சவுடால் – குறும்படம்

இதயத்தைத் தொடும் சிறந்த குறும்படம். என்ன இயற்கையான நடிப்பு! பல பரிசில்களைக் குவித்ததில் வியப்பு இல்லை 

 

குவிகம் பொக்கிஷம் – அவஸ்தைகள் – இந்திரா பார்த்தசாரதி

i_paa

 

சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன். 

பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று, வயது அறுபத்தைந்திருக்கலாமென்று. ஆனால் கண், கண்ட வயது ஐம்பது. நிரந்தர ‘ஸினிஸிஸ’த்தின் நிழற் கீற்றாய் படிந்த ஏளனப்   புன்னகை. கை விரல் ஒன்பதில் ஒவ்வொரு கல்லென்று நவரத்தின மோதிரங்கள்.

அவர் அணிந்திருந்த உடையும், அவருடைய தோற்றமும் அவரை ஹிந்தி மாநிலத்தவர் என்று அறிவித்தது. தும்மைப் பூ போல் பளீரென்ற வேட்டி, குர்த்தா.

அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களை தாராளமாக நீட்டியபடி.  இன்னொருவர் அங்கு உட்கார வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே தெரியவில்லை.  உலகத்தைப் பந்தாகச் சுற்றி தம் குர்தாப் பையில் வைத்திருப்பவர் போல் அவர் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் காலருகே இரண்டு பேர் பணிவுடன் நின்று கொண்டிருந்தார்கள். தமிழர்கள். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் ஒரு வடநாட்டுக்காரருக்கு பணிவிடை செய்வது போல் முறுக்கேறிய மீசையுடன் இரண்டு தமிழர்கள் நின்று கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

‘பழம் எல்லாம் சரியா?’ என்று பாதிஹிந்தியிலும், பாதி ஆங்கிலத்திலும் அவர் கேட்ட கேள்விக்கு, அவர்கள் தலையை ஆட்டி ‘சரிய்யா’ என்றார்கள் தமிழில்.

‘ஸீட்’டுக்குக் கீழே இரண்டு பழக்கூடைகள் இருந்தன.

அவர் எங்களைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

‘எங்கே போகிறீர்கள்?’ என்றார் ஹிந்தியில்.

‘டெல்லிக்கு’ என்றாள் என் மனைவி.

‘ஹும்!’ அவர் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார்.

அது ஏ.ஸி. ஸ்லீப்பர், இரண்டாம் வகுப்புப் பெட்டி. இன்னொரு ஸீட்டில் உட்கார வேண்டியவன் – அவன் இளைஞன், இருபத்திரெண்டு வயதிருக்கலாம் – ஒரு சூட்கேஸ், பை, சகிதமாக வந்து அவரருகில் நின்றான்.

‘என்ன வேணும்?’ என்றார் ஆங்கிலத்தில்.

‘இது என் இடம், எழுந்திருங்கள், உட்கார வேண்டும்.’

‘தம்பி, அட்ஜெஸ்ட் பண்ணிகிட்டு உட்காரு. ஐயா ரயில்வே போர்ட் மெம்பர்.’

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.  இவரா ரயில்வே போர்ட் மெம்பர்? அரசாங்க உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முகத்தில் ஒரு தனிக்களை இருக்கும்.  இவரைப்பார்த்தால், ஜோதிடர் என்று சொல்லாம். இல்லாவிட்டால், ஓர் அரசியல்வாதி என்று சொல்லலாம், ஒரு மந்திரி என்று கூட வைத்துக் கொள்ளலாம். நிச்சயமாக அரசாங்கத்தில் உயர்தர உத்தியோகத்திலிருப்பவர் என்று யாருமே சொல்லமாட்டார்கள். மேலும், ‘ரயில்வே போர்ட் மெம்பர்’, இந்த வகுப்பில் ஏன் பயணம் செய்ய வேண்டும்? அவருக்கு ஸலூன் இருக்கக்கூடுமே!

‘அவர் யாரா இருந்தா எனக்கு என்னய்யா? என் இடம் எனக்கு வேணும்..’ என்றான் இளைஞன்.

அவர் அந்தப் பையன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், ஓர் ஆரஞ்சுப் பழத்தை உறித்துக் கொண்டிருந்தார்.

‘ப்ளீஸ் கெட் அப், ஐ வான்ட் டு ஸிட்டெளன்’ என்றான் அவ்விளைஞன், குரலில் சற்று கண்டிப்புத் தோன்ற.

‘வேறு இடம் பார்த்துக் கொள். நான் கண்டக்டரிடம் சொல்லுகிறேன்’ என்றார் அவர் ஹிந்தியில்.

‘ஓகே. நானே சொல்லுகிறேன். நீங்கள் யாராயிருந்தாலும் சரி, என் ஸீட்டை உங்களால் ஆக்ரமிக்க முடியாது. நீங்கள் ரயில்வே போர்ட் மெம்பர் என்று சொல்வதே பொய். அரசியல்வாதியாக இருக்கலாம்’ என்றான் அந்த இளைஞன் ஹிந்தியில்.

அவன் ஹிந்தியில் சொன்னது, அவருடைய பணியாளர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் அவனை ஏற இறங்கப் பார்த்தார்கள்.

அவர் அவர் அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பிறகு கால்களை மடக்கிக் கொண்டார்.

‘என்னய்யா பெரியவரைப் போய் இப்படி..’ என்றான் அவருடைய ஆட்களில் ஒருவன்.

‘அப்படிச் சொல்லுங்க.. பெரியவர், மரியாதை தரவேண்டியதுதான். ரயில்வே போர்ட் மெம்பர், அது இதுன்னு சொல்லாதீங்க..’

‘ரயில்வே போர்ட் மெம்பர்தான்யா; நாங்களும் ரயில்வேயில்தான் வேலை செய்யறோம்.’

அந்த இளைஞன் அவர்களைப் புன்னகையுடன் நோக்கிவிட்டு உட்கார்ந்தான். அவர்களையும் அவர் இவ்வாறு சொல்லி ஏமாற்றியிருக்கக் கூடுமென்று அந்தப் புன்னகை கூறியது.

அவர் என் மனைவியை நோக்கி ஹிந்தியில் சொன்னார். ‘என் பேர் ரவிஷங்கர் மிஸ்ரா. இது நான் எழுதிய நூல், கவிதைத் தொகுப்பு’

அவர் தம் பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

அவர் கவிஞராக இருக்கக் கூடுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. நானும் இலக்கிய ரசிகனாக இருக்க முடியாதென்று அவர் நினைத்த காரணத்தினால் தான் அந்தப் புத்தகத்தை என் மனைவியிடம் கொடுத்தார் என்று எனக்குத் தோன்றியது.

