வலி -பயிற்சி

முதலில் இந்தத் தலைப்பைப் பற்றிய விளக்கம் கொடுக்காவிட்டால் உங்களுக்குத் தலைகால் புரியாது. இதோ கொடுக்கிறேன்.

வலி என்பதற்குத் தமிழில் இரண்டு பொருள் உண்டு. ஒன்று வலிமை ; இன்னொன்று நோவு. வலிமை சேர்ப்பதற்கும், உடல் வலி நீங்குதற்கும் உள்ள பயிற்சி பற்றிய வியாஸம் இது. அப்படி என்றால் இரண்டு பயிற்சிகளைப் பற்றிய தகவல்கள் இதில் உண்டா? நிச்சயம் இல்லை; காரணம் “உடற் பயிற்சி “ என்ற ஒன்றுதான் இரண்டுக்கும் தீர்வு. அதைப் பற்றிக் கொஞ்சம் ஆதியோடு அந்தமாக எழுத உள்ளேன்.

பள்ளியில் படிக்கும் போது எனக்கு வந்த முதல் சந்தேகம் பி. டி . கிளாஸ் என்றால் என்ன என்பதே ! இந்த வகுப்பில் என்ன செய்கிறோம் என்பது முதல் நாளே புரிந்துவிட்டது. ஒடுவதும் சாடுவதும் “கிரவுண்டில்” கபடி விளையாடுவதும் என அது எனக்குப் புரிந்துவிட்டது. ஆனால் பி. டி. என்றால் என்ன? ஓரிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இது பற்றி மறந்தே விட்டது.

பத்தாவது படிக்கும் போது ஒரு நாள் பி. டி. மாஸ்டர் அறைக்குச் சென்றிருந்த போது அங்கே ஒரு கரும் பலகையில் “ ஃபிசிகல் ட்ரைனிங் கிளாஸ்” என்று எழுதப்பட்டிருந்தது. மனத்தின் ஏதோ ஒரு மூலையில் கிடந்த இரண்டாண்டு பழைய சந்தேகம் திடீரென்று மேலேறி, கொப்பளமாய் விரிந்து பதிலைக் கண்டுகொண்ட ஆனந்த அதிர்ச்சியில் படீரென உடைந்தது. அதற்கு இரண்டு வாரங்கள் கழித்து பள்ளியில் நடை பெற்ற ஒரு பி. டி.  “கேம்பில்” “உடற்பயிற்சி முகாம் “ என்ற தமிழ் “ பேனர்” இருந்தது. ஆக பி. டி. என்ற ஆங்கில சுருக்கத்தின் விரிவையும் அதன் தமிழாக்கத்தையும் பள்ளி இறுதி ஆண்டுக்குள்ளேயே தெரிந்துகொண்டுவிட்டேன்.

பிறகு கல்லூரியில் பயிலும் போது எனது உடன்பிறப்பு கணேசன் “ஜிம்” “கர்லா கட்டை” “ பாரலல் பார்” “வெயிட்ஸ்” என்று உடற்பயிற்சி பக்கம் சென்றாலும், எனக்கு சைக்கிள் ஒட்டுதலும், டென்னிஸ் விளையாடுவதும் தான் உடற்பயிற்சி. இது அப்படியே தொடர்ந்தது.

வேலை கிடைத்த உடன் “ஸ்கூட்டர் “ வாங்கியதில் சைக்கிள் ஓட்டும் பழக்கம் போய்விட்டது. பணியில் இருக்கும் போது ஆய்வுப் பட்டம் பெற பரிசோதனைச் சாலையிலும், நூலகத்திலும் பல மணி நேரங்கள் செலவிடத் தொடங்கிய பின் “டென்னிஸ்” ஆடுவது நின்றுவிட்டது. திருமணத்திற்குப் பிறகு வீட்டு வேலைகளிலும் , பரபரப்பிலும் தனியாக உடற்பயிற்சி செய்வது என்பது மறந்தே போய்விட்டது.

ஆனாலும் உடலுக்கு வேலை என்பது இருந்து கொண்டே இருக்கும். நாங்கள் தி. நகரில் எங்கள் ஃபேமிலி ஹவுஸ்-ல் ( இரண்டு கிரவுண்டில் கட்டப்பட்ட தனி வீடு ) இருந்த போது வீட்டுக்குள் சுற்றுவதே உடற்பயிற்சிதான். பெரிய வீட்டில் என் அறை மட்டும்தான் முதல் தளத்தில் இருந்தது. நான்தான் கேட்டு வாங்கிக் கொண்டேன். தினம் மேலும் கீழுமாகப் பலமுறைகள் ஏறி இறங்க வேண்டும். ஓவர்ஹெட் வாட்டர் டாங்க் இரண்டாம் தளத்தில் இருந்தது. கீழே கிணற்றிலிருந்து மோட்டார் பம்ப் வைத்து நீரை மேலேற்றவேண்டும் .

