சென்ற இதழில் :
“பின்ன என்ன ஜானு?, அமுன் ஏதோ ‘மரணப் பள்ளத்தாக்கு’ன்னு சொன்னாரே, அதான் பயந்துட்டேன், இப்ப என்னடான்னா பெயரை மாற்றி ‘கிங்ஸ் வேலி’ என்கிறாரே?”
அமுன் குறுக்கிட்டு “இரண்டும், ஒன்றுதான் வெங்கட் சார், அரசர்கள் இறந்தவுடன் புதைக்கும் இடம்தான் அது”
அரசர்களைப் பிரமிட்களில் வைத்துத்தானே புதைப்பார்கள். இங்கு எப்படி?” என்று மடக்குக் கேள்வி கேட்டார் லக்ஷ்மி.
இனி:
“உண்மைதான். ஒரு காலத்தில் பிரமிட்களுக்குள் புதைத்தார்கள். ஆனால் இறந்த உடல்களோடு, செல்வங்களையும் சேர்த்து புதைப்பது தெரிந்ததால், கொள்ளையர்கள் அவற்றைக் கவர்ந்து சென்றார்கள்.
அதனால், பிற்காலத்தில் அரசர்கள் இறந்த பிறகு, இந்தப் பள்ளத்தாக்கில், பாலைவனப் பகுதியில் பாதாள அறைகள் கட்டி, புதைத்து, அதன் சுவடே தெரியாமல் மணலை போட்டு மூடி விடுவார்கள். அதனால் மரணப் பள்ளத்தாக்கு (Vally of Death) என்றும் அழைப்பார்கள். இங்கு அறுபதுக்கும் மேற்பட்ட கல்லறை நிலவறைகள் உள்ளன.
பண்டைய எகிப்தியர்கள் நைல்நதிக்கு ‘மேற்கு புறத்தில்’தான் சமாதிகளைக் கட்டுவார்கள். காரணம் மேற்கு புறத்தில் சூரியன் மறைந்தாலும் பிறகு, உயிர்த்தெழுந்து வந்து விடுகிறான் அல்லவா? ஆகவே, மேற்கு திசையில் புதைத்தால், அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள், என்பது நம்பிக்கை” என்றார் அமுன் நடந்தவாறே.
“இந்தியாவைப் பொருத்தவரை, இறந்தவர்கள் தென்திசை செல்வதாக ஐதீகம். இறந்த முன்னோர்களுக்கு தென் புலத்தார் என்கிற பெயர் கூட உண்டு” என்றார் லக்ஷ்மி.
*****
கிங்ஸ் வேலி (KV) வளாகத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு நுழைந்தோம்.
இந்த பகுதியில் ஒவ்வொரு கல்லறை கோயிலுக்கும் KV-1 என்று ஆரம்பித்து KV-65 வரை எண்கள் செல்கின்றன. இந்த நுழைவுச் சீட்டை வைத்துக் கொண்டு ஏதாவது மூன்று கல்லறை கோயில்கள் மட்டுமே பார்க்க இயலும். அதற்கு மேல் பார்க்க வேண்டுமென்றால் கூடுதல் டிக்கெட் எடுக்க வேண்டும்.
‘இந்த கல்லறை கோயிலை பார்க்க அப்படி என்ன பெரிதாக இருக்கப் போகிறது?’ என்று அலட்சியமாகத்தான் நுழைந்தோம். ஆனால் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் டிக்கெட் பணம் வசூல் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனை அழகான வண்ண ஓவியங்கள். அதுவும் கி.மு 1539 – 1075 ஆண்டு காலங்களில் தீட்டப்பட்ட அற்புதமான வண்ண ஓவியங்கள்!
நம் அஜந்தா ஓவியங்களைப் பார்த்த ஞாபகம் வந்தது. குறிப்பாக, விதான ஓவியங்கள் மற்றும் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணங்கள் மிகப் பிரமாதம்.
