
செப்டம்பர் மாதத்திற்கான சிறுகதையாக லக்ஷ்மி அனந்தநாராயணன் தேர்வு செய்த படைப்பு
அம்புட்டுதான்–ரா.சண்முகவள்ளி
நடுகல் செப்டம்பர் 2026
என் தேர்வு அளவுகோல்கள்
- கதை நிகழும் தளம்
- சொல்லாடல் – நடை, மொழி வளம் 3. வடிவக் கச்சிதம்
- வாசிப்பு அனுபவமும், வாழ்க்கை அனுபவமும் சந்திக்கும் புள்ளி — Resonance. இதில் வாசக இடைவெளி தானாக, இயல்பாக எழும்.
- Last, but not least: வாசகனை உள்ளிழுத்து கொள்ளும் தன்மை: இது மற்ற நான்கு கூறுகளும் பொருந்தி அமைகையில் இயல்பாக எழுந்து வரக் கூடியது.
இவற்றின் அடிப்படையில் எனது தேர்வுகள்:
- அம்புட்டுதான்–ரா.சண்முகவள்ளி நடுகல் அக்டோபர் 2026
மனித வாழ்க்கையின் அபத்தத்தையும், முரண்களையும் பற்றின கதை. கதை நாயகர் வாசனை மன்னராக அறிமுகப்படுத்தப்படுகிறார். பெயரே மூக்கையா.
வாசனையே ஒரு மனிதனின் அடையாளமாகக் கூடுமா? மூக்கையா ஏன் வாசனையாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகிறார்?
அது அவருடைய மனைவியிடத்தில் உண்டாக்கும் ஒவ்வாமை; அவர் அதுவாகனபின் அந்த வாசனை இடம் மாறுவது, வாசனையற்ற அவரது பிரேதம் கொட்டும் மழையில் குளிப்பாட்டி விடப்பட்டு சேறு, சகதியினால் பூசப்படுவது– இவை எல்லாம் சுவை குன்றாமல் சொல்லப்பட்ட கதை.
கதை இப்படி முடிகிறது “இயற்கை ஒரு மழையின் மூலம் அவரின் மொத்த வேஷத்தையும் கலைத்து போட்டது. உயிரிழந்த உடலுக்கு மதிப்பு என்பது அம்புட்டுதானே “.
- . திருடப்பட்ட பாலம்: மா அன்பரசு நடுகல் செப்டம்பர் 2026
கதையை 3 பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம்:
- ஒரு பாலம், அதன் இருப்பு; அது திருடப்படும் காட்சி விவரணை;
- அந்தத் திருட்டு எதனால் சாத்தியமாயிற்று என்கிற திருட்டுக் கும்பலின் தலைவனின் விளக்கம். சாமானியர்களின் மெத்தனம்,
- அதை பலவீனப்பட்டுப் போன அரசு இயந்திரத்தின் உதவியோடு நிகழ்த்தப்பட்ட திருட்டு.
“தினமும் கண் முன்னே இருக்கம் சிலவற்றை மனிதன் கவனிப்பதில்லை. பாலத்தை வெட்டிய கைகள் வேற. ஆனால் அந்த கால்களுக்கு மனிதர்கள் மறந்த பிறகுதான் திருட்டுகள் முழுமை பெறுகின்றன.”
- சாமியாட்டம் அபிதா. வாசகசாலை செப்டம்பர் 2026
கால வெளிக்கும், குறியீடுகளும் அப்பாற்பட்ட குழந்தையின் மனத்தைப் பற்றி பேசும் கதை. இவற்றுக்குள் அடங்காத, தேடலைக் குறிக்கும் “ஏன்” களால் நிரம்பிய அறிதல் பற்றியது.
இரவு நேரம். பொங்கல் படைக்கச் செல்லும் குடும்பங்கள். அதில் ஒரு சிறுமி. பாலின வேறுபாடுகளின் அடிப்படையில் அங்கு நடைபெறும் செயல்கள், சடங்குகள், அவை வெளிப்படுத்தும் நம்பிக்கைகள், அவற்றில் விளையும் குழப்பங்கள், இவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் அச்சிறுமி எழுப்பும் கேள்விகள் — இவையே இக்கதையில் பேசுபொருள்.
“சாமிக்கு ஆம்பள, பொம்பளன்னு வேறுபாடு தெரியுமா?”
“பயம், நம்பிக்கை, கேள்விகள், பதிலில்லாத பழக்கங்கள்”
காலம் மாறியது. விளக்குகள் மாறின. வண்ணங்கள் மாறின. ஆனால் கேள்வி கேட்கத் தெரியாத கூட்டம் மட்டும் மாறவில்லை. அந்தக் கூட்டத்திலிருந்து விலகி நின்ற அந்தச் சிறுமி மட்டும் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஏன்?” அந்த ஒரு கேள்விதான் ஒருநாள் இந்த வேறுபாட்டை நிறுத்த போகும் முதல் அடியாக இருக்கப் போகிறது.
- நாற்காலி ஏநஸ்புள்ளாஹ் திண்ணை செப்டம்பர் 27, 2026
மாய யதார்த்தத்தின் சாயல் கொண்ட ஒரு கதை. இதில் வரும் நாற்காலி ஒரு குறியீடு. கள்ளங்கபடமற்ற, வாழ்க்கையின் அனுபவக் கீறல்கள் சிதைக்காத, வியப்பு மட்டுமே உணர்வாகக் கொண்ட இள மனத்தை குறிப்பது. கதையில் அஸ்லம் என்கிற சிறுவன் சந்திக்கும் வெண்தாடி கிழவர் சொல்கிறபடி இக்கதையில் அஸ்லம் எதிர் கொள்வது இரு உலகங்களின் சந்திப்பு.
“மனிதனின் மனம் எங்கு பயணிக்கிறது அங்கு இந்த நாற்காலி உன்னை அழைத்துச் செல்லும்”.
“நீயும் உன் அப்பா போலத்தான் என்று அஸ்லமின் அம்மா அவனிடம் சொல்கிறார்.
சின்ன வயசுல அவரும் அப்படித்தான். அந்த நாற்காலியில் உட்கார்ந்துகிட்டு உலகத்தையே சுத்துறதா கற்பனை பண்ணிப் பேசுவார்.”
அஸ்லம் புரிந்து கொள்கிறான். அந்த மர நாற்காலி மரத்தால் ஆன நாற்காலி இல்லை. அது தலைமுறைகளாக கடந்து சிறகடித்து பறக்கும் மனிதனின் கற்பனைக்கான ஒரு மாயத்தளம். அலாவுதீனின் மாயக்கம்பளம் போல?
“இந்த உலகத்தின் எல்லைகள் நமது கண்களால் நிர்ணயிக்கப்பட்டவை அல்ல. நமது கற்பனையில் விரிக்கப்படுபவை. அது எப்படிப்பட்ட உலகம் ? — எரிக்கும் பாலையாக, மினுக்கும் விசும்பாக, கடலின் நீல ஆழங்களாக?”
அஸ்மின் அப்பா கற்பனையை தன் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக வருகின்ற விசித்திரமான கற்பனை என்கிறார். அது அவரது குடும்பத்துக்கு மட்டுமேயானதா என்ன? மனித குலம் முழுவதுக்கும் பொதுவான ஆழ்மனப்ரக்ஞை அல்லவா அது ? வயதாக ஆக ஆக அந்த மாயத்தை நாம் மறந்து விடுகிறோம் அல்லது அந்த மாயம் மறைக்கப்பட்டு விடுகிறது.
