
வள்ளி இது போல் தொடர்ந்து நாலு நாள் லீவு போட்டதில்லை. ஐந்து வருடங்களாக வேலைக்கு வருகிறாள். தினம் காலை சரியாக ஏழு மணிக்கு வருவாள். அலாரமே தேவை இல்லை. ஒரு மணி நேரத்தில் வீட்டை பெருக்கி துடைத்து பாத்திரம் கழுவி துணி உலர்த்தி நடுவில் ஒரு காப்பியும் சாப்பிட்டு சென்று விடுவாள். கல்பனா போன் செய்து அலுத்து விட்டாள். அடுத்த முனையில் போன் அணைக்கப்பட்டிருந்தது.” நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் கல்பனா” என்றபடியே பேப்பரை மடித்து வைத்து விட்டு அடுக்குகளைக்கு வந்தான் சேகர். இருப்பது என்னவோ இரண்டே பேர். சிம்பிளான சமையல் தான். ஆனாலும் சிங்க் முழுவதும் பாத்திரங்கள்.
” பத்து பாத்திரம்னு தானே சொல்வாங்க. இங்க முப்பதுக்கு மேல இருக்கே” என்றான்.
” நீங்களும் உங்க மொக்க ஜோக்கும்…. எனக்கு இடுப்பு ஒடியுது. இந்த பாத்திரங்களை அலம்பி கவுங்க” என்றாள் கல்பனா.
அடுப்பில் சாம்பார் கொதித்துக் கொண்டு இருந்தது.கோதாவில் இறங்கியபடியே சேகர் “வள்ளிக்கு என்ன ஆச்சு எப்பத்தான் வருவாளாம்?” என்றான்.
“இந்த மாதிரி இருந்ததே இல்லங்க. ஒரு நாள் ரெண்டு நாள் லீவு போடுவா. அதுவும் எப்பவாவது தான்”.
“போன் டிரை பண்ணியா”
“திருப்பி திருப்பி கால் பண்ணி பாத்துட்டேன். அந்தப் பக்கம் போன் ஆஃப் ஆகியிருக்கு. ஒண்ணுமே புரியல”
பேசிக்கொண்டே அத்தனை பாத்திரங்களையும் கழுவிக் கொடுத்தான் சேகர்.
“ரொம்ப தாங்ஸ்ங்க” என்றாள்
கல்பனா.
சமையலை முடித்து விட்டு குளிக்கச் சென்றாள் கல்பனா. சேகர் பேப்பரை தொடர்ந்தான்.
வள்ளி வீடு எங்கே இருக்கும் என்று தெரியவில்லை. நாலு தெரு தள்ளி ஒரு குப்பத்தில் இருப்பதாக சொல்லி இருக்கிறாள். வள்ளியோடு தினமும் அக்கப்போர் செய்திகளும் வரும். வேலை செய்து கொண்டே செய்திகள் வாசிப்பாள். நிறைய வம்புகளும் கிடைக்கும். கல்பனா சமையல் செய்து கொண்டே வள்ளிக்கு ’ஊம்’ கொட்டுவாள். அடுத்த தெருவில் இருந்த கல்லூரி மாணவி காதலனுடன் ஓடிப் போனது, பக்கத்து வீட்டில் மாமியார் மருமகள் சண்டை, தெருவில் தார் போடும் போது உடைந்த குழாயால் தேங்கிய தண்ணீர்… இப்படி பல சமாசாரங்கள்.
இது தவிர தன்னுடைய கதையையும் அடிக்கடி கல்பனாவிடம் சொல்லுவாள்.
அவள் புருஷன் வடிவேல் பிளம்பராக இருக்கிறானாம்.
தினமும் இரவு குடித்து விட்டு வருவானாம். எல்லா குடிகாரனைப் போல் வள்ளியை அடித்து உதைப்பானாம்.
“அந்த கண்றாவில அப்படி என்ன இருக்குன்னு தெரியல. கண்ணு மண்ணு தெரியாம குடிச்சிட்டு வந்து என்னை பத்தி எப்பவும் தாறு மாறா பேசும். எதுனா பதில் சொன்னா போட்டு அடிக்க ஆரம்பிச்சிரும்” என்று பல தடவை கல்பனாவிடம் புலம்புவாள்.
” நீ ஏன் சும்மா கேட்டு கிட்டு இருக்க? திருப்பி ரெண்டு சாத்த வேண்டியது தானே” என்பாள் கல்பனா.
