சீட்டுக்குருவி – வித்யாசாகர்

மிக இனிமையான நாட்கள் அவை

காலையில் வரும் சூரியனைப்போல

அத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்..

ஓடிப்பிடித்து அகப்பட்டுக்கொண்ட மழைத்தும்பிக்குப்பின்

ஒருநாள் சிட்டுக்குருவியொன்று

கைகளில் சிக்கிக்கொண்டதையும் மறக்கவேமுடிவதில்லை.,

காற்றை கையிலள்ளிக்கொண்ட மகிழ்ச்சி

அன்றைய தினத்தின் பரிசாக

இன்றுவரை எனக்கு நினைவிலுண்டு..

 

விடியலில் ஐந்தாறு மணிகளுக்கிடையில்

நானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர

நான்கைந்து சிட்டுக்குருவிகள் எதிரே அமர்ந்து

முகம் பார்த்து பார்த்து தலை சாய்த்து சாய்த்து

கத்துவதைக் கண்டதெல்லாம் அழகைக் கண்டதன் சாட்சி அடையாளங்கள்

அந்த கிரீச் கிரீச்சென கத்தும்

சிட்டுக்குருவிகளின் மொழிக்கான அர்த்தத்தை

மௌனமாக பின்னொரு நாள்தனில் அசைபோடுகையில்

தங்கையின் இல்லாயிடம் உயிருக்குள் அப்படி வலித்ததுண்டு.

 

தங்கையைப்போல் சிட்டுக்குருவிகளும்

எனக்கு மறப்பதேயில்லை..

எங்கள் வீட்டு ஜூலி

வாசலிலமரும் சிட்டுக்குருவிகளுக்கு

இன்னொரு தோழி,

ஜூலி சிட்டுக்குருவிகளை விடுவதேயில்லை

ஓடியோடி அவைகளை துரத்தும்

சிட்டுக்குருவிகள் மாறி மாறி அதன் தலையில் சென்றமரும்

வவ்..வவ் எனும் ஜூலியின் கோபத்தில்

விடிகாலை மணல்வாசத்தோடு சிட்டுக்குருவிகளால் சிலிர்த்துபோகும்..

தூக்கம் விழித்து சன்னலைக் காண்கையில்

பீறிட்டுவரும் சூரிய ஒளியோடு

ரக்கை படபடக்க வந்தமரும்

ஒரு சிட்டுக்குருவியின் முகத்தில்

ஒரு உலக மொழிபேசும் இயற்கையின் சத்தியத்தை

எத்தனைப் பேர் கண்டிருப்பீர்களோ தெரியாது

 

எனக்கு சிட்டுக்குருவியின் சப்தம் குவைத்திலும் ஒன்றுதான்

என் வீட்டு கூரைமீதும் ஒன்றுதான்

யாருக்கு எப்படியோ;

எனக்கந்த என் காதலியின் வீட்டு சன்னலும்,

வீட்டுவாசலில் கருப்புசாமியாய் வளர்ந்திருந்த

வேப்ப மரத்தடியும்,

உடைந்தக் கண்ணாடிச் சில்லுகளில் தெரியும்

நினைவுகளாக

அந்நாட்களின் மொத்த வாழ்வுமே

அந்தச் சிட்டுக்குருவிகளின் நினைவோடே இன்றுமிருக்கிறது

 

சிட்டுக்குருவியோடான நாட்கள்

உண்மையிலேயே எனக்கு

மிக இனிமையானவை..

—————————— —————————— ——————

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்

Image result for அரசியல் கூட்டம் கார்ட்டூன் ஜோக்ஸ்

 

‘அட என்னப்பா..? தலைவர் பேச ஆரம்பித்ததும் இருந்த
பிரம்மாண்ட கூட்டம் அவர் பேச ஆரம்பித்து பத்து நிமிடத்-
துக்குள்ளே மீட்டிங் கிரவுண்டே காலியாயிடுத்து..?!’

‘அட அதையேன் கேட்கறே..? இந்த தலைவர் வாயை
வெச்சுட்டு சும்மா இருக்கக் கூடாதா..? எதிர்க் கட்சியைத்
தாக்குகிறேன்பேர்வழீன்னு ‘எதிர்க் கட்சியைப் போல் இது
காசு கொடுத்துச் சேர்த்த கூட்டம் இல்லை.. தானா சேர்ந்த
கூட்டம். இவர்கள் இங்கே குழுமுவதற்கு நாங்கள் காசு
கொடுக்கவும் இல்லை… காசு கொடுக்கப் போவதும் இல்லை’ன்னு
உளறி விட்டார்.. எல்லோருக்கும் தலைக்கு ஆயிரம்னு பேசி
கஷ்டப்பட்டுக் கூட்டத்தைச் சேர்த்தி இருக்கோம். இப்போது
இந்தக் கூட்டம் அத்தனையும் கடைசியில் காசு கிடைக்காதோ
என்ற பயத்தில் நம்ம கட்சி அலுவலகத்தில் போய் தகராறு
பண்ணிட்டிருக்கும்..!’

