யூனிபார்மையும் அணிந்திருந்த மெடல்களையும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்தபின் திருப்தியுடன் தன் தொப்பியை அணிந்த கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் கம்பீரமாக வாசலில் நிற்கும் ஜீப்பை நோக்கி நடக்கிறார். யூனிபார்மை அணிந்தவுடன் கூடிவிடும் கணவரின் மிடுக்கைச் சந்தோஷமாக ரசிக்கும் மனைவி மல்லிகாவிடம் “ “சரியான நேரத்துக்கு நீயும் சாந்தியும் வந்திறங்க என் பேர் போட்ட இரண்டு சீட் பார்த்து உட்கார்ந்துக்கங்க. வாய்ப்பு கிடைத்தால் உங்களைக் கவர்னருக்கும் முதலமைச்சருக்கு அறிமுகப்படுத்துவேன். என்று சொல்லியபடியே ஜீப்பில் ஏறுகிறார். இன்றைய சுதந்திரத் தின விழாவில் அவருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறார்கள். அவரது 21 ஆண்டு பணியில் வீரதீரச் செய்ல்களுக்கான முதலமைச்சர் பதக்கம் பெற்றவர். தொடர்ந்த நேர்மையான சேவைக்காகவும் பதக்கமும் பாரட்டுப் பத்திரங்களும் பெற்றவர். இன்று போலீஸ் பணியிலேயே மிகப்பெரிய கெளரவமான குடியரசுத்தலைவர் பதக்கம் பெறுகிறார்.
உடை மாற்றிக்கொள்ள உள்ளே திரும்பிய மல்லிகாவிற்கு கடந்த வாரம் மகள் வசந்தி அமெரிக்காவிலிருந்து பேசும் போது சொன்னது நினைவிற்கு வருகிறது”அப்பாவிற்கு மெடல் கொடுத்தபின் எல்லோரும் உன்னையும் பாராட்டுவாங்க. கமிஷனர் மனைவி, ஐ ஜி மனைவி என்று கூச்சப்பட்டுத் தயங்கி ஒதுங்காமல் தைரியமாக அவர்களிடம் கைகொடுத்துச் சிரித்துப் பேசு” என்று சொன்னதை நினைத்துச் சிரித்துக்கொண்டே அன்று கட்டத் தீர்மானித்திருந்த சேலையை எடுக்கிறார். .
வசந்தி +2 முடித்தவுடன் தேசியளவிலான தேர்வுக்குபின் நேஷனல் லா ஸ்கூலில் சட்டம் படித்து முடித்து இப்போது அமெரிக்காவில் சியாட்டிலிருக்கும் யுனிவர்சிட்டி ஆப் வாஷிங்டனில் மேற்படிப்பு முடித்து ஒரு பெரிய சட்ட நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்.. அடுத்த மாதம் அவருடைய பட்டமளிப்பு விழாவிற்கு அப்பாவையும் அம்மாவையும் அழைக்கத் திட்டமிட்டுப் பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறார். அப்பா பணியினால் வர முடியாது என்கிறார். அவரை எப்படியும் சம்மதிக்க வைத்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் வசந்தி
வசந்தியின் தங்கை கீதாவும் மிக நன்றாகப் படிக்கும் மாணவி. உள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவி.
மரியாதை நிமித்தம் தன் உயர் அதிகாரிகளைச் சந்தித்து வாழ்த்து பெற்றபின் தனக்கு ஒதுக்கபட்ட இருக்கையில் அமர்கிறார் ராஜ் மோகன். மெரினா கடற்கரை சாலையில் வழக்கமான சுதந்திர நாள் அணிவகுப்புகள், ஊர்திகளின் ஊர்வலம், ஆட்டங்கள் எல்லாம் முடிந்தபின் பரிசளிப்பு விழா தொடங்குகிறது. மல்லிகாவும் கீதாவும் இன்னும் வரவில்லை.
