கல்வி என்னும் சொல், உள்ளத்தில் ஒரு பொருளைப் பதிக்கும்படியாகக் கற்பதைக் குறிக்கும். தமிழ்நாட்டில் கல்வி என்று தோன்றியது என்று நம்மால் சொல்ல இயலாது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறான்.
ஆதி மனிதன், இருளைக் கண்டு அஞ்சிய வேளையில் தோன்றிய சூரியனின் ஒளியைக் கண்டு, ஒவ்வொரு நாளும் இவ்வாறு இருள் வருவதும் மீண்டும் ஒளி வருவதும் இயற்கை நிகழ்வு என்பதைக் கற்றுக்கொண்டான். இப்படி அவனது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் அனைத்துமே அவன் கற்ற கல்வியின் அடையாளம் தான்.
கல்வி என்று இங்கே குறிப்பிட்டவை முயன்று கற்காமல் தானாக அனுபவித்து அறிந்தவற்றைக் குறிக்கும். இதனை அனுபவக் கல்வி என்கிறோம். இந்த அனுபவக் கல்வி என்பது எல்லோரும் கற்றுக்கொள்வது ஆகும்.
ஏட்டுக் கல்வி என்பது முயன்று கற்கும் கல்வி ஆகும். முயன்று கற்கும் ஏட்டுக் கல்விக்கு ஆசிரியர் ஒருவரோ பலரோ கட்டாயம் தேவைப்படுகின்றனர். காலம் காலமாக ஒலித்து வரும் ஒலிப்பு முறையையும் எழுதி வரும் எழுத்து முறையையும் முறையாகச் சொல்லிக் கொடுப்பதற்கு ஓர் ஆசிரியர் தேவைப்படுகிறார். இப்படிப்பட்ட முறைசார் கல்வி முறை, சங்க காலத்தில் இருந்ததா என்பதை நாம் அறிய இருக்கிறோம்.
கல்வி
இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே கல்வியின் பெருமையைத் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். மக்கள் அனைவரும் கல்வி கற்றுச் சிறப்படைய வேண்டும் என்னும் நற்செய்தியை ஒரு மன்னனே வலியுறுத்திப் பாடியுள்ளான்.
கல்வி கற்பது சற்றுக் கடினமான வேலை தான். ஆனால் அந்தக் கல்வியால் நாம் அடையும் நன்மை அதைவிடப் பெரிது என்பதைப் பாண்டியன் நெடுஞ்செழியன் எடுத்துரைத்துள்ளான்.
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும்,
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்!
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்!
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே (புறம். 183)
என்னும் இந்தப் புறநானூற்றுப் பாடலில் கல்வியை எப்படிக் கற்கவேண்டும் என்றும் அப்படிக் கற்பதால் ஏற்படும் உயர்வு பற்றியும் பாடியுள்ளான்.
கற்கும் முறை
கல்வியைக் கற்க விரும்புபவன் ஓர் ஆசிரியனின் துணையுடனே கற்க வேண்டும் என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளான் பாண்டிய மன்னன்.
கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு உதவி தேவைப்படும்போது அந்த உதவியைக் கல்வி கற்போர் செய்யவேண்டும். ஆசிரியருக்குப் பொருள் தேவைப்படும்போது மட்டும் அல்லாமல் முறையாகப் பொருள் கொடுத்திட வேண்டும்.
கல்வி கற்கும்போது அந்தப் பாடத்தைப் படிப்பதில் சிக்கல் ஏற்ப்படுகிறது என்றோ, போதிய நேரம் இல்லை என்றோ, ஆசிரியர் சினந்து கொள்கிறார் என்றோ நாம் கோபம் கொண்டு கல்வியை விட்டுவிடக் கூடாது என்று கல்வி கற்கும் முறையைத் தெரிவித்துள்ளான்.
எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் கல்வி கற்பதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்பதை முதலில் கூறியுள்ளான் பாண்டியன்.
