இசையின் சுரங்களைச் சுமந்து வரும் அலையின் நளினத்தோடு, கண்ணனைச் சுமந்துகொண்டு வந்தது கபிலவண்ணக் குதிரை. அதற்கு இணையாக அதன் இடப்புறம்   வெள்ளை வண்ணக் குதிரையில் பார்த்தன்.  

இரவு வர இன்னும் பொழுது இருந்தது. ஆனால், சூரியன் மேகங்களுக்குள் மறைந்திருந்ததால் இரவு வந்துவிட்டதோ என்ற மயக்கம் எழுந்தது. பார்த்தன் சூரியனின் சிறு துளியாவது தெரிகிறதா என்று வானத்தை அண்ணாந்து பார்த்தான்

இங்கும் எங்கும் இன்பம், ஆனந்தம், இசை என்பது போல இருந்தான் கண்ணன். அவனது நீண்ட, அகன்ற, பெரிய விழிகளின் கருமணிகள் மேல் இமைக்குள் பாதி மறைந்திருக்க,  ஒரு மழலை சிறு தூக்கத்தில் ஆழ்வது போலக் காட்சியளித்தான்.  

எங்கோ வெகு தொலைவில் ஓடும் தனது மனத்தோடு போய்க்கொண்டு இருந்த பார்த்தன்,   சட்டென்று திரும்பி  தனக்குள் ஆழ்ந்திருந்த கண்ணனைப் பார்த்தான். அவன் தன்னைப் பார்க்கவில்லை என்ற நிம்மதியில், தன் தலையைச் சற்று  உதறி மீண்டும் அவனைப் பார்த்தான். கண்ணன் மழலையோ?குமரியோ? என்று மயங்க செய்தான்.

அந்தப் பெரிய விழிகளும், சிறு செவ்விதழ் குமிண் சிரிப்பும் தான் அவனை மழலையோ?குமரியோ? என்று மயங்கச்  செய்கிறதோ?

அதைப் புரிந்துகொண்டவன் போல கண்ணன் ஓசையெழாமல் இதழ் மட்டும் விரியப் புன்னகைத்தான். பார்த்தன் நெஞ்சத்தில் கல்வடியும் பூக்கள் மோதி விழும் சுகத்தையும் அவஸ்தையையும் உணர்ந்தான்.  

ஆல  அரச மகிழ நாவல் மரங்கள்  நிறைந்த அந்த வண்டிப் பாதையின் இறக்கத்தில் கிடந்த தாமரைப் பொய்கையிலிருந்து, மலரெல்லாம் தாவிவந்து அவன் தலையில் விழுவது போன்ற பரவசம்.  

“எதையோ கேட்க நினைக்கிறாய், கேள் பார்த்தா!”

“கேட்க என்னிடம் எதுவும் கேள்விகள் இல்லை கண்ணா!”

“கேள்விகள் எதுவும் இல்லாதவன் மனம் ஏன் எங்கெங்கோ அலைகிறது?”

பார்த்தன் அதிர்ந்து, தன்னிச்சையாய்க் குதிரையின் கடிவாளத்தை இழுக்க, அவனது குதிரை பின்னங்கால்களில் நின்று முன்னங்கால்களைத் தூக்கிக் காற்றில் துழாவியது.

“கேட்க என்னிடம் கேள்வி எதுவும் இல்லை கண்ணா” என்று சொல்லிவிட்டானே தவிர, அவன் மனம் கேள்விகளைச் சலிக்கும் சல்லடையாக அசைந்துகொண்டே இருக்கிறது. சலிக்கப்படும் கேள்விகளின் குவியலால் மனம் கனக்கிறது. குருக்ஷேத்திரப் போரில் கர்ணனைக் கொன்ற விதமும்,   அவன் தன் அண்ணன் என்று தெரிந்தபின் எழுந்த பாசப் போராட்டமும் பார்த்தனைக் கேள்விகளெனும் முள் சாட்டையால் தோலுரித்து, உப்பும் மிளகாய்ப் பொடியும் தேய்க்கின்றன.  