அறிவிப்பாளர் ஹேமா தன் கவர்ச்சியான குரலில் ராஜ்மோகனின் சாதனைகளை அறிவிக்கும்போது கம்பீரமான மார்ச்சைத் தொடர்ந்து சல்யூட் செய்த அவருக்கு முதல்வர் பதக்கத்தை அணிவிக்கிறார். கவர்னர் பாராட்டு பத்திரத்தை வழங்குகிறார். திரும்பிய ராஜ்மோகன் இன்னமும் மனைவி மல்லிகாவும் மகள் கீதாவும் வராததைக் கவனிக்கிறார். என்னவாயிற்று? என்று எண்ணியபடி தன் சீட்டில் அமர்கிறார். மனதில் தோன்றிய கேள்வி ஒரு வினாடி முகத்தில் தோன்றி மறைகிறது. இறுகிய போலீஸ் முகம் எந்த உணர்வையும் வெளிகாட்டாது.
விழா முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள். அதிகாரிகள் நண்பர்கள் அங்கு டியூட்டிலிருக்கு கான்ஸ்டெபிள்கள் சூழ்ந்து ராஜ்மோகனைப் பாராட்டுகிறார்கள். கமிஷனர் இரவு போலீஸ்கிளப்பில் பார்ட்டிக்குக் குடும்பத்துடன் வரச்சொல்லிவிட்டுப் புறப்படுகிறார். தன் உடல் மிகக் களைப்பாகயிருப்பதாகவும் மிகச் சோர்வாகயிருப்பதை உணர்கிறார். அதீதச் சந்தோஷம் உடலை” வீக்காக ஆக்கிவிடுமா என்ன என்று ஆச்சரியப்படுகிறார்.ராஜ்மோகன்
வீடு திரும்பிய ராஜ்மோகன் வீடு அமைதியாக இருப்பதைப் பார்க்கிறார். மல்லிகா பிரார்த்தனை அலமாரியின் முன் உட்கார்ந்திருப்பதையும் அருகில் அவர் முதுகைத் தடவிக்கொடுத்துகொண்டு சோகமாகயிருக்கும் கீதாவை பார்த்துத் திடுக்கிடுகிறார். இவர் வந்ததையே அவர்கள் கவனிக்கவில்லை. என்னாயிற்று? ஏன் பங்கஷனுக்கு வரவில்லை? என்ற கேட்டபடி நாற்காலியில் சோபாவில் உட்கார்ந்து ஷூவைக் கழட்டுகிறார். அவர் குரலைக்கேட்டு பதறி எழுந்த இருவரும் அழுகின்றனர். மல்லிகா அவர்மேல் சாய்ந்து கொண்டு கதறுகிறார். கீதா அப்பா, அப்பா என்று விம்மிக்கொண்டே உடைந்த குரலில் வசந்தி ஒரு ரோட் ஆக்ஸிடெண்ட்டில் செத்துப்போயிட்டாளம், போன் வந்தது என்கிறார். என்ன? என்று அதிர்ச்சியில் உறைந்த அப்படியே நாற்காலியில் சாய்கிறார்.
விழா நடக்கும் போது உங்களுக்குச்சொல்ல வேண்டாம் என்று போன் செய்யவில்லை என்ற கீதாவை அவர் பார்த்த பார்வை அவர் கோபத்தைச்சொல்லிற்று. அவளுடைய யுனிவர்சிட்டி வெளிநாட்டு மாணவர்களின் அதிகாரி தகவல் சொன்னதாகவும் விபரமாக மெயில் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார் என்று கீதா விம்மல்களுக்கிடையே சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்ட ராஜ்மோகன் சிலையாகச் சாய்ந்துவிட்டார்.. எதுவும் பேசவில்லை பார்வை எங்கோ நிலைத்திருக்கிறது அதைப்பார்த்த கீதாவின் மருத்துவ அறிவு ஏதோ சொல்லிற்று. சட்டென்று வாசலுக்குப் பாய்ந்து டிரைவர் ஜீப்பை எடுங்க என்றபடி அப்பாவை எழுப்பி நிற்க வைக்கிறார்.. அவர் இயல்பாக எழுந்திருக்கவில்லை, நடக்கவில்லை. அவரை ஜீப்பில் ஏறச்செய்வதே சிரமாகயிருந்தது. அப்போது மல்லிகாவிற்கு ஒரு போன் வருகிறது. அம்மா நான் ஆஸ்பிடல் போய்ப் போன் செய்கிறேன். என்றபடி ஜீப்பில் தாவி உட்கார்ந்து ஜிஎச் சுக்கு போங்க என்கிறார். வினாடியில் நிலைமையை உணர்ந்த அந்தப் போலீஸ்காரர் படுவேகமாகப் பறக்கிறார்.
