“ராம் நாம் சத்ய ஹை, ராம் நாம் சத்ய ஹை” என்ற கோஷத்துடன் எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல், பாடையில் சவத்தைத் தூக்கிக்கொண்டு நால்வர் வாரணாசி வீதிகளின் வழியாக மணிகர்ணிகா காட்டுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர்.
புதிதாக வாரணாசி வருபவர்கள் பெரிய கனவுகளுடன் வருபவர்களே அதிகம். வாரணாசி அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று மனதில் ஒரு பிம்பத்தை முதலிலேயே ஊகிச்சு வைத்திருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்கள், இந்த வாரணாசி மண்ணில் கால்களைப் பதித்து, அதன் தெருக்களில் இறங்கி நடக்கும்போது, நாம் எண்ணியது ஒன்று, ஆனால் நிஜத்தில் வேறு என்ற உண்மையை அறிவார்கள். இந்த உண்மை லதாவுக்கு இப்போதுதான் தெரியவருகிறது.
லதா தன் அப்பா, அம்மாவுடன் இந்தப் புண்ணிய ஸ்தலத்துக்கு வந்திருக்கிறாள். பொதுவாக வயோதிகர்கள், கடவுளிடம் செல்ல நினைப்பவர்கள், சன்யாசம் செல்ல நினைப்பவர்கள், அதுவும் அல்லாமல் பற்றற்ற நிலையில் குடும்பத்தை விட்டு விலகி வெளியே வந்தவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் இந்தக் காசிக்கு வந்து, தங்கள் கடைசிக் காலத்தில் இறைவனின் பெயரை தினமும் உச்சரித்து, கிடைப்பதை உண்பது, கிடைத்த இடத்தில் உறங்குவது என்று தங்களுக்கு மீதமிருக்கும் வாழ்க்கையைக் கழிப்பார்கள்.
ஆனால், லதா ஏன் வந்தாள்?
அவளது வயதோ முப்பதுக்குள் இருக்கும். அவளது அப்பா, அம்மா இங்கே வருகிறார்கள் என்றால், அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. அவர்களது வாழ்வில் இதுநாள் வரை செய்த பாபங்களையெல்லாம் இந்தக் காசியில் உள்ள கங்கையில் நீராடினால் போதும், மறுபிறவி இன்றி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மூவரும் ஓர் விடுதியில் அந்த இரவு தங்கினர். மறுநாள் காசி விஸ்வநாதரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். அவரைப் பார்ப்பதற்கு முன்னர் கங்கையில் ஒரு முழுக்கு போட வேண்டும் என்று லதாவின் அப்பாவும் அம்மாவும் படுக்கச் செல்லும் முன்னர் எண்ணியிருந்தனர்.
இவர்கள் படுக்கச் சென்றனர். ஆனால், லதாவோ சன்னல் வழியாக அந்தக் கங்கையின் அழகைப் பார்த்தபடி, தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.
“அம்மாடி லதா, மணி என்ன தெரியுமா?” என்றாள் லதாவின் அம்மா காவேரி.
“ஏண்டி காவேரி, ஏண்டி புள்ளையைத் தொந்தரவு செய்யுற? அவ பாட்டுக்கு அமைதியா கங்கையின் அழகை ரசிச்சுக்கிட்டு இருக்கிறா. அவளைப்போயி சீண்டுற.”
“இல்லங்க, மணியாகுதுல. காலையில கோவிலுக்குப் போகணுமில்ல. அதான் அவளைப் படுக்கச் சொல்லணும்னு கூப்பிட்டேன்.”
“கண்ணம்மா லதா, உனக்கு எப்ப தூக்கம் வருதோ, அப்ப வந்து படுத்துக்கோ” என்றார் லதாவின் அப்பா ராஜகோபால்.
ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாமல், அந்தச் சன்னல் வழியாகக் கரைபுரண்டு ஓடும் கங்கையின் சத்தத்தை அவள் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அந்தக் கங்கையின் நீர் எப்படி கரைபுரண்டு ஓடியதோ, அதேபோல் அவளது நினைவுகளும் ஓடிக்கொண்டிருந்தன. அவளது தற்போதைய வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அன்றொரு நாள், அவளது அலுவலகத்தில், அவளது மேல் அதிகாரி அனைவரின் முன்னிலையிலும் அவளைத் திட்டியது அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நிஜத்தில் அவள் தவறு செய்திருந்தால், அவளது மேல் அதிகாரி திட்டும்போது அதை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இயல்பாகவே வந்திருக்கும். ஆனால், அவளோ எந்தத் தப்பும் செய்யவில்லை.
