ஆ…இப்படி ஓர் அட்டைப்படமா !!!

ஆபீசிலிருந்து வரும்போதே வாய்கொள்ளாத சிரிப்புடன் வந்தார் என் கணவர்.

“இன்னிக்கு என்னாச்சு தெரியுமா?”

சுவாரஸ்யமான விஷயம்தான்.

“ஆர் கே ஆர் இன்னிக்கு ஒரு பர்சனல் உதவி கேட்டார். அவங்க ஒய்ஃப் (திருமதி ரா கி ரங்கராஜன்) சார்பில் கேட்டார்” என்றார்.

அதற்கு முந்தைய வாரம்தான் செய்திவாசிப்பாளர் ஃபாத்திமா பாபு தயாரித்த குமுதம் இதழ் வெளிவந்து நிறையப் பாராட்டைப் பெற்றிருந்தது. திருமதி ரா கி ரங்கராஜன் , ஃபாத்திமாவின் பரம ரசிகையாம்.

தன் மனைவி ஃபாத்திமா பாபுவைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார் ஆர் கே ஆர்.

“குமுதம் தயாரிக்க கோ ஆர்டினேட் செய் மாதிரி இந்தச் சந்திப்புக்கும் கோஆர்டினேட் செய்யணும்னு கேட்டுக்கிட்டார். போன் செய்தவுடனேயே தாராளமா அழைச்சுக்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க.” என்றார்.

அப்போது ஃபாத்திமா பாபு நுங்கம்பாக்கம் மகாத்மா கா,ந்தி சாலையில் இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டே நாட்களில், அவர்கள் ஆபீசிலேயே ஆர்கே ஆர், திருமதி கமலா ரங்கராஜன், அவர்களின் மகள் (அவரும் ஃபாத்திமா பாபுவின் ரசிகையாம்) ஆகியோரை அழைத்துக் கொண்டுபோய், சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

அதே ஆபீசில்தான் கணவர் பாபு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அன்றைக்கென்று பார்த்து அவர் வெயியே போயிருந்ததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

எந்தவித பந்தாவோ அலட்டலோ இல்லாமல் அவர் நட ந்துகொண்ட விதத்தை அந்தக்குடும்பம் பல நாட்களுக்கு வியந்து பேசிக்கொண்டிருந்தது.

குமுதம் இதழில் ஃபாத்திமா பாபு பல சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அவற்றைப் பற்றியெல்லாம் இம்மி இம்மியாகப் பாராட்டினார் கமலாம்மா.

பெண்களுக்கே உரிய ஆர்வத்துடன் அவருக்கு எத்தனை சேலைகள் இருக்கின்றன, டி வி ஸ்டேஷனில் மேக் அப்  எப்படிச் செய்வார்கள், வீட்டில் யார் சமையல் செய்வார்கள் என்று  ஆர்வமாய்க் மகமலாம்மா கேள்விகள் கேட்க, கலகலவென்று சிரித்தவாறு ஃபாத்திமா மேம் பதில் சொல்ல அழகாயிருந்தது அந்தச் சந்திப்பு என்று பிற்பாடு கமலாம்மா போன் செய்தபோது என்னிடம் சொன்னார்.

“உங்க ஹஸ்பெண்டைத்தான் பார்க்க முடியலை” என்று கமலாம்மா குறைப்பட்டுக்கொண்டபோது,

“ஒரு நாள் வீட்டுக்கு வாங்கம்மா.. அவரை அறிமுகம் செய்யறேன். பாமா கோபாலனுக்கு என் வீடு தெரியும்” என்று அன்பாய்ச் சொன்ன விதத்துக்கு வியந்தார்கள்.

எத்தனையோ வி ஐ பிக்கள் குமுதத்துக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். குமுதம் இதழ் தயாரித்திருக்கிறார்கள். எனினும், திருமதி ஆர் கே ஆர் சந்திக்க விரும்பியது இவரை மட்டுமே என்பது ஸ்பெஷல். (இதைத் தவிர அவர்கள் சந்திக்க விரும்பிய நபரைச் சந்திக்கவே முடியவில்லை. அவர்… மேடம் ஜெயலலிதா)

குமுதம் இதழின் அட்டைப் படங்கள் பற்றிக் கேலியாக ஒரு குற்றச் சாட்டு உண்டு. பெண்கள் மட்டுமே அதில் இடம் பெற முடியும் என்றார்கள். ஒரு முறை பின்னணியில் ஒரு குதிரை போட்டோ இருந்தது. ‘அது பெண்குதிரையாகத்தான் இருக்கும்’ என்று யாரோ ஒரு வாசகர் எழுதிய ஜாலியான கடிதத்தைப் பிரசுரித்தார்கள்.

