‘தீக்குள்ள விரலை விட்டால் சுடும்ன்னு சொல்றேன், உனக்குப் புரியல, நீ விட்டுப் பார், அப்பத் தெரியும், ஒரு நாள், ஒரு நாள் நீ சி எம் ஆ இருந்து பார் அப்ப புரியும்’

டிவியிலிருந்து கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா, அம்மா உள்ளிருந்து கூப்பிட்டது கூட காதில் விழாமல்!

‘நீதானம்மா என்னுடைய குரு, எனக்கு எல்லாமே என் அம்மா தான், அவங்க சந்தோஷமா இருந்தா இந்த உலகமே எனக்கு கிடைச்ச மாதிரி, (பிச்சைக்காரன்). உலகத்தில் இருக்கிற எல்லாத்தையுமே காசு கொடுத்து வாங்கிடலாம்டா ஆனா இந்த அம்மாவோட பாசத்தை மட்டும் காசு கொடுத்து வாங்கவே முடியாது, (பில்லா), அம்மாவோட ஒரு சொட்டு கண்ணீருக்கு முன்னாடி இந்த உலகத்தில் இருக்கிற எந்த ஒரு சக்தியுமே நிற்க முடியாது (எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி)’

ராதிகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக்  கொண்டிருந்தது. மறுபடியும் அம்மா கூப்பிட்டார்

‘ராதிகா ராதிகா’

‘என்னம்மா வேண்டும்?’

இங்கே பரணில் இருக்கும் குடத்தை எடுத்துக் கொடேன்’

‘உனக்கு வேறு வேலையே கிடையாது, நான் உட்கார்ந்து ஒரு படம் பார்த்தால் உனக்கு ஆகாது,

ரஜனி தனது அம்மாவிற்காக எப்படி கலங்கறார்’

‘ஏண்டி, பிச்சைக்காரன், பில்லாவில் எல்லாம் அந்த அம்மாவை பற்றி என்னமோ உயர்வாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே!’

அதற்குள் கணவர் மாதவன்

‘புவனா என்னுடைய மூக்கு கண்ணாடியைக் காணும்’

‘இதோ வருகிறேன், இவர் எங்கேயாவது வைத்துவிட்டு என்னை தேடச் சொல்வார்’

‘அம்மா என்னுடைய மேப் நோட்புக் காணுமே, எங்கேயாவது பார்த்தாயா?’ இது பையன் கார்த்திக்.

‘அம்மா இந்த குக்கரின் விசில் எங்கே இருக்கிறது?’ சமையல் அறையிலிருந்து அஞ்சலி.

வாசலில் கீரைக்காரி ‘அம்மா நான் நிற்கட்டுமா, போகட்டுமா?’

லாண்டரிகாரன் ‘அம்மா துணி போடுமா, ஐயாவுக்கு வேண்டிய துணிகளைச் சலவை செய்து உடனே எடுத்து வருகிறேன்’

‘அம்மா காஸ்’  

புவனா பம்பரமாக ஒன்று ஒன்றாகச் செய்து கொண்டே வந்தாள்.

‘உங்களுக்கெல்லாம் சனி ஞாயிறு இரண்டு நாள் லீவு, எனக்கு அன்றைக்குத்தான் வேலை ஜாஸ்தியா இருக்கிறது, மற்ற நாட்கள் எல்லாம் கொஞ்சமாவது எனக்கு உட்கார நேரம் கிடைக்கும், முதல்வன் மாதிரி  ராதிகா நீ ஏன் ஒரு நாள் அம்மாவாக இருக்கக்கூடாது!’

 திடீர் என்று ஒரு யோசனையை தூக்கிப் போட்டாள் புவனா.  

 ‘என்னால முடியாதுன்னு நினைக்ககிறியா? முதல்வன் அர்ஜூன் மாதிரி சூப்பரா செய்வேன்.  எல்லா வேலையும் அப்பொழுது அப்போது செய்து விட்டால் போச்சு, நாளை ஞாயிற்றுக்கிழமை தானே, ஒரு நாள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்கிறேன், தாராளமாக, பேசாம, ஜம்முன்னு ஹாயா உட்கார்ந்து கொண்டு நீ டிவி பார்த்துக் கொண்டிரு, நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன், பாரு நான் எப்படி வேலை செய்கிறேன்னு ’

என்று மங்கம்மா சபதம் போட்டாள் ராதிகா.  