என் மனைவி அந்தப் புத்தகத்தைப் புரட்டினாள்.நானும் பார்த்தேன்.

சின்னச் சின்னக் கவிதைகள். மூன்று வரிகளுக்கு மேலில்லை.

‘முன்னுரை யார் என்று பாருங்கள்’ என்றார் அவர்.

ஓர், அரசியல் பெரும்புள்ளி.

புத்தகத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவர் கையை நீட்டினார். கவிதைகளை என் மனைவி படித்தாக வேண்டுமென்று அவர் விரும்பியதாகத் தெரியவில்லை.

‘எனக்குப் பல்கலைக் கழகப் பட்டம் டாக்டர் என்பதோடு, நான் தொழிலிலும் டாக்டர்’ என்றார் அவர்.

கவிஞர், டாக்டர், இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றனவோ என்று எனக்குத் தோன்றிற்று.

அவர் இன்னொரு புத்தகத்தை எடுத்து என் மனைவியிடம் கொடுத்தார்.

மருத்துவ நூல், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி எல்லாம் கலந்த ஒரு நூல்.

‘அல்லோபதி இல்லையா?’ என்று நான் கேட்டேன்.

‘எனக்குத் தெரியும்.. ஆனால் நம் நாட்டுக்கேற்றவை இவைதான் என்பது என் அபிப்பிராயம். புற்றுநோயைக் கூட குணப்படுத்திவிட முடியும், செய்து காட்டியிருக்கிறேன்.’

‘நீங்கள் ரயில்வே போர்ட்மெம்பர் என்று இவர்கள் சொல்லுகிறார்களே?’ அவர் அதை மறுக்கவுமில்லை, ஆமோதிக்கவுமில்லை. வெறும் புன்னகைதான் பதில்.

ரயில்வே அட்வைஸரி கவுன்சில் மெம்பரா இருக்கலாம் என்றான் அந்தப் பையன்.

இரண்டும் ஒண்ணுதானுங்க! என்றான் அந்த இருவரில் ஒருவன்.

எப்படிங்க ஒண்ணா இருக்க முடியும்? ரயில்வேல வேலை செய்யறீங்க, இது, கூடவா தெரியலே? என்னவா இருக்கீங்க? என்றான் இளைஞன்.

பழ காண்ட்ராக்டருங்க

எனக்குப் புரிந்தது.

வண்டி புறப்படும் போலிருந்தது.

கோயிங் ஸார். குட் ஜர்னி ஸார். என்று கைகளைக் கூப்பி அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, அவர்கள் வண்டியை விட்டு இறங்கினார்கள்.

‘என் பேர் மோகன்’ என்று சொல்லிக் கொண்டே கைகளைக் கூப்பினான் அந்த இளைஞன். நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும், என் அப்பாவை உங்களுக்குத் தெரியும். ராஜகோபாலன் பிடிஐ ‘ என்று தொடர்ந்தான்.

ஓ.. அப்படியா? அவர் எப்படியிருக்கார்?

செளக்கியம். நான் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன். அடுத்த வாரம் அமெரிக்கா போறேன்.

குட்.. கம்ப்யூட்டரா?

ஆமாம்.

அங்கேயே செட்டில் ஆயிடுவே..

நோ நோ.. திரும்பி வந்துடுவேன்…

அவர் எங்களிருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரையும் உரையாடலில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக நான் மோகன் அமெரிக்கா போகப் போவதைப் பற்றிச் சொன்னேன்.

கையை நீட்டு என்றார் அவர் எழுந்து உட்கார்ந்தவாறு.

மன்னிக்கவும். எனக்கு நம்பிக்கையில்லை.

அமெரிக்காவில் முக்கால்வாசிப் பேருக்கு நம்பிக்கையுண்டு தெரியுமா?

இருக்கலாம் எனக்கு இல்லை.

நான் பெரிய ஜோதிடன். டில்லியில் மிஸ்ரா என்று நீ கேள்விப்பட்டதேயில்லையா? நன்றாக ஹிந்தி பேசுகிறாய், நீ டில்லயில் தானே இருக்கிறாய்?

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் டில்லியில்தான். எனக்கு உங்களைப் பற்றித் தெரியாது.

மொரார்ஜியிடம் எண்பதில் சொன்னேன், உங்களுக்கு இன்னும் கொஞ்ச காலந்தான் பதவியென்று. இந்திராகாந்தி என்னை தேடிக் கொண்டு வந்தார். தேர்தலில் ஜெயிப்பீர்கள் என்றேன். கைலாஷ் காலனியில் என் வீட்டுக்கு வந்தாயானால், வாசலில் வரிசையாய் கார் நின்று கொண்டிருக்கும், ஜோஸ்யம் கேக்க. உனக்குக் காசு வாங்காமல் சொல்லுகிறேன் என்கிறேன், வேண்டாமென்கிறாய்.

மன்னிக்கவும். இறந்த காலத்தைப் பற்றி எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று ஸஸ்பென்ஸ் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை போரடிக்கும் என்றான் மோகன்.

என்ன நடக்குமென்று தெரிந்து கொண்டால், தவறுகள் செய்யாமல் உன்னைத் திருத்திக் கொள்ள உதவுமல்லவா?

விதியில் உங்களுக்கு நம்பிக்கையிண்டா?

நிச்சயமாக

அப்படியானால் நடப்பது நடந்துதானே ஆகவேண்டும்? தவறுகளை எப்படி திருத்திக் கொள்ள இயலும்?

குதர்க்கம் பேசுகிறாய். இந்தக் காலத்து இளைஞர்கள் எல்லோருமே இப்படித்தானிருக்கிறார்கள். உங்கள் ரீகன் மனைவியும் ஜோஸ்யம் கேட்கிறாள் தெரியுமா?

எங்கள் ரீகனா? நான் அமெரிக்காவுக்குப் போகப் போகிறேன் என்பதால் அமெரிக்கனாகி விடுவேனா? என்று கூறிவிட்டு மோகன் சிரித்தான்.

அப்பொழுது கண்டக்டர் அங்கு வந்தார். ‘நீங்கள் தான் மிஸ்டர் மிஸ்ராவா?’ என்றார் மிகவும் பவ்யமாக.

அவர் தலையசைத்தார்.

எல்லாம் செளகர்யமாக இருக்கிறதா?

இருக்கிறது. நான் மிஸ்டர் மிஸ்ரா இல்லை, டாக்டர்…’

மன்னிக்கவும்… மருத்துவ…

ஆமாம்.

ஏதாவது வேண்டுமா, உங்களுக்கு?