 

நானாக நானில்லை – சுரேஷ் ராஜகோபால்

Image result for தனிமரம்

வலியோடு வாழ்க்கை பயணம்

ஆங்காங்கு புதுமுகங்கள்

சலிப்போடு நகர்ந்தாலும் மாறுதல்

புதிதில்லை – ஏனோ மனம் ஏற்கவில்லை

 

புதியவர் நடுவே தனியாக

வழியேதும் புலப்படாது 

பலநூறு மனிதர் இருந்தும்

தனிமரமாய்  தென்பட்டேன்

 

மனமெங்கும் படபடப்பு ஓரத்தே

சிலீரென எதிர்பார்ப்பு

இதமாக பேசி அமைதிதர

தனிக்காட்டில் யாருமில்லை

 

எல்லோரும் எனக்குத் தென்பட்டாலும்

யாருக்கும்  நான் தெரியவில்லை

அவரவர் வேலையை அவர்செய்ய

என்தேவை அரிதானது

 

கூட்டத்தே புகுந்து என்பங்கு

உரிமை கொண்டாடினேன்

யாரும் தரவில்லை – என்னுரிமை

பறிபோனது பதட்டமானேன்

 

அந்தக் கூட்டம் எனைசாடியது

எனைத் தேடியது

நையப் புடைத்து புண்ணாக்கி

ஓரம் போட்டது

என்னுரிமை எனக்கில்லை என்றபின்னே

நான்யார் – கயவர் கூட்டத்தே

நானாக நானில்லை வெட்கி

தலை குனிந்தேன்

என் அடையாளம் அவர்களுக்கு

தெரியாமல் போகலாம் புதியவரன்றோ

எனக்கே ஏன் தெரியாமல் போனது

புதிராகத்தான் போச்சு

 

உன்னையே நினைக்க வேண்டும்..! —கோவை சங்கர்

Image result for murugaa

உன்னையே நினைக்க வேண்டும் – முருகாநீ
என்னுடனே இருக்க வேண்டும்

உனைத்துதிக்கும் பாட்டினது ராகமாய் இருக்கவேண்டும்
மெல்லமெல்ல வந்துவந்து உன்னையே தழுவவேண்டும்
உன்னையே நினைக்குமந்த எண்ணவலையாய் இருக்கவேண்டும்
பரந்தவுன் மார்பகத்தில் நான்சங்கமம் ஆகவேண்டும்!

பாடுகின்ற பக்தர்களின் நாவினில்நான் இருக்கவேண்டும்
எப்போதும் உன்நாமம் பாடியேநான் மகிழவேண்டும்
கோஷமிடும் வேதத்தின் சொற்றொடரா யாகவேண்டும்
மணக்குமுன் மேனியினை யொற்றியொற்றி விடவேண்டும்!

உன்நினைவே இன்பம் துதிபாடல் பேரின்பம்
ஆறுபடை வீட்டினிலே வெவ்வேறு உருவத்தில்
கண்கொள்ளாக் காட்சியினைக் கண்குளிரக் கண்டுவிட்டு
தேமதுர மலரினையே சுற்றிவரும் வண்டானேன்

இந்திரஜாலம்

 

Image may contain: sky, nature and outdoor

 

சுடலை / இந்திரன்
———————————————-
சுடுகாட்டு வேப்ப மரத்தின் குளிர் நிழலில்
ஓய்வெடுக்கிறேன் நான்.

புதைகுழிகளுக்கு மேல்
பூத்துச் சிரிக்கும் மஞ்சள் பூக்களில்
தேன் குடித்துச் சிறகடிக்கும்
பட்டாம் பூச்சிகள்
அபத்தத்தைக் கொண்டாடுகின்றன.

உண்மை மட்டுமே பேசியதால்
சுடுகாட்டில் கோயில் கொண்ட அரிச்சந்திரன்
வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று
சவ ஊர்வலத்தோடு வரும் ஒவ்வொருவரிடமும்
விசாரித்துக் கொண்டிருக்கிறான்.

நேற்று தகனம் செய்யப்பட்ட
அழியாத கவிதைகள் எழுத முயன்ற
கவிஞனின் உடல் சாம்பல்
இன்றைக்குக் கங்கையில் கரைக்கப்படுகிறது.

சுடுகாட்டில் தவம் செய்யும் சிவனின் பெயரான
சுடலை என்பதைத்
தன் பெயராகச் சூடியிருக்கிறான்
இடுகாட்டுக் காவல்காரன்.