“ஐயோ அது நடக்காதும்மா. எதாவது சொல்லப் போக என் பொண்ணையும் போட்டு அடிச்சிரும்மா” என்று அழ ஆரம்பிப்பாள்.
வள்ளி சில முறை தன் பெண்ணை இங்கு கூட்டி வந்துள்ளாள். எட்டு வயதாகிறது. மீனா மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். துருதுருவென்று களையாக இருப்பாள். கல்பனா அவளுக்கு சாக்லெட், பொம்மை என்று ஏதாவது கொடுப்பாள். நவராத்திரி தீபாவளிக்கு கண்டிப்பாக அந்தக் குழந்தைக்கு புது உடை வாங்கி தருவாள்.
கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆகியும் குழந்தை இல்லாததால் மீனாவிடம் பிரியமாக இருப்பாள்.
வடிவேலு ஒரு தடவை வள்ளியை அடிக்கும் போது மீனா “ஏன் இப்படி அம்மாவை அடிக்கிறே” ன்னு கேட்டதுக்கு பீடியால் அவள் கன்னத்தில் சூடு வைத்து விட்டானாம். சொல்லி அழுதாள் வள்ளி.
கல்பனாவுக்கு தாங்க முடியவில்லை. “என்ன வள்ளி இப்படி இருக்க? போலீசுக்கு சொல்ல வேண்டியது தானே?” என்று சத்தம் போட்டாள்.
“பாவம்மா, அந்த மனுஷனுக்கு என்ன விட்டா யாரு இருக்காங்க” என்று அலுத்துக் கொண்டாள் வள்ளி.
“ஒன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியல வள்ளி. அந்த முரடனுக்கு போய் இப்படி பரிஞ்சி பேசறியே”
” என்னம்மா பண்றது? தொட்டு தாலி கட்டிட்டான் அந்த ஆளு. அனுசரிச்சி தான் போகணும்”
“உன்னை திருத்த முடியாது வள்ளி. நானா இருந்தா அவனை கொலை பண்ணிடுவேன்”
கேட்டுக் கொண்டே இருந்த சேகருக்கு பதறியது. ’அடுத்த தரம் நண்பர்களோட சேர்ந்து தண்ணியடிச்சா கல்பனாவுக்கு தெரியாம பாத்துக்கணும்’
கல்பனா குளித்து விட்டு வந்து விட்டாள். டப்பாவில் மதிய உணவை நிரப்பிக் கொண்டே, “பேருக்கு தான் ஆபீஸ். பொழுதன்னிக்கும் சும்மா தான இருக்கீங்க.. வள்ளி வீடு எங்க இருக்குன்னு கண்டு பிடிச்சு ஏன் வேலைக்கு வரலைன்னு விசாரிச்சு வாங்களேன்” என்றாள்.
“இதோ பாரு எனக்கு அதெல்லாம் முடியாது. ஏகப்பட்ட வேலை இருக்கு”
” இல்லன்னா நாளைக்கு உங்களுக்கு சாப்பாடு நோ” என்று சொல்லி விட்டு புறப்பட்டாள் கல்பனா.
அலுவலகம் ஒரே கோலாகலமாக இருந்தது. கல்பனாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
” என்னப்பா என்ன விசேஷம்? ஆபீஸ் அதிசயமா கலகலன்னு இருக்கே” என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள்.
“நம்ம உஷாவுக்கு இன்னைக்கு காலையில குழந்தை பிறந்திருக்காம். அவ வீட்டுக்காரர் இப்பத்தான் வந்து சொல்லிட்டு லட்டு கொடுத்துத்துட்டு போறார். இந்தா எடுத்துக்க” என்று சொன்ன படியே டப்பாவை நீட்டினாள் கவிதா. கல்பனா கூட வேலை செய்பவள்.
“அட ரொம்ப நல்ல விஷயம் கவி. பொண்ணா பையனா?” கேட்டுக் கொண்டே லட்டுவை எடுத்துக் கொண்டாள்.
” டபுள் டமாக்கா. ரெட்டை. ஒரு பொண்ணு ஒரு பையன். யாருக்கு வரும் இந்த யோகம்?” என்றாள் கவிதா.
“போன மாசம் அவ வயிற்றை பாத்தப்பவே நினைச்சேன்” கண்ணடித்துச் சிரித்தாள் கல்பனா.
“அது இருக்கட்டும். நீ எப்போ கொடுக்கப் போறே?” பதிலுக்கு கண்ணடித்துக் கொண்டே கேட்டாள் கவிதா.