குருக்ஷேத்திரப் பெரும்  போரில், தேர்ச்சக்கரம் பூமியில் மாட்டிக்கொண்டபோது, மாவீரர் சல்லியர், மகாரதர் கர்ணனை  நிர்க்கதியாய் விட்டுச் சென்றது நியாயமா? அப்போது அவன் மீது நான் அம்பு தொடுத்தது நீதியா? கொல்வது அல்லது கொல்லப்படுவது—அதுதானே போரின் தர்மம். என் வெற்றியை நியாயப்படுத்திவிட்டேன். ஆனால், மாதுளர் சல்லியரின் செய்கையை எப்படி நியாயப்படுத்துவது?’—பார்த்தனின் மனம் மீண்டும் குருக்ஷேத்திரத்திற்கே சென்றுவிட்டது.

அங்கு எதுவுமே நடவாதது போல, ஒரு சிறு இசை தவழும்  நளினத்தோடு கண்ணனின் குதிரை போய்க்கொண்டிருந்தது. கண்ணன்   “சரி, வா” என்றான்.

பார்த்தனின் குதிரை  சட்டென்று உதறிப் பூமியை மிதித்து; பாய்ந்து கண்ணனின் குதிரைக்கு இணையாகச் சென்று இயல்பாக நடந்தது.

“என்னை இம்சிக்காதே கண்ணா!” என்று பார்த்தன் அழுபவன் போல வார்த்தைக்   குழைய, முகத்தை அவனுக்குக் காட்டாமல் திருப்பிக் கொண்டான்.

அவன் தோளும் முதுகும் குலுங்கின. கண்ணனோ தனக்குள் ஒரு கவிதை மலர்வது போல, அதன் சுவையில்  திளைப்பவனென வானத்தைப் நோக்கியபடியேச் சென்றான் .

இந்த மாலை நேரப் பயணத்திற்குக் கண்ணனை அழைத்து வந்ததே பார்த்தன்தான்.  அவனுடன் தனியாக இருக்கும்போதுதான் தனது மனதை குடையும் கேள்விகளுக்குப் பெரும்பொருள் அறிய முடியும் என்று நினைத்து வந்தான். ஆனால் ஏதோ ஒரு ரோஷத்தில் தனக்குள் எந்தக் கேள்வியும் இல்லை என்று பொய் சொல்லிவிட்டான். அது பொய்யில்லை, நான்  என்ற அகங்காரம்; என்னாலும் முடியும் என்ற மமதை.

கண்ணன் தன்னிடம் பேச  வேண்டும் என்று பார்த்தன் ஏங்கினான்.  

கண்ணன் தன்னில் ஆழ்ந்து,  தன்னுடைய ஆனந்தத்தைக்  கொண்டாடியபடியே  சென்று கொண்டு  இருந்தான். பார்த்தனுக்கு எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று புரியவில்லை.

கண்ணனின் மௌனம் பார்த்தனின்  தவிப்பைக் கூட்டி நெஞ்சை பிளந்தது. நண்பனானாலும் அவன் குரு.

பார்த்தன் தனது குதிரையைச் சற்று மெதுவாக நடத்தி, கண்ணனுக்குப் பின்னால் தொடர்ந்தான். மனம் தானாகவே நண்பன் என்ற வட்டத்தில் இருந்து தாவிச் சீடன் என்ற கட்டத்தில் நுழைந்து, தனது அகந்தையின் உயரத்தைக் கண்டு தவித்துத் தலைகவிழ்ந்து சிறுத்தது. அகந்தை சிறுக்கும்போது நெஞ்சத்தில் உண்டாகும் கனமின்மையும் வெற்றிடமும் பூந்தளிர் போலத் தன்னை மகிழ்வுகொள்ளச் செய்வதை உணர்ந்து பரவசப்பட்டான். உடம்பிலும் உள்ளத்திலும் கண்ணுக்குள்ளும் எரிந்த அனல் அவிழ்ந்து, உள்ளும் புறமும் தென்றலின் சுகம்.