கல்வி கற்பதால் ஏற்படும் பயன்
கல்வி கற்பதால் ஏற்படும் பயனை மூன்று நிலைகளில் பாண்டியன் நெடுஞ்செழியன் விளக்கியுள்ளான்.
ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோரில், யார் கல்வி கற்றவரோ அவரையே தாயும் பாராட்டிப் பேசுவாள்.
மன்னர் குடியில் பிறந்தோரில் யார் மூத்தவரோ அவர்தான் அடுத்த மன்னன் ஆகவேண்டும். ஆனால் அந்தக் குடியில் பிறந்தோரில் இளையவன், கல்வி கற்று அறிவாளியாக விளங்கினால் அந்த இளையவன் தான் அடுத்த மன்னன் ஆவான்.
அந்தக் காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் நான்கு வகைப் பிரிவு இருந்துள்ளது. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் பிரிவில் நான்காம் பிரிவைச் சேர்ந்த ஒருவர், கல்வி கற்று, அறிவாளியாக விளங்கினால் மேல்நிலையில் உள்ள மூவரும் அந்த நான்காம் பிரிவில் உள்ள கல்வி கற்ற அறிவாளிக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள் என்று கல்வி கற்பதால் ஏற்படும் பயனைக் கூறுகிறது.
மாணவன்
தற்காலத்தில் நாம் மாணவன் என்று சொல்லும் சொல்லைச் சங்க காலத்தில் மாணாக்கன் என்று சொல்லியுள்ளார்கள். படுமரத்து மோசியார் என்னும் புலவர் பாடிய குறுந்தொகைப் பாடல் ஒன்றில் மாணாக்கன் என்னும் சொல் வந்துள்ளது.
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்!
தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே! (குறுந். 33)
தலைவி ஒருத்தி, தலைவனுடன் ஊடல் கொண்டிருக்கிறாள். தலைவிக்குத் தூதாக ஒருவனை அனுப்புகிறான் தலைவன். அவனது தோற்றத்தைப் பார்த்த தலைவி, தனது தோழியைப் பார்த்து, ‘இவனைப் பார்த்தால் நம் ஊர் மன்றத்தில் இப்போதுதான் கல்வி கற்கும் மாணாக்கன் போல் இருக்கிறான். இப்படிப் படிக்கும் மாணவன் பொய் சொல்ல மாட்டான். எனவே நாம், தலைவனை ஏற்றுக் கொள்ளலாம்’ என்னும் பொருளுடன் அமைந்துள்ளது இந்தப் பாடல்.
கல்வி கற்றுக் கொண்டிருக்கும் ஒருவன், நல்லவனாகத்தான் இருப்பான் என்ற நம்பிக்கை இந்தப் பாடலில் வெளிப்பட்டுள்ளது. மேலும் அந்தக் காலத்தில் கல்வி கற்ற மாணவர்கள், தாங்கள் கல்வி கற்கும் ஊரில் தங்கிப் படித்த காரணத்தால் அந்த ஊரில் உள்ளவர்களிடமே உணவினைப் பெற்று வாழ்ந்துள்ளனர். அப்படி உணவினைப் பெற்று வாழும் இந்த மாணாக்கன், அறிவு நிறைந்தவனாக இருப்பதால் இவன் சொல்லும் பொய் இல்லாத சொல்லைக் கேட்டு நடக்கலாம் என்று படுமரத்து மோசியார் உணர்த்தியுள்ளார்.
கல்வி கற்கும்போதே மாணாக்கருக்கு மதிப்பு வழங்கப்பட்ட உயர்வு நிலை இந்தப் பாடலில் வெளிப்பட்டுள்ள தன்மையைக் காணமுடிகிறது.
