திருநேரி எனும் பழமையான கிராமத்தின் மீது அடர்ந்த மேகங்கள் திரண்டிருந்தன.

வரதராஜ பெருமாளின் கோயில் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே நின்றிருந்தது.

கருவறைக்குள், பல நூற்றாண்டுகளாக அரசர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் எளிய பக்தர்களால் பரிசளிக்கப்பட்ட தங்க ஆபரணங்களான கழுத்தணிகள், கிரீடங்கள்,மற்றும் பல்வேறு நகைகளால் கர்ப்பகிரஹத்தில் ஸ்வாமி வரதராஜரும், பத்மாவதி தாயாரும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். .

“இன்று இரவு,” என்று அவன் மெதுவாக, தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

பல மாதங்களாக அவன் இதைத் திட்டமிட்டிருந்தான்.

ராகவன் ஒரு தேர்ந்த திருடன் அல்ல. அருகிலுள்ள ஊரில் ஒரு திறமையான பொற்கொல்லனாக இருந்தான். ஆனால் கடன், தீய சகவாசம், மற்றும் சூதாட்டம் ஆகியவை அவனைச் சீரழித்து விட்டன.

கோயிலின் வயதான தலைமை அர்ச்சகர் கோவிந்தாச்சாரி இரவு எட்டு மணிக்குக் கதவுகளைப் பூட்டிவிட்டு, விடியற்காலையில்தான் திரும்புவார்.

காவலாளி செல்வமும் வயதானவர், இரவு நேரங்களில் அவர் ஆழ்ந்து உறங்கிவிடுவார்.

ராகவன் நிழல்களுக்குள் நழுவிச் சென்றான்.

அவன் திட்டமிட்டிருந்த இடமான பின் சுவரை நோக்கி நகர்ந்தான். கற்கள் ஈரமாக வழுக்கிக் கொண்டிருந்தன, ஆனாலும் அவன் கவனமாக ஏறி கோயில் முற்றத்திற்குள் இறங்கினான்.

தடித்த இரும்புச் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்த கருவறை வாசல் அவனுக்கு முன்னால் நின்றது. ராகவன் புன்னகைத்தான்.

தன் துணிப்பையில் இருந்த கருவிகளில், ஒன்றைத் தேர்ந்தெடுத்து பூட்டைத் திறக்கத் தொடங்கினான். இடியின் ஓசை உலோக ஓசைகளை மறைத்தது. சில நிமிடங்களில் சங்கிலி தளர்ந்தது. கதவு கீறீச்சிட்டபடி திறந்தது.

சந்தனம் மற்றும் பூக்களின் மெல்லிய நறுமணம் காற்றில் மிதந்தது. ஒரு சிறிய எண்ணெய் விளக்கின் ஒளியில் வரதராஜ பெருமாள் 7 அடி உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்தார்.அவர் அருகே தாயார். இருவர் மேனி எங்கும் தங்கம் ஜொலித்தது.

மறுநாள் காலையிலிருந்து “பகல் பத்து” உத்ஸவம் ஆரம்பம் என்பதால், காலையில் அலங்கரிக்க நேரமிராது என்று கோவிந்தாச்சாரி முதல் நாள் இரவே சற்று அதிக நேரம் செலவழித்து, அலங்காரத்தை முடித்துவிட்டு அகன்றிருந்தார்.

ராகவனின் மூச்சு வேகமானது. “இவ்வளவு தங்கமா…” என்று அவன் முணுமுணுத்தான்.

அவன் கைகள் பயத்தால்……அல்ல, பேராசையால் நடுங்கின. வெளியே செருப்பை விட்டுவிட்டு வெறும் காலுடன்தான் வந்திருந்தான். ராகவன் திருடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், இன்னமும் கடவுள் நம்பிக்கை அவன் மனதில் நிறையவே இருந்தது.

கருவறைக்குள் நுழைந்தான்.

அவன் வரதராஜரின் கழுத்தணியை எடுக்கக் கையை நீட்டியபோது, அவனுக்குப் பின்னால் ஒரு மெல்லிய குரல் ஒலித்தது.

“அதை எடுக்காதே.”

ராகவன் உறைந்து போனான். அவன் இதயம் படபடவெனத் துடித்தது. அவன் மெதுவாகத் திரும்பினான்.

ஒரு மிக அழகான இளம்பெண் வாசலில் நின்றுகொண்டிருந்தாள்.