மறுநாள் 5 மணி அலாரம் அடித்து ஓய்ந்தது, ஆறு மணி, ஏழு, எட்டு, ஒன்பது, ம்ஹூம், ராதிகா எழுந்தபாடு இல்லை. இதற்குள் நடைபயிற்சிக்குப் போவதற்கு முன் ஜீரகத் தண்ணீர் குடிக்கும் மாதவன் அதற்காக எதிர்பார்த்து ஏமாந்து சென்று விட்டு வந்தார். வந்தவுடன் காபிக்காக

 ‘புவனா புவனா’

 ஆளையேக் காணோம் ஒன்பது மணிக்கு எழுந்து வந்த ராதிகா, தான் போட்ட சபதத்தை மறந்து விட்டு,

‘அம்மா காபி’

என்று குரல் கொடுக்கவும், உடனே ஞாபகம் வர அவசரமாக சமையல் அறைக்கு ஓடினாள், ராதிகாவிற்கு எது எப்படி இருந்தாலும் முதலில் காபி வேண்டும். ஆனால் என்ன செய்வது! தான் தானே போட வேண்டும்! முதலிலேயே காபி குடிக்காமல் அலுப்பு வந்து விட்டது.

‘இந்த அம்மா எப்படித்தான் காலையில் இருந்து சுறுசுறுப்பாக வேலைகளை  ஆரம்பிக்கிறாரோ, இது முதல் அடி.

 அடுத்தது என்ன டிபன் செய்ய வேண்டும் என்று மண்டையை உடைத்ததில்

‘உப்புமா கார்த்திக்குப் பிடிக்காது, அப்பாவிற்கு நூடுல்ஸ் பிடிக்காது, மணியோ ஒன்பது ஆகிவிட்டது கை கொடுத்தது பிரெட் தான்’

 ‘இந்த பிரட் உடம்புக்கு நல்லதே இல்லை, வேறு ஏதாவது பிரஷ்ஷா செய்து கொடு’

என்று கேட்டது போய், இன்று அந்த பிரட்டையே தான் வாட்டி எல்லோருக்கும் கொடுத்தது இரண்டாவது அடி.

 இதற்குள் வேலைக்காரி எண்ணை பாட்டில் மூடி தேட, கீரைக்காரி இன்றைக்கு என்ன கீரை வேண்டும், தக்காளி நல்லதாக இருக்கிறது வேண்டுமா என்று அவள் பங்குக்கு கேட்க, அன்றைக்குப் பார்த்து குழாய் உடைந்து விட, பிளம்பருக்கு போன் செய்து அப்பப்பா மூன்/றாவது அடி.

 சமையல் செய்ய பருப்புக்கு எத்தனை தண்ணீர் வைக்க வேண்டும், எத்தனை சாதம் வைக்க வேண்டும், மீதமும் கூடாது எல்லோருக்கும் போதுமானதாகவும் இருக்க வேண்டும்,  நான்காவது அடி.

இதை எப்படி அம்மா மேனேஜ் பண்ணுகிறார்கள், மேனேஜ்மென்ட் டிகிரி படித்த எனக்கு இதைப் பற்றிய அறிவே இல்லையே, சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள், அந்தக் காலத்தில் எல்லோரும் படிக்காவிட்டாலும் சாமான்கள் எவ்வளவு வாங்க வேண்டும், எத்தனை நாட்கள் வரை போதுமானதாக இருக்கும், பால்காரிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும், சலவைக்காரன் கணக்கு, கீரைக்காரி கணக்கு, பால்கணக்கு எல்லாவற்றையும் ஒரு காலண்டர் தாளில் முடித்து விடுவார்களே, எனக்கு இப்படித் தோன்றுகிறது, இந்த வாழ்க்கைப் பாடத்தை பள்ளியில், கல்லூரியில் சொல்லித் தரலாம், எனக்கு இன்று நல்ல பாடம், எந்த ஒரு பரிசுகளையும், கொண்டாட்டங்களையும் எதிர்ப்பாராத மாற்று இல்லாத தேவதை இவள் அல்லவோ!