நிலை குலைந்து குழம்பிப் போயிருந்த மல்லிகாவின் போனில் மீண்டும் மீண்டும் ரிங் வந்துகொண்டிருக்கிறது. ஆர்வமில்லாமல் எடுத்த மல்லிகா கேட்ட குரல்.
“அம்மா நான் வெங்கடேஷ். சியாட்டிலில் இருந்து பேசுகிறேன். உங்கள் மகள் வசந்தியுடன் படித்தவன். நீங்கள் எவ்வளவு துக்கத்திலிருப்பீர்கள் என்று எனக்குத்தெரியும். ஆனாலும் விபரங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. நேற்று காலை வசந்தி ஆஸ்டலுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது ரோடைக் கிராஸ் செய்யும்போது ஒரு போலீஸ் ரோந்து கார் அவர் மீது மோதி அந்த இடத்திலேயே இறந்து போய்விட்டாள். என்று சொல்லும்போதே அந்த மாணவனுக்குத் துக்கம் அடைத்தது. அவள் உடலைப் போலீஸ் ஆஸ்பத்திரியில் வைத்திருக்கிறார்கள். நாளை யுனிவர்சிட்டி மாணவர்கள் அவருக்கு அஞ்சலி கூட்டம் வைத்திருக்கிறோம். அதன் பின் அவர் உடலை இந்தியாவிற்கு அனுப்ப நீங்கள் சொன்னால் ஏற்பாடு செய்ய முடியும். அது பற்றி வசந்தியின் அப்பாவிடம் பேச முடியுமா? என்கிறான்.
ஒ வென்று பெருத்த குரலில் மல்லிகா அழுவதைக்கேட்ட வெங்டேஷ் சற்றுநேரம் மெளனமாகயிருக்கிறான். நிமிடத்தில் சுதாரித்துகொண்ட மல்லிகா அவள் அப்பாவிடம் கேட்டுப் போன் செய்கிறேன் என்று சொல்லிப் போனைத் துண்டிக்கிறார் மல்லிகா. ஹாஸ்பட்டலில் இருந்து மகள் கீதாவின் போனை மல்லிகா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சியாட்டில் நகரிலிருக்கும் வாஷிங்டன் யுனிவர்சிட்டிக்கு செல்லும் சாலை பார்க் வே. அதில் யுனிவர்சிட்டிக்கு எதிரில் சாலையை ஜிப்ரா கிராசிங்கின் நடுவில் ஒரு சின்ன மேடையில் வசந்தியின் படம், மலர் வளையம். சிறிதும் பெரிதுமாக மலர் கொத்துகள் அதன் கீழே இந்த இடத்தில்தான் நம் கல்லூரி மாணவி வசந்தி போலீஸ் ரோந்து வாகன விபத்தில் உயிர்துறந்தார். அவரது ஆன்மா சாந்தியடையப் பிராத்தனை செய்யுங்கள்,என்ற வாசகம்
சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் உலகப்புகழ் பெற்றது. 100 ஆண்டுகளுக்கும் மேல் பராம்பரிய மிக்க, பலவிதமான பட்ட, முதுகலை படிப்புகள். ஆராய்ச்சிகளுக்கு பெயர்பெற்றது. இது வரை 80 நோபல் பரிசு பெற்றவர்களை உருவாக்கியிருக்கிறது. அங்குள்ள லா ஸ்கூல் மிகவும்பிரசித்தி பெற்றது. அதில்தான் வசந்திக்கு நுழைவுத்தேர்வில் முதல் ரேங்க் வாங்கியதால் அட்மிஷன் கிடைத்திருந்தது. அன்று வேலை முடிந்து ஹாஸ்டலுக்கு திரும்பிக்கொண்டிருந்த போது யுனிவர்சிட்டி சாலையைக் கடக்கும்போது வசந்தியை மிக வேகமாக வந்த ஒரு போலீஸ் ரோந்து கார் அடித்துத் தூக்கி எறிந்துவிட்டது, வேகமாக எறியபட்டதில் அவருடைய தலைச் சிக்னல் கம்பத்தில் மோதி அங்கேயே மரணம் அடைந்துவிட்டார்
