பெங்களூரிலிருந்து சென்னைக்கு “வந்தே பாரத்” என்னும் மத்திய தர வர்க்க மனிதர்களின் தரை விமானம் புறப்படத் தயாராயிருந்தது.
எழுபது வயது விஜய்யும் அறுபத்து ஐந்து அகவை கீதாவும் அவரவர் நினைவுகளில் ஆழ்ந்து அமர்ந்து இருந்தனர். இருவரும் முறையே உடற்பயிற்சியும் யோகாவும் முறையாக செய்து வருவதால் திடகாத்திரமான தம்பதி.
பெண்ணுக்கே உரிய “பொசசிவ்நெஸ்” என்னும் “என் புருஷன் எனக்குமட்டும்தான் என்னும் சுயநல சுனாமி உணர்வு விரைவில் அங்கே அரங்கேறும் என்று விஜய் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இரண்டு நாள் முன்பு இதே “வந்தே பாரத்”தில் சென்னையிலிருந்து பெங்களூர் வந்து, கொண்டு வந்திருந்த சப்பாத்தி, தயிர் சாதத்தை சாப்பிட்டு விட்டு இன்னொரு “வந்தே பாரத்” பிடித்து கீதாவின் சொந்த ஊரான ஹூப்ளி சென்று, விடுதியில் தங்கி, மறுநாள் கீதாவின் கல்லூரி வாழ்க்கை நண்பர்களை நாற்பது ஆண்டுகட்குப் பிறகு முதன் முறையாக சந்தித்து, அனைவரும் நாள் முழுக்கப் பேசி உண்டு டான்ஸ் ஆடி மகிழ்ந்து “பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே” பாடலை கன்னடத்தில் பாடிவிட்டு பிரியாவிடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து பெங்களூர் வந்து இன்று சென்னை திரும்பும் “வந்தே பாரத்”தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கல்லூரி நாட்கள் நினைவலைகளில் கீதா நீந்திக் கொண்டிருக்க, விஜய் நடு இருக்கையில் அமர்ந்து “டைம்ஸ் ஆஃப் இந்தியா” தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் பகட்டான பட்டுப் புடவையின் படாடோபத்துடன் கழுத்து ஜொலிக்கும் நகைகளுடன் அளவுக்கு மீறிய ஆகிருதியுடன் ஐம்பதை நெருங்கும் ஒரு அரிஸ்டோக்ராட்டிக் பெண்மணி விஜய் இருக்கைக்கு அருகில் உட்கார நேர்ந்தபோது, “எழுபது வயது முதியவர் கைது! ஓடும் ரயிலில் பாலியல் அத்துமீறல்!” என்றெல்லாம் தன் போட்டோவுடன் தொலைக்காட்சிகளில் செய்தி வரக் கூடாது என்று எண்ணிய விஜய் கீதாவிடம் “நான் ஜன்னல் சீட்டில் உட்காந்துக்கறேன், நீ மிடில் சீட் வந்துரு, அந்த லேடி உன் பக்கத்தில் உட்காருவாள் என்று ஆங்கிலத்தில் சொல்ல, அரைத் தூக்கத்தில் இருந்த கீதா பிடிவாதமாக “ நான் இங்கேயே இருக்கேன்” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள வேறு வழியில்லாமல் விஜய் அருகில் அமர்ந்தார் அந்தப் பெண்மணி.
அந்தப் பெண்மணி தன் சூட்கேஸ்சை மேலேயுள்ள “லக்கேஜ் ராக்”கில் வைப்பதற்குத் தடுமாற விஜய் அநாயசமாக தூக்கி வைக்க, “தாங்க்ஸ்” சொல்லி விட்டு கமகமக்கும் பெர்ஃப்யூம் வாசனையுடன் விஜய் அருகில் தன் சீட்டில் சகஜமாக உட்கார்ந்து கொண்டார்.