ஒரு தலையணைதான் கொடுத்தான் உங்கள் பையன். போதாது; இரண்டு வேண்டும்’

‘எஸ் ஸார்’

வண்டி தாமதமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு நாளைக்கு அடுத்த நாள் பதினொன்று மணிக்கு உங்கள் மந்திரி ஸிந்தியாவுடன் அப்பாய்ன்ட்மென்ட் புரிந்ததா?

எஸ் ஸார்.

ஏதாவது வேண்டுமானால், பிறகு சொல்லுகிறேன்.

எஸ் ஸார்

இவருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? ரயில்வே அட்வைஸரி கவுன்ஸிலில் மெம்பர் என்பதாலா, இல்லாவிட்டால் அவர் சொல்வது போல் அரசாங்க ஜோஸ்யர் தானா?

அவர் அணிந்திருந்த ஒன்பது மோதிரங்கள் மீது என் கவனம் சென்றது.

”ஒன்று கேட்கலாமா?” என்றேன் நான்.

”கேளுங்கள். ”

”கையில் ஒன்பது மோதிரங்கள் அணிந்திருக்கிறீர்களே.. ”

”அதுவா?” என்று அவர் புன்னகையுடன் கூறினார். ”நவரத்தினங்கள். ஒன்பது என்ற எண்ணின் விஷேஷம் தெரியுமா? ”

”தெரியாது. ”

‘”ஒன்பதை இரண்டால் பெருக்கி வரும் தொகையின் எண்களைக் கூட்டிப் பாருங்கள். ஒன்பது. இந்த மாதிரி எந்த எண்ணால் பெருக்கிக் கூட்டிப் பார்த்தாலும் கடைசியில் வருவது ஒன்பதுதான். உதாரணமாக 9 x 102 = 918; 9 + 1 + 8 = 18; 1 + 8 = 9. இந்த மாதிரி, இது ஏன் தெரியுமா? ”

”தெரியாது. ”

”ஒன்பதுதான் இறைவன். எதனாலும் பாதிக்கப் படாதவன். ஒன்பதைக் கடவுளாக ஏற்றுக் கொண்டால், எல்லா நன்மைகளும் ஏற்படும். இன்று என்ன தேதி? ”

”பதினெட்டு. ”

”அதாவது, 1 + 8 = 9.  நான் எந்தக் காரியம் செய்தாலும் ஒன்பதில்தான் செய்வேன். நவக்கிரகங்களின் தாத்பர்யம் இப்பொழுது புரிகிறதா? ”

”எல்லோருக்குமே ஒன்பது நல்லதுதானா?” என்று கேட்டாள் மனைவி.

”நிச்சயமாக. ”

என்னை நவரத்தினக் கல் மோதிரம் வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்று நச்சரிக்கப் போகின்றாளோ என்ற பயம் எனக்கு வந்தது.

‘எல்லாருக்குமில்லை’ என்ற நான் இழுத்தேன்.

”இல்லை. எல்லாருக்குந்தான்.” என்றார் அவர் உறுதியான குரலில்.

என் மனைவி அவரிடம் கையை நீட்டினாள்.

”ஒரு கேள்வி கேளுங்கள் சொல்லுகிறேன்.” என்றார் அவர்.

”எனக்கு ஆஸ்துமா உண்டு. அது எப்பொழுது போகும்? ”

அவர் ஐந்து நிமிஷங்கள் கையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு சொன்னார். ”நவக்கிரக பூஜை செய்யுங்கள். பூஜை ஒன்பது நாள் நடக்க வேண்டும். நவரத்தினக் கல் மோதிரம் அணிய வேண்டியது அவசியம். பாதிப் பேர் இதுதான் நீலம் இதுதான் மரகதம் என்று பொய் கல்லைக் காட்டி ஏமாற்றுவார்கள். உண்மையான கல் வேண்டுமானால், இந்தாருங்கள்..” என்று சொல்லிக் கொண்டே அவர் தம்மருகில் வைத்திருந்த டயரியில் இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொடுத்தார்.

”இந்த ஆள் நம்பகமானவன். என் பேரைச் சொல்லுங்கள். இந்தாருங்கள், இதுதான் என் முகவரி. ”

”நவகிரக பூஜை நீங்களே வந்து செய்வீர்களா?” என்று கேட்டேன் நான்.

”அது என்னால் முடியாது. நான் ஆட்களை அனுப்பி வைக்கிறேன். ”

அவர் உடனே கண்களை மூடிக்கொண்டார். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து ‘மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஒரு மணிநேரம் தியானம் செய்யவேண்டும் ‘ என்றார்.

”செய்யுங்கள். ”

”இந்த ஆளை நம்பறீங்களா?” என்றான் மோகன்.

”ஏதானும் சக்தி இருக்கணும். இல்லாமலா. மொரார்ஜி, இந்திராகாந்தி எல்லாரும் இவரைத் தேடிண்டு போறா?” என்றாள் என் மனைவி.

”பதவி வந்துட்டா அதுக்கு நாம தகுதியா என்ற சந்தேகம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வந்துடும். அதனால் ஜோஸ்யர்களை தேடிண்டு போறாங்க. சக்தியுமில்லே ஒரு மண்ணாங்கட்டியுமில்லே. ”

என் மனைவியும் கண்களை மூடிக்கொண்டதிலிருந்து அவள் அவனுடன் வாக்காட விரும்பவில்லை என்று தெரிந்தது.

திடீரென்று கண்விழித்தேன். ஒரே சத்தம். ‘டாக்டர்.. டாக்டர்’

நாலைந்து பேராக மிஸ்ராவை எழுப்ப முயன்று கொண்டிருந்தார்கள்.

அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. அவர் கண்களைத் திறக்கவேயில்லை.

”என்ன அவருக்கு?” என்றேன் நான்.

”எங்களுக்குத் தெரியாது, கண்டக்டர் சொன்னார், இவர் டாக்டர்னு. இங்கேயிருந்து மூணாம் கம்பார்ட்மெண்ட்லே ஒரு குழந்தைக்குத் தூக்கித் தூக்கிப் போடுது. என்னன்னு தெரியலே. இவரைக் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு வந்தோம்”. என்றான் ஒருவன்.

”டாக்டர் மிஸ்ரா, டாக்டர் மிஸ்ரா” என்று நானும் அவரை எழுப்ப முயன்றேன்.

அப்பொழுது என் மனைவி சொன்னாள்,” உங்களுக்குச் சத்தம் கேட்கலியா, அவருக்கே பயங்கர ஆஸ்துமா மூச்சு வாங்கறதைப் பாருங்க.. ”

மேலே படுத்துக் கொண்டிருந்த மோகன் கீழே இறங்கினான்.

அவன் வந்தவர்களிடம் சொன்னான் : ”இவர் டாக்டருமில்லை ஒண்ணுமில்லை. குழந்தையைக் காப்பாத்தணும்னா வேற கம்பார்ட்மெண்ட்லே டாக்டர் இருந்தாப் பாருங்க’

வந்தவர்கள் போய்விட்டார்கள்.

