ஜீவன்-ஜானகி, ப்ருத்வி-பவித்ரா, மாதவ்-மதுலிகா, ரமா-ஆனந்த் இவர்கள் உயிர் தோழர்களான மூத்த தம்பதியர். அக்கம்பக்கத்துக் குடியிருப்பில் வசிப்பவர்கள். தீபாவளிக்கு அவரவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளி, இரவுக்காவலர், சுத்தம் செய்யும் பெண்கள், தோட்டக்காரர், இவர்கள் வெயிலோ மழையோ சுத்தமாக பளிச்சென்று சைக்கிளிலோ நடந்தோ காலந்தவறாமல் வரும் பழக்கத்தை கவனித்தார்கள். இவர்களுக்கு தீபாவளிப் பொருட்கள் மட்டுமின்றி வருடம் முழுவதும் தேநீர் தருவதெனத் திட்டமிட்டார்கள்.
பல வருடங்களாகத் தீபாவளியின் போது அவர்களுடைய பிள்ளைகள் ஒன்றிரண்டு மணிநேரத்திற்கு மட்டும் வந்து போவார்கள், அல்லது வர முடிவதில்லை. இதை நால்வரும் நினைத்து நினைத்து வருந்தினார்கள்.
தனிமையைப் போக்கப் பார்த்தாலும் வெறுமையான நிலை உணர்வு நீடித்தது என்றார்கள். நால்வருக்கும் இதே தவிப்பு; அவ்வளவுதான் என இருக்கவும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை!
என்ன செய்வதென்று தத்தளித்தார்கள். நான்கு தம்பதிகளும் பள்ளிக் காலத்திலிருந்து நண்பர்கள். மன ஒற்றுமை இருந்தது. இந்தப் பக்கபலத்தால் என்ன செய்வது என்று தேடுகையில், முதியோருக்குப் பிரத்தியேகமாக வாழ்க்கைத் தரம், திருப்தி (Quality of life & Satisfaction) இவற்றைப் பற்றி நான் வர்க்ஷாப் எடுப்பதை அறிந்து நான்கு தம்பதியரும் பங்கேற்றார்கள். பிறகு என்னைத் தனிப்பட்ட முறையில் ஆலோசித்தார்கள்.
இவர்களின் வாழ்க்கையில் உற்சாகம் குறைந்திருந்த நிலையை மதிப்பிட்டேன். நினைவூட்டல் வழிமுறையை (Reminiscence therapy) உபயோகித்தேன். பலன் அளித்தது!
இதிலிருந்து ஒவ்வொருவரும் தமது வாழ்விலும் உணர்ச்சிப்பூர்வமான இணைப்புகள் பல உள்ளன என்பதை உணர்ந்தார்கள்! சந்தோஷத்தை நாமாக உருவாக்கலாம் என்றதை இந்த வழிமுறை நினைவுபடுத்தியது!
சந்தோஷத்தைத் தாமாக உருவாக்குவதில் குற்ற உணர்விற்கு வேலை இல்லை என்பதைப் பல ஸெஷன் பயிற்சிகள் மூலம் புரிந்துகொண்டதும் மலர்ச்சி பெற்றார்கள்! சராசரி உண்மையே!
அடையாளம் கொள்ள, தினசரி சந்தோஷங்களான பிடித்த பாடல் ஒளிபரப்பில் குதுகலம் அடைவது, கனிவான சொல் கூறுவதின் / கேட்பதின் இன்பம் எனப் பலவற்றைக் கவனித்து, குறித்துப் பகிரச் செய்தேன். செய்தார்கள்.
குழுவில் பகிர்ந்து கொண்டதும் மற்றவர்களின் அனுபவம் போலவே தாமும் உணர்ந்ததைப் பகிர்ந்தார்கள். தற்போதைய தினசரி வாழ்க்கையிலும் சந்தோஷங்கள் தமது கையில் உள்ளது என்று உணர, மனதிற்குத் தெம்பு வந்தது!
இந்த நிலையை அடைந்ததும், நான்கு தம்பதிகளும் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தை வேறுவிதமாகச் செய்ய யோசித்தார்கள்.
