அப்பாவின் (நினைவில்) கடைசிப் பக்கம்!
விடியற்காலை ஐந்து மணிக்கு வந்த போன் கால், அப்பா தூக்கத்திலேயே எங்களை விட்டுப் பிரிந்ததைச் சொல்லியது.
உழைப்பும், நேர்மையும், தளரா மனமும் கொண்டு, சந்தித்த அத்தனை சோகங்களையும், இடர்களையும் கடந்து, தன் குழந்தைகளுக்காகவே வாழ்ந்த, அப்பா, மறைந்தார்.
மிகக் குறைந்த வருமானம் – பெரிய குடும்பம் – வாழ்க்கையில் எதிர்நீச்சல் மிகக் கடுமையானதாக இருந்தது. குழந்தைகள் படிப்பு மட்டுமே முக்கியம் எனத் தன் உடலை வருத்தி அவர் எதிர்கொண்ட கஷ்டங்கள் கண்ணில் நீர் நிரப்புவன.
குழந்தைகள் பெரியவர்களாகி நல்ல நிலைக்கு வந்த பிறகு கூட, ‘தன் கையே தனக்குதவி’ என்று, அறுபதையும் தாண்டி, தன் வேலையில் தொடர்ந்தார். தன் அன்றாட செலவுகளுக்குக் கூடப் பிறர் கையை எதிர்பார்க்காத மன உறுதி! ஆற்றில் போட்டாலும் அளந்து போடும் பக்குவம்! தனக்கு வந்த எந்தப் பொருளையும் – தங்க மோதிரங்கள், வேட்டிகள், சட்டைகள் – அவர் உபயோகப்படுத்தியதாக எனக்கு நினைவில் இல்லை.
நான்கைந்து சட்டைகள், வேட்டிகள், காலுக்கு செருப்பு, ஒரு கைக் கடிகாரம் இவையே அவரது தேவைகளாக இருந்து வந்தன. தன் தேவைகளை மிகவும் சுருக்கிக் கொண்டு, சில அத்தியாவசியங்களுடன், சுறுசுறுப்பாகச் சுற்றி வந்தவர் அவர்.
அவரது போராட்ட வாழ்க்கையே ஒரு பாடம் – அதிலிருந்து முக்கியமான இரண்டு பக்கங்களை இங்கு சொல்வது சரியாக இருக்கும்!
வாழ்க்கையின் ஆதாரம் ‘கர்ம யோக’மே – BE FAITHFUL TO YOUR DAILY ROUTINE – என்ன வந்தாலும், எது நடந்தாலும், தன் தினசரி கடமைகளை – ஆபீஸ் போகும்போதும் சரி, பின்னர் அதை நிறுத்தியபோதும் சரி – தவறாமல் செய்து விடுவார். சாத்திரம், சம்பிரதாயம், நேரம், காலம், மகிழ்ச்சி, வருத்தம் எதுவும் அவரது செயல்பாடுகளை மாற்றிவிட முடியாது. உழைப்பு ஒன்றே வாழ்வின் ஆதாரம் என்பதைத் தானே ஓர் உதாரணமாய் இருந்து உணர்த்தியவர் என் அப்பா!. நேரத்திற்கு, அளவான உணவு – ஒரு வேளை சாப்பாடு, ஒருவேளை டிபன், இடையே இரண்டு முறை காபி அவ்வளவுதான். அமிர்தமே கிடைத்தாலும் இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடமாட்டார் – அவ்வளவு கட்டுப்பாடு!
தேவைக்கு அதிகமான எதையும் – பொருளோ, பணமோ – உபயோகிக்க மாட்டார். ஆரம்பக் காலத்தில் இல்லாமை, பின்னர் வாழ்க்கையில் எல்லாம் இருந்தது – அப்போதும், அதே அளவான, பேராசைப் படாத மனம்! தன் பிள்ளைகளே ஆனாலும், எதையும் வேண்டும் என்று கேட்காத குணம். பீரோ நிறைய அவருக்குக் கொடுக்கப்பட்ட துணிகள் – புதுமணம் மாறாமல் – அடுக்கி வைக்கப் பட்டிருந்தன! உழைத்து, சம்பாதித்துச் சேர்த்த பணம் முழுவதும், குழந்தைகள் பேரிலேயே சேமிப்புப் பத்திரங்களாக வைக்கப்பட்டிருந்தன! தனக்கென்று எதையுமே எடுத்துக்கொள்ளாமல், அனைத்தையும் தன் பாசம், ஆசிகளுடன் சேர்த்து எங்களுக்கு வைத்துவிட்டுத் தான் மட்டும் தூக்கத்திலேயே எங்களைப் பிரிந்துவிட்டார்.
எங்களுக்குச் சிறந்த கல்வியும், நிறைந்த அன்பும், பாசமும் கொடுத்து வளர்த்து, தன்னையே தன் உழைப்பாலும், உண்மையாலும் உயர்த்திக் கொண்டு, வாழ்ந்து மறைந்த என் தந்தை ஓர் உன்னதமான மனிதர்!
மீண்டும் பிறந்தால், இவரே என் தந்தையாய் இருக்கவேண்டும் – படைத்தவன் முன் நான் வைக்கும் வேண்டுகோள் இது மட்டுமே!