அந்தப் பரவசம் தந்த மகிழ்ச்சியில் தனது குதிரையைக் கண்ணனுக்கு நிகராகச் செலுத்தியவன், தாவி கண்ணனை அணைத்து,  அவனது இடது தோளில் முத்தமிட்டான். பார்த்தனின் மீசையும் தாடியும் ஏற்படுத்திய கூச்சத்தில், கண்ணன் சிரிப்புடன் சற்று நெளிந்து பார்த்தனைத் தள்ளிவிட்டான். பார்த்தனின் இதழ்களில் வெண்ணெயின் வாசம்!

“வெண்ணெயால் செய்த உடம்பா?” என்று பார்த்தன் சிரித்தான்.

“பால்காரியின் மகனல்லவா?. ஆனால் உனது முத்தத்தில் ரத்தத்தின் வாசம்” என்று சிரித்தபடியே கண்ணன் குதிரையிலிருந்து கீழே குதித்தான். பார்த்தன் நடுங்கிவிட்டான்.

“இரத்தத்தைச் சுவைக்காத சிங்கம் சிங்கமே இல்லை. நீ ராஜசிங்கம்!” என்று பார்த்தனின் முதுகில் தட்டி மெலிதாகப் புன்னகைத்த கண்ணன்.”ஆனால் என் இரத்தம் கோபியர்களின் வெண்ணெயில் கரைந்துவிட்டது. இந்த பாக்கியம் ராமனுக்குக்கூடக் கிடைக்கவில்லை. பார்த்தா, அரசர்கள் கலையிலும் கவிதையிலும் தங்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றான்.

தோளில் புரண்ட பட்டு அங்கவஸ்திரத்தைச் சரிசெய்துகொண்டு, குழல் கற்றைகள் காற்றில் பறக்க, அருகில் நின்ற பெரிய அரசமரத்தடியை நோக்கிச் சென்றான். அவன் முடியில் அழகு செய்த ஒற்றை மயிற்பீலி, தன் ஒற்றை விழியால் அகிலத்தைப் பரவசமாய்ப் பார்ப்பது போலச் சிரித்தது.

பார்த்தன் ஓடிப்போய், கண்ணன் உட்காரும் இடத்தில் கிடந்த அரசஞ் சருகுகளை தூய்மை செய்தான். ஆவாரம்பூங் கொத்துகளைச் சேகரித்துக் கண்ணன் அமரச் சிறு மெத்தை இட்டான்.  அங்கு விரவிக்கிடந்த பொன்மணலும் வெள்ளிக் குறுமணலும்  மின்னின.

கண்ணன் கால்களை நீட்டி, தூக்கத்திலிருந்து எழுபவன் போல அமர்ந்திருந்தான். அவன் பாதத்தை வருடுவது போலப் பார்த்தன் கண்ணன் முன்   அமர்ந்தான்.  

தூரத்தில் மேய்ந்த மான்கள் கண்ணனின் வாசத்தைப் பிடித்துவிட்டது போலத் துள்ளி வந்து அருகில் மேய்ந்தன. ஆங்காங்கே மரத்தில் அமர்ந்திருந்த மயில்களும் கிளிகளும் பறந்துவந்து, கண்ணனின் தலைக்குமேல் உள்ள கிளைகளில் அமர்ந்தன. மூதன்னையின் குழற்கற்றைப் போல அருகில் நின்ற  ஆலமரத்தின் விழுதுகள் அசைந்தன.

பார்த்தனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. உள்ளம்  விரிந்து வெட்டவெளியாக மாறிவிட்டிருந்தது. யுகங்களைக் கடந்தும் அப்படியே அமர்ந்திருந்தால் போதும் என்ற ஏக்கம் ஏற்பட்டது. கண்ணனின் பாதங்களை வருடியபடியே, தான் இல்லாமல் ஆகிப் பார்த்தன் அங்கு அமர்ந்திருந்தான்.    

“சொல் பார்த்தா… என்ன என்னிடம் கேட்க வேண்டும்?” கண்ணன் பார்த்தனைப் பார்க்காமல், அரசம் சருகு ஒன்றால் பூமணலில் விழிகள் இரண்டை வரைந்தான். நீளமான விழிகள்… அதில் தான் எத்தனை சோகம்! ஆனாலும் அதில் காணாததைக் கண்ட பரவசம்.

