அஞ்சல் அட்டை

( மாதிரி அஞ்சலட்டை : கூகிள் தேடலில் கிடைத்தது)
இது பழைய நினைவுகளைப் பற்றியது என்று இந்தத் தலைப்பைப் பார்த்த உடனேயே புரிந்துகொண்டு இருப்பீர்கள், ஆம்! நீங்கள் அறுபது வயதுக்கு மேல் என்றால் , அஞ்சல் அட்டைகளை அதிகம் கண்ட தலைமுறை நாம் எனக் கொள்ளலாம்.
அஞ்சல் அட்டைகள் ஆரம்பிக்கப்பட்ட வரலாறுகளும் அதற்கு இன்றைய தேவை இல்லாதிருக்கும் நிலைகள் பற்றியும் நாம் அறிவோம். இல்லையென்றால் கூகிள் ஆசானைக் கேட்டால் , புள்ளிவிவரங்களோடு பதில் வந்துவிடும். அதல்ல இக்கட்டுரையின் நோக்கம்.
ஒவ்வொருவர் வாழ்விலும் அஞ்சல் அட்டையோடு கலந்த அல்லது கரைந்த பல கணங்கள் இருந்திருக்கும்; மறக்க முடியாத நினைவுகளாகவும் அவை மாறியிருந்திருக்கக் கூடும். அப்படிப்பட்ட சில சுவையான நிகழ்வுகளை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
ஆண்டு 1964; என் வயது பதினைந்து. அதுவரை வீட்டிற்கு வரும் அஞ்சல் அட்டைகளையும் தபால்களையும் எடுத்துப் பார்த்திருக்கிறேனே தவிர நான் யாருக்கும் கடிதம் எழுதியது கிடையாது. எழுத வாய்ப்பும் இருந்ததில்லை. என்னுடைய “ ஃபர்ஸ்ட் கஸின்ஸ்” எல்லோரும் சென்னையில் வசிப்பவர்கள். தி. நகர், மயிலை, திருவல்லிக்கேணி பகுதிகளில் வாழ்பவர்கள். தொண்ணூறு விழுக்காடு என்னிலும் இளையவர்கள். தூரத்து உறவுகள் நெல்லை, மதுரை, திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை போன்ற இடங்களில் வசித்தாலும், கடிதப் போக்குவரத்து அவ்வளவாகக் கிடையாது. திருமணம், சீமந்தம் , உபநயனம், கிருகப்ரவேஸம் போன்ற நிகழ்ச்சிகளில் சந்திப்பதோடு உறவாடுதல் நின்றுவிடும். இதிலே நான் யாருக்குக் கடிதம் எழுதி , யாருடைய பதில் கிடைக்க வாய்ப்பு இருக்கும்?
எனது பதினைந்தாவது வயதில் அந்த வாய்ப்பு வந்தது. சாதாரணமாக வரவில்லை ;ஒரு பெரும் விபத்தாக வந்தது.
இத்தொடர் கட்டுரைகளில் ஏற்கனவே என் பள்ளிக் காலத்தையும், அதில் எனது என்.சி.சி அனுபவங்களைப் பற்றியும் எழுதியுள்ளேன். அதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மீண்டும் நினைவுபடுத்தினால்தான் உங்களால் இந்தக் கட்டுரையின் போக்கை :கனெக்ட் செய்து கொள்ள முடியும்.
பள்ளி இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறேன். என். ஸி. ஸி யில் லான்ஸ் கார்போரல் பதவி. சட்டைக் கையில் இரண்டு வெள்ளைப் பட்டைகள். இன்னும் ஒரு வாரத்தில் ரெட் ஹில்ஸ் சாரணர் முகாம். எனக்கு ஆர்வமும் உற்சாகமும் அதிகமானது. பள்ளி சாரணர் முகாமுக்கான பணிகளில் வகுப்பு நேரம் போக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தேன்.
நான் படித்த சென்னை தி,நகர் இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி (மெயின்) மிக அருமையான கட்டடம். மூன்று தளங்களைக் கொண்டது. தரை, ஒன்று , இரண்டு . ஆங்கில எல் எழுத்து வடிவத்தில் அமைந்த கட்டடத்தின் இரண்டு பக்கங்களிலும் மாணவர்கள் எறிச்செல்ல அகலமான படிக்கட்டுகள் உண்டு. நடுவிலேயும் முதல் தளத்துக்குச் செல்ல வளைந்த படிக்கட்டுகள் உண்டு. இந்த அத்தனை வழிகளையும் பயன்படுத்திக் கொண்டு மேலும் கீழுமாய் நானும் கூட இரு நண்பர்களும் முகாம் பணிகளுக்காக ஒரு வாரமாய் உழைத்துக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் ஒன்றும் நிகழவில்லை.
முகாம் செல்வதற்கு முதல் நாள், லாட ஆணிகள் அடித்த கனமான என். ஸி. ஸி. பூட்ஸ் அணிந்து கொண்டு , இரண்டாம் தளத்திலிருந்து முதல்தளம் செல்ல வழவழப்பான சிமெண்ட் படிக்கட்டுகளில் வேகமாக இறங்க .. ..
