Page 4 | HD smile a wallpapers | Peakpx

 “உன் பேச்சு கா..” என்று சுதாவிடமிருந்து வாட்ஸப்பில் வந்த மெஸேஜைப் பார்த்ததும் கிருஷ்ணாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எம்பேர்ல எதுக்கு கோபம்.. ஏன் ‘டூ’ விடணும்..’ என்று நினைத்தவாறே “நான் என்ன பண்ணினேன்” என்று கைபேசியில் டைப் அடித்து முடிப்பதற்குள் சுதாவின் அடுத்த குறுஞ்செய்தி ஒலித்தது.

“நேத்து என்னோட பிறந்த நாளுக்கு நீ ஏன் விஷ் பண்ணலே.. எத்தனையோ பேர் ஃபேஸ்புக்லயும், மெஸஞ்சர்லயும், போன்லயும் வாழ்த்து சொன்னாங்க.. ஈமெயில்ல கூட கிரீட்டிங்ஸ் வந்துச்சு.. உன்கிட்டேயிருந்து எதுவுமே இல்ல.. எவ்வளவு தான் இருந்தாலும் என் அபிமான க்ருஷ்ணாவோட ‘ஹேப்பி ஹேப்பி பர்த் டே’க்கு ஈடாகுமா..”

“ஸாரி.. ஸாரி.. சுத்தமா மறந்துட்டேன்.. பிலேடட் விஷஸ்..” என்ற வாசகங்களுடன் பூங்கொத்து ‘இமோஜி’ சமாதானம் செய்தது.

“டிசம்பர் பதினெட்டை நீ எப்படி மறக்கலாம்.. ஞாபகம் வெச்சுக்க முடியலேன்னா.. மொபைல்ல ரிமைன்டர் போட்டுக்கோ..” மரியாதை நீர்த்துப்போய், கிருஷ்ணாவை உரிமையோடு ஒருமையில் அழைப்பது சுதாவின் வழக்கமாகி விட்டது. “ஒவ்வொரு தடவையும் உன் தமிழ் நட்சத்திரத்தையும் நினைவு வெச்சுட்டு வாழ்த்து சொல்லியிருக்கேன்..”

“தெரியும் டியர்..”

பல முறை தன்னுடைய ஆங்கிலப் பிறந்த தேதியையே மறந்து போன தன் இணையரின் நினைப்பு கிருஷ்ணாவின் ஆழ்மனதில் முள்ளாக நெருடியது.

“இன்னிக்கு வீட்டு வாசல்ல போட்டிருந்த ரங்கோலி ரொம்ப நல்லாயிருக்கு.. கலர் பொடியெல்லாம் தூவி.. சூப்பர்..”

“தேங்க்ஸ்”     

“இதுவரைக்கும் நான் பார்த்ததுலயே இதுதான் பெஸ்ட்..”

வாட்ஸப்பில் கூப்பிய கரங்கள் ‘ரியாக்ட்’ செய்தது.   

“இவ்வளவு ரம்மியமா கோலம் போட்ட கைக்கு நவரத்தினம் ப்ளஸ் பிளாட்டினம்.. பத்து மோதிரம் வாங்கிக் கொடுக்கலாம்னு தோணுது..”

“எல்லா விரலையும் நூல்ல அளவெடுத்து அனுப்பட்டுமா..”

உடனே “ஷ்யூர்” என்ற பதில் சிவப்பு இதயத்துடன் சென்றது.  

*

சுதாவும் கிருஷ்ணாவும் பழைய மல்லை சாலையில் ‘அஷ்வினி ஷெல்டர்ஸ்’ என்ற ‘கேட்டெட் கம்யூனிட்டி’யின் ‘ஜி’ பிளாக்கில் எதிரெதிர் ஃப்ளாட்டில் வசித்தாலும், அவ்வளவாகச் சந்தித்துக் கொள்வதில்லை. திருமணமான அவ்விருவரும் என்றாவது கண்ணெதிரே பார்க்க நேர்ந்தாலும் மௌனப் புன்னகையுடன் கடந்து செல்வதே மரபாகி விட்டது.