“நீ ராதையை மறப்பதே இல்லையா கண்ணா?” பார்த்தனின் கண்கள் நீர்கொண்டன.

“ராதையை மறந்தால் நான் நானில்லையே பார்த்தா?”

‘நானில்லையே’ என்றபோது சரியாக அந்த இமைக்கணத்தில் கண்ணனின் இரு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் அவன் நெஞ்சில் விழுந்தன. கண்ணன் தலையை  உதறிச் சிரித்தான். அந்த கணத்தில் இவன் யாரோ? அவன் இல்லை; இந்த பூமிக்கே சொந்தமில்லை என்பது போலத் தோன்றினான். பார்த்தன் கண்களை மூடித் திறந்தான். பார்த்தன் முன் ‘நான் நானே’ என்ற ஞானி மட்டுமே இருந்தான். ‘தடாகத்தில் மலர்ந்து இருந்தாலும், தான்  தடாகத்திற்கு உரியது அல்ல’ என்று வான் நோக்கி மலர்ந்திருக்கும் செங்கமலம் போல் மலர்ந்திருந்தான்.

குழந்தையா? காதலனா? அரசனா? ஞானியா? யார் நீ? பார்த்தன் தவித்தான்.

“மனதோடு உழலாதே! அறிவோடு எழுந்து வா பார்த்தா!” என்று கண்ணன் தன் கட்டைவிரலால் பார்த்தனின் பாதத்தை அழுத்தினான். விழித்துக்கொண்டவன் போலப் பார்த்தனின் கரமலர்  மொட்டிட்டன.  

“எத்தனை பெரிய யுத்தத்தைப் பார்த்துவிட்டேன்… உலகம் போற்றும் கீதையைக் கேட்டேன்… ஆனாலும் இந்த மனம் கேள்விகளால் நிறைந்துகொண்டே இருக்கிறதே கண்ணா! ஏன்?”

“மனதின் தீனி எண்ணம். மனம் தனக்கான தீனியைத் தேடிக்கொண்டே இருக்கிறது. தீனிப் போடுவதை நிறுத்து.”

“கிருஷ்ணை புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல் இருக்கிறாள், எப்படி?”

“அவள் அன்னை. அதனால் அவள் எப்போதும் குழந்தைதான். குழந்தைகள்தான் வளர்வார்கள். அன்னைகள்  குழந்தையாகிக் கொண்டே இருப்பார்கள்.”

பார்த்தன் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பொலியில் மரக்கிளையில் அமர்ந்திருந்த கிளிகள் பறந்து, கீச் கீச் என்று சத்தமிட்டு மீண்டும் கிளையில் வந்து அமர்ந்தன. தூரத்தில் மேய்ந்த குதிரைகள் கழுத்தைத் திருப்பி இருவரையும் பார்த்துவிட்டு மீண்டும் மேயத் தொடங்கின.

மூத்தவர் எப்படி சமநிலையில் இருக்கிறார்?  

“அவர் வழித்துக்கொண்டு விட்டார்.”

“புரியவில்லை…”

“நீ உலகத்தை மின்னலில் பார்க்கிறாய், அவர் சூரியனில் பார்க்கிறார்”

அர்ச்சுனன் அமைதியாகத் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். அவன் மூக்கு சிவந்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டான்

“செல்வோமா?” கண்ணன் தலையைத் திருப்பி குதிரைகளைப் பார்த்தார். புல் மேய்ந்து கொண்டிருந்த குதிரைகள் திரும்பி கண்ணனைப் பார்த்து தலை ஆட்டின.

பார்த்தன் மௌனமாக இருந்தான். கண்ணன்  ஒரு ராகத்தை தனக்குத்தானே ஆலாபனை செய்தார்.

“கண்ணா! குருக்ஷேத்திரப் போரில் நீ எனக்குத் தேர் ஓட்டாமல் கர்ணனுக்குத் தேர் ஓட்டியிருந்தால் கர்ணன் வாழ்ந்திருப்பார் அல்லவா?”