கோடைக் காலங்களில் கிணற்றில் நீர் அளவு குறையும் போது குழாயில் “ஏர் லாக் “ஆகிவிடும். அடிக்கடி மேலே தொட்டியில் நீர் எவ்வளவு நிரம்பியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். ( இப்போதுள்ள ரெகுலேடர் சென்சார்” அப்போது கிடையாது) எனவே ஒரு நாளில் பலமுறை இரண்டாம் மாடியிலுள்ள நீர் தொட்டிக்கு சென்று பார்க்கவேண்டும். முதல் மாடியிலிருந்து நீர்த் தொட்டிக்குச் செல்ல , படிக்கட்டுகள் கிடையாது. பச்சை வண்ணம் பூசப்பட்ட இரும்பு ஏணியில்தான் ஏற வேண்டும்.

எங்கள் வீட்டுத் தோட்டப் பகுதியில் ஒரு கொய்யா மரம், கருவேப்பிலை மரம், நான்கு தென்னை மரங்களும், வாயில் காம்பவுண்ட் சுவரருகில் ஒரு வேப்ப மரமும் உண்டு. இவை தவிர ஒரு வாழையும், சில பல கொடி வகைகளும் , கீரைகளும் உண்டு, மிளகாய் , தக்காளி, கத்தரி செடிகள் சில சீஸனில் வளர்ந்து பிறகு காணாமல் போய் விடும். இவற்றுக்கெல்லாம் தண்ணீர் பாய்ச்சும் வேலையும் உண்டு . வாரத்துக்கு மூன்று நாள் என்  முறை. தவிர, கிணற்றடியில் ஒரு துளசி மாடமும் இருந்தது. அதை அம்மாதான் பராமரிப்பார்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டால் நாங்கள் ஒருவாரத்தில் முப்பது மணி நேரம் உடற்பயிற்சி செய்ததற்குச் சமம்.

ஆகையால் சிறு வயதில் இருந்தே எங்களுக்கு வாக்கிங் பழக்கமோ, “ஜிம்” பழக்கமோ இருந்ததில்லை. சைக்கிளில் சுற்றுவோம். கல்லூரி நாட்களில் “மெரீனா நீச்சல் “ குளத்துக்கு ஞாயிறு தோறும் செல்வோம்.

எங்கள் சிறு வயதில் தந்தையார் யோகா பயிற்சிகள் செய்வார் . நிறைய ஆசனங்கள் அவருக்குத் தெரியும். சிரஸாசனம் செய்வார்; எங்களுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார். அவரால் எந்தப் பிடிமானமும் இல்லாமல் அறை நடுவே தலைகீழாக நிற்க முடியும். நாங்கள் எவ்வளவு கற்றுக் கொண்டும் சுவரில் காலை சாய்த்துக் கொண்டு , தலைகீழாக நிற்கத்தான் முடிந்தது. இப்போது நினைத்தால் அதுவும் முடியாது.

ஐம்பத்தெட்டு வயதில் பணி ஓய்வு பெற்ற பிறகு, ஒரு பத்து ஆண்டுகள் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டு இருந்தேன். அதெல்லாம் முடித்து அறுபத்தெட்டாம் வயதில் பார்த்தால் இடது கால் மூட்டு வலி. இடது காலில் அதிக அழுத்தம் கொடுத்து நடக்கும் பழக்கத்தினால் போலும் இடது கால் முட்டி தேய்ந்து போய் விட்டதாம். கால் முட்டி மாற்று அறுவை சிகித்சை அவ்வளவாக என் விஷயத்தில் பலன் அளிக்காது என்று சிறப்பு மருத்துவர் கை விரித்து விட்டார்.

இப்போதுதான் கட்டுரைத் தலைப்புக்கு வருகிறேன். கால் முட்டி எலும்பு தேய்மானம்; நடையில் சாய்மானம் இதையெல்லாம் தடுக்க ஒரே வழி “உடற்பயிற்சி” என்று மருத்துவர் அறிவித்துவிட்டார். ஆம்! முட்டி “வலியைக்” குறைக்கவும், கால் தசைகளில் “வலிமை” ஏற்றவும் – ஆகிய இரட்டிப்பு பலன் தருவது “உடற்பயிற்சியே ! இதை நான் “கண்கூடாக” மட்டும் அல்ல “கால்கூடாகவும்” அறிந்துகொண்டேன்.