சட்டென முகம் மாறி தலையை கவிழ்ந்து கொண்டாள் கல்பனா. “நேரம் வரணும் கவி” என்று சொல்லியபடியே வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
தனக்கு இந்த ஜன்மத்தில் அந்த பாக்கியம் இல்லையென்று எப்படி சொல்லுவாள். கணவன் மனைவி இருவரும் பல டாக்டர்களைப் பார்த்தாயிற்று. அனைவரிடமிருந்தும் ஒரே பதில் தான். “சாரி”.
இதற்கப்புறம் ஜோதிடங்களில் நம்பிக்கையில்லை. டாக்டர்கள் இவ்வளவு தீர்மானமாக சொல்லிய பின் ஜோதிடர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். இயந்திரமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
மதியம் கொண்டு வந்திருந்த உணவை அரைகுறையாக சாப்பிட்டாள். “என்ன கல்பனா சோர்வா இருக்கீங்க?” பரிவுடன் வினவினாள் கவிதா.
“ஒண்ணுமில்லம்மா. வேலைக்காரம்மா கொஞ்ச நாளா வரல. எக்ஸ்ட்ரா வேலை. அதான் டயர்டா இருக்கு” சமாளித்தாள் கல்பனா.
தலைவலி என்று சொல்லி சாயந்திரம் சீக்கிரமே ஆபீசை விட்டுப் புறப்பட்டாள். வீட்டை நெருங்கும் போது தோன்றியது. ’வள்ளியைப் போய் பார்த்தாலென்ன?’
வண்டியை திருப்பி வள்ளி இருக்கும் ஏரியாவுக்கு சென்றாள். அவள் வீடு எங்கிருக்கும் என்றே தெரியாது. உத்தேசமாக கணித்து கொண்டு அங்கு போய் வள்ளியை பற்றி விசாரித்தாள். யாருக்கும் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் சந்துகளில் நுழைந்து ஒரு மூதாட்டியிடம் கேட்டாள்.
“எந்த வள்ளியை கேக்கறீங்க? இங்க மூணு வள்ளி இருக்கு”
கல்பனாவுக்கு சொல்லத் தெரியவில்லை.
” சின்னப் பொண்ணு இருக்கே, அந்த வள்ளியை கேக்கறீங்களா?” மூதாட்டியே க்ளூ கொடுத்தாள்.
“ஆமாம்மா. அவங்க தான். மீனாவோட அம்மா”
“ஐயோ அதை ஏம்மா கேக்கறீங்க?” மூக்கை உறிஞ்சி படவைத் தலைப்பால் துடைத்தபடியே சொன்னாள் அந்த மூதாட்டி.
“என்னம்மா என்ன ஆச்சு?” பதறினாள் கல்பனா.
“எங்க வீட்டிலே அஞ்சு வருஷமா வேலை பாக்கறாங்க. நாலு நாளா வேலைக்கு வரல. நேர்ல பாத்துட்டு போகலாம்னு வந்தேன்”
“அந்த பாவி பிள்ளை செத்து போச்சும்மா” கண்ணீருடன் சொன்னாள் கிழவி.
“அதோ பச்சைக் கலர் தகர கதவு போட்டிருக்கு பாரு இந்த சந்து முனையில கடைசி வீடு”
கையை தூக்கி காண்பித்தாள்.
கல்பனாவுக்கு நம்ப முடிவில்லை.
“என்னம்மா சொல்றீங்க? அதிர்ச்சியா இருக்கு. நல்லா தானே இருந்தாங்க?”
பாட்டி சொல்லத் தொடங்கினாள்.
“அன்னைக்கு சாயங்காலம் அவ புருஷன் வந்து வள்ளி கிட்ட குடிக்க காசு கேட்டிருக்கான். அது தர முடியாதுன்னு சொல்லி கதவை சாத்திடுச்சு. இவன் கதவை உடைச்சு உள்ள போய் ரகசியமா அந்தப் பொண்ணு வச்சிருந்த பானையிலேருந்து பணத்தை எடுத்து வந்துட்டான். வள்ளி குறுக்க விழுந்து மறிச்சா. அவன் பக்கத்தில இருந்த இரும்பு குழாயை எடுத்து அவ மண்டையில அடிச்சான். ஒரே அடியில அவ மண்டை உடைஞ்சு எல்லா ரத்தமும் வெளிய வந்து செத்துப் போச்சும்மா”
கிழவி அழுதாள். “நல்ல பொண்ணும்மா. எல்லாரு கிட்டயும் ஜோக்கா பேசிக்கிட்டிருக்கும்”
கல்பனாவுக்கு தலை சுற்றியது. அவள் ஏதிர் பார்க்கவேயில்லை. கண்ணீர் பெருகியது.