விஜய்யின் அனுபவக் கண்கள், அந்தப் பெண்மணி வசதி நிறைந்த வெளிநாட்டில் வாழும் பெண்மணியோ என்று அனுமானித்துக் கொண்டிருந்தன. முன்பெல்லாம் “கோச்” வாசலில் “சார்ட்” இருக்கும். அதிலிருந்து ஒருவரின் பெயர் வயது எல்லாம் தெரிந்து கொள்ளலாம். இப்போதுதான் ஐபாட் யுகம்!
அந்தப் பெண்மணி சற்று “ எக்ஸ் எக்ஸ் எல்” சைஸ் என்பதால் அவள் செல்வச் செழிப்பின் வனப்பு கொஞ்சம் விஜய் பக்கமும் கொஞ்சம் நடைபாதைப் பக்கமும் அவள் அமர்ந்திருந்த இருக்கையை மீறி அவள் அணிந்திருந்த ரவிக்கையை மீறி வாளிப்பாகப் வழிந்தோடிய வண்ணம் இருந்தது. அவளின் மல்லிகை மணக்கும் கூந்தலும் தங்கவளையல் கைகளின் அகிம்சை உரசல்களும் விஜய்யின் வயதைக் குறைத்துக்கொண்டே வந்தது.
“வந்தே பாரத்” பயணத்தைத் தொடங்கியது. குளிரூட்டப்பட்ட ரயில் என்பதால் சுற்றிலும் கம்ப்யூட்டர் வர்க்க மனிதர்கள் லேப்டாப், புளுடூத், ஐ ஃபோன் சகிதம்.
ஜன்னலுக்கு வெளியே குடிசைகளும் அழுக்கு படிந்த வீடுகளும் விதிமீறி கட்டப்பட்ட அடுக்குமனைகளும் அவதிப்படும் மனிதர்களின் வாழ்க்கையும் வழி நெடுக இருந்தாலும், உள்ளே ஒரு மினி இந்தியா “உயர்நிலைக்கு வந்து கொண்டிருக்கும் இந்தியா” என்று அவதானித்த வண்ணம் இருந்தார் விஜய்.
பெண்மணி, உணவருந்தும் டிரேயை விரித்து அதில் தன் விலை உயர்ந்த மொபைல் ஃபோனை செவ்வகமாக வைத்து “புளுடூத்” உதவியுடன் “யூட்யூப்”பில் அதிசயமாக அந்தக் காலத்து தமிழ்த் திரைப்படப் பாடல்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
விஜய் ஒரு “நோஸ்டால்ஜியா” பேர்வழி. அந்தக் காலத் தமிழ்த் திரைப் பாடல்கள் என்றால் அவருக்கு நெல்லை இருட்டு கடை அல்வா.
ஒரு பாடல் ரேடியோவில் ஒலிபரப்ப ஆரம்பிக்கும் போதே அந்தப் பாடல் சிவாஜி ,கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி பாட்டு என்றெல்லாம் கணித்து விடும் திரையிசை ஞானி.
பள்ளிப் பருவத்தில் நல்லசேலம் கிராமத்தில் இரவு பத்து மணி அளவில் பவுர்ணமி இரவில் “இலங்கை வர்த்தக ஒலிபரப்பு கூட்டுத் ஸ்தாபனம்” வழங்கும் “இரவின் மடியில்” நிகழ்ச்சியில், அடுத்த வீட்டு டிரான்சிஸ்டர் ரேடியோ மூலம் ஒலிபரப்பாகும் “நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை” சுசீலாவின் மதுரகானம் அந்தக் கிராமத்தின் தெருக்கள் எங்கும் இன்னும் சொல்லப் போனால் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கும்.
சிக்னல் கிடைக்காது சற்று வேகம் குறைந்த ரயிலின் குலுக்கலால் நிஜ வாழ்க்கைக்குத் திரும்பினார் விஜய்.
