தேள் – க நா சு சிறுகதை (அக்டோபர் 2026)

பயம், மர்மம், ஆச்சரியம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் வகையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு அமைக்கப்படும் கதையே அமானுஷ்யக் கதை என்கிறது கூகிள் சாமி! க.நா.சு.வின் ‘தேள்’ என்னும் சிறுகதையை ஓர் அமானுஷ்யக் கதையாகக் கொள்ளலாம்.
டில்லியில் இருந்தாலும், அவரது கதைகள் எல்லாம் காவிரிக்கரையைச் சுற்றியே இருக்கின்றன. குடும்பம், உறவுகள் என்னும் சிந்தனைகள், அவர்களது விருப்பு, வெறுப்பு இவைகளையே கதைகளாக எழுதியுள்ளார் க.நா.சு.
“அவர் சிறுகதைகள் கலவரம், பரபரப்பு, கிளுகிளுப்பு ஊட்டுகின்றவை அல்ல. அவை பூரண அழகும், அமைதியும், அடக்கமும் கொண்டவை. குடும்பம் சார்ந்தவை. பாட்டி, தாய், தந்தை, மகன், மனைவி, நண்பர்கள், சொந்த ஊர் என்று ஒரு வட்டத்துக்குள் புனையப்பட்டவை.” – சா. கந்தசாமி.
‘தேள்’ சிறுகதையில் சுந்தாப்பாட்டி, தான் திருமணமாகி வந்த புதிதில் நடந்த ஓர் நிகழ்வைக் கதையாகச் சொல்வது போல எழுதியுள்ளார் க.நா.சு.
கதையில் வரும் சம்பவங்களுக்கு ஒரு முன்னோடியாக பேய் பிசாசு பற்றி சுந்தாப்பாட்டி தன் பேரனிடம் பேசுகிறாள். இரவில் லேட்டாக வீட்டுக்கு வரும் பேரனிடம் ‘இரவில் தனியாக வந்தால் பயந்துகொண்டு விட்டால், அப்புறம் அம்மான்னா ஆகுமா? அப்பான்னா ஆகுமா?’ என்று கேட்கிறாள். ‘பேய் பிசாசு மேலெல்லாம் உனக்கு நம்பிக்கை உண்டா?’ என்று கேட்கும் பேரனிடம் பாட்டி சொல்வது சிந்திக்க வைப்பது: “பேய் இருக்கோ, பிசாசு இருக்கோ எனக்கென்ன தெரியும்? ஆனால், அதனால் ஏற்படுகின்ற பயம் மட்டும் உலகத்தில் இருந்துகொண்டுதானே இருக்கிறது?”
மரத்தில் தூக்கிலிட்டுப் பிணமாய்த் தொங்கினானாம் என்று நண்பன் சாமா சொன்னதால், அந்தப் பக்கம் இரவில் தனியாக வரவேண்டாம் என்கிறாள் பாட்டி. ‘பயமென்று இல்லையென்றாலும், அந்த மரம் அருகில் வந்த போது, நிமிர்ந்து பார்க்காமல் வந்தோம்’ என்கிறான் பேரன்! மேட்டுத் தெருவில் ‘காட்டேரி அடித்துவிட்டதால்’ வஸ்தாது முத்தையன் வாயிலும் மூக்கிலும் இரத்தம் கக்கி நடுஞ்சாலையில் கிடந்தானாம்! இது போன்ற செய்திகளைப் பேசிவிட்டு, ஏதாவது பேய்க் கதை சொல்லச்சொல்லிக் கேட்கிறான் பேரன். பாட்டி முதலில் மறுத்துப் பின்னர் அவள் திருமணமாகி வந்த புதிதில், சாத்தனூர் கிராமத்தில் நடந்த கதை ஒன்றை – தானே நேரில் கண்ணால் கண்ட கதையை – சொல்கிறாள்.
‘நடக்காது என்று நாம் நம்புவதையெல்லாம் நடக்க வைக்க முடியும் என்றுதானே உலகத்திலே சொல்லிக்கொள்கிறார்கள்? நம்ம ஊரில் மட்டுமில்லாமல், மேல் நாடுகளிலும் கூட..’ என்று சொல்கிறாள் பாட்டி.
அந்தக் காலத்தில் கிராமங்களில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். பெரிய குடும்பம், பிழைப்பு தேடி வெளியூர் போக மாட்டார்கள், ஊரிலேதான் வேலை, பிழைப்பு, ஊதியம் எல்லாம். தெருவில் வேத கோஷம், காலையும் மாலையும் கோவிலுக்குப் போவோர் வருவோர் என கிராமத்தில் தெய்வ சாந்நித்தியம் நிறைந்திருந்தது. ஆனால், அந்தக்கால அக்கிரஹார வாழ்க்கையில் விரோதம் வந்துவிட்டால் மட்டும் அது போகாது. நல்ல செல்வாக்குடன் இருந்த ராஜு சாஸ்திரிகள் முரட்டுப் பணக்காரர். கிட்டாவையர் அவரது இரண்டுவிட்ட (இருவர் தாத்தாவும் அண்ணன் தம்பிகள்)தம்பி. சொத்தில்லாதவர். நியம நிஷ்டைகள் தவறாதவர். வாலிபத்தில் சுற்றித் திரிந்தவர். மலையாளப் பக்கம் சாமியாரிடம், மந்திரம், தந்திரம், ரஸவாதம் படித்தவர். பில்லி சூனியம், ஏவலாதிகளில் கெட்டிக்காரர். இருவருக்கும் ஏதோ பகை. ஒருவர் முகத்தை ஒருவர் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.