புவி ஈர்ப்புச்சக்தியால் நிறுத்தப்பட்ட தூண் – ராமன்

சென்னகேஷவா என்னும் விஜயநாராயணா வைணவ கோவில் கர்நாடகா மாகாணத்தின் ஹாஸன் ஜில்லாவில் வெலபுரா நதி தீரத்தில் ஹோய்ஸாலா வம்சத் தலைநகரான  பேலூரில் அமைந்துள்ளது.  மூன்று தலைமுறை ஹோய்ஸாலா மன்னர்களால் இதைக் கட்டி முடிக்க 103 ஆண்டுகள் பிடித்து  விஷ்ணுவர்தனா மகாராஜாவால் 1117ம் ஆண்டு  துவக்கப்பட்டது. காலதாமத்தின் காரணம் அங்கு நேர்ந்த பல யுத்தங்களினால் கொள்ளையடிக்கப்பட்டும் தாக்கப்பட்டுச் சிதிலமடைந்தும் திரும்பத்திரும்பச் சீர் செய்யப்பட்டு தடைப்பட்டதால் நேர்ந்ததாகும். இதன் சிற்பங்கள் கட்டடக் கலையின் மிகவும் தலை சிறந்த 3டி முறையில் கட்டப்பட்டுஃப் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கின்றன. இது வைணவ சம்பிரதாய கோவிலானாலும் ‘எம்மதமும் சம்மதம்’ என்னும் அடிப்படையில் சைவ, ஜைன, புத்த மதங்களையும்  போற்றுவிக்குமாறு கட்டப்பட்டிருக்கிறது. சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு இதில் கல்வெட்டு ஆதாரங்கள் குவிந்து காணப்படுகின்றன.

இந்தக் கோவிலில் ஒரு காணக் கிடைக்காத அதிசயம் ஒன்று இருக்கிறது. 

 

கோவிலின் பிரகாரத்தில் மேடையின்மேல் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கருங்கல் தூண் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அடித்தளம் இல்லா இத்தூணின் உயரம் 42 அடி. அஸ்திவாரம் இல்லாமல் புவி ஈர்ப்புச்சக்தியால் நின்றுகொண்டிருக்கிறது! இது   கிபி 1414ல் விஜய நகர சாம்ராஜ்யத்தின் மன்னர் தேவராயர் காலத்தில் கட்டி இந்தக் கோவிலில் சேர்க்கப்பட்டது. தூணின் பாரம் மூன்று பகுதிகளில் மட்டுமே தாங்கியிருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.  தூணின் அடியில் எஞ்சியுள்ள பகுதியில் ஒரு காகிதத்தை நுழைக்கும்படியான இடைவெளியோடு அக்காலக் கட்டிடக்கலை வல்லுநர்களால் கட்டப்பட்டிருப்பது அதிசியமே!!!

 இது ஒரு UNESCO WORLD HERITAGE SITE.

 

 

 

 

 

  

                                         

 

 

 

தலையங்கம்

Image result for cauvery river map

 

“வான்பொய்ப்பினும்  தான் பொய்யாக் காவிரி” என்று பாடிய தமிழ் நாடு

“காவிரித்தாயே கைவிரித்தாயே”

என்று  இன்று சோககீதம் பாடுகிறது.

தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய  காவிரியில் இன்று மணலும் கொள்ளை போகிறது.

நீர்வழிப்பாதைக்குள்ள உரிமையின் (Riparian Rights) அடிப்படையில்தான் உலக அளவில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று ஐ நா சபையும்  ஹெல்சின்கி விதிகளும் ஒப்புக் கொண்ட உண்மை.

அதன்படி காவிரியின் முதல் மடையிலிருக்கும் கர்நாடகத்தைவிடத் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது என்பது தமிழகத்தின் வாதம்.

தனக்கு மிஞ்சித்தான்  தானமும் தர்மமும் என்கிறது கர்நாடகம்.

வாதம், தர்மம், வழக்கம், பிடிவாதம், அரசியல் என்ற பஞ்ச சீலத்தை ஒதுக்கிவிட்டு நடு நிலைமையுடன் ஆராய்வோம்.

நாட்டின் தலைமை நீதிமன்றம் இட்ட  ஆணையை அனைவரும் ஒப்புக்கொண்டு  செயல்படுத்தவேண்டும்.

அதைச் செயல்படுத்த ஒரு நிரந்தர அமைப்பை –  வாரியமோ, செயல்திட்டமோ (ஸ்கீம் ) ஏற்படுத்தவேண்டியது மத்திய அரசின் கடமை.

இந்திய நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த  ஆரம்பிப்போம்!

இந்த நிலையில் தமிழகம் என்னென்ன செய்யலாம்?

                     உரிமைக்காகப் போராடுவோம். கழகங்களும் கண்மணிகளும் அந்த வேலையைச் செய்யட்டும்.

                    திட்ட வல்லுனர்கள், கிடைக்கும் தண்ணீரை எப்படித்  திறமையாக உபயோகப்படுத்தலாம் என்று திட்டமிடட்டும்.

                   வேளாண் விஞ்ஞானிகள், குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்று கண்டுபிடிக்கட்டும்.