டீக்கடையில் ஒருவர் தினத்தந்தி படித்துக் கொண்டிருக்கும்போது பக்கத்து மனிதரும் எட்டி அந்தப் பேப்பரை படிப்பதுபோல் விஜய் அந்தப் பெண்மணியின் மொபைல் போனைப் பார்க்க ஆரம்பித்தார்.
பெரியவரிடம் இருந்த பள்ளிச்சிறுவனைக் கவனித்த அந்தப் பெண்மணி “உங்களுக்கும் பழைய பாட்டுக்கள் பிடிக்குமா? எனக்கு பழைய பாட்டுன்னா உயிர்” என்று சொல்லிக்கொண்டே தன் ஃபோனை விஜய் பக்கமும் திருப்பினார்.
அந்த நகர்த்தலில் இருவரும் நெருங்கிய மனிதர்கள் ஆகிவிட்டனர்.
“நீர்க்குமிழி” திரைப்படத்தில் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” ஓடிகொண்டிருந்தது.
“என்னமா எழுதியிருக்கிறார் கண்ணதாசன் “ என்றார் பெண்மணி.
வாடிவாசல் ஜல்லிக்கட்டுக் காளையானார் விஜய்.
“இல்லையில்லை; இந்தப் பாடலை எழுதியவர் உவமைக் கவிஞர் சுரதா;
இவருக்கு சென்னை அசோக் நகரில் அசோக் பில்லர் அருகில் ஒரு சிலை இருக்கு”
இந்தப் பாட்டில ஒரு வரியைக் கவனியுங்க;
“நாமெல்லாம், நாம மட்டும் எப்படியோ ரொம்ப நாள் உயிரோட இருப்போம்; மத்தவாதான் வயசாகி சீக்கிரம் செத்துப் போய்டுவா”ன்னு நெனைச்சுண்டு இருப்போம்;
இந்தப் பாட்டிலே “இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவா திறக்கின்றான்” ன்னு சொல்லியிருப்பார் சுரதா;
பெண்மணிக்கு ஆச்சரியம். ஒரு சினிமாப் பாடலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று.
விஜய் தொடர்ந்தார். நாங்க ஆஸ்திரேலியாவில் எங்க மகனோட இருக்கோம். அங்க “மெல்போர்ன்”னில் “உற்சாகப் பறவைகள்”ன்னு ஒரு “சீனியர் சிட்டிசென்ஸ்” குரூப் இருக்கு. அதுல நான் மாசாமாசம் தமிழ் சினிமாப் பாடல்களைப் பத்தி பத்து பதினைஞ்சு நிமிஷம் பேசுவேன், அதுக்காக நிறைய விஷயங்களை சேகரிச்சு வச்சிருக்கேன்.
பெண்மணி உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
இப்போது “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” பாடல்;
விஜய் சிரித்துக் கொண்டே “ இந்தப் பாட்டை எழுதியது பூவை செங்குட்டுவன். ஒரு நாஸ்திக திராவிடர். ஆரம்பக் காலத்தில் கஷ்ட ஜீவனம். ஒரு தடவை குன்னக்குடி வைத்தியநாதன் கிட்ட
“எனக்கு ஒரு சான்ஸ் குடுங்க அண்ணே” என்று செங்குட்டுவன் கெஞ்சிக் கேட்க, குன்னக்குடி, ஓய்! நீர் தமிழ்க் கவிஞர் தானே; முருகன் பேர்ல ஒரு பக்தி பாட்டை எழுதிக் கொண்டு வாரும்” என்று சொல்ல செங்குட்டுவன் பெரியாரிஸ்ட் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டு எழுதின பாட்டு இது;
பெண்மணி சுவாரசியத்துடன் கேட்டுக்கொண்டிருக்க, இடது பக்கத்திலிருந்து கீதா அவ்வப்போது “அவ கிட்ட என்ன பேச்சு வேண்டியிருக்கு” என்பது போல அவர் விலாவை இடிக்க, இடிதாங்கியாக விஜய் பேச்சை தொடர்ந்தார்.