பல்கலை கழகத்தின் லா-ஸ்கூல் மாணவர்களும் இந்திய மாணவர் சங்கமும் வசந்திக்கு அஞ்சலி கூட்டம் நடத்தியது. அதில் வசந்தியின் ஆசிரியர்கள் சிலரும் கலந்து கொண்டனர். வசந்தியின் உடலை நகரிலேயே அடக்கம் செய்வதனாலும் அல்லது இந்தியாவிற்கு அனுப்புவதானாலும் அந்தச் செலவை மாணவர்கள் ஏற்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
மகளின் மரணச்செய்தி அறிந்தவுடன் பெரும் அதிர்ச்சிக்குள்ளான ராஜ்மோகன் அதிலிருந்து இன்னும் மீளவில்லை.. அதிர்ச்சி அவரது மூளையின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி ரத்தக்கசிவு ஏற்பட்டுவிட்டது. அதனால் அவரது நிற்கும் உட்காரும், செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. பேச்சும் வார்த்தை வார்த்தை வார்த்தையாகத்தான் வெளிவருகிறது. நினைவு மெல்ல மங்கிக்கொண்டிருக்கிறது. திரும்பட் திரும்ப ஒரே கேள்வியியே கேட்டுக்கொண்டிருக்கிறார்., நீண்ட அமைதி வெறித்தபார்வை. , இதற்கு மருந்து தனி மருத்துவம் இல்லை. மெல்ல மெல்ல நிலமை சீரடையலாம் அல்லது மோசமாகலாம் என்ற நிலை. மருத்துவ மாணவியான கீதாவுக்கு நிலைமை தெளிவாகப் புரிந்தது.
அன்றிரவே செய்தி உள்ளூர் சானலில்களில் விபரங்களுடன், விவாதங்களுடன் பரபரக்கிறது. இந்தியாவிலும் தேசிய நாளிதழ்களில் மூன்றாம் பக்கச் செய்தியாகவும் உள்ளூர் செய்தித்தாட்களில் முழுபக்கச்செய்தியாகவும் வருகிறது மாநில முதல்வரின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்திய அரசின் வெளியுறவுத்துறை உடலை இந்தியா கொண்டுவர உதவுகிறது.
ராஜ்மோஹனின் பெற்றோர் மதம் மாறிய கிருத்துவர்கள் என்பதால் அவர் அதையே பின்பற்றுகிறார். சர்ச்சில் ஞானஸ்நானத்தில் அவருக்கு இடப்பட்ட பெயர் ஜோஸப் ராஜ்மோகன் கல்லூரியில் அது ராஜ்மோகன் ஆகித் தொடர்கிறது. இறுதி பிரார்த்தனைக்காக வசந்தியின் பேழை சர்ச்சுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
எதற்கு இங்கு வந்திருக்கிறோம்?. இது யாருடைய பேழை? என்று தடுமாறிய குரலில் கேட்கும் ராஜ்மோகனைப் பார்த்து மல்லிகா வாய்பொத்தி அழுகிறார். சர்ச்சில் பலரும் அவரைப் பரிதாபமாகப் பார்க்கிறார்கள். சர்ச்சில் பாதிரியாரின் உரைக்கும், பிரார்த்தனை கீதங்களுக்கும் பின்னர் பேழை கல்லறை தோட்டத்துக்குத் தன் பயணத்தைத் தொடங்குகிறது.