நிலவறைக்குள் இறங்குவதற்கு, இரண்டு பக்கமும் கைப்பிடிகள் கொண்ட மரப்படிக்கட்டுகள் உள்ளன. இறங்குவது கடினமாக இல்லை. சுவரில் ஓர் இடம் கூட விடாமல் நெருக்கமாக சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களின் உடைகள், தற்காலத்தைப் போல அதி நவீனமாக உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எத்தகைய அலங்கார உடைகளை அறிந்திருக்கிறார்கள், அவர்களின் சிகை அலங்காரங்களில் எத்தனை வித்தியாசம்? என்று ஃபேஷன் டிசைன் செய்பவர்கள் இங்கு வந்தால், பார்த்து வியக்கலாம். குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல ஓவியர்களுக்கும் வெளியே வர மனமே இருக்காது. அத்தனையும் புதுமை!
சில ஓவியங்கள் எகிப்திய கடவுள்களைக் குறிக்கின்றன. நைல்நதியும், படகுகளும் கொண்ட ஓவியங்கள் நிறைய இருக்கின்றன. தூண்களிலும் ஓவியர்கள் தங்கள் கைவரிசைகளைச் சிறப்பாகக் காட்டி உள்ளார்கள்.
நிலவறைப் பகுதியை மின்விளக்கு வெளிச்சத்துடன் சுற்றிப் பார்க்க முடிகிறது. இந்த இடங்களை நன்றாக பராமரிக்கிறார்கள். உலகளவில் நிச்சயமாகத் தவறவிடக்கூடாத ஓர் அருங்காட்சியமாக, இது உள்ளது எனலாம்.
தரைமட்டத்திற்குக் கீழே இருந்ததாலும், இந்த நிலவறை குகைகளின் வாசல்கள் முழுவதும் அடைக்கப்பட்டு, மறைக்கப்பட்டு இருந்ததால், மனிதர்களாலோ, விலங்குகளாலோ, இவ்விடங்கள் சிதைக்கப்படாமல் இருந்திருக்கின்றன.
மன்னர்கள் ராம் சேஸ் 3,4,5,6,9 ஆகியோரின் கல்லறைகளும் சிறப்பானவை. KV-C2 எண் கொண்ட கல்லறை கோயிலில் அரசர் TUTANKHAMUM உடல் மம்மியாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அதைக் காண தனி டிக்கெட் வாங்க வேண்டும்.
சிறந்த ஓவியங்கள் கொண்ட கல்லறை கோவில் SETI -1 பார்க்க அதிக டிக்கெட் விலையை நிர்ணயத்திருக்கிறார்கள். உள்ளேயிருக்கும் சாராம்சம் அப்படிப்பட்டது.
இதில் அதிசயம் என்னவென்றால், இந்த ‘அரசர்கள் பள்ளத்தாக்கில்’ வெளியே இருந்து பார்த்தால் கட்டாந்தரையும், பாலைவனமும் ஆங்காங்கே குகைப் போன்ற துளைகளும்தான் இருக்கும். உள்ளே நுழைந்தால், அதிசயமான ஓவிய, சிற்பக் கூடங்கள்!
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் உபயோகமாகச் செலவழித்துவிட்டு, மதிய உணவுக்குச் சென்றோம்.
லக்ஸர் நகரம் பண்டைய எகிப்து நாட்டின் மிக முக்கியமான நகரம். THEBES என்பது அதன் புராதனப் பெயர். ஒரு காலத்தில் எகிப்தின் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. அதுவே இதன் பொருளாதாரச் செழிப்புக்கு காரணமாகவும் இருக்கலாம்.
இந்த நகரை 100 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் (CITY OF HUNDRED GATES) என்றும் அழைத்திருக்கிறார்கள். எகிப்தின் முக்கியமான ஆன்மீக நகரமாகவும் இருந்திருக்கிறது. அதனால் எகிப்திய கடவுள்களுக்கு இங்கு நிறைய கோயில்கள் உள்ளன.
ஹட்செப்சுட் கல்லறைக் கோயில்
அரசர்களுக்கு கல்லறை கோயில்கள் இருப்பது போல, நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள திர் அல் பாஹ்ரி பகுதியில் ராணிகளுக்கான கல்லறைக் கோயில்களும் உள்ளன. இந்த இடத்தில்தான் ஹட்செப்சுட் (HATSHEPSUT / 1473-1458 BC) ராணிக்கான கோயில் உள்ளது.
