கடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

சிறப்பாசிரியரின் பூபாள நினைவுகள்!

“சார்,  நீங்க சிறப்பாசிரியரா இருந்து பூபாளம் கீதம் 20 இதழைத் தயாரிக்க வேண்டும்” என்று ஆர்க்கே மூலம் ஆசிரியர் குழு கேட்டுக்கொண்ட போது, எந்த சிந்தனையும் இல்லாமல் (எப்போதுதான் இருந்திருக்கிறது?) ‘சரி’ என்றேன்!

ஆசிரியர் தெரியும், அதென்ன சிறப்பு ஆசிரியர்? “ஒண்ணுமில்ல சார். நாங்களும் உங்க கூடவே எல்லா உதவியும் செய்வோம். ஆர்டிகிள் செலக்ட் செய்வது, ஏதாவது புதியதாய்த் தோன்றினால் சேர்ப்பது இப்படி உங்கள் விருப்பப்படி, பூபாளத்தின் முகம் மாறாமல் இதழைத் தயாரிக்க வேண்டும்” என்றார்கள். குருவித் தலையில் பனங்காய் என்று நினைத்தபடி, ஒத்துக்கொண்டேன். 

நாற்பது ஆண்டுகளுக்கு முன் யுவன் சந்திரசேகர் பூபாளம் இதழ் ஒன்றிற்கு (கையெழுத்துப் பத்திரிகை) சிறப்பாசிரியராய் இருந்திருக்கிறார் என்றார்கள்! யுவனின் உயரம் நான் அறிவேன். அவரது ‘நினைவுதிர்காலம்’ நாவல் வித்தியாசமாக இருக்கும். இப்போதும் மணற்கேணி, தலைப்பில்லாதவை போன்ற புதினங்கள், வித்தியாசமாக இரண்டு, இரண்டரைப் பக்கங்களில் ஒரு சாப்டர் என்பதாக எழுதியிருப்பார். ஒவ்வொரு சாப்டரையும், தனித்தனியாகவும் வாசிக்கலாம், ஒரு தொடராகவும் வாசிக்கலாம்! அவரது சிறுகதை ஒன்றை பூபாளத்திற்குக் கேட்கலாம் என்று அவரைத் தொடர்பு கொண்டு, ‘தலைப்பில்லாதவை’ போன்ற ஒரு கதை வேண்டும் என்றேன். மதுரை பூபாள நினைவுகளை அசை போட்டார். ‘தயாராக ஏதும் சிறுகதை இல்லாததால், கவிதை பற்றிய ஒரு கட்டுரை தரட்டுமா?’ என்றார். பிடிவாதமாக ஒரு சிறுகதைதான் வேண்டும் என்று சொல்லி, இரண்டு வாரத்தில் கொடுக்கும்படி கேட்டேன். ‘பார்க்கிறேன்’ என்றவர் சரியாக இரண்டாம் வாரம் ‘தீனனின் கனவுகள்…’ கதையை அனுப்பி வைத்தார். விபரம் சொல்லிக் கேட்டவுடன் கதைகளை உடனுக்குடன் அனுப்பி வைத்த ஸிந்துஜா, அழகிய சிங்கர், கிரிஜா ராகவன், இந்திரநீலன் சுரேஷ், மரு.முருகுசுந்தரம் ஆகியோரின் கமிட்மெண்ட் என்னை வியக்கவைத்தது! 

ஆவநாழியில் மாதம் தவறாமல் மொழிபெயர்ப்புக் கதைகளை எழுதிவரும் அனுராதா கிருஷ்ணசாமியிடம், ‘சின்னதாக, ‘சுருக்’ கென்றிருக்க வேண்டும். தேவை ஒரு மொழிபெயர்ப்புக் கதை’ என்றேன்! மலையாளத்திலிருந்து (மூலம்:அஷிதா) தமிழுக்கு ‘சட்’டென்று கொண்டுவந்திருக்கும் கதை ‘அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்’. 

கவிதைகளை ரசிப்பேன். சில கவிதைகளில் மறைந்துள்ள படிமங்கள் எனக்குப் புரிவதில்லை. கவிதை எழுதுபவரை விட, அதை வாசித்துப் புதுப் புதுப் பார்வைகளில் அவற்றை விவரித்து சுவை சேர்ப்பவர்கள் என்னை என்றும் ஆச்சரியப்படுத்துபவர்கள்! ஆகையால் ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்த கவிதைளில் சிலவற்றை நான் தேர்வு செய்து என் சிறப்பாசிரியர் கெளரவத்தைக் காத்துக்கொண்டேன்! நானறிந்த சில கவிஞர்களிடம் – ஆர்.வத்சலா, வித்யா மனோகர், மீ.விஸ்வநாதன் போன்றோரிடம் – கவிதை கேட்க, உடனே நல்ல கவிதைகளாகக் கொடுத்துவிட்டார்கள்…. பின்னே, எனக்கே புரிகிறதே, நல்ல கவிதைகள்தான்! ஞானக்கூத்தன், க.நா.சு., எஸ்.வைதீஸ்வரன் போன்றவர்களின் கவிதைகளில் எனக்குப் பிடித்த சில கவிதைகளையும், ஹைக்கூ பற்றி நான் எழுதிய பத்தியையும் சேர்ப்பதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை!