ஆசிரியர்
சங்க காலத்திலேயே ஆசிரியர் என்ற சொல் பயன்பாட்டில் இருந்துள்ளது. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில் நல்லாசிரியர் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
பல் கேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்… (பட்டின. 169-171)
என்னும் அடிகளில் காவிரிப்பூம்பட்டினக் கடற்கரையில் பொருள்கள் விற்கும் கடைகளையும் அரங்கங்களையும் அடையாளப் படுத்துவதற்குப் பல வகையான கொடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இன்றுவரை இந்த அடையாளக் கொடியை அசைத்தே ரயில் ஓட்டப்படுவதை நாம் பார்க்கிறோம்.
பூம்புகாரில் கோவில் திருவிழாவைக் குறிக்கும் வகையில் கொடி ஏற்றப்பட்டதையும் அறச்சாலைகளின் அடையாளமாய் ஏற்றப்பட்ட கொடியையும் காட்டிய பின் பட்டி மன்றத்தின் அடையாளக் கொடியைக் காட்டியுள்ளார் உருத்திரங் கண்ணனார்.
இலக்கியம், இலக்கணம் முதலான எல்லாத் துறைகளிலும் ஆசிரியரிடம் பாடம் கேட்டுக் கற்றுத் தெளிந்த ஆசிரியர்கள், தங்கள் விவாதத்தின் அடையாளமாகக் கொடி ஏற்றியதைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆசிரியர்கள் பல்துறை அறிவு பெற்றவர்களாக இருந்த தன்மையை இந்தப் பகுதி தெரிவிக்கிறது.
ஆசிரியர் என்ற சொல் மதுரைக் காஞ்சியிலும் இடம்பெற்றுள்ளது.
பல் சாலை முது குடுமியின்,
நல் வேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்,
நிலம் தரு திருவின் நெடியோன் போல (மதுரைக். 759-763)
என்னும் மாங்குடி மருதனார் இயற்றிய அடிகளில் நல்லாசிரியர் பற்றிய குறிப்பைக் காணமுடிகிறது.
பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போல் நீயும் நல்வேள்வி செய்வாயாக! பல்வேறு துறைகளில் கற்று அறிவினைப் பெற்ற நல்ல ஆசிரியர்களுடன் ஒன்று சேர்ந்து தமிழ் ஆய்ந்த நிலம்தரு திருவின் நெடியோன் போல நீயும் நற்றமிழ் வளர்ப்பாயாக! என்று தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் போற்றிப் பாடியுள்ளார்.
மாங்குடி மருதனார் இந்தப் பாண்டியன் காலத்தில் தலைமைப் புலவராக இருந்துள்ளார் என்பதையும் அவர் சொல்வதைக் கேட்டு நன்னெறியில் நாட்டாட்சியைச் செய்துள்ளான் என்பதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
கேள்வி
சங்க காலத்தில் அந்தணர்களின் கல்வி, கேள்வியறிவுடன் கூடியதாக இருந்துள்ளது. அவ்வாறு கேள்வியறிவின் மூலம் பல் துறை அறிவைப் பெற்று வேள்வி செய்த அந்தணர்க்குப் பொன்னால் ஆன அணிகலன்களை நீர் வார்த்து வழங்கினான் என்று கயமனார் பாடியுள்ளார்.
நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத்
தாயின் நன்று பலர்க்கு ஈத்து (புறம். 361)
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலில் பாடப்படுபவன் யார் என அறிய இயலவில்லை. ஆனால் கேள்வியறிவு பெற்றோர் அந்தணர் என்னும் செய்தியை இது தெரிவிக்கிறது.
பொருந்தில் இளங்கீரனார் என்னும் புலவர், மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வீரத்தைப் புகழ்ந்து பாட விரும்பி வந்துள்ளார். பெரும்புகழ் பெற்ற இந்தச் சேரனைத் தன்னால் புகழ்ந்திட இயலுமா என்னும் அச்சம் அவருக்குத் தோன்றிய காரணத்தினால் அவர் காலத்திற்கு முன் வாழ்ந்த கேள்வி அறிவில் சிறந்த கபிலர் என்ற புலவரின் பெருமையைப் புகழ்ந்து அவரைப் போல் பாடுவதற்கு முயற்சி செய்கிறேன் என்று இளங்கீரனார் என்னும் இந்தப் புலவர் பாடியுள்ளார்.
