ஒரு அமைதியான இரவு. மருத்துவமனையில் ஃபோன் திடீரென ஒலித்தது.

“ஹலோ டாக்டர்! எனக்கு மூச்சு விட முடியவில்லை! உடனே ஆக்ஸிஜன் வேண்டும் !. தயவுசெய்து உதவுங்கள். இது ஒரு எமர்ஜன்சி !”

குரல் மிகவும் கஷ்டப்பட்டுப் பேசியது. டாக்டர் அந்த இடத்தின் GPS இருப்பிடத்தை வாங்கினார். மருத்துவக் குழு ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் மருந்துப் பெட்டியுடன் ஆம்புலன்ஸில் வேகமாகப் புறப்பட்டது. “வீ… வீ…” என்று சைரன் ஒலிக்க, இரவு இருளில் அவர்கள் பறந்து விரைந்தனர். சில நிமிடங்களில் அவர்கள் அந்த இடத்தை அடைந்தனர். ஆனால் ஆச்சரியம்! அங்கே ஒரு வீடும் இல்லை, ஒரு மனிதரும் இல்லை!

சாலையின் ஓரத்தில் ஒரு பெரிய, பழைய ஆலமரம் மட்டும் நின்றது. அதன் வேர்கள் முழுவதும் சிமெண்டால் மூடப்பட்டிருந்தன. அதன் உடலில் (பட்டையில்) ஆணிகள் அடிக்கப்பட்டு விளம்பர பலகைகள் தொங்கின. கம்பிகள் சுற்றிலும் சுற்றப்பட்டு வண்ணவண்ண மின்விளக்குகள் மினுமினுத்தன.

“யாரும் இல்லையே! யார் அழைத்தது?” என்று டாக்டர் குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார். இது ஒரு போலியான அழைப்பா? மருத்துவர் எரிச்சலடைந்தார்.

திடீரென்று, மரத்திலிருந்து ஒரு மெல்லிய, சோகமான குரல் கேட்டது…

“டாக்டர் அவர்களே… நான் தான் அழைத்தேன். என் பெயர் வேலன். இந்த சாலையோரத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நின்று கொண்டிருக்கிறேன்.”

மருத்துவக் குழு ஆச்சரியத்தால் வாயடைத்து நின்றது. ஒரு மரம் பேசுகிறதா?!

“ஆம்… நான் ஒரு மரம். ஆனால் என் வலியை யாரிடம் சொல்வேன் ?. கேட்பார் யாரும் இல்லாமல், இன்று உங்களை அழைக்க வேண்டியதாயிற்று. நான் படும் பாட்டை கேளுங்கள். பாருங்கள். போய் விடாதீர்கள்.

பாருங்கள் என் கால்களை (வேர்களை).! முழுவதும் சிமெண்ட் கான்கிரீட் போட்டிருக்கிறார்கள். மண்ணுக்குள் தண்ணீரும் காற்றும் செல்ல வழியில்லை. நான் எப்படி மூச்சு விடுவேன்? எப்படி உணவு எடுப்பேன் ?”

மரத்தின் குரல் கம்மியது. பிறகு அழுகின்றது போல் தொடர்ந்தது:

“அது மட்டுமா… என் உடம்பைப் பாருங்கள்! விளம்பர பலகை வைக்க என் உடலில் பெரிய ஆணிகளை அடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆணியும் என் தோலில் ஊடுருவியது. எவ்வளவு வலித்தது என்று தெரியுமா? மனிதர்களுக்கு ஊசி போட்டால் எவ்வளவு வலிக்கும்? அதைவிட பன்மடங்கு வலிக்கிறது எனக்கு! ஆனால் நான் அழுதாலும் என் கண்ணீரை யாரும் பார்ப்பதில்லை.”

“அதோடு பார்க்கவே அழகாக இருக்கிறது என்று என்னை சுற்றிலும் மின்விளக்கு கம்பிகளை இறுக்கமாகக் கட்டி விட்டார்கள். இந்த கம்பிகள் என் கிளைகளை நெரிக்கின்றன, என் பட்டையை வெட்டுகின்றன. இரவு முழுவதும் வெப்பமான விளக்குகள் என்னை சுட்டெரிக்கின்றன. நான் தூங்கவே முடியவில்லை!”

“நான் உங்களுக்கு ஆக்ஸிஜன் தந்தேன், நிழல் தந்தேன், பழம் தந்தேன், மழையை வரவழைத்தேன். ஆனால் நீங்கள் என்னை என்ன செய்தீர்கள்? என்னை ஆணி குத்தி, கட்டிப் போட்டு, மூச்சு திணறடித்தீர்கள். நான் சாக வேண்டியது தானா? . இது நியாயமா ?”

மருத்துவக் குழு அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. டாக்டர் உடனே செயல்பட்டார்.

“வேலன், மன்னிப்பு கேட்கிறோம் !. இப்போதே எல்லாவற்றையும் சரி செய்கிறோம்!”

எல்லோரும் சேர்ந்து மரத்தைச் சுற்றியிருந்த சிமெண்டை உடைத்தனர். நல்ல மண் போட்டனர். தண்ணீர் ஊற்றினர். கஷ்டப்பட்டு ஒவ்வொரு ஆணியையும் கவனமாக பிடுங்கி எடுத்தனர். மின்விளக்கு கம்பிகளை அவிழ்த்தனர். மரத்தின் காயங்களில் மருந்து போட்டனர்.

சிறிது நேரத்தில் வேலன் மரத்தின் இலைகள் மெதுவாக அசைந்தன. ஒரு குளிர்ந்த காற்று வீசியது. வேலன் மகிழ்ச்சியுடன் கூறினான்:

“நன்றி… நன்றி ! இப்போது என்னால் மூச்சு விட முடிகிறது! நான் ஆனந்தமாக இருக்கிறேன்!”