மடல் ஏறுதல்

image

பழந்தமிழ் முறைப்படி காதல் பலிக்காத காளை  மடலேறுவான் என்று   சொல்லப்படுகிறது. திருக்குறளிலும் இதைப் பற்றிச் சொல்லப்படுகிறது!   

 சரி. அப்படி  ‘மடலூர்தல்/மடலேறுதல்’ என்றால்?  இந்த முறைப் படி பனை மரத்து மட்டைல ஒரு குதிரை வண்டி மாதிரி கட்டி, அதுல உக்காந்து போகணும்.-

           "பனை மரத்தின் கிளை பனை மட்டை எனப்படும். இது இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்வர். இதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் எனப்படும்.

              பனை மரக்கிளையால் செய்த குதிரையில் மயில் தோகை ( பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவிப்பர். மடல் ஏறும் தலைவன் உடம்பு முழுதும் சாம்பல் பூசியிருப்பான். கையில் ஒரு கிழியைப் (ஓவியம் வரையப்பட்ட துணி) பிடித்திருப்பான். ஊரின் நடுவில் உள்ள நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்திற்குச் செல்வான். தான் செய்த மடலின் மேல் ஏறி இருந்து, தன் கையில் உள்ள கிழியின் மேல் பார்வையை வைத்துக் கொண்டிருப்பான். வேறு எந்த உணர்வும் அவனிடம் காணப்படாது. தீயே தன் உடலில் பட்டாலும் அவனுக்குத் தெரியாது. மழை, வெயில், காற்று எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டான். இவ்வாறு தலைவன் மடலில் ஏறியதும் ஊரார்/நண்பர்கள் அதை இழுப்பர். தலைவன் தலைவியைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பான். இதுவே மடல் ஏறுதல் என்பதாகும்.“

            ஊரார் எல்லாம் வந்து தலைவி வீட்டில் பேசி மணமுடிப்பர்!  பெற்றோர் எதிர்த்தாலும் பின்னர் இவ்வாறு செய்து திருமணம் செய்வது ஒரு முறை. . மற்றொரு முறையில், தலைவியை மடலேறுவேன்  என்று மிரட்டி சம்மதம் வாங்குவது.   ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி, திருமங்கை ஆழ்வார் மிகுந்த பக்தியால் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்து மடலேறுவதாக அமைத்தது – சிறிய திருமடல், பெரிய திருமடல்.

கிட்டத்தட்ட நம்ம தனுஷ் வேலையில்லா பட்டதாரியில் ‘ஊதுங்கடா சங்கு’ பாடலைப் பாடுவது போலத் தான் மடல் ஏறுதலும். 

பக்கம் – 16 

இப்படை தோற்கின் …

image

போர்ப் படைகளின் அளவு :

ஒரு எண்ணிக்கை (ENTITY) = ஒரு தேர்ப்படை  அல்லது ஒரு யானைப்படை அல்லது ஒரு குதிரைப்படை  அல்லது ஒரு காலாட்படை 

ஒரு பத்தி = ஒரு தேர்ப்படை +  ஒரு யானைப்படை +                              3 குதிரைப்படை + 5  காலாட்படை = 10  எண்ணிக்கை

ஒரு குல்மம் =  3 பத்தி = 30 எண்ணிக்கை

ஒரு காணம்  = 3 குல்மம் = 90 எண்ணிக்கை

ஒரு பாகினி = 3 காணம் = 270 எண்ணிக்கை

ஒரு கிரிதலை = 3 பாகினி  = 810 எண்ணிக்கை

ஒரு சாமு = 3 கிரிதலை = 2430 எண்ணிக்கை

ஒரு அக்ரோணி  = 10 சாமு = 24300 எண்ணிக்கை 


மகாபாரத்தில் அர்ஜூன் , அபிமன்யு இறந்த மறு நாள்,                            8 அக்ரோணி சேனையை அழித்ததாகக் கூறப்படுகிறது.  அப்படியென்றால் 1,94,400 எண்ணிக்கையை அழித்தானா? 

image

தமிழகத்தில்,  சேனை என்பது மிகப் பெரிய அமைப்பு. ஒரு நாட்டில் 1-3 சேனைகள் இருக்கும். சேனைகளின் எண்ணிக்கை தேவைகளைப் பொறுத்தும் அது இருக்கும் இடத்தைப் பௌத்தும் மாறுபடும்.  சேனாதிபதி  சேனையின் தலைவர் – இன்றைய நாள்  மார்ஷலுக்கு இணை. 