அப்படிப்பட்ட குமுதம் இதழில்.. அனுமான் படம் பிரசுரமாயிற்று என்றால் நம்புவீர்களா?

யெஸ். 17.09.1987 இதழின் அட்டையைப் பார்த்துத் தமிழகமே வியந்துவிட்டது.

அப்போது வெளிவந்து மேடைகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த ‘ஆஞ்சநேயர்’ என்ற நாடகத்தை எடிட்டர் பார்த்திருக்கிறார். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அனுமனாக நடித்த நடிகர் ருத்ராபதி.

அவரைப் பேட்டி காணுமாறு எடிட்டர் சொல்ல அதை என் கணவரிடம் சொன்னவர் ஜ ரா சுந்தரேசன்.

வாணிமஹாலில் நடந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு அந்த அபார நடிப்புக்கு வியந்து, ஒப்பனை அறைக்குப் போய் அவரைப் பாராட்டிவிட்டு, நாடகம் முடிந்தபிறகு பேட்டியும் எடுத்துவிட்டார்.

ஏ பி நாகராஜனுக்கு உறவுக்காரர் என்பதால் தன் கம்பெனிக்கு ஏ பி என் ஆட்ஸ் என்றும், சொந்த ஊர் கொரடாச்சேரி என்றும் மேக் அப் போட மிகச் சரியாக ஒரு மணி நேரம் ஆகும் என்றும் பேட்டியில் சொன்னார். (பொதுவாக அமெச்சூர் நாடகங்களில் ஒரு நிமிடத்தில் மேக்  அப் போட்டுக் கொண்டு ஷர்ட்களைமட்டும் மாற்றி அணிந்து வந்தால் போதும் என்பதால் இந்த ஒரு மணி நேரம் ஆண்களுக்கு அதிகம்)

“உங்களை போட்டோ எடுக்கணும்” என்று சொன்னபோது “ஏற்கனவே இந்த நாடகத்துக்காக நிறைய ஸ்டில்ஸ் எடுத்திருக்காங்க சார்.” என்றவர் வடபழனியில் ஒரு ஸ்டில் போட்டோகிராஃபரின் முகவரியைக் கொடுத்து அவரிடம் வாங்கிக் கொள்ளச் சொன்னார். அவர் சினிமாக்களுக்கு ஸ்டில்ஸ் எடுப்பவர்.

ஒரு விஷயத்தை நினைவில் வைத்து இந்த அத்தியாயத்தைப் படியுங்கள். இன்றைக்கு இம்மென்றால் இருபது போட்டோக்கள் ஆம் என்றால் அறுபது போட்டோக்கள் எடுக்கிறோமே… 87ல் அப்படியெல்லாம் அவசரப்பட்டுவிட முடியாது.

அதிலும் க…ல…ர் போட்டோ எடுக்க ஏகப்பட்ட செலவு. ரோல் வாங்கவும், அதைக் கழுவவும், பிரின்ட் போடவும் ஒவ்வொரு கட்டத்திலும் காசு செலவு செய்தாக வேண்டும்

எனினும் பத்திரிகையில் ஒன்று அல்லது இரண்டு படங்கள்தான் பயன்படுத்துவார்கள். அதற்கான தொகைகள் கொடுப்பார்கள். எனவே யாருமே அவ்வளவு சுலபமாகத் தன்னைடைய டியர் போட்டோக்களைத் தந்துவிட மாட்டார்கள்.

என் கணவர் போனபோது அந்த வீடு பூட்டியிருக்க “அவர் சினிமாவுக்கு போட்டோ எடுக்கறவர். எப்ப போவாரு எப்ப வருவாருன்னு சொல்றதுக்கில்லை” என்றாராம் அருகில் வசித்தவர்.

வெகு நேரக் காத்திருப்புக்குப் பிறகு அவர் வர, அவரிடம் கேட்டபோது “அதற்கப்புறம் நிறைய போட்டோக்கள் எடுத்தாச்சு. அதையெல்லாம் ஒரு பெரிய பெட்டியில் போட்டு வைச்சிருக்கேன் தேடித்தான் தரணும்” என்று சொல்லிவிட்டார்.

அடுத்த நாள் போனபோது சில டிரான்ஸ்பரன்ஸிகளைத் தந்தார். (அதாவது பெயருக்கேற்றாற்போல்) ஒளி ஊடுருவும்படியான போட்டோக்கள். பயன்படுத்திவிட்டுக் கட்டாயம் திருப்பித் தர வேண்டு என்று சொல்லிவிட்டார். சன்மானமும் எதிர்பார்க்கிறார் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார். பிரசுரமானால் கட்டாயம் சன்மானம் உண்டுதான்.

ஆனால் அவை அச்சில் வந்தால் தெளிவாக இருக்காது என்றும் படத்தின் தரம் திருப்திகரமாக இல்லை என்றும் அச்சகத்தில் சொல்லிவிட்டார்கள்.

