பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இணையான பாடலாசிரியர் என்று தயாரிப்பாளர் ஏ வி மெய்யப்ப செட்டியார் கூறியது
கண்ணதாசனை விட என் மனதில் நின்றவர் என்று இசை அமைப்பாளர சுதர்சனம்
கூறியது
இந்தக் கவிஞரின் பாடல் வரிகளை மனத்தில் உள்வாங்கி, இசைகேற்ப பாடல் எழுதும் ரகசியத்தைக் கற்றுக்கொண்டேன் – வாலிபக் கவிஞர் வாலி கூறியது.
இவர் இறந்த செய்தியைக் கேட்டு ஓடி வந்து, பின்னர், இடு காட்டுக்கு அவரின் உடலைச் சுமந்த நால்வரில் இருவர் – நடிகர்திலகம் மற்றும் மக்கள் திலகம்.
இத்தனைப் பெருமைகளும் கண்டவர் தான் கவிஞர் கே பி காமாட்சி.
காஞ்சிபுரம் அருகே காவேரிப்பாக்கததில் பிறந்து, நாடகக் குழுவில் சிறுவயது முதலே நடித்தவர். 22 வயதிற்குள், 1000 மேடைகளில் நடித்தவர். பள்ளி செல்லாதவர். அற்புதமான நடிகர் – பின்னாட்களில் கவிஞரானார்.
சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் இவர் மேற்கத்திய உடையில் நடித்த நடிப்பைப் பார்த்த பணக்கார முதலியார் ஒருவர், தனது மகளை இவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
பராசக்தியில், சிவாஜியால் தாக்கப்பட்டு,கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாதே என்ற திட்டு வாங்கிய பூசாரியாக நடித்தவர் இவர்தான்.
நாடக மேடையை விட்டு, அப்புறம் பாடல்கள எழுதத் தொடங்கினார்.
புதுப் பெண்ணின் மனத்தைத் தொட்டுப் போறவரே
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டு போங்க
இள மனதை தூண்டிவிட்டுப் போறவரே
அந்த மர்மத்தைச் சொல்லிவிட்டு போங்க
என்ற பராசக்தி படப்பாடல், அதில் அறிமுகமான நடிகர் திலகம் போலவே, மக்கள் மனதில் இன்றும் இருக்கிறது.
அதேபோல, ஶ்ரீதர் – சிவாஜி இணையில் அமரதீபம் படத்தில் இடம்பெற்ற
தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்
பூங்காற்றே நீ சொல்லுவாய்
என்ற பாடல் மெட்டும் அழகு. வரிகளும் அழகு. பாடிய ராஜா, சுசீலாவும் அழகு. இளமை துள்ளும் சிவாஜி சாவித்திரியும் கொள்ளை அழகு.
தொடர்ந்து, எதிர்பாராதது படத்தில்
வந்தது வசந்தம்
வந்தது வசந்தம்
வாழ்வினிலே என்று ஒரு பாடலும்,
சிற்பி செதுக்காத பொற்சிலையே
எந்தன்
சித்தத்தை நீ அறிவாயோ
என்ற பாடலும் இவர் எழுதியதுதான்.
இந்தப் பாடல் பதிவின்போது, அருகில் இருந்த படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி உமாபதி (ஆனநத் தியேட்டர் உரிமையாளர் மற்றும் முதல் சினிமாஸ்கோப் படமான இராஜராஜசோழன் படத் தயாரிப்பாளர்) சிற்பி எப்படி பொற்சிலையை செதுக்குவான் – கற்சிலை தான் சரியாக இருக்கும் என்றாராம். கவிஞர் ஏற்றுக்கொள்ளாமல், கவிதைக்கு பொய் அழகு என்றாராம்.
ஒர் இரவு படத்தில்
என்ன உலகமடா
ஏழைக்கு நரகமடா
தன்னல பேய்களுக்கே
தங்கச் சுரங்கமடா
கட்டத் துணி இன்றி
ஏழைகள் வாட
மிராசுகள் வீட்டு சன்னலில்
திரைச் சீலைகள் ஆட
என்ற பொதுவுடமை வரிகள் இன்றைக்கும் பொருந்துகிறது அல்லவா.
மருமகன் என்ற படத்தில், சி ஆர் சுப்பராமன் இசையில் இவரது பாடலை, சி எஸ் ஜெயராமன் பாடிய பின், அதை ஒதுக்கிவிட்டு, ஏ எம் ராஜாவை வைத்து பாடல் பதிவானது. காரணம், சின்னச் சின்ன வீடு கட்டி என்ற வார்த்தை முன்னவர் குரலில், கட்சி என்று ஒலித்ததாம், (வெற்றிலை சீவல் செய்த வேலை) .
அப்படியெல்லாம், தமிழ் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் இசை அமைப்பாளரும், கவிஞரும் .
நல்ல தம்பி, ராஜாராணி, சிங்காரி, நானே ராஜா, சிங்காரி, திகம்பர சாமியார் என பல படங்களுக்கு பாடல்கள் புனைந்தார்.
ஆரம்ப காலங்களில், பம்பாய் மெயில் போன்ற பல படங்களில், விடுதலை உணர்வு கொண்ட பல பாடல்கள் எழுதி இருக்கிறார்,
தேசத் தொண்டே தெய்வீகப் பணி என்று நீ அறிவாய்
தெரிந்து நடந்தால்
வருமே சுய ஆட்சி என உணர்வாய்
பாரத மணிக்கொடி வாழ்க
சுதந்திரம் நாடி
வணங்குவோம் கூடி
இழிவு கொண்ட மனிதர் என்பார்
எங்கள் இந்தியாவில் இல்லையே
கருணாமூர்த்தி காந்தி மகாத்மா , என்றெல்லாம் தேசம், தெய்வீகம் என்று எழுதி இருக்கிறார்.
உலகம் பலவிதம் படத்தில்,
கடவுள் ஒருவன் இருந்தால்
தன் கடமையை செய்ய வேண்டும் – அது
கஷ்டமாய் இருந்தால், மனிதனாய்ப் பிறந்து
ஒரு கணமேனும் வாழ வேண்டும்
என்ற பாடல் புதிய சிந்தனை கொண்டது. பின்னாட்களில் கண்ணதாசன், வானம்பாடி படத்தில், எழுதிய கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்ற வரிகளும் இதுபோலத்தான்.
வாழ்ககை படத்தில்,
உன் கண்ணே உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
ட ட டா ட ட டா , என்ற பாடலும்,
ஆனந்த கோபாலனுடன் ஆடுவேன்
நான் ஆடுவேன் என்ற பாடலும், வைஜயந்தி நடிப்பும் மறக்க முடியுமா என்ன ?
சிங்காரி என்ற படத்தில்,
ஒரு சாண் வயிறு இல்லாட்டா
உலகில் ஏது கலாட்டா
என்ற பாடலும் அப்போது மிகவும் பிரபலமான ஒன்று.
வழக்கம்போல், பல கவிஞர்கள், நாயக, நாயகியர் போல், தேன் உண்ட வண்டு என்று எழுதிய கவிஞர், மது உண்டவராக மாறி, மதுவே அவரின் உணவானது – அப்புறம் அவரின் உயிர் பறித்த எமன் ஆனது.
56 ஆண்டுகளே வாழ்ந்தாலும், கே பி காமாட்சி அவர்களின் பாடல்களுக்கு என்றென்றும மரணம் இல்லை என்பதே உண்மை.
மீண்டும் அடுத்த மாதம், இன்னொரு கவிஞரோடு சந்திப்போம்.
நன்றி