சேனைக்குக் கீழே இருப்பது தளம் . தளத்தின் அதிகாரி தளபதி  .   ( இன்றைய நாள் ஜெனரலுக்கு சமம் .    ( கப்பற்படையில் இவர் கலபதி என்று அழைக்கப்படுவார்

 ஒரு தளத்தில் 

 • 3 யானைப்படைகள்  –     ஒவ்வொன்றும்  300-500 யானைகள் 
 • 3 குதிரைப்படை  –  ஒவ்வொன்றும் 500-1000 குதிரைகள் 
 • 6 காலாட்படை – ஒவ்வொன்றும்  2000-3000 காலாள் 
 • 2 தாள்படை – காலாட்படையும் குதிரைப்படையும் இணைந்து – ஒவ்வொன்றும் 1000–2000 காலாளும்  500-1000 குதிரைகளும்  – .
 • 2 மருத்துவரணி  – ஒவ்வொன்றும்  200–300 மருத்துவர்களும் மருந்துகளும் .
 • 1 அல்லது  2 ஊசிப்படை  – தாக்கும் படை 

 ஒவ்வொரு தளமும் 3 அணிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் 

ஒவ்வொரு அணியிலும் 

1 யானைப்படை + 1 குதிரைப் படை + 2 காலாட்படை + 1 தாள்படை இருப்பர். 


பக்கம் – 17 

என்னை அறிந்தால்.. அனேகன்

image

தனுஷ் அநேக வேடங்களில் பட்டையக் கிளப்பும் படம். ரிச்சான படப்பிடிப்பு – கார்த்திக்கின் ஸ்டைலான வில்லத்தனம் – சாதாரண படத்தை வெற்றிப் படமாக மாற்றியிருக்கிறது!

image

இது ஒரு கௌதம் மேனன் படம் சந்தேகமில்லை. வேட்டையாடு கமல் போல அஜீத்தும்  தூள் கிளப்புகிறார். இடைவேளைக்குப் பிறகு படம் டாப் கியரில் போகிறது. 

பக்கம் –  18 

சிவராத்திரி

சிவனை  வேண்டி நாம் போற்றும் ராத்திரி சிவராத்திரி! 

சிவனுக்காக உருகி அழும் பாடல் இது!

அருமையான வரிகள்! உள்ளத்தை உருக்கும் பாடல்! 

சாஹித்ய கர்த்தா கோபாலகிருஷ்ண பாரதி என்றும் பொன்னையாப் பிள்ளை என்றும் இரு கருத்து நிலவுகிறது! விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.

 அருணா சாய்ராமின் இந்தப் பாடலைக் கேட்கும் போது அதன் வரிகளையும் படித்துக் கொண்டு வாருங்கள் ! ( நன்றி யுடியூப்) 

உங்கள் கண்கள் கலங்கும்!

இராகம்: சண்முகப்ரியா

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா – பெற்ற (தந்தை தாய்)

அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே (அந்தமில்)

அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த
அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த (தந்தை தாய்)

கல்லால் ஒருவன் அடிக்க ……
கல்லால் ஒருவன் அடிக்க… உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க

வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் என்னும்
வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட (கூசாமல்)

கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட

வீசி மதுரை மாறன்…..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ ….அய்யா …..பெற்ற
தந்தை தாய் இருந்தால் உலகத்தில்
உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ
அய்யா (தந்தை தாய்)

image
image

பக்கம் –  19 

மீனங்காடி

அணிகளின் அணிவகுப்பு

 

image

கொடுத்த ஆறு வாரம் முடிந்தது.  இன்று அவர்கள் தொகுத்து வழங்கும் ‘பிரஸன்டேஷன் ‘ தினம்.  இரண்டுகுரூப்பும் ஒன்றாகக் கலந்து கொள்ள அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் முன் அனுமதிவாங்கியிருந்தாள் மேரி. டிப்பார்ட்மெண்டின் முக்கியமான வேலைகளை – வரும் டெலிபோன்களைக்கவனிப்பது போன்றவற்றை மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டியது
என்று பாஸ் பிரசாத்தே உத்தரவு போட்டு விட்டார். ‘ மேரி! நீ
என்ன செய்கிறாய் என்பது புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! மூன்றாவது
மாடியில் ஒரு புதுக் காற்று  

