திருமண விருந்தில் வெடித்த போர்
கடல் அரக்கனிடமிருந்து அழகி ஆண்ட்ரோமெடாவை மீட்ட பெர்ஸியஸ் அவளை மணந்துகொள்ளத் தயாரானான்.
அதேசமயம் ஆண்ட்ரோமெடாவை மணக்க விரும்பிய பினியஸ் என்ற இளவரசன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திருமண மண்டபத்துக்குள் பாய்ந்து வந்தான். அனைத்து வீரர்களும் பெர்ஸியஸைத் சூழ்ந்துகொண்டுத் தாக்கினார்கள். திருமண மண்டபம் போர்க்களமாக மாறியது.
பெர்ஸியஸ் தன்னைத் தாக்க வந்தவர்களை எதிர்த்து வாளை ஏந்தி வீராவேசமாகப் போரிட்டான். பல வீரர்கள் அவனுடைய வாளுக்குப் பலியானார்கள். ஆனால் எதிரிகள் எண்ணிக்கை அதிகம். பிலியஸின் வீரர்கள் பெர்ஸியஸைச் சூழ்ந்துகொண்டார்கள். அவனிடமிருந்த வாளைப் பறித்து அவனைக் கொல்ல அனைவரும் ஒரே சமயத்தில் தங்கள் வாளுடன் பாய்ந்தார்கள்.
அப்போது பெர்ஸியஸ் தன்னிடம் இருந்த கொடூரமான ஆயுதத்தை எடுத்தான். மெடூசாவின் தலைதான் அது. அதை எடுத்துத்தன் முகத்தை மறைத்துக் கொண்டான். அந்தப் புதிய முகத்தின் மகத்துவம் அறியாத வீரர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள்.
“என் எதிரிகள் அனைவரும் இந்தத் தலையைப் பார்க்கட்டும்!” என்று கூறியபடி மெடூசாவின் தலையை அனைவரையும் பார்க்க வைத்தான்.
அதைப் பார்த்த வீரர்கள் ஒவ்வொருவராகக் கல்லாக மாறினர்.
அவர்களுக்குப் பின்னால் வந்த பினியஸும் தானும் கல்லாக மாறுவதை உணர்ந்து , தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி மன்றாடினான். ஆனால் பெர்ஸியஸ் அவனிடம், “நீ வீரன் என்றால் தனியே என்னிடம் போரில் காட்டியிருக்கவேண்டும். அதைவிட்டு நூற்றுக்கணக்கான வீரர்களை என் மீது ஏவினாயல்லவா? உனக்குக் கருணை காட்டுவதில் அர்த்தம் இல்லை” என்று கூறி, மெடூசாவின் தலையை அவன் பக்கம் திருப்பினான். பினியஸும் கற்சிலையாகி நின்றான்.
வெற்றிப் புன்னகையுடன் காதலியின் கரம்பற்றித் திருமணத்தையும் முடித்தான்.
மியூஸ்களின் இசை
ஒரு சமயம் பியரிடஸ் என்ற இசைக்குழுவைக்க சேர்ந்த ஒன்பது பெண்கள் உலகில் சிறந்த பாடகிகள் என்று கருதப்பட்டனர். அந்தப் பட்டம் – அதனால் கிடைத்த பெருமை அவர்கள் மனதில் பெரிய அகங்காரத்தை ஏற்படுத்தியது. தம்மை வெல்ல யாருமில்லை என்ற கர்வத்தில் மற்ற பாடகர்களை அவமதித்தனர்.
அதேசமயம் மியூஸ்கள் என்ற பாடல் தேவதைகள் மன மகிழ்ச்சியுடன் கடவுளைப் பாடி உலகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் அவர்களை மிகவும் பிடிக்கும்.
அதைக் கேள்விப்பட்டதிலிருந்து பியரிடஸ் பெண்களுக்கு மியூஸ்கள் மீது பொறாமை அதிகரித்தது. தாங்களை விட மியூஸ்கள் சிறந்த பாடகிகள் ஆக இருக்கமுடியாது என்று ஆணித்தரமாக நம்பினர்.
அதனால் அந்த மியூஸ்களைத் தங்கள் அரண்மனைக்கு அழைத்துத் தங்களுடன் பாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும்படி சவால் விட்டனர்.
தன் நாட்டில் இருக்கும் நடுவர்கள் தங்களைவிட யாரையும் சிறந்த பாடகிகளாகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினர்.
மியூஸ்கள் தங்களாகவே பாடுவதில் விருப்பம் கொண்டவர்கள். போட்டியில் கலந்துகொள்ள அவர்களுக்கு விருப்பம் இல்லை.
ஆனால் பியரிடஸ் பெண்கள் அவர்களைக் கட்டாயப்படுத்தி, போட்டியில் கலந்துகொள்ள வைத்தனர். போட்டியில் மியூஸ்களைத் தோற்கடித்து அவர்களை என்றைக்கும் பாடமுடியாமல் செய்யவேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.
போட்டி நடைபெற்றது
போட்டியில் பியரிடஸ் பெண்கள் பாடிய பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தாலும் அவை அகந்தையையும் கர்வத்தையும் வெளிப்படுத்தும் பாட்டாக இருந்தன.
மியூஸ்களின் பாடல்களோ இயற்கையின் அழகையும் தெய்வீக ஆற்றலையும் புகழ்ந்தன.
நடுவர்கள் பியரிடஸ் பெண்களின் ஆதரவாளர்களாக இருந்தாலும் , மியூஸ்களின் தெய்வீகக் குரலைக் கேட்டு மயங்கி அவர்களையே வெற்றியாளர்களாக அறிவித்தனர்.