இதைத்தவிர இங்கு எகிப்திய தெய்வங்களான ஹாத்தோர், அனுபிஸ், அமுன் ஆகிய தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன.
இது மூன்று அடுக்குகள் கொண்ட கோட்டையாகும். தரையிலிருந்து எல்லா அடுக்குகளிலும் நேரடியாகச் செல்லும் வகையில் சாய்வுதளம் (RAMP) அந்த காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் பெரிய மலை உள்ளது. மலையின் ஒரு பகுதியை வெட்டி அமைக்கப்பட்ட இந்த இடத்தில்தான் ராணி HATSHESPUT இன் இறுதி சடங்குகள் நடந்ததாம். இந்த ராணி எகிப்திய சரித்திரத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறார்.
இரண்டாம் தளத்தில் ஒவ்வொரு தூணிலும் பிரம்மாண்டமான சிலைகள் நம்மை வரவேற்கின்றன. உள்ளே சென்றால் OPEN TO SKY கொத்தளம் வெகு அழகு. இங்கு மம்மிகளின் சேகரிப்பு அறையும் உள்ளது. அங்கு அழகான வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான கழுகின் ஓவியம் ஒன்று கண்ணைக் கவர்கிறது.
இங்கிருந்த மம்மி சேகரிப்பு அறையில் இருந்து மம்மிகள் எடுக்கப்பட்டு, கெய்ரோவில் உள்ள எகிப்து கண்காட்சியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பெரிய மலைப்பகுதிகளில் இருந்து பார்த்தால், ஆங்காங்கே சிறிய குகை போல நுழைவாயில்கள் இருக்கும். உள்ளே படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால் நிலவறைகளை அடையலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைந்து கிடந்தவை இப்பொழுது வெளிவர துவங்கியுள்ளன. இந்தப் பகுதியை தோண்ட தோண்ட ஆச்சரியங்களாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த மணற் பாறைகளில், நதிக்கரையில், பாலைவனங்களில் இன்னும் என்னென்ன பொதிந்து இருக்கின்றன என்பதை இயற்கையும், காலமும் மட்டுமே அறிவார்கள்.
பெரும் பொருட்செலவு செய்து தோண்டி எடுக்கப்படும் பொழுது, கிடைக்கும் பொருள்களின் மதிப்பும் அளவற்றது. சமீபத்தில் கூட, பெஹெய்ரா மாகாணத்தில் மூவாயிரம் வருடம் பழமையான குதிரையில் முழு எலும்புக்கூடு கிடைத்ததாக செய்தி வந்தது.
இதை பார்க்கும்பொழுது நம்முடைய நாட்டிலும் இன்னும் எத்தனை செல்வங்கள், பூமித்தாயின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கின்றதோ? மனிதர்களின் பார்வைக்கு, என்று அவை வெளிப்படுமோ? என்கிற கேள்வியும் மனதில் எழுகிறது.
எங்கள் சுற்றுலாவின் நிறைவுப் பகுதியாக, எகிப்தியக் கைவினை கலைஞர்கள், சிற்பங்களை உருவாக்கும் கிராமத்திற்குச் சென்றோம். நம் மாமல்லபுரத்தில் இருந்தது போன்ற உணர்வு. என்கிரேவ் செய்யப்பட்ட பண்டையகால பாணி எகிப்திய ஓவியங்கள், பிரமிடுகளின் மாடல்கள், கிளியோபாட்ரா சிலைகள் மற்றும் எகிப்து கடவுளான ஹோரஸ், அனுபிஸ் போன்ற பல சிற்பங்கள் விற்பனைக்கு உள்ளன.
நைல்நதி அருகே இருந்த, உணவகத்தில் உணவு உண்டோம். அனைவரும் சேர்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டோம். குரூஸ் கப்பலுக்கு பிரியாவிடை கொடுத்து, காலி செய்துவிட்டு, லக்ஸரில் உள்ள தங்கும் விடுதியை அடைந்து இரவு தங்கினோம்.
