Music show on Kannadasan’s songs. March 4 evening - MYLAPORE TIMESசுதந்திரச் சுடர்கள் | பாரதியார் நினைவு நாள்: பாரதியின் இலக்கிய வீச்சுDangers of external religiosity and hypocrisy

 

பகவத் கீதையில் கண்ணன், வேதங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றின் உன்னத சிறப்புகளையும் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளான் . கீதை என்பது ஒட்டுமொத்த வேதங்களின் சாரம் (கீதோபநிஷத்) என்று அழைக்கப்படுகிறது.

பாரதிக்கு, வேதம் என்பது  ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அறிவையும், வீரத்தையும், சுதந்திரத்தையும் வழங்கும் உன்னத ஞானம் என்ற கருத்து தீர்மானமாக உண்டு.

வேதம் காலம் காலமாக சிதறக்கடிக்கப் பட்டிருக்கிறது – அதனால்தான் வேதம் புதுமை செய் என்கிறான். பாரதி தனது சொற்களின் மூலம் வேதங்களின் உண்மைப் பொருளை கூறுகிறான்.

 வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதி பாடியதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன – வேதத்தை பாரதி போற்றி மதித்தான். தமிழ்நாடு என்ற பெயரை அன்றே முதன் முதல் கூறிவிட்டான். 

கவியரசு கண்ணதாசன் தனது திரை இசைப் பாடல்களிலும், இலக்கியப் படைப்புகளிலும் வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்து தர்மத்தின் தத்துவங்களை மிகவும் எளிய தமிழில் பாடியுள்ளார்

கீதையின் 15-வது அத்தியாயமான புருஷோத்தம யோகத்தில் (ஸ்லோகம் 15),

“அனைவரின் இதயத்திலும் நான் வீற்றிருக்கிறேன். என்னிடமிருந்தே நினைவாற்றலும், ஞானமும், மறதியும் ஏற்படுகின்றன. அனைத்து வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. வேதங்களை வகுத்தவனும் (வேதாந்த கிருத்) மற்றும் வேதங்களை முழுமையாக அறிபவனும் (வேதவித்) நானே ஆவேன்.”

இதன் மூலம், வேதங்களின் இறுதி இலக்கும், ஆரம்பமுமே  கண்ணன்தான்  என்பது தெளிவாகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில் (ஸ்லோகம் 45), வேதங்கள் பௌதிக உலகின் மூன்று குணங்களை (சத்வம், ரஜஸ், தமஸ்) பற்றிப் பேசுகின்றன என்று குறிப்பிடப்படுகிறது. அர்ஜுனனுக்கு உபதேசிக்கும் போது, கிருஷ்ணர் இந்த முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக நிலையைஅடையுமாறு அறிவுறுத்துகிறார். பௌதிக நன்மைகளுக்காக வேத சடங்குகளை மட்டும் செய்யாமல், அதன் உயர்ந்த ஞானத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

அடுத்த ஸ்லோகத்தில் (அத்தியாயம் 2, ஸ்லோகம் 46), வேதங்களின் பயன்பாடு மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது:

  • எல்லா இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் போது, ஒரு சிறிய கிணற்றினால் எந்தவொரு பெரிய பயனும் இல்லை.
  • அதேபோல, பரம்பொருளைப் பற்றிய முழுமையான ஆன்மீக ஞானத்தை (பிரம்ம ஞானம்) அடைந்த ஒரு ஞானிக்கு, சடங்குகள் சார்ந்த வேதங்களின் பகுதிகள் அனைத்தும் அந்தச் சிறிய கிணற்றைப் போன்றதே ஆகும். அதாவது, வேதங்களின் இறுதிப் பயனான இறைவனை அடைந்தவருக்கு, பிற சடங்குகள் தேவையாக இருப்பதில்லை.

15-வது அத்தியாயத்தின் முதல் ஸ்லோகத்தில், இந்த உலக வாழ்க்கை ஒரு தலைகீழான அரச மரத்திற்கு (அஸ்வத்த மரம்) ஒப்பிடப்படுகிறது.