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத பியரிடெஸ் பெண்கள் மியூஸ்களை அவமதித்து அவர்களை அழிக்க முற்பட்டனர்.
அதைக் கண்ட வானத்துக் கடவுளர்கள் , பியரிடெஸ் பெண்களின் கர்வத்தை அடக்க முன் வந்தனர். அவர்களை கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் கூக்குரல் பறவைகளாக மாற்றினர்.
இனிமையாகப் பாடும் கலைஞர்களைத் தோற்கடிக்க வந்தவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் கூச்சலிடும் பறவைகளாகிவிட்டனர்.
ப்ரோஸர்பினாவைத் தேடி அலைந்த தாய்
சிசிலித் தீவில் வசந்தத்தின் அழகும் மலர்களின் மணமும் நிறைந்திருந்தன. அங்கே தன் தோழிகளுடன் மலர்களைப் பறித்துக்கொண்டிருந்தாள் ப்ரோஸர்பினா என்ற அழகி. அவள்வேறு யாருமல்ல. பசுமைப் பயிர்களுக்கு உரிய தெய்வமான செரெஸின் மகள்.
மலர்களைப் போல் மலர்ந்துள்ள ப்ரோஸர்பினாவை பாதாள உலகத்தின் அரசனான புளூட்டோ பார்த்தான். அவளைத் தன் மனைவியாக்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.
ஒரு கணத்தில் அவன் தன் தேரில் தோன்றி, ப்ரோஸர்பினாவைக் கவர்ந்து கொண்டு பாதாள உலகத்தை நோக்கிச் சென்றான். அவள் உதவிக்காகக் கூக்குரலிட்டாள். ஆனால் அவளது குரல் காற்றில் கரைந்தது. அவளுடன் இருந்த தோழிகளால் எதுவும் செய்ய முடியவில்லை.
மகளைக் காணாமல் தவித்த செரெஸ், பூமியெங்கும் அவளைத் தேடினாள். மலைகளிலும் காடுகளிலும் ஆறுகளின் கரைகளிலும் அலைந்தாள். இரவும் பகலும் ஓய்வின்றித் தேடிய அவள், தன் மகளைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால் துயரத்தில் மூழ்கினாள்.
தன் மகளைக் கண்டுபிடிக்க முடியாத கோபத்தை , செரெஸ் பூமியின் மீது செலுத்தினாள். வயல்கள் வறண்டன; பயிர்கள் வளரவில்லை; மரங்கள் கனிகளைத் தரவில்லை. மனிதர்களின் உணவுக்கு ஆதாரமான நிலமே உயிரற்றுப் போனது.
தாயின் துயரம் உலகத்தின் துயரமாக மாறியது.
இறுதியில், ப்ரோஸர்பினா பாதாள உலகத்தில் இருப்பதைச் செரெஸ் அறிந்துகொண்டாள். ஆனால் அவளை மீட்டுவருவது எளிதான காரியமல்ல. புளூட்டோவின் ஆட்சிக்குள் சென்றவர்களுக்கு மீண்டும் பூமிக்குத் திரும்புவது கடினம்.
தன் மகளைத் திரும்பப் பெறுவதற்காகச் செரெஸ் , தெய்வங்களிடம் முறையிட்டாள். அவளுடைய துயரத்தைக் கண்ட வானுலகத்தின் அரசனான ஜூபிடர் ஒரு முடிவுக்கு வந்தான். ப்ரோஸர்பினா பாதாள உலகத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது; அதே நேரத்தில் அங்கிருந்து முழுமையாக விடுபடவும் முடியாது.
ஏனெனில், பாதாள உலகத்தில் இருந்தபோது ப்ரோஸர்பினா மாதுளம்பழத்தின் விதைகளைச் சாப்பிட்டிருந்தாள். பாதாள உலகத்தின் உணவைச் சாப்பிட்டவர் அங்கேயே ஒரு பகுதி காலம் தங்கவேண்டும் என்பது தெய்வ விதி.
எனவே ஒரு சமரசம் செய்யப்பட்டது. ஆண்டின் ஒரு பகுதியை ப்ரோஸர்பினா தன் தாய் செரெஸுடன் பூமியில் கழிப்பாள்; மற்றொரு பகுதியைத் தன் கணவன் புளூட்டோவுடன் பாதாள உலகத்தில் கழிப்பாள்.
மகள் பூமிக்குத் திரும்பும் காலத்தில் செரெஸின் மகிழ்ச்சி இயற்கையில் வெளிப்பட்டது. மரங்கள் துளிர்த்தன; மலர்கள் மலர்ந்தன; வயல்கள் செழித்தன. ப்ரோஸர்பினா பாதாள உலகத்துக்குத் திரும்பும் காலத்தில் தாயின் துயரம் மீண்டும் இயற்கையை வாடச் செய்தது.
இவ்வாறு பருவங்களின் மாறுதலுக்கான ஒரு புராண விளக்கத்தை ஓவிட் நமக்குத் தருகிறார். ப்ரோஸர்பினாவின் வருகை வசந்தத்தையும் வளத்தையும் குறிக்கிறது; அவளது பிரிவு வறட்சியையும் குளிரையும் நினைவூட்டுகிறது.
இதுதான் உருமாற்றக் காவியத்தின் தனித்துவம். உருவங்கள் மாறுகின்றன; மனிதர்களின் நிலைகள் மாறுகின்றன; பருவங்கள் மாறுகின்றன.
ஆனால் அன்பு, இன்பம் , காதல், அகந்தை, பொறாமை, துயரம் போன்ற உணர்வுகள் காலம் காலமாக நம்முடன் வாழ்கின்றன.


