அம்பிகையின் நவரசங்களை பிரதிபலித்த ‘நவரசாம்பிகை’

சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ஸ்ரீ கலாக்ஷி நடனப்பள்ளியின்  நிறுவனர் மற்றும் பரதநாட்டிய ஆசிரியர், நாட்டிய கலா சூடாமணி ஸ்ரீமதி ரஞ்சனா வினோத்குமார் அவர்களின் புகழ்பெற்ற நாட்டிய நாடகம் ‘நவரசாம்பிகை’, அக்டோபர் 4 அன்று தி.நகரில் உள்ள வாணி மஹால் அரங்கில் வெகு விமரிசையாக நடந்தேறியது.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த மேடை நிகழ்ச்சி, அன்னையின்  நவரசங்களையும் ஒன்பது தனித்த கதைகளின் வழியாக பார்வையாளர்களுக்கு நெருக்கமாக உணர்த்தியது. ஒரு புறம் மயில்களுடன் கற்பகாம்பாளாக மாறி ஆடும் தேவி; மறுபுறம் மகிஷாசுரமர்த்தினியாக மாறி அசுரனை அழிக்கும் வீரரசம். ஒரு பக்கம் மோகினியாக மாறிய பெருமாளின் வதனத்தை கண்டு மயங்கும் பதியை பார்த்து சிரிக்கும் அம்பிகை; மறுபுறம் கஜமுகாசுரனின் வயிற்றிலிருந்து இரத்தமும் சதையுமாக வெளிவரும் சிவனைப் பார்த்து அருவருப்பு அடையும் அதிர்ச்சிரசம்.

இவ்வாறு ஜகன்மாதாவின் ஒன்பது ரசங்களும் ஒவ்வொரு காட்சியிலும் தனித்த தன்மையுடன் வெளிப்பட்டன. நந்தி வழியாக கதை சொல்லும் வடிவமைப்பு, சிறுவர்களான விநாயகர் மற்றும் முருகரின் சுறுசுறுப்பான நடிப்புடன் இணைந்து, பார்வையாளர்களை கதையின் உள்ளே அழைத்துச் சென்றது.

இந்த நாடகத்தில் அம்பிகையின் அழகில் மட்டும் நாம் மயங்கிவிடாத அளவிற்கு, சிவன், நந்தி, பிரம்மா, விஷ்ணு, லக்ஷ்மி, சரஸ்வதி, மகிஷன், ராவணன் போன்ற முக்கிய கதாப்பாத்திரங்களும் மேடையை செழுமையாக்கின. மொத்தம் 24 குழந்தைகள் பங்கேற்ற இந்த நாடகம் காண்பவர்களை கவர்ந்ததற்கு மற்றுமொரு காரணம், அவர்களின் ஒழுக்கம், நேர்த்தி மற்றும் மேடை நடத்தை. இவை குருவின் பயிற்சியின் ஆழத்தை வெளிப்படுத்தியது.

காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக மாறும் போது, குழந்தைகள் தங்களது உபகரணங்களை (props) எடுத்து வந்து எடுத்துச் செல்லும் விதம், ஒரு தொழில்முறை மேடை நிகழ்ச்சியில் காணும் துல்லியத்தையே நினைவூட்டியது. ஒவ்வொரு நடனக்கலைஞரும் மற்றவருக்கு இடம் கொடுத்து, போட்டியின்றி, ஆசிரியரின் ஒரே கட்டுப்பாட்டில் ஆடிய ஒழுக்கம் பார்வையாளர்களை கவர்ந்தது.

இந்த நவராத்திரியில் ஊரப்பாக்கத்தில் நடக்கும் நவராத்திரி திருவிழாவில் மீண்டும் அரங்கேறவிருக்கும் ‘நவரசாம்பிகை’, கண்டிப்பாக நாம் தவறாமல் காண வேண்டிய ஒரு கலைப் பொக்கிஷம்.