
ஐம்பது வயதான லிடியாவின் கணவனின் உடல்நிலை திடீரெனச் சரிந்தது. கல்யாணமான மகனும் மகளும் பல வருடங்களாக வெளிநாட்டில் வசிப்பவர்கள், உதவ வரமுடியாத நிலை. தானாகவே பார்த்துக் கொண்டாள். சிகிச்சை பலனளிக்கவில்லை. மரணம் அடைந்தார்.
லிடியாவும் கணவனும் அன்பான தம்பதிகள். நோய் வாட்டிய போது, கணவனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாள். இப்போது மிஞ்சியது தனிமை.
மருத்துவர்கள் கணவரின் நிலைமைக் கடைசிக் கட்டம் என்றதிலிருந்து லிடியா தன் புத்தகச் செம்மையாக்கையை (Editing) வீட்டிலிருந்தே செய்து வந்தாள். இயற்கை ஆர்வலராகவும் இருந்தவள், இதற்காக வெளியே சென்றுவர வேண்டும் என்பதால் இதற்கும், தம்முடைய நாடகங்கள் அமைப்பதற்கும் முற்றுப்புள்ளி வைத்தாள். இவற்றிற்குக் கடுகளவும் வருத்தமோ வேதனையோ படவில்லை என்றாள்.
கணவனின் மறைவிற்குப் பிறகு நினைவலைகள் ஓயவே இல்லை. வெளியே செல்ல மனம் விரும்பவில்லை என்றாள். நாள்தோறும் தொலைக்காட்சிச் சீரியல் பார்ப்பதில் மூழ்கியதினால் உணவு, குளியல், அலங்காரம், வீட்டுப் பராமரிப்பு இவற்றில் ஈடுபாடு குறைந்து விட்டது. தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தால் யாரும் சந்திக்கவும் வரவில்லை.
பிரியமானவரின் மறைவினால் ஏற்படும் துயரத்தின் முதல் கட்டத்தின் தோற்றம் இவ்வாறு. தனிமை நிலையானது துக்கத்தை அதிகரித்தது.
நெஞ்சில் அடக்கி ஒடுக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதான Catharsis (கதார்சிஸ்) வழிமுறையை முதலில் ஸெஷன்களின் மையமாக்கினோம்; சூழல், எண்ண ஓட்டங்கள், உணர்ந்தவற்றை லிடியா நினைவூட்டிக் கூறி வந்தாள்.
ஸெஷனில், மனதில் ஆழ்ந்து பதிந்தவற்றை லிடியா பகிர்ந்து கொண்டாள். அதில் வெளிவந்ததோ, அவளுடைய துயர நிலை. கணவனை இழந்த துக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விருப்பப்படவில்லை! மாறாக, கணவனை, அவரின் பிம்பத்தை விதவிதமாகக் காண, இழப்பு உணர்ச்சி தொடர்ந்தது. செஷன்கள் தொடர்ந்து செல்ல, லிடியா வெகுவாக அடையாளம் கண்டுகொண்டது, இந்த நினைவலைகள் தமது தினசரி செயல்பாட்டில் புகுந்து கொண்டது என்று! ஒவ்வொன்றும் நினைவுகளைத் தூண்டியது.
அடுத்த கட்டமாக லிடியா சீரியல் பார்ப்பதை மையமாக வைத்து ஸெஷன்களை அமைத்தேன். இதன் நோக்கமே சுயப்-பிரதிபலிப்பு (Self- reflection). சீரியலில் யாருடைய வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதாக எண்ணினார் லிடியா?
யாரோ ஒருவரின் சுக துக்கங்களைப் பார்வையிட அந்த நிமிடங்களுக்கு லிடியா தன் நிலையைப் புதைத்து வைப்பாள். இப்படிக் கூட தமது நினைவலையை அமைதிப் படுத்த முடியாததை அடையாளம் கண்டுகொண்டாள்.