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை, கடு மான், பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே ‘தாழாது
செறுத்த செய்யுள் செய் செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன்’ என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப,
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே! (புறம். 53)
சேரனின் கடற்கரை ஊர்களில் ஒன்று விளங்கில். அந்த ஊரைப் பகைவர் முற்றுகை இட்டுவிட்டனர். அதைக் கண்ட சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, தன்னுடைய யானைப் படையைக் கொண்டுசென்று பகைவரை விரட்டியடித்து, தனது ஊரையும் மக்களையும் காப்பாற்றினான். அப்படிப் பட்ட பெருவீரம் கொண்ட சேரனைப் போற்றிப் பாடுவதற்குச் சிறந்த கேள்வியறிவால் புகழ் பெற்றவராகிய கபிலர் இன்று இருந்தால் மிகவும் சிறப்பாகப் பாடியிருப்பார்.
சேரனே! உனது புகழை விரிவாகப் பாடினால் அது விரிந்து கொண்டே செல்லும். சுருக்கமாகப் பாடினால் உனது புகழில் பல விடுபட்டுப் போகும். இருந்தாலும் எனது திறமைக்கு ஏற்ற வகையில் நான் உன்னைப் பாடுகிறேன் என்று பொருந்தில் இளங்கீரனார் பாடியுள்ள இந்தப் பாடலில் கபிலர் என்ற புலவரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவர் சிறந்த கேள்வி அறிவு கொண்டவர் என்பதை இந்த இடத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு வேதத்தின் உட்பொருளை விரிவாக எடுத்துக் கூறும் ஆற்றல் பெற்ற வாய்மொழிப் புலவீர் என்று அந்தணர்களைக் குறிப்பிட்டுள்ளார் குன்றம் பூதனார் என்னும் புலவர். இவர் கொண்டுள்ள அடைமொழியான குன்றம் என்பது திருப்பரங்குன்றத்தைக் குறிக்கும்.
குன்றம் பூதனார் பாடிய பரிபாடலில் திருப்பரங்குன்றத்தில் உள்ள அந்தணர்களைத் தான் முன்னிலைப் படுத்திப் பாடியுள்ளார்.
நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் (பரிபாடல் 9)
என்னும் அடிகளில் எழுத்து மொழி அறியாத வாய்மொழிப் புலவர்களே, கேளுங்கள் என்று கூறுவதுபோல் பாடியுள்ளார்.
பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போர்புரிவதற்குச் சேரனும் சோழனும் ஐந்து வேளிர்களும் என ஏழு பேர் வந்தனர். அவர்களைத் தலையாலங்கானம் என்னும் இடத்தில் எதிர் கொண்டு வென்றான் அவன். அவ்வாறு போருக்குச் செல்வதற்கு முன்பாக அவன் கூறிய வஞ்சினத்தில், உயர்ந்த கேள்வி அறிவு கொண்ட மாங்குடி மருதனைத் தலைவராகக் கொண்ட சங்கப் புலவர்கள் என் நாட்டின் பெருமையைப் பாடாமல் போகட்டும் என்று கூறினான். இந்தப் பகுதியில் கேள்வி அறிவின் சிறப்பையும் தனது அவையில் கற்றறிந்த புலவர் பலர் இருந்த தன்மையையும் உணர்த்தியுள்ளான்.
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை (புறம். 72)
இந்தப் பகுதிதான் பாண்டியன் நெடுஞ்செழியனின் வஞ்சினத்தின் ஒரு பகுதி. இதன் மூலம் இந்தப் பாண்டிய மன்னனே நன்கு கற்றறிந்தவன் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
புலவர்
சங்க காலத்தில் புலமை பெற்றோரைப் புலவர் என்று கூறியுள்ளனர். எந்தத் துறையில் புலமை பெற்றிருந்தாலும் அவர்களைப் புலவர் என்றே குறிப்பிடுவர். என்றாலும் தமிழ்க் கவிதைத் துறையில் புலமை கொண்டோரையே சிறப்பாகப் புலவர் என்று போற்றியுள்ளனர்.