அவரை எழுப்பி, ”என்கிட்டே மருந்து இருக்கு, சாப்பிடறாரா கேளுங்கோ.. ‘ என்றாள் என் மனைவி.

மிகவும் கஷ்டப்பட்டு அவரை எழுப்பினேன். கண்களைத் திறந்து சுற்று முற்றும் பார்த்தார். அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

”டெட்ரால் எஸ்ஏ இருக்கு வேணுமா?” என்றாள் என் மனைவி.

”வண்டியிலே நவகிரக பூஜை செய்ய முடியுமா?” என்று கேட்டான் மோகன்.

”அது தப்பு. கஷ்டப்படறவாளுக்கு உதவி செய்யணும். கிண்டல் செய்யக் கூடாது. ஆஸ்துமான்னா என்னன்னு கஷ்டப்படறவாளுக்குத் தெரியும்.” ‘ என்றாள் என் மனைவி.

ஐயாம் ஸாரி மாமி என்றான் மோகன்

சங்கீதக் கொலு

சங்கீதமும் சாப்பாடும் என்ற இந்த வீடியோ வினாடி வினா – கொலு – சாப்பாடு- கர்னாடக சங்கீதம் இவை அனைத்தும் கலந்த சுவையான கலவை. 

ரசியுங்கள்!

 

நான்காவது தடம் – நிறைவுப் பகுதி அ.அன்பழகன்

இதன் முன்பகுதியைப் படிக்க விரும்புவர்கள் இந்த லின்ங்கைக்  க்ளிக் செய்யவும் 

நான்காவது தடம் – முதல் பகுதி 

 

George Gurdjieff

போர் மேகங்கள் சூழ்ந்த அந்த காலகட்டத்தில் குர்ட்ஜிப்பின் பயணங்கள் எதுவும் எளிதாக இருக்கவில்லை. பெரும்பாலும் நடைப்பயணம். கிடைத்தால் குதிரைப்பயணம். சில நேரங்களில் கப்பல் பயணம். . இப்படிப் பயணித்துக்கொண்டேஇருக்கிறான். உள் சுதந்திரந்திற்கான சூட்சுமத்தைத் தேடி குர்ட்ஜிப் மேற்கொண்ட பயணத்தில் கிருத்துவ குருமார்கள், இஸ்லாமிய சூபிகள்,புத்த துறவிகள்,பாரத தேசத்து ஞானிகள் என்று பலரையும் சந்திக்கிறான். ஒவ்வொரு சந்திப்பும் குர்ட்ஜிப் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

” Time buries the wisdom under the sand ” .” ஞான ரகசியம் மணலுக்கு அடியில் எங்கோ புதைக்கப்பட்டிருக்கிறது ” என்பது குர்ட்ஜிப்பின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே குர்ட்ஜிப் எகிப்தை நோக்கிப் பயணிக்கிறார் – மணலுக்கு முந்தைய எகிப்து என்ற ரகசியத்தை கண்டறிவதற்காக……….

மணலுக்கு முந்தைய எகிப்தின் தோல் வரைபடம் ஒன்று ஒரு பாதிரியிடம் இருப்பதைப்பார்த்து மிகுந்த உணர்ச்சி வசப்படுகிறார் குர்ட்ஜிப். பாதிரி அறியாமல் அவர் வீட்டிற்குள் நுழைந்து மிகவும் சாமர்த்தியமாக அந்த தோல் வரைபடத்தின் பிரதி ஒன்று எடுத்துக்கொண்டு வருகிறார் குர்ட்ஜிப். வரைபடத்தில் உள்ள மணலுக்கு முந்தைய எகிப்தைக் கண்டறிவதற்காக ஒரு நண்பரின் துணையோடு எகிப்து செல்கிறார். எகிப்தில் பிரமிடுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார். குர்ட்ஜிப் எதையும் மேம்போக்காகப் பார்க்கிற மனிதர் இல்லை.  இசை,நடனம், சிற்பம் எதுவாக இருந்தாலும் அதை ஊடுருவி அதன் உள்ளே மறைந்திருக்கக்கூடிய அதிநுட்பமான உண்மையைக்கண்டறியக்கூடிய அபூர்வமான ஆற்றலைப்பெற்றிருந்தார் குர்ட்ஜிப்.  பிரமிடுகளைச்சுற்றிலும் (Sphinx) ஸ்பிங்ஸ் எனப்படும் மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட பிரம்மாண்டமான சிலைகள் காணப்படும்.  அந்த ஸ்பிங்ஸ் சிலைகளைப்பற்றிய குர்ட்ஜிப்பின் கருத்துக்களைப் படிக்கும்போது அவரது நுட்பமான அறிவு நம்மை வியக்க வைக்கிறது. ” ஸ்பிங்ஸ் என்பது ஒரு அபூர்வமான கலைப்படைப்பு.  இயல்பான மனித மனத்திலிருந்து உருவாகிய சிலை அல்ல அது. மாறாக மிகுந்த கணிதத்தன்மையோடும், திட்டமிடலோடும், எண்ணங்களை, செய்திகளை, தகவல்களை, பாரம்பரிய ரகசியங்களை, பயத்தை, எச்சரிக்கையை, பாதுகாப்பு உணர்வை, கருணையை, தைரியத்தை, எதிர்ப்புணர்வை, இன்ன பிற உணர்வுகளை திட வயமாக்கி வடிக்கப்பட்ட மஹா சூட்சுமம் அது. வெளியிலிருந்து அதை கவனிக்கும் மனித மனத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அது தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அச்சிலையை அன்றாடம் கடந்து செல்லும் உள்ளூர்வாசிகளுக்கு ஒருவித சமாதானத்தையும், பாதுகாப்பு உணர்வையும் தரும் அச்சிலை வெளியிலிருந்து படை எடுத்து வருபவனுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் அதிர்வு கொண்டது.”