தோன்றும் நினைவலைகளைப் பகிர ஆரம்பித்தாள். ஞாபகங்கள் மனதிற்கு இதமாக இருப்பதைக் கண்டுகொள்ள, அவை நீக்கப்பட வேண்டியவை இல்லை என்றதை ஏற்றுக் கொண்டாள் லிடியா. இந்தத் தருணத்தில், சுய ஆய்வை உபயோகித்தேன்.
இத்தனை நாட்களாக விடாமல் சீரியல் பார்ப்பதில் தன் நிலையை ஒப்பிடும்போது என்ன தோன்றுகிறது என்றதை எடுத்துக் கொண்டோம். தயக்கத்துடன் மேலோட்டமாக ஆரம்பித்த லிடியா, தொடர்ந்து பகிர்ந்து கொண்டதும், கதாபாத்திரத்தின் இன்பங்களை தமது துக்க நிலையில் கூட எந்தக் குற்ற உணர்வுமின்றி அனுபவித்ததை, அதை மனம் ஏற்றுக் கொண்டதைப் பார்த்தாள்.
துயர நிலையில் உள்ளவருக்குச் சோகம், கண்ணீர் ஏற்றுக்கொள்ளத் தோன்றும். இந்நேரங்களில் சந்தோஷத்தின் எந்த இழையையும் நிராகரித்து விடுவோம். அதற்குள் மறைந்தவரை மறந்து விட்டோமோ என்ற சொற்கள் மலரும். இதைத் தவிர்க்கவே லிடியா கற்பனை கதாபாத்திர உலகில் இணைந்து கொண்டாள்.
காட்சிகளில் துன்ப நிலைகள் வரும்போது தன் நிலையை நினைத்துக் கொள்ள, கண்ணீர் விடுவதைக் கூறினாள்.
தன் நிலைப்பாடுகளுடன் சீரியலில் இருப்பதை ஒப்பிடத் தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து கவனமான ஆற்றலுடன் செய்ய, அதிலிருந்து லிடியா தமது போக்கு சரியா தவறா எனக் கணித்து, தவறானால் மாற்றி அமைத்தாள். பலன் கிடைத்தது!
நாடகங்கள் போடுவதால் கதாபாத்திரத்திலிருந்து கற்றுக் கொண்டதை லிடியாவை விவரிக்கச் செய்தேன். விளைவு, தமது முன்பு இருந்த செயல்பாடுகளைத் தொடருவதின் அவசியமும் அது நிதர்சனம் என்றும் புரிந்து கொண்டாள்.
லிடியா குற்ற உணர்வில் தன்னைக் கடிந்து கொள்வதாகக் கூறினாள். இந்த உணர்வின் அடிப்படை தனிமை. மறைவின் துயர நிலையின் ஓர் விளைவு எனப் புரிந்ததுமே செயல்பாடுகளைத் துவக்கினாள். சில நாட்களுக்குப் பிறகு இதமாக இருப்பதாகப் பகிர்ந்தாள்.
இழப்பின் துயரத்தில் இருக்கும் போது எப்படி இதமாக உணர முடியும் என்ற கேள்வி அவளைத் துளைப்பதாகப் பகிர்ந்தாள். இதைப் பல கோணங்களில் ஸெஷனில் எடுத்துக் கொண்டோம். இதுபோன்ற நிலையை உணருவது இயல்பு லிடியாவிற்கு புரிந்தது.
இருந்தும் லிடியா இப்போதைய வாழ்க்கை பயனற்றது என்று அலையும் எண்ணங்களைக் கண்ணீர் மல்கப் பகிர்ந்தாள். நெருங்கிய சொந்த பந்தங்கள் மரணம் அடைந்த பின்னர் இது போன்ற கேள்விகள் எழும். எப்போதெல்லாம் அவ்வாறு தோன்றுகிறது என்று குறித்துக் கொண்டு விவரிக்க வைத்தேன்.