கிருஷ்ணாவுக்கும் சுதாவுக்குமான எல்லாக் கருத்துப் பரிமாற்றங்களும் புலனத்தில்தான். அவர்களுடைய குறுஞ்செய்திகளில் பரஸ்பர விசாரிப்புகளும், ஆன்மீகமும், அரசியலும், எப்போதாவது ஆபாசமும் கலந்திருக்கும். சாய்பாபா முதல் சரோஜா தேவி வரை அனைத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் நெருங்கிய தோழமைகள். நட்பு என்பதைக் கடந்த ஆத்மார்த்தமான தொடர்பு.

எந்தவொரு தருணத்திலும் கிருஷ்ணாவின் வாட்ஸப்பில் படிக்கப்படாத சுதாவின் சில தகவல்கள் நிலுவையில் இருக்கும். தான் அனுப்பியதை கிருஷ்ணா பார்த்துவிட்டதன் சாட்சியாக இரட்டை நீலக் கோடுகள் வரும்வரை சுதாவுக்கு இருப்புக் கொள்ளாது.

வாட்ஸப்பில் கடந்த கால அரட்டைகளைப் பின்னோக்கி ‘ஸ்க்ரால்’ செய்து பார்க்கையில் கிருஷ்ணாவின் கொல்கொத்தா சுற்றுலாப் படங்கள் சுதா கண்ணில் பட்டன. ஹௌரா பாலத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ கவனம் ஈர்த்தது “இதுல ரொம்ப இளமையா தெரியறே..”

“ஹிஹிஹி”

“என்ன சிரிப்பு வேண்டியிருக்கு.. நிஜம்தான்.. முதல் தடவை உன்னைப் பார்க்கற யாருமே உன் வயசைக் கேட்டா நம்பமாட்டாங்க…”

“ஹ்ம்ம்ம்..”

“கல்கட்டால இருந்து எனக்கு ரஸகுல்லா வேணும்..”

“வாங்கி நானே சாப்டுட்டேன்..” என்று கண்ணடிக்கும் ‘ஸ்மைலி’யும் வந்திருந்தது.

“அடப்பாவி.. எனக்கு கொடுக்காம நீ மட்டும் தின்னா.. வயத்தை வலிக்கும்..”

கிருஷ்ணாவிடமிருந்து பதில் இல்லை.

“சென்னைக்கு எப்போ திரும்பி வர்றே..”

“அடுத்த திங்கக்கிழமை..”

தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதமாக ஒருவன் ஆனந்தக் கூத்தாடும் GIF இமேஜ் சென்றது.

வேறொரு நாள் This message was deleted என்றிருந்ததைக் கண்டு சுதா கோபத்துடன் “அதென்னது.. ஏன் அழிச்சே..” என்று கேட்க, “என்னோட கலீக் ஒருத்தருக்குப் போக வேண்டியதை உங்களுக்கு அனுப்பிட்டேன்.. அதைத்தான் டெலீட் பண்ணேன்..” என்று கிருஷ்ணா விளக்க வேண்டியதாயிற்று.

*

ரு தடவை சுதாவிடமிருந்து அபூர்வமாக வாய்ஸ் மெஸேஜ் வந்திருந்தது. தன் வலது கை நடுவிரலில் நகச்சுற்று காரணமாக தாங்கமுடியாத வலியினால் மிகவும் சிரமப்படுவதாக அந்தக் குரல் வேதனைப்பட்டது. அதைக் கேட்ட கிருஷ்ணாவிடமிருந்து சோகமாகக் கண்ணீர் சிந்தும் ஸ்டிக்கரும், “கவலைப்படாதீங்க.. நான் சாய்ராம் கிட்ட பிரார்த்தனை பண்றேன்.. நாளைக்கு வியாழக்கிழமை.. கேளம்பாக்கம் பாபா கோவிலுக்கு போகும் போது பிரத்யேகமா வேண்டிக்கறேன்.. சீக்கிரமா குணமாயிடும்..” என்ற குறுஞ்செய்தியும் சென்றது.

தலைசுற்றல் அதிகமாகி மயங்கிக் கிடந்த போதும் மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் தன்னை உதாசீனப்படுத்திய தன் வாழ்க்கைத் துணையின் செயல் சுதாவின் நெஞ்சைக் கிளறியது.