                  விவசாயப்  பெருமக்கள், எந்தப் பயிர்களை வளர்த்தால் நாட்டுக்கும் தங்களுக்கும் நல்லது என்று தீர்மானிக்கட்டும்.

                  பொதுமக்களும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதோடு தங்கள் உணவுப்பழக்கங்களையும் மாற்றிக் 

                 கொள்ளவேண்டும்.

    ஊர் கூடி இழுக்கவேண்டிய தேர் இல்லை இது.

    ஊர் கூடிப் போற்ற வேண்டிய தெய்வம்  நீர்.

   நீரைப் போற்றுவோம்!

 வலி – சுந்தரராஜன்

Related image

கோகிலத்துக்கு  அந்த  ஐ சி யு சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. மார்பில் ஒரு வண்டி சரளைக்கல்லைக்  கொட்டியது மாதிரி  தொடர்வலி. உடம்பின் மற்ற பாகங்களிலெல்லாம்  ரணமயம்.  தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு கணுக்களிலும்  அணுஅணுவாக மரணவேதனை தெறித்துக்கொண்டிருந்தது.  ஆனால் அந்த வலியெல்லாம்மீறி, சிரிப்புமட்டும் குபுக்குபுக் என்று தண்ணீரில் எழும்பும் காற்றுக் குமிழிபோல வந்துகொண்டிருந்தது. அது தொண்டைக்குழியில் ஆரம்பித்து  வாய்க்குள்ளேயே முடிந்துவிடுகிறது. வாயைவிட்டு வெளியே வரவில்லை. சிரிப்பும் சரி,  துக்கமும் சரி அவள்  வாயைவிட்டு வெளியேவந்ததில்லை. அதுதான் அவளது 92  வயதின் சாதனையா? அதில்தான் இருக்கிறதா அவள் வாழ்க்கையின்  ரகசியம்?

கோகிலா மெல்லக் கண்ணை விழித்துப் பார்த்தாள். வெளிச்சம் கண்ணைக் கூசியது. கண்ணை இடுக்கிப் பார்த்தாள். சில மாதங்களாகக் கையைப் புருவத்துக்கிட்டேவைத்து இடுக்கிப் பார்த்தால்தான் மனிதர்கள்  வருவது தெரிகிறது. அதுவும் மங்கலாகத்தான் தெரியும். வாய் கொஞ்சம் கோணலாகப்போய் ஏழெட்டு வருஷம் இருக்குமா? மேலேயே இருக்கும். பேச்சு பரவாயில்லை . பேசமுடிகிறது. அது மற்றவர்களுக்கும் புரிகிறது.  சாப்பிடுவதற்கு அவள்படும் கஷ்டம் அவளுக்குத்தான் தெரியும்.  நாக்கு மட்டும் இப்படி அப்படி அலையும். மூக்குக்குக்  காற்றை லேசாக இழுத்துவிடுவதே கஷ்டமாக இருக்கிறது. வாசனையையும், நாற்றத்தையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிற சக்தியெல்லாம் அதற்கு எப்பொழுதோ போய்விட்டது.

எது எப்படி இருந்தாலும் கோகிலத்துக்குக்  காதுமட்டும் சரியான பாம்புக்காது. சுத்தமாகக் கேட்கும்.  மெல்லப் பேசினாலும் கேட்கும்.  சின்ன வயதில்  தெருமுனையில் இருக்கிற பைப்பில் புஸ்ஸுன்னு காத்துச் சத்தத்தோடு  தண்ணி வருகிற  சத்தம் முதலில் அவளுக்குத்தான்  கேட்கும். தோட்டத்தில் மல்லிகைப் பூ கொடிகிட்டே நல்லபாம்பு மூச்சுவிடும் சத்தம்கூடக் கோகிலத்துக்கு மட்டும்தான்  கேட்கும்.

தான் ஆஸ்பத்திரியில் இருக்கிறோம் என்பது ஒருமாதிரிப்  புரிந்தது. அது இரவா பகலா என்பது தெரியவில்லை. என்னவாக இருந்தால்  என்ன? யாரையும் பக்கத்தில் காணோம். எங்கோ சற்றுத்தள்ளி நர்ஸ் விடும் குறட்டைச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மூக்குக்குள்ளே ஒரு குழாய். அதன் வழியே ஏதோ ஒன்றை ஊற்றுகிறார்கள்.  அவள் மூச்சுவிடும்  சத்தம் அவள் காதுக்கே  கேட்கிறது.  

