைகளை பழனியப்பா பிரதர்ஸ் என்னும் வெளியீட்டு நிறுவனத்தை நடத்திய செ.ம.பழனியப்பச் செட்டியார் நூல்களாக வெளியிட்டார். குறைந்த விலையில் அச்சிடப்பட்ட அந்த நூல்கள் பெரும்புகழ்பெற்றன. பின்னர் தமிழ் அல்லாத மற்ற பாடங்களுக்கும் நூல்கள் வெளியிடப்பட்டன. எளிமையான உரைக்கான கலைச்சொல்லாகவே கோனார் உரை என்பது நாளடைவில் மாறியது.
கோனார் தமிழ் உரை என்பது தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் வெளியிடும் தமிழ் பாட நூல்களைப் புரிந்து கொள்ள உதவும் வகையில் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீட்டுவரும் வழிகாட்டிக் கையேடு ஆகும். வேறு பல நிறுவனங்கள் வெளியிடும் கையேடுகளும் புழக்கத்தில் இருந்தாலும், அதிகமானவர்கள் அறிந்த வழிகாட்டி உரை நூலாக கோனார் தமிழ் உரை விளங்குகிறது. இதனால் சிலர், எந்த ஒரு தமிழ் உரை நூலையும் கோனார் உரை என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவதுண்டு.
பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இன்றும் “கோனார் மாளிகை” என்றுதான் பெயர்.
ஐயம்பெருமாள் கோனார் வைணவ இலக்கியங்கள் மற்றும் கம்பராமாயணம் சார்ந்து சொற்பொழிவுகள் ஆற்றிவந்தார். திருச்சி வானொலியில் திருப்பாவை விளக்கவுரைகள் ஆற்றி புகழ்பெற்றிருந்தார்.
ஐயம்பெருமாள் கோனார் 1989-ல் மறைந்தார்.
திருப்பாவை உரைக்காக காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி அவர்களால் திருப்பாவை ஆராய்ச்சி மணி பட்டம் அளிக்கப்பட்டது.
- கோனார் தமிழ்கையகராதி
- திருக்குறளுக்குக்கோனார் பொன்னுரை
- சங்ககாலப்பாண்டியர்
- வாசன் பைந்தமிழ்ச் சோலை
ஐயன் பெருமாள் கோனார் பற்றி கனடா பசுபதி அவர்கள் தனது பசுபதிவுகள் தளத்தில் (https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D)
விவரமாக எழுதியுள்ளார். ( நன்றி அமரர் பசுபதி ஐயா அவர்களே! ) ..
செயிண்ட் ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில்தான் ஐயன்பெருமாள் கோனார் என்பவர் தமிழாசிரியராக இருந்துவந்தார்.
கோனார், 1937-ம் ஆண்டு முதல், பதினோராவது வகுப்புக்கு “எக்ஸ்பிளனேட்டரி தமிழ் நோட்ஸ்” என்ற பெயரில் ஒரு தமிழுரை எழுதி முதலில் தாமாகவும் பின் சில பதிப்பாளர்கள் மூலமும் வெளியிட்டு வந்தார். ஆனால் 1943-44(?) சமயத்தில் கோனாருக்கும் பதிப்பாளருக்கும் பண விஷயத்தில் பிரச்னை. இதனால் கோனார் பிரிந்து பழனியப்பா பிரதர்ஸ் மூலமாக கோனார் உரைகளைப் பதிப்பிக்க முடிவு செய்தார்.
தொடர்ந்து பழனியப்பா ஆங்கிலப் பாடத்துக்கும் நோட்ஸ் கொண்டுவந்தார். ஆனால் நாளடைவில் கோனார் தமிழுரை – கோனார் நோட்ஸ் தமிழகம் முழுவதும் பெரியதொரு பிராண்ட் ஆனது. ஒவ்வொரு வகுப்புக்கும் தமிழ்ப் பாடத்துக்கு உரை வந்தது. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்குப் பெரும் செல்வத்தை ஈட்டித்தந்தது.
பழனியப்பா பிரதர்ஸ் 1946-ல் சென்னைக்குப் பெயர்ந்தது. 1969-ல் ஐயன்பெருமாள் கோனார் இறந்தார்.
இணையத்தில் கண்டது:
ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் பாடிய அறுசீர் விருத்தம்:
சீர்சான்ற வேதசிவா கமங்களினுண் மைப்பொருள்சேர்
செவ்வி வாய்ப்ப
ஏர்சான்ற மனக்குறைக ளிவையெனமேற் கோள்நிறுவி
யெவரு மெச்ச
நேர்சான்ற வேல்முருகன் முறையீடாச் செப்புமிந்நூ
னெறியிற் றந்தான்
பேர்சான்ற திரிசிரமா புரம்வாழும் முனிசாமிப்
பெரியோன் மாதோ,
இப்பெரிய நூலதனை வாசிப்போர் தமிழ்மொழியி
னேற்றத் தோடே .
ஒப்பரிய மயில் வீரன் அருள்பெற்று நலந்திகழு
முயர்வு கொண்டு –
செப்பரிய நான்மறையி லாகமத்திற் சாத்திரத்திற்
சிறக்கக் கூறும்
மெய்ப்பொருளி னுண்மையுணர்ந் துயர்ஞானச் செல்வர்களாய்
விளங்கு வாரே.
ஒரு பிரபலமான குறும்பா:
வள்ளுவரும் மாணவராய் ஆனார்.
திருக்குறளில் தேர்வெழுதப் போனார்
முடிவு வெளியாச்சு…
அந்தோ ஃபெயிலாச்சு…
பாவம் அவர் படிக்கவில்லை கோனார்!
[ நன்றி : விகடன் ]
