அந்தர்யாமி
தெய்வமே ஏன் என்னை இப்படி சோதிக்கறே ? நிம்மதியா இருக்க முடியலே! ஒவ்வொரு நாளும் ஏதாவது சின்ன ப்ரச்சனை அல்லது பெரிய ப்ரச்சனை ஏதாவது ஒவ்வொரு ப்ரச்சனை, ஒரு நாளாவது ப்ரச்சனை இல்லாம இருக்க விடறியா? இதைப்பத்தி பேசினாவே, ப்ரச்சனையே இல்லாம இருந்தா மனுஷன் உன்னை நெனைக்கவே மாட்டான்னு சொல்றாங்க!
அது சரி நீ எங்களைப் படைச்சுட்டு உன் கடமை முடிஞ்சுதுன்னு விட்டுடறே ! அதுக்கப்புறம் நாங்க இந்த உலகத்திலே இருக்கற எல்லாத்தையும் சமாளிச்சிகிட்டுத்தானே வாழ்ந்தாக வேண்டியிருக்கு, இதுலே உன்னை எப்பிடி நெனைச்சுகிட்டே இருக்க முடியுது, இருக்கற கடமையை செய்யறதுக்கே மூச்சு முட்டிப் போறது .
இப்படி இருக்கறப்போ நீ எங்களை ஆரோக்கியமா கவலை இல்லாம மனக்கஷ்டம் இல்லாமே பணக்கஷ்டம் இல்லாம வெச்சாத்தானே நாங்க ஓரளவாவது நிம்மதியா இருக்க முடியும் , எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு கஷ்டம்ன்னா நாங்க எப்பிடி நிம்மதியா இருக்க முடியும்?
ஒவ்வொரு நாளும் யாராவது ஒருத்தர் ப்ரச்சனை செய்யறாங்க, பிடுங்கிண்டே இருக்காங்க , நிம்மதியா ஒரு ரெண்டு நிமிஷம் இருக்க முடியலே! அப்புறம் எப்பிடி உன்னை எங்களாலே நினைக்க முடியும்!
ஆனா நாங்க இத்தனை கஷ்டத்திலேயும் உன்னை நெனைக்கறோம் ,
காலையிலே எழுந்திலேருந்து இரவு படுக்கைக்கு போற வரைக்கும் ,தூங்கற வரைக்கும் தெய்வமே நல்லபடியா காப்பாத்து , நீயே எங்களுக்கு எல்லாம், உன்னை விட்டா வேற யார் இருக்கா எங்களைக் காப்பாற்ற ? எங்களை நல்லபடியாத் தூங்க வெச்சு காலையிலே நல்ல படியா எங்களை எழுப்புன்னு வேண்டிக் கிட்டுத்தானே தூங்கறோம்,
அப்பிடி இருக்கும்போது எங்களை நீ இப்பிடி சோதிக்கலாமா? அன்றாடம் ஏதாவது ஆரோக்கியக் குறைவு இல்லேன்னா பற்றாக் குறை, அப்பிடியும் இல்லேன்னா ஏதேனும் ஒரு ஆபத்துன்னு மாறி மாறி வரது, அதிலேருந்து தப்பிக்க உன்னைத்தானே வேண்ட்றோம், இப்பிடி இருக்கும் போது ஏன் எங்களை இப்பிடி சோதிக்கறே! எங்களைக் காப்பாத்தற கடமையும் உன்னுதுதானே ?
கண்களை மூடிக்கொண்டு மானசீகமாக கேட்டுக் கொண்டிருந்தார் அவர்! திடீரென்று கண்களைத் திறக்க முடியாமல் கண்களின் இமைகள் இன்னும் அழுத்தமாய் மூடிக்கொன்டன, வாய் பேசமுடியாமல் பற்கள் கிட்டித்துப் போயின!, உடல் தளர்ந்து அப்படியே கீழே சாய்ந்தார் அவர் , அவருக்கு நினைவே இல்லை !
அப்போது அவருக்குள்ளே ஜகத் ஜோதியாய் ஏதோ ஒன்று ஒளிர்ந்தது!
அது என்னவென்றே தெரியவில்லை, ஆனாலும் இந்த உலகில் உள்ள ஒளியனைத்தும் ஒருங்கே இணைந்தது போல், “ . ஜோதியாய் ஆழியாய் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து சற்றே அடங்கி தெள்ளிய ஜோதியாய் நிதானித்து எரியும் குத்துவிளக்கு தீபமாய் நின்று நிதானமாய் ஒரு பக்திச் சுடராய் ஒரு அற்புதமான இதமான சூழலை உருவாக்கும் சிறுதீபமாய் மின்னியது!