மீண்டும் மீண்டும் சிரிப்பு அலைமாதிரி வந்துகொண்டே இருந்தது.  அந்த சிரிப்பு  அலைகளின் ஊடே அவள் வாழ்க்கைக்கதை நிழற்படமாக,  திரைப்படம்போல விரிந்தது. சிரிப்பில் ஒரு வலி இருக்க முடியுமா? இருக்கிறதே! ஒவ்வொருமுறை அளவில்லாத சந்தோஷத்தில் சிரிக்கும்போது அவளுக்குத் தாங்கமுடியாத வலி வரும். மாதவிடாய் காலத்தில் வரும் வலியைப்போல. பிரசவ காலங்களில் ஏற்படும் இடுப்பு வலியைப்போல. இது பெண்களுக்குமட்டும் வரும் வலி என்று முதலில் எண்ணிக்கொண்டாள். ஆனால் மற்ற  பெண்களுக்கு அந்தமாதிரி வலி வராததால் இந்த வலி தனக்குமட்டும் இறைவன் தனியாகக் கொடுத்த வரம் என்று நினைத்துக்கொண்டாள்.

முதல்முறையாக அவளுக்கு அந்த வலி வந்ததை அவளால் ஆயுசுக்கும் மறக்கமுடியாது. அவளுக்குத் திருமணமாகி ஐந்து வருஷம் கழித்து சாந்திக் கல்யாணம் செய்துவைத்தார்கள். கல்யாணமாகியும் பொம்மைகள்  வைத்து விளையாடிக்கொண்டிருந்த கோகிலத்துக்கு அந்த சாந்திக் கல்யாணம் முதலில் பெரியதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அவள் கணவன் புது மாதிரி விளையாடியபோதுதான் அவளுக்குத் தாங்கமுடியாத சிரிப்பும் சொல்லத்தெரியாத வலியும் ஒரேசமயத்தில் வந்தன.

அதன்பின் பல வித்தியாசமான வலிகள் – இந்தியா சுதந்திரம் அடைந்த அதே இரவில்  முதல் பிள்ளை பிறந்தபோது, அடுத்து அடுத்து இரண்டு பெண்கள் பிறந்தஉடனே  இறந்தபோது,  கணவன் அவளைவிட்டு ஓடிப்போனபோது, தனி ஒருத்தியாக  இட்டிலிக்கடை வைத்துப் பையனைப் படிக்க வைத்தபோது, அவள் தனிமையைப் பயன்படுத்திக்கொள்ளச்  சில தெருநாய்கள் அவளைப் பார்த்தபோது, சோற்றுக்கு வழியில்லாமல் பல நாட்கள் தண்ணியையே குடித்துவிட்டுப் படுத்தபோது, வெள்ளத்தில் குடிசை இடிந்து விழுந்தபோது, பத்துவயதுப்  பையனை ‘ஸ்வீகாரமாகத் தா’ என்று ஊர்ப் பெரியமனிதர் கட்டாயப்படுத்தியபோது, பையன் வேலைக்குப் போகிறேன் என்று அவளுக்குத் தெரியாமலேயே மலேயா போனபோது, தான் தனிமரமாகி விட்டோமோ என்று நாற்பது வயதில் தவித்து, அந்தத் தவிப்பின் உச்சியில் அரளிவிதையைத் தின்று தற்கொலைக்கு முயன்றபோது வலிகளின் எல்லாப் பரிணாமத்தையும் அனுபவித்தாள். ஆனால் ஒவ்வொரு வலியும் சிரிப்பில்தான் முடியும். கடவுளிடம் தனி வரம்பெற்றவளாயிற்றே! 

அதுவரை வலிகளின் அடிச்சுவட்டிலேயே நடந்துவந்திருந்த அவள் கால்கள், அவளுடைய நாற்பத்திரண்டாவது வயதில்தான் முதன் முறையாக  ஒரு இடத்தில் நின்றது. அது அவள் வாழ்க்கைக்குப் புதிய பாதையைக் காட்டியது.

 ****************

ஐ சி யுக்குள் டாக்டர்கள் நுழைவதுபோல இருந்தது. தூங்கிக்கொண்டிருந்த நர்ஸ் விழித்துக்கொண்டு அவர்களை அழைத்துக்கொண்டு கோகிலம் படுத்திருக்கும் படுக்கைக்கு வந்தாள். கோகிலத்தின்  கண்கள் மூடியிருந்தாலும்  காதுகளில் அவர்கள் பேசுவது விழுந்தது. பெரிய டாக்டர் மற்றவர்களுக்கு இந்தக் கேஸை விவரித்துக்கொண்டிருந்தார். மூளைக்குச்  செல்லும் ரத்தக்குழாய்கள் வெடித்திருக்கின்றன.  அதனால் அவளது நினைவு பாதிக்கப்பட்டிருக்கும். அவளால் எதையும் புரிந்து கொள்ளமுடியாது என்பதை அழகான ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டிருந்தார். இன்னும் இருபத்துநான்குமணி  நேரத்தில் அவள் வாழ்க்கை முடிந்துவிடக்கூடும். ஆனால் அவளை எப்படியாவது  வெண்டிலேட்டரில் வைத்தாவது  உயிருடன்  வைத்திருக்கவேண்டியது மிகமிக முக்கியம் என்றார். அதற்குக் காரணம்  நாட்டின் பிரதமமந்திரி அவரைப் பார்ப்பதற்கு மறுநாள் வருகிறார் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.  

