பங்கயச்செல்வி மங்கையர்க்கரசி – புவனா சந்திரசேகரன்
நாயன்மார்களுள் மூவரே பெண்கள் – அவர்களுள் மங்கையர்க்கரசியார் இந்த நூலின் ஆசிரியரைப் போலவே என்னையும் கவர்ந்தவர். அவர் அரசியார், அழகி, அறிஞர், சிவனடியார், போர்க்கலைகளில் பயிற்சி பெற்றவர். இவரைப்பற்றி பெரியபுராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார். மூன்றே பாடல்கள் – இவர் யார், இவர் செய்த செயற்கரிய செயல், சைவத்தொண்டு இவை பற்றியனவே!
இவர்மீது கோவை கவியரசு நடேச கவுண்டர் அருமையானதொரு பிள்ளைத்தமிழை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப அது பெண்குழந்தையின் பிள்ளைப் பருவத்தைப் பற்றிப் புகழ்ந்து பாடப்பட்டிருக்கும். இது அரசியாரின் சிவத்தொண்டு முதலானவற்றை அருமையாக விரிக்கின்ற நூல் ஆயினும் போர்க்கலைப் பயிற்சி, அரசியல் உத்திகள் ஆகியன இந்நூலிலும் பாடப்படவில்லை! ஏன், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும் அவள் அரசியேயாயினும், பல அரசர்களைப் போரில் வென்று வாகை சூடியவளாயினும், அவளுடைய போர்த்திறமையை விவரிக்கும் பாடல்களைக் குமரகுபரர் இயற்றவில்லை. இது ஏன் எனப் புரிபடவில்லை.
இத்தருணத்தில்தான் புவனா சந்திரசேகரன் அவர்களின் சரித்திர நாவல்களை ரசித்துப் படிக்கத் தொடங்கினேன். அவர்களுடைய எழுத்து மூலம்தான் அவர் எனக்கு நண்பரானவர். சரித்திரக் கதைகள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். தென்னிந்தியச் சரித்திரத்தையே நான் சரித்திரப் புதினங்கள் மூலமே அறிந்துகொண்டேன். கல்கி, நா.பா., ஜெகசிற்பியன், ஸ்ரீவேணுகோபாலன், அகிலன், சமீபத்தில் பாலகுமாரன் (அவருடைய கங்கை கொண்ட சோழன் மிக மிக அருமை!) ஆகியோருடைய எழுத்துக்கள் என்னைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டியவை. ஆகவே புவனாவின் எழுத்தைப் படித்ததும் பிரமித்தேன். பின் இப்போது ஒவ்வொன்றாகப் படிக்கிறேன். இவருடைய ‘பங்கயச்செல்வி மங்கையர்க்கரசி’ என்பது இரண்டாண்டுகளுக்கு முன்பே, 2024-ல் வெளிவந்த புதினம், என்னவோ எனக்கு இப்போதுதான் வாசிக்க சந்தர்ப்பம் வாய்த்தது. அருமையான எழுத்து, மங்கையர்க்கரசியாரின் வாழ்க்கையைக் கற்பனையில் கண்டு அணுஅணுவாக ரசித்து எழுதப்பட்டது என எண்ணுகிறேன்.
இதற்குமுன் இன்னொரு சமாச்சாரம் – சென்ற ஆண்டு சக்திவிகடனில் முழுக்க முழுக்க மங்கையர்க்கரசியாரைப் பற்றியதாகவே இருந்த ‘சிவமகுடம்’ எனும் தொடர் வெளிவந்தது. சுவையான தகவல்களுடன், அரசி மங்கையர்க்கரசியின் போர்க்கலையைப் பற்றிய விவரங்களுடனும், அவர் எடுக்கும் அரசியல் சம்பந்தமான முடிவுகள் பற்றியும் விவரமாக எழுதப்பட்டது.
ஆனால் இந்தப் புதினம் ‘பங்கயச்செல்வி மங்கையர்க்கரசி’ என்பது மிகவும் வித்தியாசமானது. மானி எனும் சோழ இளவரசி பருவப்பெண்ணாக நமக்கு அவளுடைய தோழிமார்களுடன் அறிமுகப் படுத்தப்படுகிறாள். இளம் பெண்கள் சோலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மாறுவேடத்தில் வந்த பாண்டியன் நெடுமாறன் ‘நெடியோன்’ எனும் பெயரில் அவளைச் சந்திக்கிறான். அவனை அவள் அறிந்துகொள்ளவில்லை.
பின்பு சோழதேசத்தின்மீது பாண்டியப் படையெடுப்பு நிகழ்கிறது. போர்க்கலையில் பயிற்சி பெற்றிருந்த இளவரசி மானியும் போர்க்கவசம் அணிந்து தந்தை மணிமுடிச் சோழருடன் போர்க்களம் செல்கிறாள். அவள் போர் செய்து பாண்டிய வீரர்களை வீழ்த்தும் காட்சிகள் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. தந்தை சோழமன்னன் மணிமுடிச் சோழன் மகளின் போர்த்திறமை கண்டு பெருமிதம் கொள்கிறான்.