அவள் செய்தது, தனக்குக் கீழே உள்ள நபரைக் காப்பாற்ற நினைத்ததுதான். அந்த நபர் வேலை செய்யவில்லை என்றால், அதை மேல் அதிகாரியிடம் வந்து சொல்ல வேண்டியதுதானே. “நீ ஏன் அதைச் சொல்லவில்லை?” என்பதை குற்றமாகப் பார்த்தார் லதாவின் மேல் அதிகாரி.
“ஏம்மா லதா, எத்தனை முறை சொல்வது உனக்கு? ஏதாவது தப்போ, அல்லது யாராவது வேலை செய்யவில்லை என்றாலோ, என்னிடம் வந்து சொல்லு என்று.”
“மேடம், நீங்க என்கிட்ட சில பொறுப்புகளைக் கொடுக்கிறீங்க. அதேபோல அவளிடத்திலும் சில பொறுப்புகளைக் கொடுக்கிறீங்க. நான் சரியா வேலை செய்யலேனா, நீங்க என்னிடத்தில் கேள்வி கேட்பது நியாயம். அவளிடத்தில் கொடுத்த வேலையை என்னிடத்தில் வந்து கேட்டால், நான் எப்படி சொல்வது?”
“ஏம்மா லதா, இந்த அலுவலகத்தில் நீ மேலாளரா இருக்கிற. எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கணும்.”
“மேடம், அவள் ஒண்ணும் விரல் சூப்பிற பாப்பா இல்ல. ஒவ்வொரு வேலையையும் இப்படிச் செய், அப்படிச் செய் என்று கிளாஸ் எடுக்கிறதுக்கு. அவளுக்கு அஞ்சு வருஷம் முன் அனுபவமும் இருக்குல. சின்னப் பிள்ளைத்தனமா ஒவ்வொண்ணுக்கும் உங்ககிட்ட வந்து, ‘மேடம், இவ இன்னும் முடிக்கல, அவ அதைச் செய்யல’ன்னு சொல்ல எனக்கு வரல.”
“இப்படிச் சொல்ல உனக்கு வெக்கமா இல்ல, லதா?”
“மேடம், இதுல என்ன வெக்கப்பட வேண்டியது இருக்கு?”
“இதுவே உங்ககிட்ட வந்து, ‘அவ இன்னும் வேலையை முடிக்கல, இவ இன்னும் இப்படிச் செய்துக்கிட்டு இருக்கா’ன்னு சொல்லியிருந்தா, அப்ப வெக்கப்படணும்.”
வாக்குவாதம் கடுமையாகிக்கொண்டே சென்றது. டிப்பார்ட்மென்ட்டில் உள்ள அனைவரும் லதாவையும் அந்த மேல் அதிகாரியையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“இதோ பாருங்க மேடம், கேட்கிறதுக்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. என்னிடத்தில் நீங்க வந்து தனியா கேட்டால், அதற்குப் பதில் சொல்லியிருக்கப் போகிறேன். அதை விடுத்து, பத்து, இருபது பேர் இருக்கும் இடத்துல இப்படித் திடீருன்னு வந்து, ‘என்ன லதா, நீ ஏன் அவள் வேலை செய்யாததைச் சொல்லல?’ன்னா, நான் என்னன்னு சொல்லுறது? பொறுப்பு என்பது எனக்கு மட்டும் இருந்தால் போதாது. வேலை பார்க்கிற அனைவருக்கும் இருக்கணும். கொடுத்த வேலையை உரிய காலத்துல முடிக்கணுமுன்னு முதலில் அவங்க நினைக்கணும்.
நீங்க சொல்ற மாதிரி தினமும் போய் என்னாலேயும் அவர்களைக் குடைய முடியும். ஆனா, ஒரு கட்டத்துல அது இருவரிடத்திலும் வெறுப்பா மாறிடும்.”
“நீ இப்ப முடிவா என்ன சொல்லுற?”
“நீங்க கேட்க வேண்டிய முறையில் கேட்டாதான் பதில் சொல்வேன். இல்லையென்றால் பதிலளிக்க மாட்டேன்.”
“அப்போ நீ இந்த வேலைக்குத் தகுதியான ஆள் இல்ல.”
“என் தகுதியைப் பத்தி நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். இவ்வளவு நடந்த பிறகு, இனி உங்களுக்கு கீழ் வேலை செய்ய மாட்டேன்” என்று சொல்லியவள், அடுத்த நாள் முதல் அந்த அலுவலகத்திற்குப் போகவில்லை.