மறுபடியும் மறுநாளே போய்த் திருப்பிக் கொடுத்து நாசூக்காகச் சொல்லிவிட்டு வர, “இந்தப் பத்திரிகைக் காரங்களே இப்பிடித்தான் சார்” என்று வருத்தப்பட்டாலும் “அதுக்கு நீங்க என்ன செய்வீங்க பாவம். காபி குடிக்கறிங்களா?” என்று கேட்க, இவர் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஓடியே வந்துவிட்டாராம் .. விட்டால் போதும் என்று.

எல்லாம் சரி. அடுத்த நாளே நல்ல போட்டோவாகத் தர வேண்டும் என்று ஆபீசில் அவசரப்படுத்தினார்கள்.

வேறு வழியில்லை. அந்த நடிகரை வீட்டில் போய் போட்டோ எடுக்கலாம் என்றால் அனுமார் மேக்அப்பில்தான் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் குமுதத்தில்.

போன் செய்து கேட்க, “நாளைக்கு என் நாடகம் இருக்கு வர்றீங்களா” என்று அவர் சொல்ல,

எங்கே என்று கேட்ட என் கணவர் பதிலைக் கேட்டுச் சிலிர்த்துவிட்டார். குரோம்பேட்டை அகாடமியில்.. அதாவது என் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தொலைவில்.

நானும் என் கணவரும் சென்றோம். அவசரத்துக்கு உள்ளூர்ப் புகைப்பட நிபுணர் ஸ்ரீதரை அழைத்துச் சென்றோம். (அவரும் குமுத்திற்கு போட்டோ எடுத்திருக்கிறார்தான்) அவர் போட்டோ எடுத்து மிக விரைவாக பிராஸஸ் செய்து கொடுக்க.. பேட்டியோடு ஏதோ சின்னதாக ஒரு போட்டோ வருமாக்கும் என்று நினைத்த எங்களுக்கெல்லாம் மெகா சந்தோஷ அதிர்ச்சி. அட்டைப்படத்தில் அனுமார் போட்டோவா….வ்!

இதில் எனக்கான பிரத்யேக மகிழ்ச்சி ஒன்றும் உள்ளது.

என் மாமனாருக்கு நான் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என்பது பற்றி மிகுந்த மகிழ்ச்சி. முதலில் டைப்ரைட்டர் வாங்கித் தந்தார். அடுத்து ஒரு யாஷிகா கேமரா வாங்கித் தந்தார்.

அத்தனை விலை உயர்ந்த கேமராவை எந்தப் பக்கம் பிடிப்பது என்றுகூட எனக்குத் தெரியாது.

தேர்ந்த புகைப்பட நிபுணர்கள் யோகா, கே எஸ் அருணாசலம் பிரபுசங்கர், உத்தரா, கலை நாகராஜன், ஸ்ரீதர் போன்ற அனைவரும் நல்ல நண்பர்கள் என்பதால் அவ்வப்போது அவர்களிடம் கேட்டுக் கேட்டு நான் போட்டோ எடுக்கப் பழகியதை ஒரு தனி அத்தியாயமாகவே எழுதலாம்.

அன்றைய நாடகத்துக்கு நானும் என் யாஷிகாவும் போயிருந்தோம்.

நாடகம் முடிந்தபிறகு மேடை மேலேயே வைத்து போட்டோ எடுத்தோம்.

போஸ் கொடுக்கச் சொன்னபோது.. அவர் ஜஸ்ட் லைக்தட் போஸ் கொடுத்துவிடவில்லை. அதே அனுமான் பாடி லாங்க்வேஜுடன் (ராமருக்கு முன் நிற்கும் அனுமனின்) போஸைக் கொடுக்கும்போது “ரா…ம் .. ராம்…” என்று உருக்கத்துடன் சொன்னபோது நிஜமாய் பயபக்தியுடன் கூடிய சிலிர்ப்பு ஏற்பட்டது.

அட்டைப்படத்தில் ஸ்ரீதர் எடுத்த போட்டோ பிரசுரமாயிற்று. நான் எடுத்த போட்டோ என் தனிப்பட்ட திருப்திக்காக மட்டுமே எடுத்தது என்பதால் எனக்காக வைத்துக் கொண்டேன். இந்த அட்டைப்படத்துக்கும் நான் எடுத்த படத்துக்கும் வித்தியாசம் இல்லை என்றாலும் தொழில் முறைப் புகைப்பட நிபுணர் என்பதால் அது பளிச்.

அந்த இதழுக்கு வந்த கடிதங்களில் 99 சதவீதம் அட்டைப்படத்தைப் பற்றித்தான் இருந்தது.

நிறையப் பேர் பிரேம் செய்து வைத்ததாகக்கூட எழுதினார்கள்.