வீசுது என்பது மட்டும் புரிகிறது!
தொடர்ந்து இதை வெற்றிகரமாக முடித்து விடு!
இதன் விவரம் எல்லாம் எனக்குப் பின்னால் தெரிவி! வேறு ஏதாவது உதவி தேவை
என்றாலும் தயங்காமல் கேள்! “

 

மேரிக்குக் கொஞ்சம் பயமாகத்தான்
இருந்தது. நான்கு அணிகளையும் தனித் தனியே சந்தித்து அவ்வப்போது அறிவுரைகள்
சொல்லிக் கொண்டு தான் வந்தாள்.
இருந்தாலும், ‘ பிரஸண்டேஷன் ‘ நாளுக்கு ஒவ்வொரு
அணியும் என்ன தயார் செய்திருக்கிறார்கள் என்பதை அவளால் கண்டு பிடிக்க
முடியவில்லை.  மிகவும் ரகசியமாகத்தான்
வைத்திருக்கிறார்கள் நான்கு அணிகளும்.
எப்படியும் இன்றைக்குக் காலை அவர்களின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்து
விடும்.  கொஞ்சம் ‘ திக் ‘ என்றுதான்
இருந்தது. மேரிக்கு!.

 

அன்று காலை ஒன்பது மணி.! மூன்றாம் மாடி
மக்களின் கூட்டத்திற்காக ‘ தாஜ் ‘ ஹோட்டலில் ஒரு ஹால் எடுக்கப் பட்டிருந்தது.  பிரசாத்தும் மற்றும் இதர டிபார்ட்மெண்ட்
மக்களும் இவர்கள் வேலைகளை எடுத்துக் கொண்டனர்.
பிரசாத் தனியாக ‘ குட்லக் ‘ என்று சொல்லி வழி அனுப்பினார்.

 

image

தாஜ் ஹோட்டலில் அந்த அரங்கத்திற்குப்
பெயர் ‘ மார்க்கெட் அரங்கம் ‘. – சரியான பொருத்தம் என்று மேரி நினைத்துக் கொண்டாள்.  ‘ எண்ணத்தைத்
தேர்ந்தெடுங்கள் ‘ அணி கடைசியில்!
மற்ற அணிகள் எப்போது மேடைக்கு வார வேண்டும் என்பதெல்லாம் தீர்மானித்தாள்
மேரி.  “ முதலில் விளக்கப் படம், பிறகு
கருத்துக்களைத் தொகுத்து வழங்குங்கள். கடைசியில் நாம் செய்ய வேண்டிய முயற்சிகளை
வரிசைப் படுத்துங்கள். இது தான் பொதுவான விதிகள் “ என்றாள் மேரி.

 

மேரி அரங்கத்தில் நுழையும்போது மிகவும்
உணர்ச்சி வசப்பட்டவளாக இருந்தாள்.
அந்த  அரங்கத்தை மக்கள் மாற்றிய
விதம் – மேடை அமைப்பு – தோரணங்கள் – பின்னணி இசை எல்லாம் சந்தோஷத்தின்
வெளிப்பாடாகத் தெரிந்தது.  எல்லா
நாற்காலிகளிலும் பலூனைக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.  வண்ணப் பூக்களின் அலங்காரம் அந்த அரங்கத்திற்கு
ஒரு மயக்கம் தரும் மணத்தைப் பரப்பியது.
அரங்கத்திற்கே உயிர் இருப்பது போல் இருந்தது. ‘ அவர்களின்
கடிகாரம் நன்றாக சாவி கொடுக்கப் பட்டிருக்கிறது ‘ மேரி
நினைத்துக் கொண்டாள்.  திரும்பிப்
பார்த்தால் – டோனி –  அவனுடைய வழக்கமான
மீனங்காடி உடையில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறான்.  மேரியும் அவன் அருகில் போய் அமர்ந்தாள்!.

 

முதலில் ‘ ஆட்டம்
கொண்டாட்டம் ‘ அணி !