ராஜுவின் இரண்டாவது மகள் தர்மிக்குத் திருமணம். ராஜு, கிட்டாவையரைக் கூப்பிடவில்லை. கிராமம் இருவருக்கும் சமரசம் செய்துவைக்க முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. கிட்டாவையர் ‘என் அண்ணாதானே, எனக்கென்ன கோபம்’ எனக் கூறி ஒத்துக்கொண்டாலும், ராஜு அசைந்து கொடுக்கவில்லை.
திருமணத்திற்குக் கிராமமே திரண்டிருந்தது. கிட்டாவையர் தன் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, கல்யாண வீட்டிற்கு எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ஓலைப் பெட்டியிலிருந்து தாம்பூலம் போட்டுக்கொள்கிறார். சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள்; சிலர் வந்து அவருடன் பேசுகிறார்கள்; சிலர் வருகிறார்கள்; சிலர் போகிறார்கள்.
கெட்டிமேளம் கொட்ட, தாலி கட்டியவுடன், சபைக்குச் சந்தனம், சர்க்கரை, வெற்றிலைப் பாக்கு கொடுக்கிறார்கள். திடீரென்று சபை அல்லோலகல்லோலப் படுகிறது. எல்லோரும் திசைக்கொருவராய் ஓடுகிறார்கள். எதிர்த் திண்ணையில் விசிறியை வைத்துவிட்டு, வெற்றிலையை எடுத்து, சுண்ணாம்பு தடவி போட்டுக்கொல்கிறார் கிட்டாவையர்.
சபையில் கொடுத்த வெற்றிலை பாக்கெல்லாம் தேளாக மாறிவிடுகின்றன. தேள் வெற்றிலையில் நகர்வதைப் பார்த்து, ‘ஐயோ, தேள், தேள்’ என்று எல்லோரும் அலறியடித்து ஓடுகின்றார்கள்.
அப்போது தர்மி சம்யோசிதமாக வெளியே வந்து நமஸ்காரம் செய்து, “இப்படி நடக்கவிடலாமா, சித்தப்பா?” என்று வருத்தமுடன் கேட்க, ‘மாப்பிள்ளை எங்கே, அவரையும் வரச்சொல், ஆசீர்வாதம் பண்றேன்” என்கிறார் கிட்டாவையர். சின்னப் பெண் தர்மி இதற்கெல்லாம் காரனம் சித்தப்பாதான் என்று புரிந்துகொண்டுவிட்டாள்.
மணமக்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு, கிட்டாவையர் கிளம்பிச் சென்றுவிடுகிறார். கல்யாண வீட்டில் தேள்கள் எல்லாம் எங்கோ மாயமாய் மறைந்து விடுகின்றன. பின்னர் ராஜு ஐயர் கூப்பிட்டபோதும் கிட்டாவையர் கல்யாணத்திற்குப் போகவில்லை.
பாட்டி, கதையை முடித்துவிட்டு, ‘அதில் விசேஷம் என்னவென்றால், தேள் ஒருவரையும் கொட்டவில்லை’ என்கிறாள்.
‘இதெல்லாம் வெறும் மனப் பிராந்தி’ என்று கேலி செய்கிறான் பேரன். “உனக்கும் எனக்கும் புரியாத விஷயம் உலகிலே எவ்வளவோ இருக்குடா” என்கிறாள் பாட்டி. அப்போது விளக்கின் ஒளிவட்டத்தில் ஒரு பெரிய தேள் உண்மையிலேயே தெரிந்தது. அதை அடிக்க எழுந்த பேரனைத் தடுத்த பாட்டி சொன்னாள்,” அடிக்காதே. அது என் கதைக்கு சாட்சி சொல்ல வந்தது, கொட்டாது, தானாகப் போய்விடும்”
1943 ல் எழுதப்பட்ட கதை இது. நம்புவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இடையே பயணிக்கிறார் க.நா.சு. இரண்டு வகையினரும் தங்கள் சார்பில் ஒத்துக்கொள்ளக் கூடியதாக எழுதியிருக்கிறார். வெற்றிலையில் மை போட்டுப் பார்ப்பதைப்போல, வெற்றிலைப் பாக்கில் தேள்! தி.ஜா. வின் புகழ் பெற்ற ‘பாயசம்’ சிறுகதையில் பெரியப்பாவின் பொறாமையை அவரது பேச்சில், நடத்தைகளில் துல்லியமாகக் காட்டியிருப்பார்.
இங்கு, கிட்டாவையர், அமைதியாக, தான் பார்த்து வளர்ந்த குழந்தையை ஆசீர்வதிக்க – குழந்தையின் மீது அவ்வளவு பாசம் – இந்த வேலையைச் செய்து, வெளியே வரவழைத்து குழந்தையை ஆசீர்வதிக்கிறார். அதனால்தான் தேள் யாரையும் கொட்டவில்லை என்று கொள்ளலாம்!
க.நா.சு. அவர்களின் அந்தக்கால கிராமங்கள், அக்கிரஹாரம், மனிதர்கள். பழக்க வழக்கங்களைச் சிறப்பாகக் கண்முன் கொண்டுவருகிறார். காலம் கடந்தும் உயிர்ப்புடன் இருக்கும் கதை இது!