கண் திறந்து பார்த்தால் , வீட்டில் படுக்கையில் கிடக்கிறேன். நல்ல காலம் வேறெங்கும் அடியில்லை. காலில் வலி ; கொஞ்ச நேரத்தில் கணுக்காலுக்கு மேலே புசு புசு வென்று வீங்கிவிட்டது. காலை நகர்த்த முடியாமல் பெருவலி. காலை பத்து மணிக்கு இது நடந்தது. அன்று முழுக்க ஏதோ ஒத்தடம் அமிர்தாஞ்சன் சிகித்சை.
மறுநாள் உஸ்மான் ரோடில் எக்ஸ் ரே வசதி இருக்கும் ஒரே நர்ஸிங் ஹோம்-ல் அந்தக் கால (1964) பிரபல எலும்பு மருத்துவர் நரசிம்மன் ,அந்தக் கால முறைப்படி “குளோரோஃபார்ம்” கொடுத்து, பெரிய பிளஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டுப் போட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
என தமக்கை சொன்னாள், நான் மயக்க நிலையில் “ டாக்டர் என் . ஸி. ஸி. காம்ப் இருக்கு , நாளைக்கு போலாமா?” என்று கேட்டேனாம்.
பிறகுதான் தெரிந்தது, இசகு பிசகாக எலும்பு விரிசல் இருப்பதால் மூன்று மாதங்கள் படுக்கை. எங்கும் போக முடியாது. நீட்டிய காலோடு வீட்டுக்குள்ளேயே தரையில் நகர்ந்துதான் செல்ல வேண்டும்.
அக்கால மருத்துவ வசதி அவ்வளவே. ஆனால் சொல்லக்கூடாது. வீட்டில் அத்தனை பேர்களும் என் பாட்டியும் என்னை அப்படி கவனித்துக் கொண்டார்கள். இப்போது போல பள்ளி இறுதியாண்டு தேர்வுக்கான படிப்புக்கு அப்போது அத்தனை நெருக்கடி வீட்டில் கிடையாது. பள்ளி முடித்து கல்லூரியில் பி. யூ. ஸி. சேரவேண்டும். அதில் கிடைக்கும் மதிப்பெண்களே மேல் படிப்புகளை நிர்ணயம் செய்யும்.
வகுப்பு ஆசிரியர்கள் வந்து பார்த்து ஆறுதல் சொன்னார்கள் “ டேய்! எதுக்கும் கவலைப் படாதே .. நீ நல்ல படிக்கிற பையன் .. எக்ஸாம்-க்கு முன்னால் கொஞ்சம் தனிப் பயிற்சி எடுத்துக் கொண்டால் போதும்; நல்ல மார்க் வாங்கிடலாம் – இப்ப நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ “
ஆக, மூன்று மாதங்கள் சுக போகம். கட்டுப் போட்ட மறுநாளே வலியெல்லாம் காணாம போயிடுச்சு. மூவ்மென்ட் தான் பிரச்சினை. மத்தபடி சாப்பாடு , தூக்கம். ஏராளம். ஒரு வாரத்தில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. வீட்டில் வழக்கமாக வரும், கல்கி, ஆனந்தவிகடன், கல்கண்டு ஆகியவற்றில் உள்ள கதைகளையும் கட்டுரைகளையும் , ஒரு மாற்றம் தேவை என்று படிக்க ஆரம்பித்தேன். அவை என்னை உண்மையிலேயே மாற்றிவிட்டன. தமிழ் இதழ்களின் வாசகன் ஆக்கின.
அக்காலப் பத்திரிக்கைகளில் “சிறுவர் பக்கம்” என்று ஒரு பகுதி வரும் பள்ளிச் சிறுவர்களின் எழுத்துகள் ,படைப்புகள், ஓவியங்கள், கவிதைகள் அவற்றில் வரும். அவற்றை எல்லாம் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
ஒரு சிறுவர் மலரில் “பேனா நண்பர்கள்” என்று ஒரு பகுதி வந்துகொண்டிருந்தது. கடிதப் போக்குவரத்தின் மூலம் நண்பர்களாக விரும்புபவர்கள் தங்கள் முகவரிகளையும், தங்கள் ஆர்வம், திறமை பற்றியும் குறிப்பிடலாம். சிறுவர் மலர் இந்த அழைப்புகளைப் பிரசுரம் செய்யும். ஆர்வம் மற்றும் திறமைகளில் ஒத்துப்போகும் நபர்கள் கடிதங்கள் மூலம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
முதன்முதலாக அப்பத்திரிக்கைக்கு என்னைப் பற்றிய விவரங்களை ஓர் அஞ்சல் அட்டையில் எழுதி ,தபாலில் சேர்த்தேன். எனது ஆர்வம், கதை படித்தல், கவிதை எழுதுதல் என எழுதியிருந்தேன். அடுத்த வார இதழில் பேனா நண்பர்கள் பகுதியில் என் பெயரும் முகவரியும் வந்திருந்தது. நான் மிக மகிழ்ந்தேன்.