ஆறு வருடங்களாகப் பணிபுரிந்தவள். கணப்பொழுது கோபத்தினால் அந்த வேலை பறிபோனது.
இவை அனைத்தும் அவளது எண்ண ஓட்டத்தில், அந்த கங்கை நீர் போலக் கரைபுரண்டு ஓடியது.
மீண்டும் காவேரியின் குரல் கேட்டது.
“அம்மாடி லதா, மணியைப் பார்த்தையா? பன்னிரண்டு ஆகுது. காலையில கோவிலுக்குப் போகணும்” என்றாள்.
பழைய நினைவிலிருந்து மீண்டு, தன் அம்மாவின் குரலுக்குப் பதில் அளித்தாள் லதா.
“இதோ, படுத்துவிடுறேன்” என்றாள்.
சொன்ன மாதிரி படுத்தால் தூங்கிவிடலாம் என்று எண்ணியவளுக்குத் தூங்க முடியவில்லை. கடந்த இரண்டு வருஷமா அவள் வேலையில்லாமல் வீட்டில் சும்மாவே இருந்திருக்கிறாள். பல அவமானங்களைச் சந்தித்திருக்கிறாள். சொந்தக்காரர்கள் அவளைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும்,
“ஏன்னம்மா லதா, வேலை கிடைச்சுடுச்சா? கிடைச்ச வேலையுக்குப் போகலாமே. இன்னும் எவ்வளவு காலம் வீட்டுலேயே இருப்ப? வேலைக்குப் போனாத்தானே, நல்ல கவர்மென்ட் மாப்பிள்ளையா தேடிப்பிடிக்கலாம்” என்று ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்லி, அவளது மனதைக் குத்திக் கிழிப்பார்கள்.
லதா சில சமயங்களில் எண்ணுவதுண்டு. “நாம் ஏன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பாரமாக இருக்க வேண்டும்? எங்காவது போய்விடலாமா? இல்ல, வெட்டியா இந்தப் பூமிக்கு ஏன் ஒரு சுமையா இருந்துக்கிட்டு, மருந்தைக் குடிச்சுட்டு ஒரேயடியா போயிடலாமா?” என்றெல்லாம் நினைத்த காலமெல்லாம் இப்போது இங்கு காசியில் அவளது நினைவுகளில் ஊசலாடியது.
எல்லாரும் புண்ணிய ஸ்தலத்துக்கு எதுக்கு வருவார்கள்? தங்களது பாவங்களைப் போக்கிக்கொள்ளத்தான். கங்கையில் குளித்தாலாவது, நமது பாபங்களையெல்லாம் கங்கையோடு அடித்துக்கொண்டு போகட்டும் என்ற ஓர் எண்ணம்.
இவளோ, இதே கங்கையில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்த பிறகே, தன் தாய், தந்தையுடன் இங்கு வந்திருக்கிறாள்.
எப்போது அவள் தூங்கினாள் என்று அவளுக்குத் தெரியாது. விடியற்காலையில் அவளது அம்மா அவளை எழுப்பினாள்.
“லதா, நேரமாச்சுடி, எழுந்திரு. சீக்கிரம். இப்பவே மணி ஆறு ஆகிடுச்சு .இன்னும் நாம கங்கைக்குப் போயி, அங்க ஒரு முழுக்குப் போட்ட பிறகுதான் காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போகணும்.
இதோ பாரு, நானும் உங்க அப்பாவும் ரெடியா இருக்கோம். எழுந்திரு” என்று இரண்டு முறை கூப்பிட்டபின், அவள் வேகவேகமாக எழுந்து அவர்களுடன் கிளம்பினாள்.
அவளது அப்பா, அம்மாவுக்குத் தெரியாது, அவளது மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்று. அவர்களுடன் எப்போதும்போல சென்றாள் லதா.
கங்கைப் படித்துறைக்குச் சென்று சேர்ந்தனர். குறைந்தது ஐம்பது படிக்கட்டுகளாவது இறங்கித்தான் கங்கையை அடைய முடியும். ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கும்போது, அவளது பள்ளிப் பருவம் முதல் பருவ வயதை எட்டியதுவரை, அவளது எண்ண ஓட்டத்தில் தாறுமாறாகக் கங்கை வெள்ளம்போல ஒரு கணம் ஓடி மறைந்தது.
தன் அம்மாவும் அப்பாவும் தனக்கு எவ்வளவு செய்திருக்கிறார்கள்! ஊரு உலகம் என்ன சொன்னாலும், இதுவரை அம்மாவும் சரி, அப்பாவும் சரி, “நீ ஏன் ஒரு வேலைக்குப் போகல?” என்று கேட்டதில்லை. அது அவளைக் குடைந்துகொண்டிருந்தது.