இந்தப் பாட்டுக்கு அப்புறம் ஏராளமான பக்திப் பாடல்களை எழுதிப் புகழ் பெற்ற பூவை சொல்றார், “இந்தப் பாட்டு நான் எழுதவே இல்லை; முருகப் பெருமான்தான் என்னை எழுத வச்சார்”ன்னு;
“தமிழ் நாட்டிலே அதிகாலை அஞ்சு மணிக்கு டீ குடிக்க நீங்க ஒரு டீக் கடைக்கு போனா நிச்சயமாக என்னோட ஒரு பாட்டையாவது கேட்காம வீடு திரும்ப மாட்டீங்க”ன்னு பூவை ஆணித்தரமா சொல்றார்; அது வாஸ்தவம்தான் என்று விஜய் நிறுத்தினார்.
பெண்மணிக்குள்ளே இப்போது ஒரு கல்லூரி மாணவியின் ஆர்வ விழைவு. இடது பக்கத்திலிருந்து “ அவ கிட்ட வாயைக் கொடுத்தது போதும்” என்று இடி;
இடிதாங்கி மீண்டும் தொடர்ந்தார் கல்லூரி மாணவிக்காக.
“கந்தன் கருணை” சினிமாவுக்கு ஒரு முருகன் பாடல் வேண்டும் என்று கேள்விப்பட்ட கண்ணதாசன் “இந்தப் பாட்டுதான் பொருத்தம்”ன்னு ரெகமண்ட் பண்ணினார் என்று என்சைக்ளோபீடியா முடித்தார்.
சட்டென்று கீதா எழுந்து சற்று முரட்டுத்தனமாக விஜய்யைத் இடித்துக் கொண்டு தாண்டி, பெண்மணியை நோக்கி நாசூக்காக சிரித்துக் கொண்டே பவ்யமாகத் தாண்டி பாத்ரூம் சென்றாள்.
பெண்மணியின் போனில் இப்போது “புதிய பூமி” திரைப்படத்தில்” நான் உங்கள் வீட்டுப் பிள்ளை” பாட்டு ஒளிபரப்பானது.
திரைப்பாடல் திறனாளி “இதுவும் பூவை செங்குட்டுவன் பாட்டுதான்; வெறும் மெட்டுக்காக டம்மியாக எழுதியது எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு”; “பாட்டை விட, பாடல் பிறந்த கதை ரொம்ப சுவாரசியமானது” என்று சொல்லி நிறுத்தினார்.
“வந்தே பாரத்” சிப்பந்தி பெண்மணிக்கு ஒரு தட்டில் சமோசாக்களையும் டீயையும் கொடுத்து விட்டுப் போனார்.
பெண்மணி விஜய்யிடம் “இன்னும் ரெண்டு பிளேட் உங்க ரெண்டு பேருக்கும் ஆர்டர் பண்ணட்டுமா? என்று வினவினாள்.
“நோ. தாங்க்ஸ், நாங்க ரயிலில் எதுவும் வாங்கிச் சாப்பிடுவதில்லை” என்று சொல்லிவிட்டு “என்னடா இது! பாத்ரூம் போனவளை காணோமே! என்று கவலைப்பட்டு சற்று உதறலுடன் இருக்கையிலிருந்து எழுந்து கீதாவைத் தேடி பாத்ரூம் சென்றார்.
அங்கே கதவருகே நின்று கொண்டு வெளியுலகை பார்த்துக் கொண்டிருந்த கீதாவின் கண்களில் வெகுளி வெறி.
“ஓஹோ! நான் அந்தப் பெண்ணோடு பேசிண்டு இருந்தது இவளுக்குப்
பிடிக்கவில்லை போலிருக்கு” என்று நினைத்த விஜய், “என்னம்மா! இங்கேயே ரொம்ப நாழி நின்னுண்டு இருக்கே?” “வாம்மா! சீட்டுக்கு” என்றார்.
வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கீதா “ இன்னொருத்தர் ஃபோன்ஐ பாக்கறது நன்னா இல்லை” என்று ஆங்கிலத்தில் வெடித்தாள்.
ஏம்மா! பாட்டுதானே பார்த்தேன்; எனக்கு பழைய பாட்டுன்னா உசிருன்னு
உனக்குத்தான் தெரியுமே?
“அதுக்காக இந்த மாதிரியா? “தொண தொண”ன்னு விடாமப் பேசிண்டு”?
“ஏம்மா, அவ இண்டரெஸ்ட்டிங்கா கேட்டுண்டுதானே இருந்தா; இதுலே என்ன தப்பு?”
“போங்கோ! அவ கூப்பிட்டாண்ணா அவளோடயே போய்டுங்கோ” நான் எப்படியோ போறேன்” என்று கீதா குமுறினாள்.
ஒரு நிமிடம் விஜய் அதிர்ந்து போனார்.
நாற்பது ஆண்டு கால திருமண வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்றங்கள், ஏமாற்றங்கள்; கோபதாபங்கள்; குமுறல்கள், குதூகலிப்புகள்; கணவர் சேல்ஸ் & மார்கெட்டிங் துறை என்பதால் பல உள்நாட்டு, வெளிநாட்டு வேலை தாவல்கள்; வீடு மாற்றங்கள்;
விஜய் வாழ்க்கை நிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்கு கீதா என்னும் அஷ்டாவதானிதான் முழுக் காரணம்; சென்னையில் உத்யோகத்திலும் இருந்து கொண்டு தனியே மகனை மாஸ்டர்ஸ் படிக்க வைத்து ஆளாக்கி, பெண் பார்த்து திருமணத்தை ஒற்றை ஆளாக நடத்தி குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தவள்; வெளிநாடுகளிலிருந்து விஜய் பணம் அனுப்புவதோடு சரி; வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் இந்தியாவில் தேனிலவு விடுமுறை வாழ்க்கை வாழ்ந்து விட்டு போவதோடு சரி;
கீதா ஒரு அற்புதமான இல்லத்தரசி; கோபம் வந்தால் விஸ்வாமித்திரி. உச்சக் கோபத்தில் இருக்கும் கீதாவைப் பார்த்து, “யு ஆர் ரைட்” என்று சமாளித்தால் போதும், ஈரான் மீது டிரம்ப் ஒரேயொரு குண்டைப் போட்டால் உச்சத்தில் இருக்கும் மும்பை ஸ்டாக் மார்க்கெட் அதல பாதாளத்தில் விழுவதுபோல் கீதாவின் கோபம் இறங்கிவிடும்
“சரிம்மா! சாரிம்மா; சீட்ல வந்து உட்கார்” என்று விஜய் இறைஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
“நீங்க போங்கோ; சித்தக் கழிச்சு நான் வரேன்”
கணவன், மனைவியின் நீண்ட நேர வெற்றிடத்தையும் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக சாவதானமாக அசாத்திய மௌனத்துடன் வந்து இப்போதும் இருக்கைகளை மாற்றிக் கொள்ளாமல் அமர்ந்ததையும் வைத்து பெண்மணி “ஏதோ நடந்திருக்கிறது” என்று யூகித்துக் கொண்டார். பெண்ணின் மனதை பெண் நன்கு அறிவாள்தானே!
ஏனோ இப்போது பாட்டுக்களில் சுவாரசியம் குறைந்து, பெண்மணி மொபைல் ஃபோனை அணைத்து விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து நடைபாதையில் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ரயில் காட்பாடி தாண்டியவுடன் பயணிகளிடையே “இன்னும் சற்று நேரத்தில் சென்னை வந்து விடும்” என்ற வீண் பரபரப்பு.