எகிப்தில் குர்ட்ஜிப்பின் தேடல் முடிவுக்கு வர காரணமாக இருந்தது ஒரு ஞானியின் சந்திப்பு. “இதுவரை தெரியாத ஒன்றைப்பற்றித் தெளிவாக முடிவு கட்டியிருக்கும் உங்களின் மனதால் அதை ஒருக்காலும் புரிந்து கொள்ள முடியாது – ஒருவேளை மணலுக்கு முந்தைய எகிப்து என்ற விஷயத்தை நீங்கள் கண்டு பிடித்து விட்டாலும் கூட.” ” முடிவான உண்மையைக்குறித்த குறியீடுகளை காலம் காலமாக நம் முன்னோர்கள் விட்டுச்செல்கிறார்கள் என்பது உண்மையில்லையா?” “உண்மைதான். ஆனால் அந்த குறியீடுகளைப் புரிந்து கொள்ள உன் முந்தைய முடிவுகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். மேலும் எல்லா குறியீடுகளும் உமக்கானதல்ல. உமக்கல்லாதவற்றை விட்டு கடந்து போகும் முதிர்ச்சியை நீர் பெற்றுக்கொள்ள எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்”. இந்த சந்திப்பினால் எகிப்திய தேடல் முடிவு பெறுகிறது. குர்ட்ஜிப்பின் பயணங்களில் மிகவும் முக்கியமானது ‘சர்மௌங் ரகசிய ஞான மடாலய’ பயணம்

சர்மெளங் மடாலயம்’ என்பது சூபி ஞானமரபுகள் ஒன்றின் ரகசியப்பயிலகம்(Esoteric School). ஏராளமான சூபி ஞானிகளை உருவாக்கிய ஞானப்பொக்கிஷம் ‘சர்மெளங்’.  முடிவான உண்மையின் ரகசிய சாவியைக்கொண்டது அந்த மடாலயம். பொதுவாக இவர்கள் பயிற்சிகளையும், சாதனைகளையும், வெளிப்படையாகச்செய்வதில்லை. அவை மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. அதுவுமல்லாமல் ஒவ்வொரு காலகட்டங்களிலும் இந்த மடாலயம் இடம் மாற்றம் செய்யப்படுகின்றன. அந்த மடாலயம் இராக்கில் ஒரு ரகசியப் பள்ளத்தாக்கில் இருப்பதைக் கேள்விப்படும் குர்ட்ஜிப் தன் நண்பர் ஒருவரின் துணையோடு மிகவும் சிரமப்பட்டு அந்த இடத்தைக் கண்டடைகிறார். மிகுந்த முயற்சி செய்து சூபிகுருமார்களின் நம்பிக்கையைப்பெற்று மடாலயத்தின் உள்ளே நுழைந்து விடுகிறார். சர்மெளங் ரகசிய பயிற்சிகளையும் கற்றுக்கொள்கிறார். சர்மெளங்கின் பரீட்சார்ந்தங்களில் குறிப்பிட்ட உடலசைவுகள் மற்றும் சில அசையா அபிநயங்களின் மூலம் சில சக்தி நிலைகள் தட்டி எழுப்பப்படுகின்றன.  காலம் காலமாக ஒரேபோன்ற(monotonous) சில வார்ப்பசைவுகளைக்கொண்ட மனித உடலை சில முத்திரைகள், இசை, மற்றும் உடலசைவுகளைக்கொண்டு அதனுடைய பழக்க வரிசை உடைப்பதன் மூலம் எண்ண ஓட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் ஏற்படும். அதனால் மனம் ஒடுங்குகிறது. இந்த உடற்சக்தியின் உருப்படிவுகளை(pattern) மாற்றியமைக்க சர்மௌங்கிகள் சில நடன சூத்திரங்களை,முத்திரைகளை,அபிநயங்களை நீண்ட காலம் ஆய்ந்து வடித்திருக்கின்றனர். இந்த இயங்கு தியானப்பயிற்சிகளை மிகுந்த தீவிரத்தோடு மேற்கொள்கிறார் குர்ட்ஜிப். உடலாற்றலை சமன்படுத்தி, எண்ணங்களை,உணர்வுகளை சாந்தப்படுத்தும் அந்தப் பயிற்சிகளால் குர்ட்ஜிப்பின் உடல் லேசாகியது. எண்ணங்கள், குறிப்பாக, பெண்களைக் குறித்த சிந்தனைகள் அறவே அற்றுப்போனது. இதுவே தான் தேடிவந்த முடிவான உண்மை என்று, பயிற்சியில் தன்னை தீவிரப்படுத்திக்கொண்டார் குர்ட்ஜிப்.  வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவங்கள் தோன்றி மறைந்தன. உடலும், மனமும் லயமானது. கண்ணுக்குத் தெரியாத முடிச்சுகள் அனைத்தும் மெல்ல மெல்ல விடுபடுவதுபோல் இருந்தது. தன் இருப்பைக் குடைந்து துளைத்துக்கொண்டிருந்த கேள்விகள், உள்ளத்தை உரசி ஒலி எழுப்பிக்கொண்டிருந்த ஐயங்கள் எல்லாம் மறைந்து போயின. இந்த அனுபவங்கள் எல்லாம் கொஞ்ச காலமே நீடித்தது. ஷேக் என்ற ஞானியின் சந்திப்பு குர்ட்ஜிப்பை அடுத்த தளத்திற்கு நகர்த்துகிறது…..

தனக்கு ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்கள் அனைத்தும் மறைந்து போனது குறித்து ஷேக் என்ற ஞானியிடம் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார் குர்ட்ஜிப். அதற்கு அந்த ஞானி கூறியது: “ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை எதிர் நோக்குவது என்பது மின்னல் ஒருமுறை வெட்டிச்சென்ற அதே இடத்தில் மறுநாளும்,அடுத்த நாளும்,ஒவ்வொரு நாளும் சென்று மின்னல் வீச்சுக்காக காத்துக்கிடப்பதைப்போன்றதே.” மிகுந்த விரக்தியோடு குர்ட்ஜிப்பின் கேள்வி வருகிறது .” முடிவான ஞானத்தைப்பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”. ஞானி கூறுகிறார்: “இது நீ வாழ்ந்து வந்த வாழ்க்கையை நீ முழுப்பிரக்ஞையோடு இழக்கத் தயாராக இருக்கவேண்டும். நேரடியாகச்சொல்லப்போனால் நீ சாகத் தயாராக இருக்கவேண்டும்.உன் வாழ்க்கை என்று நான் குறிப்பிடுவது வெறும் பொருள் சார்ந்ததை மட்டும் அல்ல. இது வரை நீ கற்றறிந்த ஆன்மிகப்பாடங்கள்,பயிற்சிகள், பயணங்கள், சூத்திரங்கள்,தத்துவங்கள் எல்லாவற்றையும்தான்.”

ஞானியின் பதிலால் குர்ட்ஜிப் ஏமாற்றமடைகிறார்.விரக்தியின் விளிம்பிற்குச்சென்று மீள்கிறார். மெல்ல மெல்ல அவர் தன் தேடலை முற்றிலும் கைவிடுகிறார். எப்போதென்றே சுட்டிக்காட்ட இயலாத நுணுக்கமான காலக்கசிவின் ஊடே அல்லது காலம் நசிப்படையும்போது குர்ட்ஜிப்பின் கேள்விகள் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடுகிறது.