“எய்த அம்புகள் இலக்கைத் தொடாமல் ஓய்வதே இல்லை. கர்ணனைத் தொடாமல் உன் உரையாடலும்  முற்றுப்பெறுவதில்லை. இதற்காகத்தானே இத்தனை ஏன்?”

ஆம் என்பதுபோல பார்த்தன் கண்ணனைப் பார்த்தான்.

“நான் உனக்குத் தேர் ஓட்டாமல், உனது மாமா சல்லியர் தேர் ஓட்டியிருந்தாலும் நீ வெற்றிபெற்றிருப்பாய். நான் தேர் ஓட்டியிருந்தாலும் கர்ணன் இறந்திருப்பான்,” கண்ணன் தன் தொடையில் ஏறிய சித்தெறும்பை நோகாமல் எடுத்து மணலில் விட்டபடி சொன்னார்.

“ஏன்?” ஒரு பாறை வெடிப்பதுபோலப் பார்த்தன் உள்ளம் அதிர்ந்தான்.

“கர்ணனிடம் உனக்குப் பிடித்த சிறப்பு என்ன?” மணலில் நடந்து போகும் எறும்பின் கால் தடங்களை பார்த்தபடி கண்ணன் கேட்டான்.

“மாவீரன். அதைவிட அவன் வெல்ல முடியாத வள்ளல். ஒரு தங்க மலையை என்னிடம்  காட்டி, இன்று பொழுது முடிவதற்குள் தானமாகக் கொடுத்து முடி என்று சொன்னாய். நானும் எல்லோருக்கும் வெட்டி வெட்டிக் கொடுத்தேன். ஆனால் என்னால் சிறிதளவுக் கூட வெட்டிக் கொடுத்து முடிக்க முடியவில்லை. எத்தனையோ பேர் என்னிடம் பெற்றுக்கொண்டார்கள், ஆனாலும் யாரும் என்னை வள்ளல் என்று சொல்லவில்லை. பொழுது முடிய சில மணித்துளிகளே இருந்தபோது அங்கு வந்த  கர்ணனைக் கொடுக்கச் சொன்னாய். அந்தக்கணமே அவன் முழு மலையையும் ஒரே ஒருவருக்கு     கொடுத்துவிட்டான்.  ஒரே ஒருவன்தான் பெற்றுக்கொண்டான், ஆனால் உலகமே அவனைக் கொடைவள்ளல் என்று போற்றுகிறது.  நான் வள்ளலாக முயற்சி செய்தேன், ஆனால் அவன் வள்ளலாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.” அர்ச்சுனனுக்கு நா தழுதழுத்தது.

பூவின் இதழ் விரிவது போல கண்ணன் புன்னகைத்தார். ‘’வள்ளல் என்பவன் யார்?”   

“அளவு பார்க்காமல் கொடுப்பவன்தான்.”

“யார் கண்களில் வறியவன் தன்னை யாசிப்பவனாக உணரவில்லையோ, அந்தக் கண்களைப் பெற்றவனே வள்ளல்.”

“உண்மைதான், என் கண்களில் வறியவன் தெரிகிறான்.” பார்த்தனிடம் நீள்மூச்சொன்று எழுந்து அவன் நெஞ்சத்தை விம்மச்செய்தது

“அவன் கண்களில் அவனே தெரிகிறான்.”. கண்ணன் பார்வை விண்ணோக்கி இருந்தது. மேகங்கள் விலகிட மாலை சூரியன் வெளிப்பட்டான். கூடுகளை நோக்கிச் செல்லும் பறவைக் கூட்டங்களின் அணிவகுப்பில் ஓசையில்லை, நிறைவின் ஆனந்தம். வான மங்கை அணிந்த மாலை போல அவைகள் காற்றில் அசைந்தன. தடாகத்தில் மலர்ந்திருந்த கமலங்களெல்லாம் காற்றில் அசைந்து கரை நோக்கிச் சாயும்போது, கண்ணனின் பாதம் கண்டன,  அவைகளின் முகங்களில்  நாணப் புன்னகை.