சியாட்டில் நகர நிர்வாகம் இது போல் எதிர்பாராத விபத்தில் இறப்பவர்களின் குடும்பத்துக்குச் செய்யப்படும் 5000 டாலர் நிதியுதவியை யாருக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுப் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பியது. அதை அறிந்த வெங்கேடேஷ் அதை ஏற்க வேண்டாம். இதில் போலீஸ்காரகளின் தவறு இருக்கிறது எங்கள் சங்கத்தின் மூலம் வழக்குதொடரப்போகிறோம் என்று தெரிவிக்கிறார். வசந்தியின் தயாரிடம் அதைச்சொன்ன போது அவர் ஆர்வமாகக் கேட்கவில்லை. அன்பு மகளின் மரணம், கணவரின் உடல் நிலையால் அவர் மிகவும் மனமுடைந்த நிலையில் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இயந்திரமாகிவிட்டார். ஓராண்டு உருண்டோடுகிறது. ராஜ்மோகன் உடல்நிலை இன்னும் மோசமாகிறது
இதில் போலீஸ் தவறு செய்திருக்கிறது. சாலையைக் கடக்குமிடத்தில் எப்படிப் போலீஸ் கார் வேகமாக வரமுடியும்? வேகமாகக் கடக்க வேண்டிய காரணம் என்ன? என்று கேட்டு மிகப்பெரிய தொகை நஷ்டஈடு கேட்டு வழக்கு போடுகிறார்கள் வெங்கடேஷும், அவரது நண்பர்களும். வசந்தி டிரெய்னியாக பணியாற்றிய சட்ட நிறுவனம் வழக்கை நடத்தச் சம்மதிக்கிறது
பல்கலை கழக மாணவர்களின் குழு இறங்கி வேலை செய்கிறது. காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் காரை மணிக்கு 124 மைல் வேகத்தில் கடந்திருக்கிறார். அந்த இடத்தில் 24 மைல் வேகத்தில்தான் போகவேண்டும் அதை மீறி இருக்கிறார். விபத்து நடந்த இடத்திற்கு முன்னால் உள்ள இரண்டு சிக்னலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளின் மூலம் இரண்டிற்கு இடையில் இருக்கும் தூரத்தையும் காரின் வேகத்தையும் கணக்கிட்டு இதைக்கண்டுப்பிடிக்கிறார்கள். அதோடு வசந்தி சாலையைக் கடக்குமிடத் த்தில் அவர் கடக்கும் போது பச்சை விளக்குதான் எரிந்து கொண்டிருந்ததை அதன் எதிரே இருக்கும் ஒரு கடையின் சிசிடிவியில் பதிவாகியிருப்பது, அந்தப் போலிஸ்காரர் வீட்டிலிருந்து புறப்படும் முன் விவாகரத்து கோரி வழக்குபோட்டிருக்கும் அவர் மனைவியுடன் போட்ட சண்டையைப் பார்த்த பக்கத்துவீட்டுகாரர், இப்படிப் பல சாட்சியங்களைச் சேகரிக்கிறார்கள் மாணவர்கள். சட்டம் படிப்பவர்கள் இல்லையா? எல்லாவற்றையும் விட வலுவான சாட்சியம் ஒன்று வெங்கடேஷிடம் சிக்குகிறது.
அந்த நகரப் போக்குவரத்து போலீஸ்காரர்கள் எப்போதும் body com பாடி கேமிரா(ஒரு சிறிய செல்போன்போலிருக்கும்) அணிந்திருக்க வேண்டும். அவர்கள் யாருடன் பேசினாலும் அதில் அதில் படத்துடன் பதிவாகிவிடும். அந்த ரோந்து கார் விபத்து நடந்தவுடன் சற்றுத் தொலைவு போய்த் திரும்பி அதே இடத்துக்கு வருகிறது.. இறந்து போய்விட்ட வசந்தியின் உடலைப் பார்த்தவுடன் காரை ஓட்டிவந்த போலீஸ்காரர் நகர நிர்வாகத்துக்கு ஒரு 5000 டாலர் நஷ்டம் என்று மிகஅலட்சியமாகச் சொல்லுவதும், “இல்லை நீ அளவுக்கு மீறிய வேகத்தில் காரை ஓட்டியது தான் காரணம்’ என்று மற்றவர் பேசிக்கொள்வதும் பதிவாகியிருக்கிறது. எப்படி இந்த வீடியோ பதிவு வெங்கடேஷுக்கு கிடைத்தது? என்பது ராணுவ ரகசியம்.