கால ஓட்டத்தில் குர்ட்ஜிப் தனக்கென ஒரு ஆன்மிகப் பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் பயணிக்கிறார். இதுவரை இங்கே இருக்கும் ஒட்டு மொத்த ஞான மரபுகளை மூன்றாகப்பிரிக்கலாம். துறவியின் பாதை, பக்கீரின்பாதை, யோகியின் பாதை. இவை மூன்றையும் உள்ளடக்கியும்,தாண்டியும் ஒரு நான்காம் பாதையை பதித்தவர் ஞானி  குர்ட்ஜிப். நடனத்தின் அசைவுகளின் மூலமே குர்ட்ஜிப் தனது நான்காம் தடத்தை வடித்தெடுத்திருக்கிறார். இந்திய யோக முறைகளும், பரதநடனமும் குர்ட்ஜிப்பின் நான்காம் தடத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றன.

முடிவுரை: இது நான்காம் தடம் புத்தக விமர்சனம் அல்ல. அந்த புத்தகத்தைப் படிக்கும்போது என் மனதைத் தொட்ட விஷயங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த தொகுப்பு பதிப்பிடவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. என் மனதிருப்திக்காக எழுதியது. எழுதுவது என்பது எனக்குக் கைவராத கலை.ஏதோ ஒரு வகையில் என்னை எழுதத் தூண்டிய என் இனிய நண்பர் சுந்தரராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி. என் மனதை ரொம்பவும் தொட்ட பல விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றையும் எழுதி வைத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை நன்றி.

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (அத்தியாயம் பதினாறு)- புலியூர் அனந்து

அத்தியாயம் பதினாறு

Related image

மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்.
மறு நாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
அப்பாவி யென்பார்கள் தப்பாக யெண்ணாதே…
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் சென்றார்கள்
பல்லாக்கை தூக்காதே…பல்லாக்கில் நீயேறு… சிவ சம்போ 

வகுப்பறைப் பழக்கம் விட்டு வெகுநாட்கள ஆகிவிடவில்லை. ஆனாலும் இந்த அனுபவம் புதியதாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தேன். சுமார் முப்பது இருக்கைகள். பள்ளிகளில் அமர ‘பெஞ்ச்’ அல்லது ‘டெஸ்க்’ தான் இருக்கும். இங்கே அமர நாற்காலிகளும் வலது கைப்பிடி முனை ஒரு பெரிய புத்தகம் வைக்கும் அளவில் பெரியதாக இருந்தது. இரண்டு இருக்கையில் அந்த பெரிய கை இடது பக்கம் இருந்தது. பயிற்சி பெறுவோர் எழுதுவதற்கான ஏற்பாடு அது என்று ஊகிக்க முடிந்தது.

Image result for training of younsters in tamilnadu

கரும்பலகைக்குப் பதிலாக வெண்ணிறப் பலகை. அதில் பங்கேற்பவரை ‘வரவேற்கிறோம்’ என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. எழுத்துக்கள் கருநீல நிறத்தில் இருந்தன. நான் உள்ளே நுழையும்போதே சுமார் பத்துபேர் இருக்கைகளில் இருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் ‘சிலீர்’ என்று இருந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தேன். சினிமாக்களில் பார்த்திருந்தபடியால் அது என்ன என்று தெரிந்தது. எங்கள் ஊர் தியேட்டர்கள் எதுவும் ஏர்கண்டிஷண்ட் கிடையாது.

எங்கேயோ பார்த்துக்கொண்டு உள்ளே நகர்ந்ததில் ஒரு இருக்கையில் மோதிக்கொண்டேன். அனைவரும் திரும்பி என்னைப் பார்த்தார்கள். ஆரம்பமே குளறுபடிதான். நான் தலையைக் குனிந்துகொண்டே ஏதோ ஒரு இருக்கையில், (முதல் வரிசையோ கடைசி வரிசையோ இல்லாமல் தவிர்த்து) அமர்ந்தேன். நல்லகாலம், இடதுகைக்காரர்களுக்கான இருக்கை அல்ல அது.

நான்கு நான்காக நான்கு வரிசைகள். நடுவில் பாதை மீண்டும் நான்கு நான்காக நான்கு வரிசைகள். வந்திருந்தவர்கள் பரவலாக அமர்ந்திருந்தார்கள் என் வரிசையில் இன்னும் ஒருவர்தான் இருந்தார்.. வகுப்பு ஆரம்பிக்க.ப் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.

ஒரு மெல்லிய அட்டையில் ஒரே ஒரு காகிதத்தைக் ‘கிளிப்’ போட்டு வைத்திருந்தார்கள். ஒரு பேனாவும் வைத்திருந்தார்கள், அந்தக் காகிதம் ஒரு படிவம். பயிற்சிபெறுவோரின் சுய விவரக்குறிப்பு. எனக்குப் படிவம் என்றாலே ஒரு நடுக்கம். கட்டாயம் தவறு செய்துவிடுவோம் என்று அதீத அவநம்பிக்கை. குறைந்தது எழுத்து சரியில்லை என்று திருத்த வேண்டியிருக்கும் . அது என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்று புரியாமல் செய்துவிடும்.

இந்தமுறை அடித்தல் திருத்தல் இல்லாமல் ஓரளவிற்குத் தெளிவாக எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். மின்சார ரயிலில் வரும்போது ஒரு நோட்டீஸ் கொடுத்தான் ஒரு சிறுவன். அதிலிருந்த விஷயம் எனக்குத் தேவை இல்லாதது. ஏதேதோ வியாதிகளுக்குக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவரின் அறிவிப்பு. ஏதோ நினைவில் அதனைப் பையில் போட்டுக்கொண்டு விட்டேன் போலிருக்கிறது. ஒரு பக்கம்தான் விளம்பரம். மற்றொரு பக்கத்தில் ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக எழுத்து எழுத்தாக எழுதிக்கொண்டேன். ஏதோ காப்பியடித்து அந்தச் சிறு படிவத்தைப் பூர்த்தி செய்தேன். ஒரே ஒரு அடித்தலும் ஒரு திருத்தலும் தான். மானசீகமாக என் முதுகில் நானே தட்டிக் கொண்டேன். அந்த அடித்தலும் என்னாலல்ல. எனக்கு பக்கத்தில் காலியாய் இருந்த இருக்கையில் அமர வந்தவர் என்னை நகரச் சொன்னபோது ஏற்பட்ட கவனக் குறைவுதான். ஓரிடத்தில் ஐந்து என்ற எண் ஆங்கில ‘S’ போலிருந்ததைத் தவிர மிகவும் சரியாக நிரப்பியிருந்தேன். முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக் அறை நிரம்பத் தொடங்கியது. ஆரம்பிக்கும் நேரத்திற்கு ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது, பார்த்தாலே அதிகாரிகள் என்று விளங்கும் வகையில் தோற்றமளித்த மூன்று பேர் சரசரவென்று உள்ளே நுழைந்தார்கள். பயிற்சி மைய அதிகாரிகள் என்று புரிந்தது. எல்லோரும் தன்னிச்சையாக எழுந்து கொண்டோம். பள்ளியில் ஆசிரியர் வரும்போது எழுந்து நின்ற நினைவு வந்தது.