மறுதினம் சாய் மந்திர் வாசலில் கிருஷ்ணா நெற்றியில் செந்தூரப் பொட்டுடனும், கையில் தொன்னை முழுக்கப் பிரசாதத்துடனும் ஸெல்ஃபி எடுத்து அதை ‘ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய’ ஃபோட்டோவாக “உங்களுக்காக ஷீரடி பகவான்கிட்ட மனமுருகி வேண்டிக்கிட்டேன்..” என்ற செய்தியுடன் அனுப்ப, பதிலுக்கு சுதாவிடமிருந்து “ஸோ நைஸ் ஆஃப் யூ டியர்..” என்ற பதில், முத்தமிடும் இமோஜியுடன் வந்து விழந்தது.

*

விடுமுறை தினத்தில் வீட்டில் ஒற்றை ஆடையுடன் இருந்த போது கிருஷ்ணா வீடியோ காலில் அழைக்க, சுதா டென்ஷனாகி அதைத் துண்டித்ததும், சற்று நேரத்தில் “ஸாரி.. தவறுதலா கை பட்டுட்டுச்சி..” என்று கிருஷ்ணா தரப்பிலிருந்து மெஸேஜ் வந்ததும், பெருமூச்சுடன் தான் சிரித்துக் கொண்டதும் சுதாவின் ஞாபகத்திற்கு வந்தது.

*

“உன்னோட புது ‘DP’ அட்டகாசம்.. ஃபோட்டோல நீ ரொம்ப அழகாயிருக்கே..” என்ற சுதாவின் பாராட்டுக்குப் பதிலாக கிருஷ்ணாவிடமிருந்து நக்கலுடன் நகைக்கும் ஸ்மைலி வந்தது.

“உண்மையைத்தான் சொன்னேன்.. டோக்கியோ பக்கத்துல.. எனோஷிமா பீச்சுல எடுத்த பிக்சர்தானே அது..”

கட்டைவிரலை உயர்த்தும் சின்னம் ஆமோதித்தது.

“நீ ஃபாரின் போயிருந்தப்போ அந்த மூணு மாசமும் நான் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா.. தெனமும் ஒன்னைப் பார்க்க முடியாம.. உன் குரலைக் கேட்க முடியாம..”

கிருஷ்ணாவுக்குத் தன் இணையரின் சொல் அம்புகள் ஞாபகத்திற்கு வந்து வாட்டின.

நீ ஆபீஸ் வேலையா வெளியூருக்குப் போன ஒரு வாரம் நிம்மதியா இருந்தேன்’

“ஜப்பானுக்கு விஸா அவ்வளவுதான் குடுத்தாங்க.. தொண்ணூறு நாள் மட்டும் அங்க தங்கலாம்..”

“நல்ல வேளை.. நீ அமெரிக்கா போகலை..”

“ஏன்”

“ஆறு மாசம் உன்னைப் பிரிஞ்சு இருக்கணுமே..”

பதிலுக்குச் செந்நிற ஹார்ட் சிம்பல் கிருஷ்ணாவிடமிருந்து சுதாவின் அலைபேசிக்குக் காதலுடன் இடம்பெயர்ந்தது.

*

ரு முறை சுதா தன் புலனத்தில் ‘லாஸ்ட் ஸீன்’ என்பதை மறைத்து வைத்துக் கொண்டதும் கிருஷ்ணாவுக்கு பதற்றம் ஏற்பட்டது.

“அடிதான் வாங்கப் போறீங்க.. நீங்க ஆன்லைன்ல இருக்கிங்களா.. கடைசியா எப்போ பார்த்தீங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்..”

“சரி.. சரி..” என்ற பதிலுடன் ‘இறுதியாகப் பார்வையிட்ட நேரம்’ சுதாவின் பெயருக்கடியில் மீண்டும் துளிர்த்தவுடன் கிருஷ்ணாவிடமிருந்து பல்லிளிக்கும் படம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

*

“யூ டியூப்ல உன்னைப் பார்த்து எவ்ளோ மாசமாச்சு.. ஏன் இப்பல்லாம் வீடியோ போடறதில்லை..” என்ற சுதாவின் வினாவிற்கு கிருஷ்ணாவிடமிருந்து வாட்ஸப்பில் விடையில்லை.

“என்ன.. பதிலையே காணோம்..” என்று சினந்த முகத்துடன் இமோஜி சுதாவிடமிருந்து சென்றவுடன், மறுமுனை “ஃப்ரெஞ்ச் கத்துக்கறதுல மும்மரமா இருக்கேன்..” என்று பதிலளித்தது.