“மாவீரன், கொடைவள்ளல் எனப் பெரும்புகழ் பெற்ற கர்ணனுக்கு நீயே தேரோட்டியாக இருந்தாலும் அவன் இறப்பான் என்று ஏன் சொல்கிறாய்?” பார்த்தன் கண்ணனின் விழிகளை நோக்கி கனிந்திருந்தான்.

“மனிதன் செயல்களால்தான் வெற்றி பெறுகிறான். செயல்களோ எண்ண விதைகளில் இருந்து முளைக்கிறது. எண்ணமோ குணத்தின் கனியில் சூலென  நிறைந்துள்ளது. குருஷேத்திரப்போரில்  நீ என்னை தேரோட்டியாக வேண்டினாய்; கர்ணனோ மாவீரன் சல்லியரைத் தேரோட்டியாக வேண்டினான். நீயும் கர்ணனும் வெற்றிபெறுவதற்காகத்தான் எங்கள் துணையைத்  தேடினீர்கள்.  நீ என்னை உனது குருவாக ஏற்றாய்; அது உன் எண்ணம். அவனோ அவரை ஏவலாளனாக நினைத்தான்; அது அவன் எண்ணம். உன் எண்ணத்தில் அகங்காரம் அழிந்துவிட்டது; அவன் எண்ணத்திலோ அகங்காரம் விழித்துக்கொண்டது. நான் அவனுக்குத் தேர் ஓட்டியிருந்தாலும் அவன் என் சொற்களைக் கேட்டு, நாக அஸ்திரத்தை உன் கழுத்துக்குக் குறிவைக்காமல் உன் நெஞ்சுக்குக் குறிவைத்திருப்பானா, சொல்?” கண்ணன் தான் அமர்ந்திருந்த ஆவாரம்பூ மெத்தையிலிருந்து ஓர் ஆவாரம்பூவைக் கிள்ளி எடுத்து, அதைப் பார்த்தனின் புருவ மையத்தை நோக்கிச் சுண்டினார். பார்த்தன் சிலிர்த்தான்.

“மனிதனுக்கு மூவர் அருள் வேண்டும். தாய், தெய்வம், துணை. தாய், தெய்வத்தை தவிர பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமும் நம் துணைதான். துணையைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும்; அத்துணையை மதிப்பதில் அதிக கவனம் வேண்டும். மதிக்கப்படும் துணையே வாழ்க்கைக்குப் பலத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும்” பார்த்தன் கண்ணன் பாதங்களையே பார்த்தபடி அமைதியாக இருந்தான்.  அலையில்லா கடலில் அலை ஒன்று எழுந்தததுபோல பார்த்தன் அசைந்தான். அவன் நெஞ்சுக்குள் மலர் ஒன்று மலர்ந்த பரவசம். கண்ணனின் பாதங்களை நீவுவதற்காகத் தொட்டான்.  

“நம் அகங்காரம் வலிமையாக இருக்கும்போது, நம் குறைகளைக் களைவதை விட்டுவிட்டுப் பிறரைக் குற்றம் சாட்டுவதில் மகிழ்கிறோம். நாம் குறைபாடு உடையவர்கள் என்பதற்கு இதுவே சாட்சி!சூரியனின் ஒளியை வாங்கிப் மிளிரும் போது எந்தக் கல்லும் வைரமே! சூரிய ஒளியைப் பிரதிபலிக்காத போது வைரமும் வெறும் கல்லே” என்றவாறு கண்ணன் எழுந்து தன் ஆடைகளைச் சரிசெய்து நிமிர்ந்து நின்றார். அவரது சிரசுக்குப் பின்னால் மாலை சூரியன். உச்சித்திலகம் சூடிய பிரபஞ்சத்தாய் அவர் சென்னியில் முத்தமிட குனிந்ததுபோல் புன்னகைத்தாள்.

அவள் தீண்டலில் அவ்விடம்  தங்கமாகியது;  எல்லாமே தங்கமாக மின்னின. அப்பொழுது, தடாக நீருக்குள் இருந்து மீன் ஒன்று துள்ளி எழுந்தது. அதுவும்  தங்கமீன்!