மாற்றத்தைப் பற்றி ஆலோசித்த போதே அலாதியான ஆனந்தத்தை உணர்ந்தார்கள்! தீபாவளியின் அழகே, “எனது” என்பதில் அல்ல, “நமது” என்பதில் அடங்கும்! நால்வருமே தீபாவளியில் ரசிப்பது, அனைவரின் ஆர்வம், நெஞ்சார்ந்த சிரிப்பு, பொலிவூட்டும் பிரகாசமாக வண்ண நிறக் கோலங்கள், ஒளியூட்டும் மகிழ்ச்சி நிரம்பிய உள்ளங்கள்! (மன) வெளிச்சத்தை எழுப்பும் பட்டாசுகள்.
வாராவாரம் குழுச் சந்திப்பில் மேற்கொண்டு செய்வதின் யோசனைகளை முன் வைக்கும்படி அமைத்தேன். அவரவரின் கொள்கைகளைப் பகிர்ந்தார்கள். உதாரணத்திற்குப் பந்துகளுக்குப் பொருட்கள் வழங்குவது அவர்களது கொள்கை, சந்தோஷத்தைத் தருவது.
ஸெஷன்கள் வேகமடைய, தம்பதியரும் மற்றவரும் நினைவூட்டலால் இதுவரை சேமித்த உறவுகளின் பெருமதிப்பை உணர்ந்து, பந்துக்களைச் சந்திப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து செய்யத் துண்டியது.
குழுவில், ப்ருத்வி- பவித்ரா போன்றவர் இந்த உறவுகளின் சேமிப்பு தம்மை நன்மை செய்யத் தூண்டுகிறது என்றார்கள். மாதவ்-மதுலிகா உறவு சேமிப்பின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அதன் மதிப்பு, சந்தோஷம் இருமடங்காகிறது என்றார்கள்! பலரும் இதை ஆமோதித்தார்கள்.
பண்டிகையைப் பல வண்ணங்களில் கொண்டாடுவதைப் பற்றிப் பகிர்ந்தார்கள். சென்ற வருடத்தின் பேரின்பங்களைப் பற்றிப் பேசினார்கள்! ஒருசிலர், அனாதை விடுதியில் வசித்துவரும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடியதை வர்ணித்தது மெய்சிலிர்க்கச் செய்தது!
நினைவூட்டல் செய்தார்கள். விடுதி குழந்தைகள், “நீங்கள் தந்ததால் தீபாவளியின் ஒலி ஒளி கூடி விட்டது! வெகு துரத்தில் வானத்தில் வண்ணப் பட்டாசுகள் இரட்டைப்படைச் சந்தோஷத்தைத் தந்தது!” எனப் பகிர்ந்தது தம்பதியரின் மனவிளக்கை ஏற்றியது!
தம்பதியரின் அணுகுமுறை குழந்தைகளை ஈர்த்தது! அவர்கள் தம் பங்கிற்குப் பள்ளிக்குச் செல்லும் வழியில் வாழும் எளிமையான குழந்தைகளுக்குப் பொருட்களைச் சேகரித்துக் கொடுத்தார்கள். குழந்தைகளின் இந்த தாராள உள்ளத்தைப் பற்றிக் கேட்டதும் குழுவினர் தங்களிடம் சுயநலக் குவியல் இருப்பதை ஒப்புக்கொண்டார்கள். சரிசெய்ய வேண்டும் என்றார்கள்!
இதைப்பற்றி அலசி ஆராய்ந்து உரையாடியதும் சங்கிலித்தொடர் போல் பெருகியது!
எளிமையாக முழு மனதுடன் சிறு சிறு செயலாகச் செய்யத் தொடங்கினார்கள். இதை வரப்பிரசாதமாகத் தம்பதிகள் எண்ணினார்கள்!
உள்ளுணர்வுகள் நேர்மறையாக அமைய மூளையில் நல் ஞாபகங்கள் ஏற்பட்டது; மனநிலை நன்றாகியது!
விடுதி நடத்துபவரும், “எங்கள் கருத்திலிருந்த இருட்டை எடுத்து விட்டீர்கள். குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் என எண்ணினோமே தவிர அவர்களும் சந்தோஷமாகக் கொடுப்பார்கள் என்பதை இப்போது உணர்கிறோம்” என்றார். உள்ளம் நிறைந்த தருணம்!