அவர்கள் ஒரு வார்த்தை கேட்டிருந்தால்கூட, “எல்லாரும் ஒரு மாதிரித்தான்” என்று நினைத்திருப்பேன். ஆனா, அவுங்க ஒருமுறைகூட அப்படி ஒரு வார்த்தை கேட்டதில்லை.
ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கி, கடைசிப் படிக்கட்டில் மூவரும் நின்றனர். கங்கை, அவர்களது பாதங்களைத் தழுவியது.
காவேரி, அவளது புருஷனைப் பார்த்து…
“என்னங்க, நீங்க எதுக்காக இந்தக் காசிக்கு வந்தீங்க, சொல்லுங்க பார்ப்போம்” என்றாள்.
“ஏண்டி, எனக்கு என்ன பெரிய ஆசை இருக்கப் போகுது? நம்ம குழந்த நல்லபடியா இருக்கணும், அவளை ஒரு நல்லவன் கையில பிடித்துக் கொடுக்கணும், அவ்வளவுதான்.”
“ஏங்க, நான் கூட நீங்க செய்த பாவத்தைப் போக்கத்தான் இங்க வந்தீங்களோன்னு…”
“போடி போக்கத்தவளே! நாம எங்கடி யாருக்குக் கெடுதல் செய்திருக்கிறோம்?”
“எப்படிங்க, நம்ம ரெண்டு பேரோட எண்ணமும் ஒண்ணா இருக்கு!”
“ஏண்டி, முப்பது வருஷமா குடும்பம் நடத்துறோம். அப்புறம் இதுகூட இல்லாமலா போயிடும்?”
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த லதாவின் கண்களில் கண்ணீர் மளமளவென வரத்தொடங்கியது. அவளது மனம் ஒரு கணம், “நாம் ஏன் உயிரோடு வாழக்கூடாது?” என்று எண்ணுகையில், அவளது கால்கள் வழுக்கி கங்கையில் விழுந்தாள்.
அப்பாவும் அம்மாவும், “அம்மா தாயே கங்கா, காசி விஸ்வநாதா, எங்க குழந்தையைக் காப்பாத்துமா! எங்கிட்ட திருப்பிக் கொடுத்துடுப்பா. தாயே, அருள் புரிம்மா!” என்று ஓவென்று அழுதுகொண்டே வேண்டினர்.
அக்கம் பக்கமிருந்தவர்கள், “அரே! ஏக் லடிக்கி பாணிமே கிர்கயா! கோயி ஹை? மத்தத் கர்னே கே லியே கோயி ஆயியே!” என்று சத்தமாகக் கூப்பிட்டார்கள்.
இவர்களது புண்ணியமோ, அவளது புண்ணியமோ தெரியவில்லை. எதிர்நீச்சல் போடத் தெரிந்த வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் லதாவைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தான்.
அந்த இளைஞனுக்கு அவளது அம்மாவும், அப்பாவும் நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவனது பூர்வீகத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டனர். அவன் எங்கே பிறந்தான், இப்போது என்ன செய்கிறான் என்றெல்லாம் விசாரித்தனர்.
சில மணித்துளிகள் கடந்தவுடன், லதா சுயநினைவுக்கு வந்தாள். அந்த இளைஞனைப் பற்றிய விவரமும் அவளுக்குத் தெரியவந்தது.
பிறகு அனைவரும் அந்தக் காசி விஸ்வநாதனைத் தரிசிக்கச் செல்ல மேலே வந்தனர்.
மேலே வந்த லதா, அங்கிருந்து திரும்பிக் காசி கங்கையை ஒரு முறை பார்த்தாள். அப்போது அவளது மனதுக்குள் ஒரு எண்ணம் ஓடியது.
“நாம் என்ன பைத்தியக்காரத்தனத்தைப் பண்ண இருந்தோம்? உண்மையில் நாம் உயிரை விட்டிருந்தால், நம்ம அம்மா, அப்பாவுக்கு அவர்கள் இருக்கும் வரை மறையாத வடுவைத் தந்துவிட்டுப் போயிருப்போம். நல்லவேளை, இந்தக் கங்கை என்னை வாரி அணைத்துக்கொள்ளாமல், மீண்டும் கரைக்கு அனுப்பி, எனக்கு ஒரு மறுவாழ்வைத் தந்திருக்கிறது” என்று எண்ணலானாள்.