சரியாக வழக்கு விசாரணை ஆரம்பம் ஆகும் போது யாரோ இந்த வீடியோவை யூ டியூபில் வெளியிடுகிறார்கள். அவ்வளவுதான் சோசஷியல் மீடியா, உள்ளூர் செய்திகளில், சானல்களில் அனல் பறக்கிறது.
வழக்கை வசந்தி பணியாற்றிய சட்ட நிறுவனம் மிகப்பிரமாதமாக நடத்துகிறது. கல்வியில் மாணவியின் தனித்திறமை, வீணாகிப் போன அவரது சிறப்பான எதிர்காலம், அவர் வழக்கறிஞராகியிருந்தால் ஈட்டியிருக்கூடிய வருமானம் எல்லாவற்றையும் கணக்கிட்டு 100மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். இது அமெரிக்க விபத்து இன்ஷுயூரன்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய தொகை.
போலிஸ் தரப்பும், இன்ஷூரன்ஸ் நிறுவனமும் சரியான பதில்களைச் சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள். தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது
தீர்ப்பு வரும் நாளில் கோர்ட்டுக்கு உள்ளே வழக்கறிஞர்கள் கூட்டம் வெளியே மாணவர்கள் கூட்டம். நீதிமன்ற நஷ்ட ஈடு குழு ஆலோசனைகளுக்குப் பின் 29 மில்லியன் டாலர்கள் வழங்கவேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 200கோடிக்கும் மேல். தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் வெங்கடேஷ் ஓடிப்போய் வசந்தியின் அம்மாவிற்குப் போனில் தெரிவிக்கிறான். சொல்லப்பட்ட தொகையைக் கவனத்துடன் உள்வாங்காமல் நன்றியப்பா என்று ஒரு வார்த்தையில் சொல்லிப் போனைக் கட் செய்துவிடுகிறார்,
அப்பாவின் உடல் நாளுக்கு நாள் மோசமாவதைக் கண்டு எப்படியாவது அவரை மீட்க வேண்டும் என்று கீதா அது குறித்து நிறையப் படிக்கிறார். அப்போது அவர் பார்த்த ஒரு செய்தி- புகழ்பெற்ற இந்தியப் பாடகி ஒருவருக்கு இதுபோல் அதிர்ச்சியில் முளை செயலிழக்கத்தொடங்கியபோது நடந்த சிகிச்சை முறை.
தொடர்ந்த பிஸியோ தெரப்பியுடன் VR (vertuaval reality) என்ற நவீன சிகிச்சைஅது. இதுபோலப் பாதிக்கபட்டவர்களுக்கு அவர்களுக்கு மிகவும் பிடித்த, நெருக்கமான விஷயங்களை கண்கண்ணாடிபோல் மாட்டிக்கொள்ளும் வீடியோகேம் போல,(virtual reality) கருவியில் காட்டிக்கொண்டே இருந்தால் மூளையின் நரம்புகள் செயல் பட ஆரம்பிக்கும் என்பதுதான் அது.
உடனே தன் கல்லூரி புரொபசரிடம் ஆலோசிக்கிறார். அவரும் இது குறித்து ஒரு மெடிகல் ஜர்னலில் படித்திருப்பதால், முயற்சி செய்யலாம், ஆனால் அதற்கு லண்டன் போக வேண்டுமே என்கிறார். இப்போது பணம் பிரச்சனை இல்லை டாக்டர் இப்போது உங்கள் உதவியும் அனுமதியும் வேண்டும்.என்கிறார். டாக்டர் உடனே லண்டன் ஹாஸ்ப்பிட்டலுடன் தொடர்பு கொண்டு செயலில் இறங்குகிறார். டாக்டருடன் அந்தக் குடும்பம் லண்டன் போகும் ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெறுகிறது
சென்னை விமானநிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துக்காக அந்தக் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்
******