  • இம்மரத்தின் வேர்கள் மேல்நோக்கியும், கிளைகள் கீழ்நோக்கியும் உள்ளன.
  • இம்மரத்தின் இலைகளே வேதங்களின் மந்திரங்கள் (சுலோகங்கள்) என்று பகவான் கூறுகிறார். .
  • இந்த உலகத்தின் கட்டமைப்பை (மரத்தை) வேதங்களின் துணை கொண்டு யாரொருவர் சரியாகப் புரிந்துகொள்கிறாரோ, அவரே உண்மையான ‘வேதங்களை அறிந்தவர்’ என்று போற்றப்படுகிறார்.

கீதையின் 10-வது அத்தியாயமான விபூதி யோகத்தில் (ஸ்லோகம் 22), கிருஷ்ணர் தனது தெய்வீகப் பெருமைகளை விவரிக்கும் போது, “வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்” (வேதானாம் சாமவேதோ ‘ஸ்மி) என்று கூறுகிறார். இசை வடிவிலான சாமவேதம் இறைவனுக்கு மிகவும் பிரியமானது என்பதால், அதனைத் தனது வடிவமாகக் கண்ணன் கூறுகிறான்.

கண்ணனையே தனது கண்ணாகப் பாவித்த மகாகவி பாரதி,கீதை வழியில்,  தனது கவிதைகள் மற்றும் கட்டுரைகளில் வேதங்களின் பெருமைகளையும், அவற்றின் ஞானத்தையும் எடுத்துரைத்துள்ளான்.

“வேதம் புதுமை செய்” என்ற தனது புதிய ஆத்திசூடியின் வரிகள் மூலம், பாரதியார் வேதங்களை வெறும் சடங்காகப் பார்க்காமல், அதன் ஆன்மீக உண்மைகளை நவீன காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டும் என்று விரும்பினார்.

தனது “தேசிய கீதங்கள்” பகுதியில், பாரத தேசத்தின் பெருமையாக வேதங்களைக் குறிப்பிடுகிறான்.

 “வெறி கொண்ட தாய்” என்ற கவிதையில், பாரத மாதா வேதங்களை உலகிற்கு உரைப்பவள் என்று பாடுகிறார்:

வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி – உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்

 மனிதன் அச்சமின்றி, உண்மையான சுதந்திரத்தோடு வாழ்வதையே

வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கடைப் பிடித்தோம்

வேதத்தின் உண்மைகள் எங்கும் பரவ வேண்டும் என்பதை,

“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே”

 என்று பாடுகிறான். 

பாரதியார் உபநிடதங்கள் மற்றும் வேத மந்திரங்களின் சாரத்தை உணர்ந்து, அவற்றை எளிய தமிழில் மொழிபெயர்த்தும், தன் கவிதைகளில் கையாண்டும் உள்ளார்.

பாரதியின் “சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்” மற்றும் அவரது காதல் பாடல்களில் உள்ள சில கருத்துக்கள் அதர்வண வேத கல்யாண மந்திரங்களின் பாணியை ஒத்திருக்கின்றன.

 “ஈசாவாஸ்யம் இதம் சர்வம்” (இவ்வுலகம் முழுவதும் இறைவனால் நிறைந்தது) என்ற வேதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பல தத்துவப் பாடல்களைப் பாடியுள்ளார்.

அரவிந்தருடன் பாரதி சேர்ந்து வேதங்களை ஆராய்ந்தார் என்கிறார்.மஹாகவி  தேசத்திற்காக எழுதுகிறான் – அவனுக்கு உதவியது  புதுமைத்தமிழ் மற்றும் பழமையான வேதங்கள். 

தேசத்தைச் தெய்வம் என்றும் வேதத்தை அடிப்படை அறம் என்றும் கூறுகிறான்.

பாரத மாதா என்றும் தேசமுத்துமாரி என்றும் பாடுகிறான்.