 

image

“ ஹலோ! எங்கள் அணி ஆட்டம் கொண்டாட்டம்
அணி !  நாற்காலியில் உட்கார்ந்திருக்கும்
அனைவரும் இங்கே மேடைக்கு வாருங்கள்.
இப்படி அப்படி நில்லுங்கள் ! வரிசையில் நிற்க வேண்டாம் ! ‘ மோடி
மஸ்தான் ‘ வித்தை பார்க்க எப்படி நிற்பீர்களோ அப்படி நில்லுங்கள் !
வெரிகுட் ! அப்படித்தான் ! இப்போது நாங்கள் எங்கள் அணியின் விளக்கப் படத்தை ஒரு
விளையாட்டு மாதிரி நடத்தப் போகிறோம் !  அந்த அணியின் தலைவி பிரபா அறிவித்தாள்.

மேடையில் வண்ண வண்ண வட்டங்கள் வரையப்
பட்டிருந்தன. “ இது ஒரு புது விதமான மியூசிகல் சேர் ! பின்னணி இசை நின்றதும்
மக்கள் அனைவரும் ஒரு வட்டத்திற்குள் போக வேண்டும்.  அதில் ஒரு பேப்பர் இருக்கும்.  அதில் உள்ளதை ஒருவர் சத்தமாகப் படிக்க மற்றவர்
உடன் சொல்லணும் !  அந்தப் பேப்பரில் இரண்டு
கருத்து இருக்கும். ஒன்று – இந்த ஆட்டம் கொண்டாட்டத்தால் என்னென்ன சௌகரியம்
கிடைக்கப் போகிறது என்பது.  இரண்டாவது –
இந்தத் திட்டத்தை எப்படிச் செயல் படுத்துவது என்பது.  ஆரம்பிக்கலாமா ?  ஒரே ஒரு வேண்டுகோள் ! மக்கள் அனைவரும் அழகுப்
போட்டியில் நடப்பது போல் ‘ கேட் வாக் ‘ செய்ய வேண்டும்.
ஓகே ! மியூசிக் ! ஸ்டார்ட் !  படு குஷியில்
ஆரம்பித்தது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ! பாட்டும் நடையும் விசிலும் சேர்ந்து
கொண்டன !

 

image

இந்த விளையாட்டுத் திட்டத்தால் ஏற்படும்
பயன்கள் – சௌகரியங்கள் என்ன தெரியுமா ?  டும் டும் டும் .

 

·        
சந்தோஷமான மக்கள் மற்றவரை சந்தோஷமாக வைப்பார்கள் – டும்
டும் டும்.

·        
ஜாலி புதுமைக்கு வழி காட்டும் – டும் டும் டும்.

·        
நமக்கு நேரம் போவதே தெரியாது – டும் டும் டும் .

·        
நல்லபடியா சந்தோஷமா வேலை செய்வது உடலுக்கும் நல்லது – டும்
டும் டும் .

·        
வேலையில் பரிசு வாங்குவதை விட வேலையே நமக்குப் பரிசாய்
அமைந்து விடும் – டும் டும் டும்.

 இவற்றை எல்லாம்
எப்படி அலுவலகத்தில் செயல் படுத்துவது என்று கேட்கிறீர்களா ? மியூசிக்
காதைப் பிளந்தது !

 ·        
ஆபீஸில் ஒரு பெரிய போஸ்டர் போடணும் ! அதில் “ இது ஒரு
விளையாட்டு மைதானம் – பெரிய குழந்தைகளுக்காக “ என்று எழுதணும் .

·        
நோட்டீஸ் போர்டில் தினமும் ஒரு ‘ ஜோக் ‘ எழுதி
வைக்க வேண்டும்.  ஒவ்வொரு மாதக்
கடைசியிலும் சிறந்த ஜோக்குக்காகப் பரிசு தர வேண்டும்.

·        
ஆபீஸ் ரூமில் பல இடங்களில் வித்தியாசமான பெயிண்ட் அடித்து
சுறுசுறுப்பான இடமாக அதை மாற்ற வேண்டும் .

·        
ஆபீசுக்கு உயிரூட்ட நிறைய செடி. கொடி, மீன்
தொட்டி வைக்க வேண்டும்.

·        
சாப்பாட்டு இடைவேளை போது கேண்டீனில் ‘ யாரு நல்ல
ஜோக்கர் ‘ என்று சின்னச் சின்னப் போட்டிகள் தினமும் நடத்தணும் !