அனுபவப் பதிவுகள் என்றுமே எனக்கு சுவாரஸ்யமானவை! பெரும் ஆளுமைகளுடன் பழகிய அனுபவங்களை எழுதித்தர முடியுமா என்று மூத்த எழுத்தாளர்கள் சிலரை அணுகினேன்!  நேற்று எழுத வந்தவன், ஒரு சிறுபத்திரிகைக்கு ஒரு முறை மட்டுமே ஆசிரியராக இருக்கப்போகிறவன் என்றெல்லாம் ஆராயாமல், உடனே எழுதிக்கொடுத்த மாலன், சுப்ர பாலன், பொன்னேசன், ரகுநாதன் ஜெயராமன் ஆகியோருக்கும், சிறுகதை இலக்கியம் பற்றிய கட்டுரை எழுதிய திருமதி காந்தலட்சுமி சந்திரமெளலி, பக்தி இலக்கியக் கட்டுரை எழுதிய ஆர்.வெங்கடசுப்ரமணியன் ஆகியோருக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றிகள் பலப்பல!

பூபாளம் இதழைக் கொடுக்கச் சென்றபோது, மாலன் உடனே இதழைப் பார்த்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது, எனக்கு நிறைவாக இருந்தது. அன்று அவர் சி.சு.செல்லப்பாவுடனான தன் அனுபவங்களைச் சொன்னபோது, அவரிடம் இரண்டு கட்டுரைகளாகக் கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது! 

பெரும் எழுத்தாளர்களின் வாரிசுகள் – அவர்களும் எழுத்தாளர்களாக இருப்பது என்பது அரிது – தம் தந்தையைப் பற்றி, எழுத்தாளர் என்ற பிம்பத்துக்குப் பின்னால் இருக்கும் மனிதரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது வாசகர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகவும், வாழ்க்கைகுறித்த புரிதலாகவும் இருக்கும் என எண்ணினேன்; மலர்ந்தன ‘அப்பா கட்டுரைகள்’. அமெரிக்காவிலிருந்து வாட்ஸ் ஆப்பில் கட்டுரை அனுப்பிய உமா சங்கரி (தி.ஜா. வின் புதல்வி), ஓசூரிலிருந்து லா.ச.ரா.சப்தரிஷி (லா.ச.ரா. மகன்), சென்னையிலிருந்து தி.ராமகிருஷ்ணன் (அசோகமித்திரன் மகன்), காந்தி, அண்ணாதுரை (கண்ணதாசன் புதல்வர்கள்), லேனா (தமிழ்வாணன் மகன்), தாரிணி (கோமல் சுவாமிநாதன் புதல்வி) ஆகியோரின் உடனடி பங்களிப்பு மறக்க முடியாதது. இவர்கள் எல்லோருமே போன் செய்து, ‘கட்டுரை’ சரியாக வந்துள்ளதா?’ என்று கேட்டுக்கொண்டார்கள் – பத்திரிகை ஆசிரியரின் பொறுப்பையும், எழுத்தாளர்களின் பொறுப்பையும் ஒரே சமயத்தில் உணர்ந்த தருணம் அது!

சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டிருந்த அவரது இரண்டு கட்டுரைத் தொகுப்புகளை வாசித்து, மலைத்துப் போயிருந்தேன் நான். அவரது கதைகள், கட்டுரைகளை சொல்வனத்தில் வாசித்திருக்கிறேன். பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட என் ‘பஜகோவிந்தம்’ சிறுகதையை என்னை போனில் அழைத்து வாழ்த்தி மகிழ்ந்தவர் எழுத்தாளர் வ.ஶ்ரீநிவாசன். அவரது நேர்காணல் (கேள்விகளை அனுப்பி, பதில்களை வாட்ஸ் ஆப்பில் பெற்றுக்கொண்டேன் – “வாட்ஸ் ஆப் காணல்”!) சுவாரஸ்யம் மட்டுமல்ல, அடர்த்தியானதும் கூட. 

எத்தனையோ அலுவல்களுக்கிடையில் கேட்டவுடன் அட்டைப்படம் வரைந்தனுப்பிய ஜீவா அவர்களுக்கு நான் என்ன பெரிதாகச் செய்துவிட முடியும்? 

‘மனதில் பதிந்த சுவடுகள்’ தேர்ந்தெடுப்பதில் உதவியதுடன், கதை ஒன்றையும் கொடுத்து, என்னை ஊக்குவித்த ஸிந்துஜா அவர்களுக்கு நன்றி.

அர்ஜுன் கிருஷ்ணா வின் ஓவியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது, ஆசிரியர் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த ‘பின்னட்டை’ ஓவியம் சிறுபத்திரிகையின் முகமாக அமைந்துள்ளது! 

புத்தகத்தை வடிவமைத்த சரவணன், அச்சிடுவதில் உதவிய குவிகம் கிருபானந்தன் ஆகியோருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

இது ஓர் அனுபவம், மனம் மிகவும் மகிழ்ந்த அனுபவம்! 

திட்டமிட்டு, படைப்புகளைத் தேர்வு செய்து, பின்னர் உண்மைகளைச் சரிபார்த்து, ஒற்றுப்பிழைகளை நீக்கி, படங்கள், ஓவியங்கள் எனச் சேர்த்து, வாசகர்களின் ரசனையை உயர்த்தும் படியான ஒரு இதழைக் கொண்டுவருவதுதான் ஒரு பத்திரிகை ஆசிரியரின் பணி என்கிறது கூகிள் சாமி! இதில் எதுவும் தெரியாமல், ஒரு இலக்கியச் சிறு பத்திரிகை (இது ஒரு பல்சுவவை இதழ் – சிறுபத்திரிகை மாதிரி இல்லை என்றார் ஒரு நண்பர்) ஆசிரியராக இரண்டு மாதம் சுற்றி வந்தது ஓர் அனுபவப் பாடம். உடனிருந்து என்னை ஊக்குவித்து, எல்லாப் பணிகளையும் செய்து, பூபாளத்தை உயர்த்திப் பிடித்திருக்கும் அந்த நான்கு பேருக்கு – ஆர்க்கே, ஹரி, மதுவந்தி, சுரேஷ் – என் நன்றியும் வாழ்த்துகளும்!