*****
மறுநாள் காலை லக்சர் ஏர்போர்ட்டிற்குக் கிளம்பினோம். தயாராக இருந்த காலை உணவு பாக்கெட்டுகளை அமுன் கொண்டு வந்து கொடுத்தார்.
எட்டு இரவுகள், ஒன்பது நாட்கள் கொண்ட இந்த பயணத்தில், கூடவே இருந்து அன்பும், அக்கறையுமாக பார்த்துக் கொண்டவர், அமுன். அவருக்கு பரிசு பொருளைக் கொடுத்தோம்.
அமுல் பேபி போல இருக்கும் அவர், திடீரென குழந்தை போல், மாறி உணர்ச்சி வசப்பட்டு, எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டார். கண்களில் அவருடைய அன்பு தெரிந்தது.
“பொதுவாக எல்லா குழுவினர்களும் பிரியும்போது ஏற்படாத ஒரு அனுபவம், உங்களுடன் ஏற்பட்டது. பல இடங்களை குறிப்பிட்டு இது ஏன் காண்பிக்கவில்லை. உணவு ஏன் தாமதம்?, அதை ஏன் விளக்கவில்லை? இப்படி பலர் குறை சொல்வதைப் பார்த்திருக்கிறேன். உங்கள் குழுவினர் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தனர்.
பார்க்கும் இடங்களை விட, பயணத்தில் கிடைக்கிற மகிழ்ச்சியையே உங்கள் குழு, பிரதானமாகக் கொண்டிருந்தது. உங்களுடன் பயணித்தது எனக்கும் மன நிறைவாக இருந்தது”
“இந்தியாவுக்கு வாருங்கள். நீங்கள் பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது” என்றோம். அமுனிடமிருந்து பிரியா விடை பெற்றோம்.
லக்சரிலிருந்து, கெய்ரோவிற்கு விமானம் பிடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தோம்.
எல்லோரும் இந்த எட்டு நாட்கள் நடந்த அனுபவங்களைப் பற்றி, மாறி மாறி நினைவுபடுத்திப் பேசிக் கொண்டிருந்தோம். ‘வெங்கட் மாமா, ஜானு மாமியை’ இனி ரொம்பவே மிஸ் பண்ணுவோம் என்றோம்,
“எங்கே சாய் மற்றும் சந்தியாவைக் காணவில்லை? என்று கேட்டார் வெங்கட்.
சாய் வந்து, “சந்தியா உடல்நிலை சரி இல்லை. கொஞ்சம் பார்க்கிறீர்களா?” என்று கூறி டாக்டரை அழைத்துச் செல்ல,
திரும்பிவந்த டாக்டர், ஜானு மாமியைப் பார்த்து ‘சந்தோஷமான விஷயம்’தான்” என்றார்.
வாரிசு இல்லாத ஜானு மாமி, அப்படியே சந்தியாவைக் கட்டிக் கொண்டார்.
தங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த நற்செய்தியாகவே, அதை ஒவ்வொருவரும் கருதினார்கள். சாய்க்கும், சந்தியாவிற்கும் எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டோம்.
லக்சர் நகரில் இருந்து விமானம் ஏறி கெய்ரோ வந்து சேர்ந்தோம்.
*****
கெய்ரோ விமான நிலையத்தில் குவைத் வழியாக சென்னைக்குத் திரும்புவதற்காக ‘குவைதி ஏர்லைன்ஸ்’ தயாராக இருந்தது.
விமானம் கெய்ரோ விமான நிலையத்திலிருந்து மேலே எழும்பி பறக்க ஆரம்பித்தது. வரும்போது பார்த்த அதே உற்சாகத்துடன் “அதோ பாருங்கள் பிரமிட்!!” என்றனர் சக பயணிகள்.
எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்து, பல சரித்திரங்களையும் ரகசியங்களையும் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் பிரமிடுகள், ஒன்றுமே அறியாததுபோல, காலதேவனுடன் தங்களது உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தன.
எகிப்திய பழமொழி :
அறிவைத் தேடும் பயணங்கள் முடிவதில்லை.
(மறுமுறை சந்திப்போம்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