கணவரின் உடல்நலம் மாறியதும் பல உறவுகள் விலகியதைப் பகிர்ந்தாள். ஏன் எதற்கு என்றதை ஸெஷன்களில் ஆராயச் செய்தேன்.
அவர்கள் ஏதோவொரு எதிர்பார்ப்பை வைத்து நட்பை வளர்த்துக் கொண்டது புரிந்தது. ஆழம் இல்லா உறவுகள் சில. மாறாக, தொடரும் உறவுகள் வெவ்வேறு சூழலில் தரும் பக்கபலத்தை அலசிப் பார்க்க, தைரியம் கூடியதென மெய்மறந்து பகிர்ந்தாள்!
வீடு வெறிச்சோடி இருப்பதில் தனிமையை உணர்ந்தாள். கணவர் மறைவைத் தவிர்த்திருக்கலாமோ எனக் கோபத்துடன் வெளிப்படுத்தினாள். பல ஸெஷன்களுக்கு பிறகு அது சாத்தியம் அல்ல என்று ஏற்றுக்கொண்டாள். துயரம் நேர்ந்த சமீபத்தில் இவ்வாறு துயரத்தில் சொல்வார்கள்.
லிடியா பல்வேறு வகைப் படிப்பு ரசனை உள்ளவராக இருந்ததால் துயரத்தைச்சான்ற உண்மை சரித்திரங்கள், கதை, கட்டுரைப் பகுதிகளைப் படிக்கக் கொடுத்தேன். தனது நிலையை எழுதவோ அல்ல சித்திர வடிவத்தில் வடிவமைக்கவோ பரிந்துரைத்தேன். தற்போது செய்வது தம் இயல்பான நிலை இல்லை என லிடியா கவனிக்க ஆரம்பித்தாள்.
தெரிந்தவர்கள் சொல்லும் அவளின் குணாதிசயங்களைப் பட்டியலிடக் கூறினேன். பலர் நேர்மறை எண்ணம் உள்ளவள், அசாத்தியமாக உழைப்பவள் என்பார்கள் என்றாள். இப்போது இரண்டுமே மங்கிப் போனதாக அவளுக்குத் தோன்றியது. எதிர்மறை எண்ண ஓட்டங்களே தம்மைத் தடுக்கின்றன என உணர்ந்தாள்.
ஸெஷனில் தெளிவடைந்தாள். குணாதிசயங்கள் மங்கவில்லை. லிடியாவிற்கு எதிர்கொள்ளும் கேள்விகளைச் சந்திக்க மனம் வராததால் பின்தங்கிய நிலையிலிருந்தது. இன்றைய பொழுதைக் கூடச் சந்திக்க விருப்பப் படாததால் நேர்ந்தது. எதிர்காலத்தைப் பற்றி எண்ணவே மனம் விடவில்லை.
காரணங்களை லிடியா தேட, ஒரே பதில்: யாருக்காக? எழுந்ததும், என்ன செய்ய? ஏன்? எதற்காக? என மொத்த வாழ்க்கையை அதில் வைத்தாள். சிந்தனை-மனம் இவ்வாறு ஒன்றி இயங்க, தேவையில்லை, பயனில்லை என்ற எதிர்மறையான சிந்தனையும் உணர்வும் மேலோங்கியது.
இவற்றில் தம்முடைய குணம் கடுகளவும் இல்லாததை லிடியா ஆச்சரியமாகப் பார்க்க, ஸெஷனை இதை மையமாக்கி நடத்தினேன்.