தெளிவானது, பிள்ளைகளுடனும் மற்றவர்களுடனும் பொருட்களைப் பகிர்ந்துகொள்வதில், பண்டிகைக் கொண்டாடுவதில் அலாதி இன்பம் ஏற்படும் என. சந்தோஷத்தை உருவாக்குவது நம் கையில் உள்ளதை அனுபவித்தார்கள்! அவர்களின் பிள்ளைகளும் குடும்பத்துடன் பங்கேற்க ஆரம்பித்தது உற்சாகத்தைக் கூட்டியது!
அடைந்த மகிழ்வால் சிறப்பாகச் செயல்பட்டார்கள்.
தீபாவளி பண்டிகையைப் கொண்டாடப் பல சிந்தனையில் ஒன்றுதான் தம் குடியிருப்புகளில் இருக்கும் ஊழியர்களுக்குத் தினசரி தேநீர் வழங்குவது!
சிலர் அக்கம்பக்கத்தில் உள்ள வசதியற்றவர்களுக்குத் தீபாவளியைச் சார்ந்த பொருட்களை வழங்க முன்வந்தார்கள். நான்கு தம்பதிகளும் ஏதோவொரு இல்லத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த இல்லத்தினருடன் சேர்ந்து பலகாரங்கள் செய்ய முடிவானது.
இதையெல்லாம் பற்றிக் கேள்விப்பட்டபோது அவர்களின் சொந்தம், நண்பர்களில் பலரும் செய்ய விரும்பி முன் வந்தார்கள். சந்தோஷம் பெருகியது!
போகும் இடமெல்லாம் குதூகலத்தைக் காணுவது தீபாவளியின் சிறப்பே! எல்லா வயதினரின் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கடுகளவும் சலிப்பற்ற பங்களிப்பால், பல வாரங்களுக்கு முன்பே பண்டிகைக் கொண்டாட்டம் ஆரம்பித்தது.
ஒவ்வொரு தம்பதியரும் ஏதோ ஒரு இடத்திற்கு பந்துகளுடன் போவதற்குக் காலக்கோடு தயாரித்தார்கள். பிள்ளைகள் விடுமுறை நாளான சனி- ஞாயிறு தினங்களைத் தேர்வு செய்தார்கள். வாழ்க்கையில் அர்த்தம் ஆர்வம் பெருக, புத்துணர்ச்சி மலர்ந்தது!
இதற்கு முன்பு தீபாவளி நாளில் ஜீவன்-ஜானகியின் மகன் மற்றும் மருமகள், பேரன் அரைமணி நேரத்திற்கு வருவார்கள். பெற்றோர் இதற்காகக் காத்திருந்ததோ பல நாட்களுக்கு! ப்ருத்வி-பவித்ரா, ஒவ்வொரு வருடமும் ஒரு பிள்ளையின் வீட்டிற்குப் போவார்கள். இவர்களுக்கு அதிகாலை குளியல், புத்தாடை அணிவது, பூஜை, பரோபகாரம் முக்கியம். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகளால் இப்படிப் போவதை நிறுத்தி விட்டிருந்தார்கள். மாதவ்-மதுலிகா, ரமா-ஆனந்த்தின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்ததால் என்றைக்கும் தீபாவளிக்கு வருவது இல்லை. இதனால் இதுவரை தீபாவளி மனவலி தந்தது என்றார்கள் ரமா-ஆனந்த்.
இப்போது மாறியது!
வாழ்க்கைத் தரம், திருப்தியில் செஷன் தொடங்கி, நினைவூட்டல் பகிர்ந்ததும் பாதைகளை மாற்றி அமைத்தார்கள்.
இதுவரை பிள்ளைகளை மையமாக வைத்தே செய்து வந்திருந்தார்கள். பல வருடங்களுக்குப் பிறகு தமக்காக என்று தாம் இஷ்டப்பட்டதைச் செய்வதில் சிறிய சஞ்சலம் எழுந்தது.