கால் எலும்பு முறிவு சரியானது. பிளாஸ்டர் கட்டு விலக்கப்பட்டது. பழைய சீரான பள்ளி வாழ்க்கை திரும்பியது. இந்த விபத்தே ஒரு நினைவாக்கிப் போனது.
கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் பேனா நண்பர் குழுவில் ஒரு நாலைந்து நபர்களோடு நண்பனாய் இருந்து பல கடிதங்கள் எழுதினேன். சேலத்திலிருந்து ராஜசேகரன் என்பவனோடு கடிதம் மூலம் பல கவிதைகள் பகிர்ந்து கொண்டது இலேசாக நினைவில் உள்ளது. கல்லூரி வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் இலக்கிய மேடைகள், போட்டிகள் இவற்றின் நடுவில் , என்னை முதலில் எழுதத் தூண்டிய அஞ்சல் அட்டையை நான் எப்படி நினைவில் நிறுத்திக் கொள்ள முடியும்?
என்றாலும், இள வயதில் நான் கண்ட அஞ்சல் அட்டைகள் மீண்டும் நினைவில் பவனி வருகின்றன.
மருத்துவக் கல்லூரி சேர்ப்புக்கான நேர்காணல் அட்டை , அரசு முத்திரையோடு “ரோஸ்” கலரில் வந்தது நினைவிருக்கிறது. ( இரண்டு முறை முயன்றும் கிடைக்கவில்லை. மதிப்பெண் மட்டுமே காரணம் இல்லையென்று பிறகு அறிந்துகொண்டேன்!)
1987-ல் சென்னை பாரதி கலைக் கழகம் எனக்களித்த உயரிய விருதான “கவிமாமணி” பட்டத்துக்கான தகவலை, அதன் தலைவர் திரு பாரதி சுராஜ் அவர்கள் ஓர் அஞ்சல் அட்டையில் எழுதித்தான் எனக்கு முதலில் அறிவித்தார். அக்கால அஞ்சல் அட்டைகள் எந்த விதத்திலும் கண்ணியக் குறைவானவை அல்ல.
கவிதை உறவின் பரிசு பெற்று “கிணறு தோண்டுவோம் வா” என்ற தலைப்பில் “அமுதசுரபியில்” வெளியான என் கவிதையைப் பாராட்டி “ நீங்கள் தாமரைக்கும் எழுதவேண்டும்” என்று எளிய அஞ்சல் அட்டையில்தான் “திரு தி. க. சி.” எனக்கு கடிதம் எழுதியிருந்தார். பொக்கிஷமல்லவா அது !
“பூவதனைக்
கடவுளுக்குப் போட்டாலும்
கல்லறைக்குப் போட்டாலும்
வேறுபாடு ஏதுமில்லை – ஏனென்றால்
பூவினது சாவு பூத்தவுடன் வந்துவிடும்.
என்ற “நடை” யில் பிரசுரமான எனது கவிதையைப் படித்த பிறகு “ பேராசிரியர் வவேசு வுக்கு- உங்கள் வண்ணம் என்ன ? “ என்று ஒற்றை வரியில் அஞ்சல் அட்டையில் தன் விமரிசனத்தைப் பதிவு செய்தவர் திரு சுராஜ். அது நீண்ட விவாதப் பொருளானது. இலக்கிய விவாதங்களைத் துண்டக் கூடிய பல கருத்துக்களை திரு சுராஜ் அஞ்சல் அட்டைகளில் எழுதி அனுப்பியுள்ளார் என்பது நினைவுக்கு வருகிறது.
தொங்கு பைகளில் எப்போதும் பத்து அஞ்சல் அட்டைகளோடு திரிந்த பல இலக்கிய நண்பர்கள், அமைப்பாளர்கள், கவிஞர்கள் அக்காலத்தில் எனக்கு நண்பர்களாய் இருந்திருக்கிறார்கள்.
பிரபலங்களுக்கு “விசிறி” களாகக் கடிதம் எழுதி அவர்கள் அனுப்பிய “பதில்” அஞ்சல் அட்டைகளை சேமித்துவைத்து மகிழ்ச்சி அடைந்த நண்பர்களையும் நான் கண்டதுண்டு.
என் தந்தையாருக்கு ஒரு வழக்கம் இருந்தது. இரங்கல் , இறப்புச் செய்திகளை ஏந்திவரும் அஞ்சல் அட்டைகளைப் படித்துவிட்டு பாதுகாப்பாக வைக்க மாட்டார். உடனே கிழித்துப் போட்டுவிடுவார். ஏன் என்று ஒருமுறை கேட்டேன். “ அவர்கள் வீட்டில் மேலும் எந்த வருத்தச் செய்தியும் நிகழவேண்டாம்” என வேண்டிக்கொண்டு கிழித்துப் போடுவேன் “ என்றார்.
அஞ்சல் அட்டை நினைவுகள் எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன.
சுருக்கம்தானே அஞ்சல் அட்டையின் சிறப்பு. நிறுத்திக் கொள்கிறேன்.