தன்னால் எதையும் புரிந்துகொள்ளமுடியாது என்று பெரிய டாக்டர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னது கோகிலத்துக்குச் சிரிப்பை வரவழைத்தது.  ஏன் என்றால் டாக்டர் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் அவள் காதுக்குக் கேட்டன. அவற்றின் அர்த்தமும் நன்றாகப்புரிந்தது.

போனமாதம் அவளுக்குப் பிரதமமந்திரியின் செயலாளரிடமிருந்து போன் வந்தது. இன்னும் சிலநாட்களில்  கோகிலத்தின்  ஐம்பது ஆண்டு சேவையைப் பாராட்டி அவளுக்கு உலகின்  முதன்மையான ‘மதர்  தெரசா’  விருது வழங்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டதும்  அவளுக்கு மூச்சு முட்டுவதுபோல இருந்தது. தலை கிறுகிறுவென்று சுத்துவதுபோல இருந்தது. தனக்கு இந்தப் பட்டம் பதவியெல்லாம் தேவையா என்ற எண்ணம்தான் அவளுக்குப் புதிய வலியைக் கொடுத்தது. இந்தமுறை வலியுடன் இணைந்த சிரிப்பு வருவதற்குள் மயங்கி விழுந்துவிட்டாள்.

அதிலிருந்து அந்த ஆஸ்பத்திரியில் ஐ சி யூவில்தான் இருக்கிறாள். இந்தியாவில், அதுவும் டெல்லியில் மிகச் சிறந்த மருத்துவமனை அது. அவளுக்கு என்னமோ பிரதமர் வருவதற்குள் தன் வாழ்க்கை முடிந்துவிடும் என்று தோன்றியது. பிரதமருக்குப் பதிலாக ஓடிப்போன தன் கணவனோ,  மகனோ, அல்லது பிறந்த உடனே செத்துப்போன மகளோ வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவர்கள் நினைவு அவளுக்குப் பழைய வலியை ஞாபகப்படுத்தியது. சிரிப்பும் இலேசாக வருவதுபோல் இருந்தது. மரணவலி என்பது அப்படித்தான் இருக்குமோ? அதைத்தான் கோகிலம் பலமுறை அனுபவித்தவள் ஆயிற்றே! 

கோகிலம் சிரித்துக்கொண்டே முதன்முறையாக வலியின்றி  செத்துப் போனாள்.

மறுநாள் இந்தியா மற்றும் உலகப் பத்திரிகைகள்  அனைத்திலும்   அவளது வாழ்க்கை வரலாறு விவரமாக நான்குபத்திகளில் வந்திருந்தது.

‘கோகிலா மா‘ என்று  ஆயிரக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட கோகிலம் தனது நாற்பத்திரண்டாவது வயதில் ஆயாவாக செஷையர்ஹோமில் வேலைசெய்ய டெல்லிக்கு வந்தார்.

யார் அவரை அங்கு கொண்டுவந்து சேர்த்தார்களோ தெரியாது. ஆனால் அது நாட்டுக்கே பயனுள்ள ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் சேவைசெய்வதே தன் வாழ்க்கையின் இலட்சியமாக அவர் எடுத்துக்கொண்டார்.

சில வருடங்களில், தன் வாழ்க்கையின் பலன் மற்றவர்களுக்குச் சேவைசெய்வதே என்று உணர்ந்துகொண்டார்.  டெல்லியிலேயே மற்றொரு பெரிய முதியோர்இல்லத்தில் சேவைசெய்ய அழைத்தார்கள். அங்கு சென்றபிறகு அவரது  வாழ்வின் மாற்றங்கள் அவருக்கே ஆச்சரியத்தைக்கொடுத்தன என்று அவருக்கு பத்மஸ்ரீ  பட்டம் கொடுத்தபோது பத்திரிகையாளார்களிடம் பேசும்போது ‘கோகிலா மா’ கூறினார்.

எத்தனை தொழுநோயாளிகளுக்கு அவர்  அன்னையாக இருந்திருக்கிறார்!  புற்றுநோயால்  துவண்டுகிடக்கும் மனித உடல்களின் துயரங்களைத் துடைத்தது ‘கோகிலா மா’வின் அன்புக்கரம். ஊனமுற்ற பிள்ளைகளைத் தன் தோளிலும் மடியிலும் தூக்கிவைத்துக் கொஞ்சும் வழக்கம் அவருக்கு மிகவும் பிடித்தது. 