அவர் மனக்கண்ணுக்குள் அந்த ஒளியின் சுடர் காற்றிலே அலைவது போல் இயங்கி அந்தச் சுடரிலே ஒரு உருவம் உருக்கொண்டு அந்த சுடரில் முழுமையாகப் படர்ந்து தெரிந்தது! ஒரு அமாநுஷ்யக் குரல் ஒலிக்கத் தொடங்கியது,
பக்தனே ! சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து என்று உன்னுடைய எல்லாக் கடமைகளையும், கவலைகளையும் என் தலையிலே ஏற்றி வைத்துவிட்டு நீ மகிழ்ச்சியாய் இருக்க, நானொரு சுமை தாங்கியாய் என்னைப் பயன்படுத்துகிறாய் நீ , பக்தி என்னும் பெயரிலே என்னை உன் கஷ்ட காலங்களில் டோலியாய் தோணியாய், நாவாயாய், புஷ்பக விமானமாய் உபயோகிக்க, கவலைகளை இறக்கி வைக்கும் ஒரு சுமைதாங்கிக் கல்லாய் உபயோகிக்கிறாய்!
தந்திரமாய் பக்தி, என்னும் சாதனத்தை உபயோகித்து என்னை மயக்கி எல்லா வேலைகளுக்குமே என்னையே நம்பி இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி உனக்கென்று பூமியிலே கடமையே இல்லாதது போலவும் எல்லாமே என் பொறுப்புதான் என்பது போலவும் ஒரு சூழ்நிலையை நீயாக கற்பிதம் செய்துகொண்டு ,
என்மேல் அளவுகடந்த பாரத்தை சுமத்திவிட்டு நீ எப்போதும் நிம்மதியாக இருக்க நான் எப்போதும் உன்னைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் சுயநலக் காரனாக ஆகிவிட்டாய்!
உன் பக்தியை உண்மையென்று நம்பி கொஞ்சம் அசந்து மறந்து இருக்கும் போது கெட்டிக்காரத்தனமாய் என் கடமையை நினைவுறுத்துகிறாய் உங்களையெல்லாம் காப்பது என் கடமை என்றும் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்றும் எனக்கே கீதோபதேசம் செய்கின்றாய் கெட்டிக்காரனடா நீ !
உன்னை நாலு பேர் பிடுங்கினாலே எரிச்சல் வருகிறதே உனக்கு , தாங்க முடியவில்லையே உன்னால் , இத்தனை கோடி ஜீவராசிகளும் தங்கள் கடமைகளை மறந்து என் ஒருவனைப் பிடுங்கினால் , பக்தி என்னும் பெயரால் என்னை நச்சரித்தால் நான் ஒருவன் என்ன செய்வேன் , உங்களையெல்லாம் காப்பதைத் தவிர மற்ற கடமைகளும் இருக்கின்றதே அதையெல்லாம் யார் செய்வார் சற்றே யோசிப்பாயா? மனிதா நீ என்னை ரொம்பவும் சோதிக்கிறாய் !
எனக்கு ஆபத்பாந்தவன்னுதான் பேரு, அதனாலே ஆபத்து என்றால் நானே உதவுவேன் , அடிக்கடி தொந்தரவு செய்யாதே, உன் கடமைகளை முடித்துவிட்டு உன் சக்திக்கு மீறிய சில நேரங்களில் மட்டும் என்னை அழை நானும் வருகிறேன் , புரிகிறதா எனும் அமாநுஷ்யக் குரல் சீறிய சிங்கம் போல் கர்ஜித்து அறிவுற்றுத் தீவிழித்தது!
“ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
குண்டலினி சக்தியாய் அதிர்ந்து படமெடுத்தாடி”
அந்தக் குத்து விளக்கின் சுடரிலிருந்து சுடர் தெறித்து ஒரு சிறிய பட்டாசு போல் வெடித்து தெறித்து பர பரவென்ற சப்தத்துடன், பொறுமலாய் இறையின் குமுறலாய் பெரு மழையாய்ப் பெய்து அடங்கியது , அந்தத் திரியில் எரியும் ஜோதியின் வடிவத்தில் நிறைந்து அடங்கியது அடங்கிக் காத்திருந்தது !
கடமையை செய்யுங்கள் காப்பாற்ற நானிருக்கிறேன்! கடமையை மறந்தால் காப்பாற்ற நானும் வரமாட்டேன்! என்று உணர்த்தினார்!
மனிதன் எழுவான் எழுவான் , மனிதன் மயக்கம் தீர்ந்து எழுவான் என்று காத்திருந்தது. தான் சொன்னதை உணர்ந்து தன் கடமையாற்றுவான் என்று தெய்வம் காத்திருந்து பார்த்துவிட்டு , மனிதர்களின் இந்த மயக்கம் உண்மையான மயக்கமல்ல இந்த மனிதர்கள் இன்னும் மயக்கத்திலேயே இருப்பது போல் நம்மிடமே நடிக்கிறர்கள் என்பது புரிந்து, ,
இப்போது குத்து விளக்கு ஜோதி மட்டும் சிறியதாய் மங்கலாய் எரிந்து கொண்டிருக்கிறது!! அந்த விளக்கின் ஜோதியிலிருந்து இறைவன் மறைந்தார் குத்துவிளக்கு தீபமும் அணைந்து போனது!
உண்மை எனும் எண்ணெய் தீர்ந்து போனதால் , மஹாஜோதி வடிவான இறைவனும் அந்தர்யாமி ஆனார்.