இதன் மூலகாரணத்தை ஆராய வைத்தேன். தமக்கான விருப்பத்தேர்வைச் செய்கிறோம், பிள்ளைகளிலிருந்து மாறுபட்ட வாழ்க்கைப்பாதை அமைத்துக் கொள்கிறோம், இது தவறல்ல இயற்கை எனப் புரிந்தது. குற்ற உணர்வைச் சுமக்கவில்லை.
எல்லோரும் ஒன்றிணைந்து தீபாவளி மருந்து செய்தது நேரம் போவது தெரியாமல் ஒரு உல்லாசமான சந்தர்ப்பத்தைத் தீபாவளி அளித்தது! பந்தத்தை மேம்படுத்தியது! அறியாத திறன்கள் தென்பட்டது. ஒன்றுகூடியது சுவையைக் கூட்டியது!
செய்ததைத் தாராளமாக அவரவர் அக்கம் பக்கத்தினர், உதவியாளர்கள் பணிசெய்யும் அரசாங்க ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். தீபாவளியின் யுக்தியே மற்றவர்களைப் பற்றிச் சிந்தித்துச் செய்ய வைப்பதுதானே! பகிர்ந்து கொள்ளும் ஆனந்தம் இனிதே!
நான்கு தம்பதிகளிடம் வேறொரு ஒற்றுமை இருந்தது. அரிதான ஆனால் பொருத்தமான ஆடைகளை வீட்டில் உதவும் வேலை ஆட்களுக்கு அளித்து, கூடவே சம்பள போனஸ் தருவதையும் தவறாமல் செய்தார்கள். இப்போதெல்லாம் கேட்டுப் பெறுவதென்ற ட்ரெண்ட் வந்ததில் இவர்களின் வழக்கம் முன்பெல்லாம் செய்துவருவது போலத் தொடர்ந்தது! பெற்றவர்களின் புன்முறுவலில் கிடைக்கும் சந்தோஷமே இவர்களின் தீபாவளி இனாம் என்பார்கள்!
செடி, கொடி, மரம், விலங்குகளைக் கருதி அளவோடு பட்டாசு வெடிக்கப் பரிந்துரைத்தார்கள் தம்பதியர். பட்டாசு சத்தம் நம் இன்ப நிலையைச் சொல்லும். பட்டாசின் ஒலி போல் நம்முடைய உற்சாகமும், சிரிப்பும், பண்பும், அன்பும்!
தீபாவளியை நன்றி (gratitude) தெரிவிக்கும் வாய்ப்பாக வைத்துக்கொண்டார்கள். இன்பத்தை அள்ளிக் கொடுத்த உள்ளங்களை வாழ்த்தவே. அது சிறியதோ, பெரியதோ, சந்தோஷத்தைத் தீபாவளியில் தெரிவிப்பதனால் ஒலியும் ஒளியும்!
மன நிறைவால் குழுவினர் சந்தோஷமானார்கள். உடலும் மனமும் நலம் பெற்றன!
வர்க்ஷாப்பில் கலந்துகொண்டபின் வாழ்முறையை இப்படி மாற்றிக்கொண்ட இருபத்தி ஐந்து நபர்களிடம் ஒன்றைக் கண்டேன். முதற் கட்டத்தில் தற்பெருமை ததும்பி வழிந்தது. போகப் போகக் கொடுத்ததை, செய்வதை, செய்ததைக் கூட்டல் கழித்தல் செய்வதை விட்டுவிட்டார்கள். இதைச் செய்வதால் அது நடக்கும், அதைக் கொடுத்தால் இந்த நலம் பெறுவோம் என்பதற்கு அப்பால். வாழ்க்கைத் தரம் மேம்பட்டு நிலவியது! வர்க்ஷாப், செஷனின் குறிக்கோள் அதுதானே.
பிரசித்தமான நம் கலாச்சாரத்தில், நல்லெண்ணங்களுடன் நன்மைகள் செய்ய, நமது இந்தத் தீபாவளி!
மகிழ்ச்சி பெறுவது மிக எளிதே!
நன்றியுள்ளம் நிறைந்திருந்தால் போதுமானது!!
சந்தர்ப்ப ரூபத்தில்
அள்ளி அளிப்பதே
தீப ஒலி ஒளி தீபாவளி!
**********************************