நம் ஆட்கள்தான் விமானச் சக்கரம் தரையைத் தொட்டவுடனேயே, விமானப் பணிப்பெண்களின் கடும் கண்டனங்களையும் மீறி எழுந்து தலைக்கு மேலே உள்ள சூட்கேஸ்சை உருவும் மனிதர்கள் ஆயிற்றே! நமக்கு எங்கும் எதிலும் அவசரம்; எங்கும் “க்யூ” என்னும் நீண்ட மனித ரயில்.
“புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்” என்ற பெயர் எக்ஸ்பிரஸ் ரயிலை விட நீளமாக இருக்கிறது” என்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தது விஜய் நினைவுக்கு வந்தது.
விஜய், கீதா இருவரும் பேசிக்கொள்ளவில்லை;
விஜய், பெண்மணி இருவரும் பேசிக் கொள்ளவில்லை;
“பேசின் ப்ரிட்ஜ்” வந்தவுடன் பெண்மணி கீதாவைப் பார்த்து
புன்சிரிப்புடன் “உங்க ஹஸ்பண்ட் தமிழ் சினிமாவைக் கரைச்சுக் குடிச்சிருக்கார்; அவரோடு பேசிக்கொண்டே வந்ததால் நேரம் போனதே தெரியவில்லை” என்று மலர்ச்சியுடன் சொன்னார். கீதா அக்கறையுடன் புன்னகைத்து பெண்மணியின் பாராட்டை வாங்கிக் கொண்டாள். கண்களால் இருவரும் சிநேகம் பரிமாறிக் கொண்டனர்.
விஜய்யை நோக்கி பெண்மணி “சார்! உங்க வாட்ஸப் நம்பர் கொடுங்க; அப்பிடியே நீங்க பேசின தமிழ்ப் பேச்சு வீடியோவையும் ஃபார்வார்டு பண்ணிடுங்க” என்று ஆரம்பித்தார்.
அப்போது விஜய்யின் இடது பக்க விலாவில் ஒரு இடி விழுந்தது.
அதை சமாளித்து சிரித்துக் கொண்டே விஜய், மேடம்! உங்க பேர் கூட எனக்குத் தெரியாது; தெரியவும் வேண்டாம்; நம்ம ரயில் சிநேகம் இந்த ரயிலோட போகட்டும்; பிராப்தம் இருந்து மறுபடியும் மீட் பண்ணினா அப்ப நாம மொபைல் நம்பர் ஷேர் பண்ணிக்கலாம்” என்றார்.
“நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சரி;” தாங்க்ஸ் சார்’ என்று பெண்மணியும் பின்வாங்கினார்.
சென்ட்ரல் வந்தவுடன், பெண்மணியின் கார் டிரைவர் ரயிலின் உள்ளே நுழைந்து முதலாளியம்மாவுக்கு சல்யூட் அடித்து விட்டு அவர்தம் சூட்கேஸ்சை பொக்கிஷமாகப் பெற்றுக் கொண்டார்.
பெண்மணி தம்பதிக்கு நன்றி சொல்லி விட்டு கூட்டத்தில் கலந்து மறைந்தார்.
கீழே இறங்கியவுடன் கீதா டாக்ஸிக்கு புக் பண்ணினாள். விஜய்க்கு அதெல்லாம் தெரியாது; அவர் போனில் அந்த “ஆப்” எல்லாம் கிடையாது.
டாக்ஸியில் அமர்ந்தவுடன் “ஆஸ்திரேலியா போறத்துக்கு விசாவிற்காக நாளைக்கு அப்போலோவில் மெடிக்கல் செக்அப்” என்றெல்லாம் ஆரம்பித்து விட்டாள்.
கணவர் இப்போது ”தன் கண்ட்ரோலில்” என்பதால் கீதா மீண்டும் சிங்கப்பெண்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


ரசிக்க வைக்கும் நடை.
LikeLike