ஒரு கட்டத்தில் இரு மன்னர்களுக்கும் நேருக்குநேர் நடக்கும் போரின்போதுதான் அருகே இருந்து அவள் காணும் பாண்டிய மன்னனே முன்பு சோலையில் தான் சந்தித்தவன், தன் உள்ளத்தை ஆட்டிவைக்கும் நெடியோன் என உணர்ந்து கொள்கிறாள். அவன் அப்போது மணிமுடிச் சோழ மன்னனிடம் தான் மானியை மணந்து கொள்ள விரும்புவதனைக் கூறி, அதற்காகவே தனது வீரத்தைக் காட்ட இப்போரை வாய்ப்பாக்கிக் கொண்டதாகக் கூறுகிறான்.
பின் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. சோழமன்னன் ‘பாண்டியன் சமண மதத்தில் தீவிரப் பற்றுக்கொண்டவன்; மானி சைவ நம்பிக்கையில் வளர்ந்து சிவனை வழிபடுபவள்’ எனக்கூறி மானியை எச்சரிக்கிறான். அவரவர் மதநம்பிக்கைகளை மதித்து நெடுமாறனும் மானியும் அன்புடன் இல்லறம் நடத்துகின்றனர். கருவுற்றிருக்கும் மானியை ஒரு விபத்திலிருந்து காப்பாற்ற முயல்கையில் அடிபட்டு, பாண்டியன் நெடுமாறனின் முதுகில் சிறு கூன் விழுகின்றது. அவன் ‘கூன் பாண்டியன்’ எனப்படுகிறான்.
சரித்திரக் கதைகளுக்கே உரிய சில, பல திடுக்கிடும் செய்திகளுடன் கதை நடை பயில்கிறது. அரசன் தன்னுடைய மகன் ரணதீரன் கோச்சடையனை அவன் சிறிது வளர்ந்ததும் கொற்கைக்கு அனுப்பி, போர்ப்பயிற்சியும், கல்வியும் அளிக்க முற்பட்டான். சமணர்கள் கொடுக்கும் தொல்லைகள் அளவுக்கு மீறிச் செல்கின்றன. சிவபக்தையான மானியும் அமைச்சர் குலச்சிறையாரும் வருத்தத்தில் ஆழ்ந்து என்ன செய்யலாம் என யோசிக்கின்றனர். அப்போது இளம்பருவத்தவரான திருஞானசம்பந்தரைப்பற்றி அறிந்துகொண்டு அவரை மதுரைக்கு வரவழைக்கின்றனர் அரசி மானியும் அமைச்சர் குலச்சிறையாரும். அவர் வந்ததும் சமணர்கள் அவரை எவ்வகையிலெல்லாம் அழிக்க முற்பட்டார்கள் என நாமெல்லாம் சிறிதாவது அறிவோம். ஆகவே அவற்றை விவரிக்காமல் மேலே செல்கிறேன்.
சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு வைக்கப்பட்ட தீ பையவேசென்று பாண்டியனைப் பற்றிக் கொண்டது. மன்னன் வெப்புநோய் தாங்காமல் தவிக்க, சமணர்களால் அவனை குணப்படுத்த இயலவில்லை. அப்போது அரசி மானி அரசனைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு சம்பந்தப்பெருமானை அழைத்து வருகிறாள். அவரும் அரசனின் உடலில் வலதுபக்கம் திருநீற்றினைப் பூச, அரசனின் வெப்புநோய் உடனடியாகக் குணமாகிறது. இடது பாகத்தை குணப்படுத்த முடியாமல் சமணர்கள் தவிக்க, அப்பாகத்திலும் திருநீறு பூசி சம்பந்தர் குணமாக்குகிறார். சமணர்கள்பால் சினமடைந்த மன்னன், தனது தவறுக்கு வருந்தி சைவத்தைத் தழுவுகிறான். பழையபடி பாண்டிய நாட்டிலும் மதுரையிலும் சைவம் தழைக்கிறது.
இந்தக் கதையினை மிக அழகாக மானியின் வாழ்க்கையுடன் பொருத்தி, வளர்த்துச் சுவையான புதினமாக வழங்கியுள்ளார் புவனா அவர்கள். என்னை வியக்க வைத்தது போர்க்களங்களின் சில வியூகங்களை (படை அமைப்புகளை) விளக்கியுள்ளமை, பழந்தமிழரின் திருமணச் சடங்குகள், சமண மதக் கொள்கைகளின் விளக்கங்கள், இன்னும் பல.