அந்த முதியோர் இல்லத்தை நிர்வாகிகள் தொடர்ந்து நடத்த முடியாமல்போய் நிறுத்திவிடலாம் என்று நினைத்தபோது ‘கோகிலா மா’ தன்னந்தனியாக அதை நடத்தியே தீருவேன் என்று  முன்வந்தபோது அனைவரும் அதிசயப்பட்டனர். சரியாக எழுதப் படிக்கத் தெரியாத, கிராமத்திலிருந்து வந்த, ஒரு பெண்ணால் முதியோர் மற்றும் ஊனமுற்றவர் இல்லத்தைத் திறம்பட நிர்வகிக்கமுடியுமா என்று எண்ணினர். ஆனால் சேவைசெய்வதில் அவருக்கு இருந்த உண்மையான ஆர்வம் அவரால் இதுவும் முடியும், இன்னமும் முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

அதைப்போன்ற தொண்டுநிறுவனங்களை நாட்டின் பலபகுதிகளில் நிறுவினார். அவரது சேவைநிறுவனங்களில் ‘அன்பு பாசம் பரிவு ‘ இவை மூன்று மட்டும்தான் இருக்கும். பரிவைத்தேடும் எல்லா  மனிதருக்கும் ‘கோகிலா மா’வின் நெஞ்சில் இடம் இருந்தது.

தனக்கே  சேவைசெய்ய ஆட்களைத்தேடும்  92வது வயதிலும் மற்றவர்களுக்குச் சேவை செய்துவந்த ‘கோகிலா மா’விற்கு ‘’மதர் தெரசா’ பட்டம் என்ன ‘பாரத ரத்னாவே’ கொடுக்கலாம். 

உலகத்தின்  ஒவ்வொரு கோடியிலும் இருக்கும், பிறப்பால், மனதால், உடலால், வியாதியால் ஊனமுற்றுக் காயப்பட்டுத் துன்பத்தில்  துவளும் மனிதமனங்களுக்கு, ஆயாவாக, அன்னையாக,  தெய்வமாக இருந்த ‘கோகிலா மா’ தனது 92 வயதில் சிரித்தமுகத்துடனே நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.

அந்தச் சிரித்தமுகத்திற்குப் பின்னால் இருந்த வலிகள் யாருக்கும் தெரியாது.

அவருக்காகச் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தாலும் நரகத்தில் தவிக்கும் பாவிகளுக்குச் சேவைசெய்ய அவர் நரகத்தையே தேர்ந்தெடுக்கக்கூடும்.

அதுதான் ‘கோகிலா மா’ .

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

dr1

(கடைசிப்பக்கம் எழுதிவரும் டாக்டர் ஜெ பாஸ்கரன் அவர்களுக்குக் கலைமகள் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. – வாழ்த்துக்கள் – குவிகம் )

 

 

Related image

ஸ்ட்ரெஸ் – தவிர்க்கப்பட வேண்டிய மனநிலை!

அவர் உள்ளே வரும்போதே நடையில் ஓர் அவசரம் தெரிந்தது – அங்கும் இங்கும் பார்த்தபடி வந்தார். கண்களில் ஒரு வித எதிர்பார்ப்பு. எதிரில் அமர்ந்து கையைப் பிசைந்தபடி இருந்தார். மேலோட்டமாக மூச்சு – இடையிடையே ஆழ்ந்த சுவாசம் என ”ரெஸ்ட்லெஸ்” ஆக இருந்தார்.

‘என்ன பிராப்ளம்?”

பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஏ4 தாளை எடுத்தார். வரிசையாக, இடமில்லாமல் நெருக்கி இரண்டு பக்கங்களிலும் கேள்விகளால் நிரப்பியிருந்தார்!

“மறந்து விடக் கூடாதே என்றுதான் . . .. .” – என்றவாறே, நெற்றியைக் கைக்குட்டையால் துடைத்தபடி கேட்கத் தொடங்கினார்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால் வரக்கூடியவையே!

இப்போதெல்லாம் சின்னக் குழந்தை முதல் முதியோர் வரை அடிக்கடி பிரயோகிக்கும் சொல் “டென்ஷனா இருக்கு!”  ’ஸ்ட்ரெஸ்’ அல்லது ’மன அழுத்தம்’ என்பது ஒருவித மனநிலையே – அமைதியாய் சிந்திக்கும் அல்லது இலேசான மனநிலைக்கு எதிரானது. 

ஹான்ஸ் செல்யே என்னும் அறிஞர், இப்படிப்பட்ட மனநிலை உடலின் ‘சமநிலை’யை (HOMEOSTASIS) பாதிக்கிறது என்கிறார்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனிதர்களைப் பாதிக்க கூடியவை மன அழுத்தம் தரக்கூடிய சூழல்களே (STRESSFUL SITUATIONS)!

நம் உடல் ஸ்ட்ரெஸுக்கு எதிர்வினை ஆற்றுவது, நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

“கேனன்” எனும் அறிஞர், ஸ்ட்ரெஸ் வரும்போது நாம் மூன்று வழிகளில் நம்மையறியாமலேயே எதிர்வினையாற்றுகிறோம் என்கிறார். ஃபைட் (சண்டையிடுதல்), ஃப்ளைட் (ஓடிவிடுதல்) அல்லது ஃப்ரீஸ்  (உறைந்து விடுதல்). – ஏதாவது ஒரு வழியில் நாம் இந்த அழுத்தத்தை எதிர்கொள்ளுகிறோம்!