தன் எதிர்பார்ப்பைப் பற்றிய தகவல்களை லிடியா பகிர்ந்தார். மகனும் மகளும் தாங்கள் வசிக்கும் இடத்தின் கலாச்சாரப் பண்பாட்டைக் கூறி லிடியாவிடம் துயரத்தை விடச் சொன்னார்கள். தன் நிலையை அறியவில்லையோ என்ற கேள்வி மனதில் ஓடுவதால் லிடியா பிள்ளைகளைத் தனக்குப் பக்கபலமாகக் கருதவில்லை எனக் கூறினாள். கூட இல்லாத போதும் அவர்கள் பரிவுடன் இல்லாததினால் தாம் ஏமாற்றம் அடைந்ததை வெளிப்படுத்தினாள். இது லிடியாவின் யதார்த்த நிலை.
லிடியாவின் கலாச்சாரத்தில் ஒரு வருட கால துயர நிலை. எல்லா கலாச்சாரத்திலும் இதுபோன்று உள்ளன. கவனச் சிதறலின்றி தேவையான சடங்குகள் செய்ய, மறைந்தவரைப் பற்றிய நினைவலைகள், சிந்தனையைச் செய்வதற்கெல்லாம் அவகாசம் கொடுக்கின்றன. அந்தக் காலகட்டம் கடந்த பின்னர் தமக்கும் வாழ அனுமதி உண்டு என்பது இதில் அடங்கி விடுகிறது.
மனநலன் தளராமல் இருக்க லிடியா தேவையான வழிகளைச் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டார்.
முதல் படியாக, பிள்ளைகளின் குறைபாடுகளை அவதூறாகப் பேசினாள். வெகு சீக்கிரத்தில் தாம் எதிர்மறைகளைக் குவிப்பதை அடையாளம் கண்டாள்.
வேலையில் லிடியா உடனடியாக முடிக்க வேண்டியதற்குக் கவனம் செலுத்த நேர்ந்தது. பல வாரங்களுக்குப் பிறகு ஆரம்பம், முதலில் பளு என்று நினைத்துச் செய்தாள். குழப்பத்தில் தடுமாறினாள். ஆனால் அவசரமாகச் செய்ய நேரம் வந்துவிட்டது. பதட்டம் ஒரு பக்கம், தன் பொறுப்புகளைப் புறக்கணிக்கிறோமே என்ற குற்ற மனப்பான்மை மறுபக்கம்.
பிறகு ஸெஷனில் ஆராய, போகப்போக எளிதானதை உணர்ந்தாள். பரிச்சயமானதைச் செய்து முடிக்க, முடிந்ததும் மனோதைரியம் வந்தது. வாழ்வை நடத்த வேண்டும், பொறுப்புகளையும் செயல்பாட்டில் கொண்டு வருவது யதார்த்தம் என லிடியா புரிந்து கொண்டாள்.
இந்த நிலையைக் கருவியாக எடுத்துக் கொண்டு, லிடியாவை அதற்கு ஏற்றவாறு வழிகளை அமைக்கப் பரிந்துரைத்தேன். சிந்தனை-உணர்வு-செயலை ஒன்றிணைத்துச் செய்ய முயன்றாள். வென்றாள்!
சூழலைக் கணக்கு செய்தாள். கூடவே பயணிக்கும் பயம்-சந்தேகம் கலவை இருப்பதைப் பார்த்தாள். எங்கள் துறையில் விழிப்புணர்வு இருப்பதே மாற்றத்தின் முதல் கட்டமாகக் கருதுவோம்! லிடியா இந்த நிலையை அடைந்திருந்தாள்.
தன்னை ஊக்குவித்துக் கொள்ள நடைப்பயிற்சி, இயற்கை ஆய்வாளருடன் வார விடுமுறையில் ஆர்வத்துடன் செய்தாள் லிடியா. எழுதும் நாடகங்களிலும் பங்கேற்க, பெற்ற வெற்றிகளை அடக்கத்துடன் பகிர்ந்தாள்! உற்சாகமாக இருந்தாள் லிடியா!
மரணம்!
நினைவுகள் எழும்பும்!
வாழ்வோருக்கு இழப்பைக் கடக்கப்
பல படிகள்!
மேலும் வாழ்வை வடிவமைப்பது, நம்மிடமே!
**************************************