“என்னம்மா இது கொடுமை. நம்பவே முடியலையே. அவங்க குடிகார புருஷனை பத்தி அப்பப்ப சொல்லுவாங்க. ஆனா இவ்வளவு தூரம் கொலை செய்யிற அளவுக்கு போவானா?”
” எல்லாம் அவ தலை எழுத்து. கொஞ்ச நேரத்தில ஆம்புலன்சு வந்திச்சு. பொறகால போலிசு வந்து வடிவேலுவை இழுத்துக்கிட்டு போயிடுச்சு. அந்த குட்டி தான் பாவம் நிர்க்கதியா நிக்கிது”
கல்பனாவுக்கு வயிற்றைப் பிசைந்தது. தலையை கைகளால் பிடித்துக் கொண்டாள்.
கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு எழுந்தாள். ’இவ்வளவு தூரம் வந்து விட்டு வள்ளி வீட்டையும் பார்த்து விடுவோம்’ என்று எண்ணி
” சரி பெரியம்மா நான் வர்றேன்” என்று வள்ளி வீட்டுப்பக்கம் வண்டியை திருப்பினாள். அவள் அங்கே செல்வதை உணர்த்த மூதாட்டி ” அந்த கடைசி வீடும்மா” என்றாள்.
கல்பனா ஸ்கூட்டரில் வருவதைப் பார்த்த வள்ளி வீட்டின் அக்கம் பக்கத்தினர் ஐந்தாறு பேர் கூடினர். வீட்டு வாசலில் மீனா உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் உடம்பு இளைத்து முகம் வாடிப் போயிருந்தது.
“எனக்குப் பசிக்குது” மீனா முனகி கொண்டிருந்தாள்.
கல்பனா அங்கு கூடியிருந்தவர்களிடம் வள்ளி தன் வீட்டுக்கு ஐந்து வருடமாக வேலைக்கு வருவதாகவும் நான்கு நாட்கள் வராததால், தான் தேடி வந்ததாகவும் சொன்னாள்.
அனைவரும் ஒரே குரலில் சற்று முன் கிழவி சொன்ன கதையை சொல்லி அரற்றினார்கள்.
“இந்த மீனாப் பொண்ணை அநியாயமா அநாதையா விட்டுப் போயிட்டாம்மா” என்று சொல்லி அழுதனர். “அம்மாக்காரி செத்துப் போச்சு அப்பங்காரன் ஜெயிலுக்குப் போயிட்டான். அவங்க ரெண்டு பேருக்கும் கூடப்பிறந்தவங்க யாரும் இல்லை. இந்தக்குழந்தை ஆதரவு இல்லாம நிக்கிது. வேளா வேளைக்கு நாங்க யாராவது சோறு போடறோம்” என்றனர். கண் கலங்கியது கல்பனாவுக்கு.
மீனா அருகில் சென்றாள். முட்டி போட்டுக்கொண்டு மீனாவின் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு போனாள். கடவுள் தங்கள் இருவருக்கும் ஏதோ முடிச்சு போடுவது போல் உணர்ந்தாள்.
” என் கூட வரியா?”
“ம்”
“எப்பவும் எங்க கூடவே இருக்கியா?”
“ம்” என்று தலையாட்டினாள் மீனா.
கல்பனாவுக்கு கண்கள் பொங்கியது. மீனாவை அப்படியே வாரி அணைத்துக் கொண்டாள்.
” இனிமே நீ எங்க பொண்ணு”
கல்பனா அவளை அப்படியே தூக்கி ஸ்கூட்டரில் உட்கார வைத்தாள்.
ஒரு பேப்பரை எடுத்து எழுதி அக்கம் பக்கத்தினரிடம் கொடுத்தாள்.
” நான் இவளைக் கூட்டிப் போறேன். என் விலாசம் போன் நம்பர் எல்லாம் எழுதி இருக்கேன். கூடிய சீக்கிரம் சட்ட பூர்வமா தத்து எடுக்க ஏற்பாடு செய்யறேன்”
’சேகர் கண்டிப்பா இதுக்கு ஒத்துக்குவார்’ என்று சொல்லிக் கொண்டாள். அருகிலிருந்தவர்கள் திகைத்துப் போய் பார்த்தனர். சரி என்பதற்கு அடையாளமாக தலையசைத்தனர். அனைவரும் கண் கலங்கி இருந்தனர். மீனாவுடன் கல்பனா வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.