“திரும்பவும் உன்னை ‘யூ டியூபரா’ பார்க்கணும் போல இருக்கு.. ஒரு ‘ஷார்ட் ஃபிலிம்’லயாவது நடியேன்.. எனக்காக.. ப்ளீஸ்..”

அதைப் படித்ததும், தன் வாழ்க்கைத் துணை விஷம் கக்கின சம்பவம் கிருஷ்ணாவின் நினைவை வருத்தியது.

“எப்பப்பாரு இன்ஸ்டாகிராம்.. ரீல்ஸ்னு நேரத்தை போக்கிட்டிருக்கே.. ஊர்ல எல்லாரையும் மயக்கணும்.. அதுக்குதானே இதெல்லாம்..”

“யூ டியூப் சேனல் முன்ன மாதிரி இல்ல.. லைக்ஸ், கமென்ட்ஸ் குறைஞ்சிடுச்சு.. யாரும் ஸப்ஸ்கிரைபர்ப் பண்றதில்லை..” என்ற கிருஷ்ணாவின் நொண்டிச்சாக்கை சுதா ரசிக்கவில்லை.

“என்ன விளையாடறியா.. உன்னோட கடைசி வீடியோவை அப்லோட் பண்ண நாலு நிமிஷத்துலயே ரெண்டு லட்சம் பேர் வியூ பண்ணியிருந்தாங்க..”

“அதுக்குக் காரணம் அதோட ‘கன்டென்ட்’ தான்.. ‘லிவிங் டுகெதர்’ பத்தினதாச்சே..”

உடனே ‘ஒருவரையொருவர் ஆறுதலாகத் தழுவிக் கொள்ளும்’ படத்தை அனுப்பிய சுதாவின் மனதில் ‘நாமும் ஏறக்குறைய அதைத் தானே செய்து கொண்டிருக்கிறோம்’ என்ற எண்ணம் மின்னலாய்த் தோன்றி மறைந்தது.

*

பிப்ரவரி பதிநான்காம் தேதி ‘அஷ்வினி ஷெல்டர்ஸில்’ இருக்கும் மின்தூக்கியில் ஓர் ஆடவனும், ஒரு பெண்மணியும் தற்செயலாக ஒரே சமயத்தில் நுழைகின்றனர். உள்ளே வேறு யாருமில்லை. அங்கு சிசிடிவி கேமரா இருப்பதனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவர்கள் வசிக்கும் ஏழாவது மாடியிலிருந்து தரைத்தளம் செல்லும் வரை கனத்த மௌனம் நிலவுகிறது. ஒருவரையொருவர் தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. இரண்டு பேரும் கண்ணிமைகளைத் தாழ்த்தி தங்கள் அலைபேசிகளை வருடிக் கொண்டிருக்கிறார்கள்.

“ஹேப்பி வேலன்டைன்ஸ் டே..” என்று துடிக்கும் ஹ்ருதயத்துடன் ஒருவர் வாட்ஸப் மெஸேஜ் அனுப்ப, மற்றவரிடமிருந்து “தேங்க்ஸ் டியர்.. ஸேம் டு யூ..” என்ற பதில் வருகிறது.

“இன்னிக்கு ஸ்பெஷலா உன்னைப் பத்தி ஒரு கவிதை எழுதியிருக்கேன்..”

“என்னது..”

“அரைச் சதமடித்த அழகுப் பெட்டகம்

       குன்றாத உன்னிளமை பிரம்ம ரகசியம்..”

என்ற தொடக்க வரிகளைப் படித்த உடனேயே கை குலுக்கும் சின்னம் நன்றி நவில்கிறது.

லிஃப்ட் கீழே இறங்கி கதவு திறந்தவுடன், தங்களுடைய இணையரிடமிருந்து விவாகரத்துப் பெற்று, வாரிசுகள் இன்றி, தனித்து வாழும் அவ்விருவரும் ஆளுக்கொரு திசையில் வெளியேறிச் செல்கின்றனர்.

வாட்ஸப்பில் மானசீக தம்பதிகளாக வாழ்க்கை நடத்தி வரும் அந்த ஜோடி நாற்பத்தைந்து வயதான ‘சுதா’ என்ற சுதாங்கன் மற்றும் ஐம்பதைத் தொட்டு விட்ட ‘க்ருஷ்ணா’ என்ற கிருஷ்ணப்ரியா.