களைச் செடிகள் தானாகவே வளரும் –  நல்ல செடிகள் நாம் தான் பயிரிட வேண்டும்.   மண் விடுதலை – மன விடுதலை இரண்டும் அவன் குறிக்கோள் என்பதை வேதங்களின் கருத்துக்களால் காட்டுகிறான்.

விடுதலை என்ற நாடகத்தில்  நல்ல விஷயங்களை மனிதர்கள் மறைக்கிறார்கள். அப்புறம் மறக்கிறார்கள் என்பது இன்றும் தொடர்வதுதான் அவலம்.

என்கிறான் பாரதி.  மனித ஜாதி மயக்கம் அடைந்து அறம் மறைந்து மனிதர்கள் ஓடுகிறார்கள் . பொய்யே குன்றம் போலே – இன்றும் தொடர்கிறது என்பது எவ்வளவு வருத்தமான செய்தி?

வேதங்களின் சாரத்தை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கண்ணதாசன் எழுதிய பல  பாடல்கள் உள்ளன.

வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறும் “எல்லாமே இடத்தைப் பொறுத்தே மாறுகிறது” (சார்பியல் தத்துவம்/வகுப்பு நிலை) என்ற ஆழமான உண்மையை, சூரிய காந்தி திரைப்படப்பாடல்  மிக எளிமையாக விளக்குகிறது.

“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது – கருடா சௌக்கியமா?

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே – கருடன் சொன்னது.

மனித மனம் அடையும் பேராசை, கோபம், மாயை ஆகியவற்றைக் கடந்து அமைதி பெறுவதே வேத நெறி. உபநிடதங்களின் மன அமைதிக்கான தத்துவத்தை (ஸ்திதபிரக்ஞன் நிலை) ஆண்டவன் கட்டளை படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன.

ஆறு மனமே ஆறு

அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு

தெய்வத்தின் கட்டளை ஆறு

 

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

உள்ளத்தில் உள்ளது அமைதி

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

இறைவன் வகுத்த நியதி

 

ஆசை கோபம் களவு கொள்பவன்

பேசத்தெரிந்த மிருகம்

அன்பு நன்றி கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம்

 

இதில் மிருகம் என்பது கள்ள மனம்

உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது

ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

வேதாந்தத்தின் மிக முக்கிய சாரமான “அஹம் பிரம்மாஸ்மி” (உன்னை அறிதல்/தன்னையறிதல்) என்ற தத்துவத்தை உலகிற்குக் கூறும் இதுவாகும்.

“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்.

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்..

உலக வாழ்க்கை நிலையற்றது, ஆன்மா மட்டுமே நிலையானது என்ற வேதாந்தத்தின் நிலையாமை (அநித்யம்) தத்துவத்தை  உரைக்கும் பாடல்.

“வீடு வரை உறவு வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?

ஆரம்பத்தில் பிறப்பும் அவனது கையில் – இடையில்

ஆடும் நாடகம் அவனது கையில்.

வேதங்கள் கூறும் “கர்மா” மற்றும் “விதி” (ஊழ்வினை) கோட்பாட்டை விளக்கும் பாடல். அறிவு மட்டும் போதாது, காலமும் விதியும் இணைய வேண்டும் என்ற தத்துவத்தை இந்தப் பாடல்  பேசுகிறது.

“புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்தியுள்ளதில்லை…

கண்ணதாசன் திரைப்பாடல்கள் மட்டுமின்றி, வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் புராணங்களின் சாரத்தை முழுமையாகத் தொகுத்து அர்த்தமுள்ள இந்துமதம் என்ற 10 பாகங்கள் கொண்ட உரைநடை நூலை எழுதியுள்ளார்.

வேதங்கள் போற்றும் வாழ்க்கை நெறிமுறைகளைத் தமிழ் மக்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள கீதை கூறிய கண்ணன் வழியில், பாரதி மற்றும் கண்ணதாசன் பல பாடல்களில், வேதங்களின் சிறப்பைப் பற்றிக் கூறி இருக்கிறார்கள்.

அடுத்த வாரம் சந்திப்போம்.