இந்த எதிர்வினைக்குக் காரணம், நமது மூளைக்குள்ளிருக்கும் ஹைப்போதலாமஸ் – பிட்யூட்டரி –அட்ரினல் தொடர்பினால் சுரக்கும் ‘அட்ரினலின்’,’கார்டிசால்’ போன்ற ஹார்மோன்கள்தான்! இவற்றால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது (பால்பிடேஷன்), இரத்தக் கொதிப்பு (BP) எகிறுகிறது – அதிக வியர்வை மற்றும் கை,கால்களில் நடுக்கம் ஆகியவை ஏற்படுகின்றன!

ஸ்ட்ரெஸில் இருப்பவரது மனநிலை “ஆங்சைடி நியுரோசிஸ்” எனப்படுகிறது. எப்போதும் ஒரு பரபரப்பு, ‘என்ன’ ‘என்ன’ என்பதுபோன்ற ஒரு படபடப்பு, அதிகமான சந்தேகங்கள், சலிப்புகள், கவனக்குறைவு, மறதி, அவசரம் என ஒட்டுமொத்தமான ஒரு ‘திறமைக் குறைவு’ ஏற்படுகின்றது. மனோநிலையில் ஏற்படும் மாற்றங்கள், நமது எண்ணங்களையும், நடத்தைகளையும் மாற்றிவிடுகின்றன!

உள்ளிருந்து வரும் ஸ்ட்ரெஸ் பெரும்பாலும் மனோ ரீதியானது – வெளியிலிருந்து வரும் ஸ்ட்ரெஸ் பெரும்பாலும் உடல் ரீதியானது!

வாழ்க்கையில் ஏற்படும் இழப்பு, இறப்பு, பிரிவு, புதிய முயற்சிகள், இயலாமை, ஏழ்மை போன்றவை பெரும்பாலும் ஸ்ட்ரெஸுக்கு வழிவகுக்கின்றன.

அன்றாட அலுவல்களில் சலிப்பு, தினசரி ஏற்படும் வெறுப்பு, விரோதங்கள், மாற்றங்கள், மன அழுத்தம் இவற்றின் ஒன்றுசேர்ந்த பாதிப்பு – எப்போதும் வெறுப்பேற்றும் நட்பு, அண்டை வீட்டார், உடன் வேலை செய்பவர், போக்குவரத்து நெரிசல், எதிர்பாரா விருந்தினர் – இப்படிப் பல வழிகளில் ஒருவருக்கு அழுத்தம் வரலாம்!

ஸ்ட்ரெஸினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்: 

சோர்வு (மனம், உடல் இரண்டும்!),  வலிகள் (கை,கால் குடைச்சல்), தசைகளில் இறுக்கம், அஜீரணம், வாந்தி, பேதி, மலச்சிக்கல், தூக்கமின்மை, குறையும் நோய் எதிர்ப்பு சக்தி (அடிக்கடி ஜலதோஷம், நோய்த் தொற்று), பாலியல் வெறுப்பு, ஆண்மை குறைவு!

நெஞ்சு வலி, படபடப்பு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குழாய்கள் தடிப்பு போன்றவை இதயம் சம்பந்தப் பட்டவை!

மயக்கம், அதிக வியர்வை, தலைவலி (டென்ஷன்), உடல் வலி போன்றவை நரம்பு சம்பந்தப் பட்டவை!

தசை இறுக்கத்தினால், கழுத்து, முதுகு வலி, ‘நரம்பு’ இழுத்தல் ஆகியவையும் ஏற்படும்.

நீண்ட நாளைய ஸ்ட்ரெஸ், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.

இவ்வளவு கெடுதல்களை விளைவிக்கக்கூடிய ஸ்ட்ரெஸ் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் – அதிலிருந்து வெளியே வரும் வழியை அறிந்து, காரணத்தைத் தவிர்த்துவிட்டால், நிவாரணம் நிச்சயம்!

மேலே குறிப்பிட்ட நபரின் நேர நிர்வாகம், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நட்பு, பணியில் அணுகுமுறை போன்றவற்றால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தது!

மன நல ஆலோசகர் மூலம் அவருக்குக் கவுன்சலிங் கொடுக்கப்பட்டது! யோகா, மெடிடேஷன் ஆகியவையும் உதவின.

மருந்துகளை விட, பிராணாயாமம், யோகா, மெடிடேஷன், உடற்பயிற்சி, உணர்வுகளை மனதில் தேக்கி வைக்காமல், பகிர்ந்து கொள்ளுதல், சரிவிகித உணவு, முறையான நல்ல தூக்கம், நேர நிர்வாகம், நல்ல நட்பு, இசை, போன்றவை அதிக அளவில் உதவக் கூடும்!

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது ஒரு கலை – அதை அனைவரும் பின் பற்றுவது, தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்க உதவும்!