சங்க காலத்தில் பாணர்களுடன் பாடல் இயற்றும் புலவர்களும் இருந்துள்ளனர். பாணருக்குப் பரிசு வழங்கிய மன்னர்கள், அவர்களுடன் வரும் புலவர்களுக்கும் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளனர் என்பதை நெட்டிமையார் பாடிய புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது.
பாணர் தாமரை புனையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் (புறம். 12)
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாணர்களும் புலவர்களும் வந்து போற்றியுள்ளனர். அவ்வாறு வந்த பாணர்கள் பொன்மலரைப் பரிசாகப் பெற்றுள்ளனர். நன்றாக அலங்கரிக்கப் பட்ட யானைகளையும் தேர்களையும் புலவர்கள் பரிசாகப் பெற்றுள்ளனர் என்று நெட்டிமையார் பாடியுள்ளார்.
இந்தப் பாடலில் புலவர்கள் என்னும் சொல்லை அப்படியே பயன்படுத்தியுள்ளார் இந்தப் புலவர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் இந்தப் பாண்டிய மன்னன், இடைச்சங்க காலப் பாண்டியனாகிய நிலந்தரு திருவின் பாண்டியனுக்கும் முன்பு இருந்தவன் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
அதியமானைப் பகைவன் தன் வேலால் கொன்றுவிட்டான். அதனை அறிந்த ஔவையார் புலம்பிப் பாடுகிறார்.
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப் பாடுநரும் இல்லை! படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை! (புறம் 235)
அதியமானுக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் தகடூரில் போர் நடக்கிறது. இந்தப் போரில் அதியமான், தன் மார்பில் வேல் தாக்கி இறக்கிறான். அந்த வேல் தாக்கியதைக் கண்ட ஔவையார் பாடியதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
இரும்பொறை எறிந்த வேலானது அதியமான் நெஞ்சை மட்டும் துளைக்கவில்லை. அது பாணர்களின் மண்டை என்னும் உண்கலத்திலும் துளைத்து ஓட்டை போட்டுவிட்டது. உண்கலம் உடைந்த காரணத்தால் உணவு இல்லாமல் பாணர்களின் கண்கள் சோர்ந்து விட்டன. அந்த வேல், புலவர்களின் நாவில் பாய்ந்து அவர்களின் நாக்கினையும் துளைத்துவிட்டது.
எங்களை எல்லாம் பாதுகாக்கும் அந்த அதியமான் எங்கே இருக்கிறான்? இனி இந்த நாட்டில் பாடுவோர் யாரும் இருக்கமாட்டார்கள். பாடினால் அவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவுவோர் யாரும் இல்லை என்று இரங்கிப் பாடியுள்ளார். இந்தப் பாடலிலும் புலமைத் திறம் மிகுந்த புலவர் பற்றிப் பாடியுள்ளார் ஔவையார்.
சங்க காலத்தில் எழுதப்பட்ட பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் என்னும் பாடல்களே அந்தக் காலத்தில், கல்வி சிறப்பாக இருந்த தன்மையை எடுத்துக் கூறுகின்றன. எந்த வேற்றுமையும் இல்லாமல் எல்லோரும் கல்வி கற்றிருக்கிறார்கள். ஏட்டுக் கல்வி அந்தக் காலத்திலேயே பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அந்தணர்களும் கல்வி அறிவில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். அவர்கள் கற்ற கல்வியானது ஏட்டுக் கல்வி என்று குறிப்பிடப்படாமல் கேள்வியறிவால் கேட்டுப் பெற்ற கல்வி, அதாவது வாய்மொழிக் கல்வி என்று அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு வாய்மொழிக் கல்வி கற்ற அந்தணர்களும் புலவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