சில சரித்திர ஆசிரியர்கள் படை அமைப்புகளை விளக்குவார்கள். இந்நூலின் ஆசிரியையும் கழுகுபோலும் ஒரு வியூகத்தை விளக்குகிறார். இது கருட வியூகத்துடன் தொடர்புடையதா, அதுவேதானா என நான் அறியேன். ஆனாலும் விளக்கம் படிக்கச் சுவையாக உள்ளது. ‘கழுகு போன்ற வியூகம் வகுத்து நின்ற பாண்டியர்கள். தங்களுடைய சிறகுகள் போன்ற பகுதியில் இருந்த புரவிப்படை வீரர்களால், சோழர் படையைச் சூழ்ந்து மடக்கினர். கழுகின் உடற்பகுதியில் முகத்தில் இருந்த கூரிய அலகு போன்ற பகுதியில் நின்றான் நெடுமாறன். அவனுக்குப் பின்னால் கழுகின் உடல்கள் களிற்றுப்படையும், அதற்கும் பின்னால் தேர் மற்றும் காலாட்படை வீரர்களும் முன்னேறி வந்தனர். கழுகு வானில் பறந்துகொண்டே வட்டமிட்டு நோட்டம் விட்ட பின்னர் சடாரென்று கீழே இறங்கித் தன் இரையைக் கவ்வுவது போல, பாண்டியர்களின் படை, சோழர்களை எளிதில் முறியடித்து விடும் நிலையை நெருங்கியது.’ பின்னர் அரசர்கள் இருவரும் மட்டுமே வாட்போர் புரிகின்றனர்.
அடுத்து, திருமணச் சடங்குகளும் மண விருந்தும் பற்றிய வருணனை சுவாரசியமாக உள்ளது. ‘மணப்பந்தல் வாழை, கமுகு, தென்னம்பாளைகள், வண்ண மலர்களாலான தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. தூய மணல் பரப்பப் பட்டிருந்தது. பூரண பொற்குடத்தைத் தொட்டுத் தழுவிய தோரணங்கள் காற்றில் ஆடியசைந்து வாழ்த்துப் பாடின. மத்தளம் கொட்டியது. மங்கல வாத்தியங்கள் ஒலித்தன. மங்கலப் பெண்டிர்கூடி இறைவனை வணங்கி மணமகளை, “பேரிற் கிழத்தி ஆகுக” என வாழ்த்தினர். பின் பெற்றோர் மணமகளை மணமகனிடம் கொடுத்தனர்.
‘மணவிழாவிற்கு வந்தவர்களுக்கு உளுத்தம்பருப்புடன் கலந்த அரிசிப் பொங்கல் இடையறாது வழங்கப் பெற்றது. இறைச்சியும் நெய்யும் கூட்டி ஆக்கிய வெண்சோற்றுடன் பல்வேறு இனிப்புவகைகள் விருந்தினர்க்குப் படைக்கப்பட்டன.’
மதுரையை ஊராகக் கொண்ட ஆசிரியை மதுரையைப் பற்றி எழுதும்போது ஏனோதானோ என எழுதி விடுவாரா? ‘மதுரையின் அழகை இரசிக்கத் தெரியாதவன் கண்களில்லாதவனாகத்தான் இருப்பான்!’ என்கிறார். ‘ஐவகை நிலங்களும் நிறைந்து விளங்கும் கூடல் மாநகரம். ஆழமான அகழிகள், விண்ணைத்தொடும் உயர்ந்த மதில்கள், பிரம்மாண்டமான வாயிற் கதவுகள் எனப் பாண்டியநாட்டின் நடுவில் அமைந்திருந்தது. நாளங்காடி, அல்லங்காடி போன்ற அகலமான தெருக்களில் மக்கள் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் எப்போது நடமாடிக் கொண்டிருந்ததால்தான் தூங்காநகரம் எனும் பெயரையே பெற்றிருக்க வேண்டும்!’
சமணமதத்தவரான வஜ்ரநந்தி அடிகள் அரசன் நெடுமாறனிடம் கூறுவதாக சமணசமயக் கொள்கைகள் விளக்கமாக விவரிக்கப் பட்டுள்ளன. விறுவிறுப்புக் குறைவேயில்லாத பல செய்திகளைக் கொண்டு கதையை ‘நறுக்’கென நகர்த்திச் செல்கிறார் ஆசிரியை. நீண்ட நாட்களின் பின்பு அருமையாதொரு சரித்திர நவீனத்தைப் படித்த மனநிறைவைத் தந்தது இந்தப் புத்தகம். பல சரித்திர ஆய்வுநூல்களை ஒப்புநோக்கி, அந்தக் குறிப்புகளைக் கொண்டே கதையை எழுதியுள்ளர் என்பது பிரமிப்பைத் தருகிறது. இதற்குச் சான்றாக பல அடிக்குறிப்புகள் அத்தியாயம் தோறும் விரவிக் கிடக்கின்றன.
வாய்ப்புக் கிடைத்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்.
[மீண்டும் சந்திப்போம்]