அதில் ஒருவர் ” ப்ளீஸ். சிட் டவுன்” என்றார்.

அவர் தொடர்ந்து பேசினார். குட் மார்னிங்க், வெல்கம், ப்ரண்ட்ஸ் போன்ற சில வார்த்தைகள் தவிர எந்த சொல்லும் எனக்குப் புரியவில்லை. பள்ளியில் ஆங்கிலப் பாடத்தைக்கூட தமிழில்தான் நடத்துவார்கள்.

புரிந்துகொள்ள முயற்சி செய்வதைக்கூட விட்டு விட்டு கவனிப்பது போல பாவனை செய்து கொண்டு இருந்தேன். இடையிடையே எல்லோரும் சிரிப்பார்கள். நானும் சிரிப்பது போல் நடிப்பேன்.

இரண்டாவது ஆள் பேச ஆரம்பித்தார். மீண்டும் அதே கதை.

முதல் வரிசையில் முதலில் அமர்ந்து இருந்தவன் எழுத்து தன் பெயரையும் ஊரையும் சொன்னான். அறிமுகப் படலம் தொடங்கியுள்ளது என்று புரிந்துகொண்டேன். வரிசையாக ஒவ்வொருவரும் எழுந்து ஊரையும் பெயரையும் சொன்னார்கள். என் முறை வருவதற்கு ஆறு ஏழு பேர் இருந்தார்கள். நான் ஊரையும் பெயரையும் எனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் எழுந்து முப்பது பேர் நடுவில் என் பெயரைச் சொல்லக்கூட தைரியம் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

நான் அமர்ந்திருந்தது இரண்டாம் வரிசையில் ஒரு கோடி இருக்கை. முதல் வரிசை முடிந்ததும் இரண்டாம் வரிசைக்காரர்களில் யார் முதலில் என்று தெரியாததால் நானும் மற்றொரு கோடி இருக்கை ஆசாமியும் ஒரே நேரத்தில் எழுந்து பெயரைச் சொன்னோம். எல்லோரும் சிரித்தார்கள். இருவரும் மௌனமானோம். சில நொடிகளில் இருவரும் சேர்ந்து ஆரம்பித்தோம். மீண்டும் மௌனமானோம். நிகழ்ச்சி நடத்துபவர் பிரச்சினையைத் தீர்த்தார். என்னை நோக்கி கையைக் காட்டி “ யூ” என்றார்.

நானும் பெயரைச் சொல்லிவிட்டு ஊரையும் சொன்னேன். இதற்குள் கால்கள் கிடுகிடுத்துக்கொண்டு இருந்தன. மூன்றாவது அதிகாரி குறுக்கிட்டார். அவர் சொன்னவற்றில்

‘டெக்ஸ்டைல்’ ‘ஃபேமஸ்’ என்ற இருவார்த்தைகள் புரிந்தன. நான் தன்னிச்சையாக “நோ சார்!” என்றேன்.

இரண்டாமவர் அதற்குப் பதில் சொன்னார்.. எனது ஊரின் பெயரையே உடைய இன்னொரு நகரம் நெசவிற்குப் பெயர் போனது. அது வேறு மாவட்டத்தில் இருந்தது. இதை ஒருவர் மற்றவருக்கு விளக்கமாகச் சொன்னார் என்று அனுமானித்தேன். மீண்டும் வகுப்பறை மௌனமாயிற்று.. நான் நின்றுகொண்டே இருந்தேன்.

ஒரு அதிகாரி “நெக்ஸ்ட்” என்று சொல்ல, அடுத்தவர் எழுந்திருக்க நான் அமர, ஓரிரு நிமிடங்களில் படபடப்பு அடங்கியது. பலபேர் முன்னிலையில் ஆங்கிலத்தில் நான் சொன்ன முழு வாக்கியம் “நோ சார்!”

அறிமுகப்படலம் முடிந்தது. அதிகாரிகளில் இருவர் வெளியேற, ஒருவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். படிவத்தைப் பூர்த்தி செய்து முடித்துவிட்டவர்கள் அதைக் கொடுத்துவிடலாம் என்று சொல்லப்பட்டது. பூர்த்தி செய்யாத மற்றவர்களுகாகச் சில நிமிடங்கள் அனுமதித்தார்கள். எல்லாப் படிவங்களையும் அடுக்கிக்கொண்ட அந்த அதிகாரி, மேலாக அந்த விவாங்களைப் பார்த்து மாற்றிமாற்றி அடுக்கிக்கொண்டார்.

என் அருகில் அமர்ந்து இருந்தவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். .எங்கே தங்கியிருக்கிறேன் என்று விசாரித்தார். சற்று தொலைவாயிற்றே என்றார். நான் மாலையில் இடம் மாற இருப்பதையும் அண்ணன் கொண்டுவந்து விடுவான் என்றும் சொன்னேன்.

வகுப்பு தொடங்கி விட்டதால் உணவு இடைவேளையின்போது பேசலாம் என்றார்.. தென்னிந்திய மாநிலங்கள் நான்கிலும் (இப்போதுதான் ஐந்தாயிற்றே) வந்திருந்த அனைவரையும் பயிற்சியாளர் மீண்டும் வரவேற்றார். சுமார் ஒரு மணி நேரம் எங்கள் நிறுவனம் ஏன் ஏற்பட்டது, அதன் நோக்கம், செயல்பாடுகள் என்ன, அந்த நிறுவனத்தில் நாங்கள் என்ன பங்கு வகிக்கிறோம் என்றெல்லாம் பேசினார் என்று நினைக்கிறேன். “an important screw in a big machine” என்ற சொற்றொடர் மட்டுமே இன்று நினைவில் இருக்கிறது.

அருகிலிருந்த நீளவட்ட அறையில் எல்லோருக்கும் உணவு அளிக்கப்பட்டது. பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து புன்னகைக்கவும் ஓரிரு வார்த்தைகள் பேசவும் அவகாசமிருந்தது.