அவளுக்கு 20 வயதுக்கு மேல் இருக்காது. அவளுடைய அழகு ராகவனை மெய் மறக்கச் செய்தது.

“நீ யார்? ….இங்கே என்ன செய்கிறாய்?” என்று அவன் கடுமையான குரலில் கேட்டான். அந்தப் பெண் அவனை அமைதியாகப் பார்த்து, புன்னகைத்தாள். .

“கோயிலில் திருடக்கூடாது.”

ராகவன் பதற்றத்துடன் அவளை நோக்கினான். “உன் வீட்டிற்குப் போ! இது உனக்கு சம்பந்தமில்லாத விஷயம்.”

“அந்த ஆபரணங்கள் இறைவனுக்குச் சொந்தமானவை. அவை பக்தர்கள் கொடுத்த பக்தியின் காணிக்கைகள்.”

“பக்தியா? பக்தி பசித்தவர்களுக்கு உணவளிக்குமா? கடன்களை அடைக்குமா?”

“திருடுவதால் உனக்கு எந்தப் பயனும் இல்லை என்பதைப் புரிந்து கொள், ராகவா” என்றாள் குரலில் லேசான அதட்டலுடன்.

“கேள், பெண்ணே, நான் இங்கே உன்னுடன் வாதிட வரவில்லை. போய்விடு.” ஆனால் அந்தப் பெண் அசையாமல் நின்றிருந்தாள்.

“விலகி நில்,” என்றான், கடுமையான குரலில்

ராகவன் மீண்டும் ஸ்வாமி விக்ரஹத்தை நோக்கிச் சென்று, ஒரு தங்க மாலையை எடுக்க முயன்றான். அது அவன் கையிலிருந்து நழுவியது.

அவனுக்குப் பின்னால் நின்றிருந்த அந்தப் பெண் மீண்டும் பேசினாள். “இந்த வேலையை நிறுத்துவதற்கு உனக்கு இன்னும் நேரம் இருக்கிறது.”

ராகவன் கோபமாகத் திரும்பினான்.

“போதும்!”

ராகவனுக்கு முதுகெலும்பில் பூரான் போல ஒரு நடுக்கம் ஊர்ந்து செல்வதை உணர்ந்தான்.அவன் வாசலை நோக்கிப் பார்த்தான்.

“ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று அவள் மென்மையாகக் கேட்டாள்.

“ஏனென்றால் என்னிடம் எதுவும் மிச்சமில்லை! வேலை இல்லை, வீடு இல்லை, மரியாதை இல்லை. நான் ஒன்றுமில்லாதவன் ”

“நீ ஒரு காலத்தில் சிறந்த பொற்கொல்லராக இருந்தாய் அல்லவா?.”

“அது உனக்கு எப்படித் தெரியும்?”

“நீ அழகான பல ஆபரணங்களைச் செய்தாய். வாடிக்கையாளர்கள் உன் திறமையைப் போற்றினார்கள்.”

“எல்லாம் போய்விட்டது,” என்று அவன் முணுமுணுத்தான்.

“எங்கும் போகவில்லை. உன்னை நீயே தொலைக்கப் பார்க்கிறாய்” என்றாள் அவள்.

“உண்மையைச் சொல். யார் நீ? எதற்காக என்னை வதைக்கிறாய்?

“கடவுள்……..ஒவ்வொருவருக்கும் தேவையான வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். நீ அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறாய் என்பதே உன் வாழ்வைத் தீர்மானிக்கும்”

“நீ சொல்லும் ஆட்களில் நான் விதிவிலக்கு. கடவுள் எனக்கு எந்த நல்லதையும் நடக்க விடவில்லை.”

ராகவன் திடுக்கிட்டான்.பிரகாசமான ஒளியில் அவன் கண் முன்னே இருந்த கடவுள் விக்ரஹங்கள் உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றின.

அந்தப் பெண் மெதுவாக கருவறையை நோக்கி நடந்தாள்.தரை எங்கும் அவளுடைய ஈரமான பாதச்சுவடுகள் அவளைத் தொடர்ந்தன.

அவள் மெதுவாக. “ராகவா, நீ இங்கே திருட வந்தாய்….ஆனாலும், உன்னுள்ளே இன்னும் ஒரு நல்ல ராகவன் இருக்கிறான். அவனை வெளியே வர விடு. வீட்டுக்குப் போ” என்றாள்.