தினம் மினிமம் ஒருமணி நேரம் தவறாமல் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சிகளை ஒழுங்காகக் கற்றுக் கொண்டு செய்யவேண்டும் என்பதால், என இல்லத்துக்கு அருகிலுள்ள ஒரு “ஜிம்” மில் சேர்ந்தேன். மூன்று மாதங்களுக்கு பத்தாயிரம் ரூபாய். ஆண்டுக்குக் கட்டினால் முப்பத்தேழாயிரத்து ஐநூறு மட்டும்.

இரண்டாவது மாடியில் அமைந்த “ஜிம்” . லிஃப்ட் உண்டு. என்னைப் போன்ற “பெரிசுகள்” அதைப் பயன்படுத்தினாலும் மாடர்ன் ஜிம் டிரஸ் அணிந்துவரும் இளைஞரும் இளைஞியரும் கொடுக்கும் காசுக்கு வஞ்சகம் இல்லாமல், படிக்கட்டுகளில் துள்ளித் தாவி ஏறி வருவர். படிப்படியாய் ஜிம் பயிற்சி.

வேர்த்து விறுவிறுக்காமல் பயிற்சி செய்ய வசதியாக ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட பெரிய ஹால். ஸ்மார்ட் கார்டு பொருத்தி உள் செல்ல வேண்டிய எட்டடி கண்ணாடிக் கதவு. உள்ளே முப்பதுக்கும் மேற்பட்ட உடற்பயிற்சி உபகரணங்கள். கால் கை மார்பு, தோள்கள் புஜங்கள் இவற்றையும் பைசெப் டிரைசெப் ஆகியவற்றையும் தனித் தனியாக டெவலப் செய்ய உதவும் பலவித உபகரணங்கள் . நகராமல் நின்ற இடத்திலேயே ஓட்டிப் பயிற்சி செய்ய பலரக சைக்கிள்கள். டிரெட்மில்கள். பளு தூக்கும் பயிற்சிக்கான ஸ்பெஷல் உபகரணங்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அருகிலே பெரிய நிலைக் கண்ணாடிகள். உடல் ஷேப், சிக்ஸ் பேக் எல்லாம் சித்தியாகி விட்டதா என்று சரி பார்க்க என்று நினைக்கிறேன்.

மேற்படி அதியற்புதமான சூழலில் ஜிம் பயிற்சியில் மூன்று மாதங்கள் சென்றன. சில புதிய ஆண் பெண் நண்பர்கள் கிடைத்தார்கள். நண்பர்கள் என்பதைவிட என்னை “அங்கிள்” என்றழைத்து கரிசனம் காட்டியவர்கள். கீழே முதல் மாடியில் ஒரு பாப்புலர் ரெஸ்டாரண்ட் இருந்தது. பல நாட்கள் ஜிம் வொர்க் அவுட் க்குப் பிறகு காப்பி குடிக்க ஆரம்பித்து, சூடான பஜ்ஜி போண்டா இருந்தால் அதையும் ருசி பார்க்க ஆரம்பித்து , கொஞ்ச நாட்களில் எதற்காக ஜிம் வருகிறோம் என்பதே மறந்துவிட்டது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு என்னை சோதித்த டாக்டர், “ என்ன சார் ! ஜிம் போக ஆரம்பிச்சத்துக்கு பிறகு வெயிட் அதிகமாயிட்டுச்சே “ என்று கேள்வினார்.

இப்போதெல்லாம் வீட்டிலேயே காலை ஒருமணி நேரம் ஒழுங்காக உடற்பயிற்சி செய்கிறேன். நிறைய பயிற்சிகள் கற்றுக் கொண்டுவிட்டேன். யாரும் என்னைக் கட்டுப்படுத்துவது கிடையாது. நானே மறக்காமல் தினம் செய்கிறேன். காரணம் , காலை உடற்பயிற்சி செய்தால்தான் , அன்றைய நாள் மாலை வரையில் வலி இல்லாமல் கொஞ்ச தூரம் நடக்க இயலும். அன்றாட பணிகளைச் செய்ய முடியும்.

ஆம்! என்னளவில் , இளமையில் கட்டுமஸ்தான வலிவுடைய உடலுக்காகப்  பலர் உடற்பயிற்சி செய்தாலும், அது ஆப்ஷனல் . ஆனால் முதுமையில் மாத்திரை மருந்துகளைவிட உடற்பயிற்சியே முக்கியம் என உறுதியாகச் சொல்வேன்.

நேற்றைய தினம் நானும் மனைவியும் ஒரு நாட்டிய அரங்கேற்றத்திற்குச் சென்றிருந்தோம். அந்தப் பெண்  “அருமையாக ஆடினாள்” என்று திரும்பி வரும் போது மனைவி சொன்னாள்.

நாட்டியம் கூட நல்ல உடற்பயிற்சி என்று நான் சொன்ன போது மனைவி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

( தொடரும்)