பக்கத்து இருக்கைக்காரன் என்னிடம் வந்தான். அவன் சென்னைவாசியாம். வீட்டிற்குச் செல்கையில் என்னை அண்ணன் அறைக்குக் கொண்டுபோய் விடுவதில் தனக்கு எந்த சிரமமும் இல்லை என்றும் என் அண்ணன் அலைவதைத் தவிர்க்கலாம் என்றும் சொன்னான். அண்ணன் கொடுத்திருந்த தொடர்பு எண்ணை வாங்கிக்கொண்டான். பயிற்சி மைய அலுவலக அறைக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போனான். அனுமதி பெற்றுத் தொலைபேசியை உபயோகித்தான்,

என்னிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தான்.  அண்ணன், மாலையில் தான் இங்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும், அறைக்கு அந்த நண்பனுடன் வந்துவிடு என்றும் சொல்லிவிட்டான்.

மதியம் எங்களை ஐந்து ஐந்து நபர்கள் கொண்ட குழுக்களாகப் பிரித்தார்கள். வேறு வேறு மாநில/ மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவில் அமையும்படி பார்த்துக் குழு பிரித்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது.  இரண்டு பக்கத்தில் ஒரு வியாசம் எழுதிக் கொடுக்க வேண்டுமாம்.

சளசளவென்று பேசிக்கொண்டே அந்த வேலையினை எல்லாக் குழுக்களும் செய்தன. என் குழு அளித்த கட்டுரையில் என் பங்கு என்னவென்று அனுமானிப்பவருக்கு எந்தப் பரிசும் அறிவிக்கப் போவதில்லை. கட்டுரைகள் கொடுக்கப்பட்டது. முதல் நாள் பயிற்சி முடிந்தது

ஓரிரு நொடிகளில் முடிவெடுத்த அந்த அடுத்த இருக்கைக்காரன் என் வயதுக்காரன்தான். . ஒரு காரியத்தை இலகுவாக செய்வது எப்படி என்று தெரிந்தவனாகவும் இருந்தான். அவன் சொன்னபடியே செய்தோம்..

அந்த அடுத்த இருக்கை சென்னைவாசியின் பெயர் சற்று நீளம் – கோபதிசங்கர நாராயணமூர்த்தி. (கோமதி என்று யார் சொன்னாலும் கோபதி என்று திருத்துவான்). ஐந்து நாட்கள் கூடப் பழகியதில் அவர்.. அவனானது. தெளிவாக யோசித்து முறையாக முடிவெடுக்கும் திறன் உள்ள அவன் முன்னுக்கு வந்துவிடுவான் என்று சந்தேகமில்லாமல் தோன்றியது.

பகுதி நேரத்தில் மேற்படிப்பும் படித்துவந்த கோபதி, எங்கள் நிறுவனத்திலிருந்து விலகியதும், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் முதல் ஐந்து இந்திய மேலதிகாரியாக ஓய்வு பெற்று பல சமூகசேவை நிறுவனங்களில் தொண்டாற்றி வருவதும் பின்னால் செய்திகள். மேலே சொன்ன பாடல் நிச்சயம் கோபதிக்குத்தான் என்று தோன்றுகிறது

பயிற்சியில் மேலும் சில மனிதர்கள்! அனுபவங்கள்….
….. இன்னும்

 

திரைக்கவிதை – பட்டுக்கோட்டையார்

 

Image result for pattukkottai kalyanasundaram

எளிமையும் இனிமையும் கருத்தும் நிறைந்த பாடல்கள் பல எழுதிப் பிரபலமானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார். 

அவரது கல்யாணப்பரிசு படப்பாடலை இம்மாத திரைக்கவிதையாகத் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

1959 இல் வெளியான படப்பாடல் இது. 

ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று ரேடியோவில் – டி வி யில்  இந்தத் தீபாவளிப் பாடல் ஒளி பரப்பாமல் தீபாவளியே நிறைவு ஆகாது. 

கேப்பு, மத்தாப்புக்களை வைத்து ‘உன்னைக் கண்டு நான் ஆட’ என்று இனிமையான பாடலைத் தந்திருக்கிறார் பட்டுக்கோட்டையார்!

அதே மெட்டில் சோகம் இழையோடும்  ‘ உன்னைக் கண்டு நான் வாட’ என்று வரிகளை மாற்றி அமைத்திருப்பார். 

ஏ.எம்.ராஜாவின் இசையில் சுசீலா/ராஜாவின் குரல்களில் பாடலும் இசையும்  காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். 

 

படம் : கல்யாணப் பரிசு
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை : ஏ.எம்.ராஜா

Image result for unnai kandu naan aada

ஆனந்தம் 

உன்னக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா…
உறவாடும் நேரமடா…

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயெதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா…
வேறேன்ன வேண்டுமடா…

 

(சோகம்)

 

Image result for Kalyana Parisu 1959

உன்னக் கண்டு நான் வாட
என்னைக் கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
ஊரெங்கும் மணக்கும் ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா காணாத தூரமடா

நெஞ்சமும் கனலாகி நீராகும் போது
நிம்மதி என் வாழ்வில் இனியேது
கொஞ்சிடும் மொழிகேட்டு மகிழ்ந்தவள் எங்கே
குலத்தின் விளக்காய் திகழ்ந்தவள் எங்கே
கண்ணுக்குள் நடந்த காட்சிகள் எல்லாம்
கனவாகிப் போனதடா கனவாகிப் போனதடா

ஆசைக்கு அணைபோட்ட அறிவான நங்கை
அன்புக்குப் பொருள் சொன்ன அருள் மங்கை
பாசத்தின் சுமையோடு பறந்து சென்றாளே
பழகும் உனையும் மறந்து சென்றாளே
கண்டதும் நினைவில் கொண்டதும் முடிவில்
கதையாகிப் போனதடா கதையாகிப் போனதடா

 

 

 

குவிகம் பற்றிய நேர்காணல் – தழல்

குவிகம்  குழுமத்தின் இரட்டையரில் ஒருவரான கிருபாநந்தன் ‘தழல்’ என்ற காணொளி அமைப்பின் நிறுவனர்  நெய்வேலி பாலு  அவர்களுக்கு அளித்த பேட்டியை கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.  

திரு பாலு 50க்கும் மேற்பட்ட காணொளிகளை ‘ தழல்’ என்ற அமைப்பின்  சார்பில் எடுத்து யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்.

இலக்கிய அமைப்புகளை நிறுவியவர்களுடன் நேர்காணல் நடத்தி இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றும் தொண்டைப்பற்றி விளக்குவதே அவரது இப்போதைய  நோக்கமாகும்.  

அந்த வரிசையில், “படைப்புலகின் பலகணிகள் இலக்கிய அமைப்புகள் ” என்ற தலைப்பில் முதலில் அவர் தேர்ந்தெடுத்தது நமது ‘குவிகம்  இலக்கியவாசல் அமைப்பு ‘என்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.  

படைப்புலகின் பலகணிகள் இலக்கிய அமைப்புகள் -1 ‘குவிகம் இலக்கியவாசல்’