“எனக்கு உன் அனுதாபமோ, ஆறுதல் வார்த்தைகளோ வேண்டாம்” என்றான் தீர்மானமான குரலில்.

“சரி, உன் விருப்பம். ஆனால், நகைகளை இங்கேயே விட்டுச் செல்” என்றாள் அந்தப் பெண்.

கையிலிருந்த நகைகளை விக்ரஹங்கள் மீது, ஆங்காங்கே அவை இருந்த இடங்களிலேயே வைத்தான். “இதோ வைத்து விட்டேன்” என்றான்.

அந்த அழகான இளம்பெண் அவனை நோக்கி மந்தஹாசமாகப் புன்னகைத்தாள். “அதுதான் நல்ல முடிவு” என்றாள்.

ராகவன் மீண்டும் கவனித்தபோது அந்தப் பெண்ணைக் காணவில்லை. மழையின் சீற்றம் சற்று குறைந்தது போல உணர்ந்தான்.

==============================

காலையில் கோவிந்தாச்சாரி கோயிலுக்குள் நுழைந்தபோது திடுக்கிட்டார். “கடவுளே, இது என்ன கர்ப்பகிருஹ கதவுகள் இப்படித் திறந்து கிடக்கின்றன? வாசல் அருகே அவன் யார்?”

குளிரில் நடுங்கிக் கொண்டு, ஈரம் சொட்டச் சொட்ட அமர்ந்திருந்த ராகவன் தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்துவிட்டு, “நான் இங்கே திருட வந்தேன். ஆனால், ஒரு இளம்பெண் என்னைத் தடுத்து விட்டாள். அவளை மீறி என்னால் எதுவும் செய்ய இயலவில்லை” என்றான் குரலில் நடுக்கத்துடன்.

கோவிந்தாச்சாரிக்குப் புரியவில்லை. “இளம்பெண்ணா? அது யார்? அப்படி யாரையும் நான் பார்க்கவில்லையே?” என்றார்.

உள்ளே சென்றவர் நகைகளை சரிபார்த்துவிட்டு, மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே, தீபாராதனை காட்டத் துவங்கினார்.

நிமிர்ந்த ராகவன் கண்களுக்கு அப்போதுதான் தாயாரின் முகம் தீபாராதனையின் வெளிச்சத்தில் பளிச்சிட்டது. கைகளை மெதுவே கூப்பினான்.

==============================

கையிலிருந்த காய்கறிக் கூடையை அடுப்படியில் வைத்துவிட்டு, அரிசியைக் களைய, வெளியே, குழாய் அருகே வந்த கௌசல்யாவின் நினைவில் ராகவனின் பரிதாபமான முகம் பளிச்சிட்டது.

காலில் இருந்த கொலுசுகளில் ஒன்றைக் காணோம். அவள் அம்மா பத்மாவதி வாங்கிக் கொடுத்தது. வாங்கிக்கொடுத்த சில நாட்களிலேயே அவள் மறைந்து விட்டாலும், அவள் நினைவாக அந்தக் கொலுசுகளைப் போற்றிப் பாதுகாத்து வந்த கௌசல்யா, அதில் ஒன்றைக் காணோம் என்று உணர்ந்ததும், வீடு அருகேயே இருந்ததால், முதல் நாளிரவு தேடிக் கொண்டு, அவளுக்கும் அவள் அப்பா கோவிந்தாச்சாரிக்கு மட்டும் தெரிந்த, வலதுபுற சுவரில் இருந்த சிறு கதவைத் திறந்து கொண்டு, கோயிலினுள் நுழைந்தவள்,

கர்ப்பக்ருஹத்தில் இருந்த ராகவனைப் பார்த்து திடுக்கிட்டாள்.

அவனை அவளுக்கு நன்கு தெரியும். இவன் என்ன செய்ய வந்துள்ளான் என்பது புரிந்ததும் செயலில் இறங்கினாள்.

பல முறை அவளது தோழிகளுக்காக அவன் வீட்டுக்குச் சென்றுள்ளாள்.

தலையே நிமிராமல், அருகே இருக்கும் அவனது உதவியாளரிடம், “சரியா எடை போட்டு வாங்கிக்கோ. என்ன டிஸைன்ன்னு தெளிவா கேட்டுக்கோ” என்று சொல்வதோடு சரி.

அப்பாவிடம் அவனைப் பற்றி கேட்டுப் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.