·        
புதிய யோசனை யாருக்காவது தோன்றினால் ஆபீஸில் முக்கியமான
இடத்தில் ஒரு கலர் பல்ப் எரிகிற மாதிரி தயார் செய்யணும் !

·        
ஆபீஸ் மெமோ, நோட்டீஸ்,
சுற்றறிக்கை எல்லாவற்றிலும் ஒரு புதுமை இருக்கணும் !

·        
‘ ஐடியா மேடை ‘ என்று ஒரு மண்
மேடையை அமைத்து பேப்பர் கொடிகளில் யோசனைகளை எழுதி அங்கே குத்தி வைக்கச் செய்ய
வேண்டும்.   மறக்காமல் மாலையில் அதிகாரிகள்
அவற்றைப் படிக்க வேண்டும் !

·        
புதுப் புது விளையாட்டுக்களைக் கண்டு பிடிக்க ஒரு குழு
அமைக்க வேண்டும் !

 

image

‘ ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம் ‘ என்று பாட்டுடன்
அவர்கள் முடிக்க அரங்கமே அதிர்ந்தது.

(தொடரும்) 


பக்கம் – 20 

ஆத்திசூடி க..ங..ச ..

image
 1.  கண்டொன்று சொல்லேல் /  Don’t flip-flop.
 2.  ஙப் போல் வளை /  Bend to befriend.
 3.  சனி நீராடு /  Shower regularly.
 4.  ஞயம்பட உரை /  Sweeten your speech.
 5.  இடம்பட வீடு எடேல் /  Judiciously space your home.
 6.  இணக்கம் அறிந்து இணங்கு /  Befriend the best.
 7.  தந்தை தாய்ப் பேண் /  Protect your parents.
 8.  நன்றி மறவேல் /  Don’t forget gratitude.
 9.  பருவத்தே பயிர் செய் /  Husbandry has its season.
 10.  மண் பறித்து உண்ணேல் /  Don’t land-grab.
 11.  இயல்பு அலாதன செய்யேல் /  Desist demeaning deeds.
 12.  அரவம் ஆட்டேல் /  Don’t play with snakes.
 13.  இலவம் பஞ்சில் துயில் /  Cotton bed better for comfort.
 14.  வஞ்சகம் பேசேல் /  Don’t talk sugar-coat words.
 15. அழகு அலாதன செய்யேல் /  Detest the disorderly.
 16.  இளமையில் கல் /  Learn when young.
 17.  அறனை மறவேல் /  Cherish charity.
 18.  அனந்தல் ஆடேல் /  Over sleeping is obnoxious.


ஆத்திசூடியும் அதற்கு அழகான ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைய தளத்திலிருந்து எடுத்தாண்டது ! (நன்றி) 


பக்கம் – 21 

ஹி .. ஹி ..

image

முதலாமவன் :

 இதென்ன நியாயம் சார் எங்கள் ஸ்டேஷனரி ஸ்டோர்சில் ஒரு பாக்கெட் பென்சில்  ஷார்ட்டேஜாப்  போச்சு.  என்னிடமிருந்து முப்பது ரூபாய் பிடுங்கிட்டாங்க! 

இரண்டாமவன்:

உங்க பாடு தேவலையே! என் செக்க்ஷனில் ஒரு பாக்கெட் ஷார்ட்டேஜாப்  போச்சு.. என்னை சஸ்பென்டே பண்ணிட்டாங்க!

முதலாமவன் :

அடப்பாவமே! நீங்க என்ன வேலை சார் பாக்கறீங்க?

இரண்டாமவன்:

நான் பேங்கிலே கேஷியரா வேலை பாக்கிறேன்! 


image

கடவுள்: 

பக்தா ! என்னதான் நீ ஊழல் பல செய்திருந்தாலும் உன் பக்தியை மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்!


அரசியல்வாதி: 

தலைக்கு ஒரு லட்சம் கொடுத்தாலும் சரி ! தேவர்களையெல்லாம் நம்ம கட்சிபக்கம் இழுத்து தேவலோக ஆட்சி கட்டிலிலே என்னை அமர்த்தி விடுங்க ஸ்வாமி! அப்பறம் நீங்க என்ன வரம் கேட்டாலும் நான் கொடுக்கிறேன்!  


பக்கம் – 23

நான் கண்ட கன்னி (எதிரொலிக் கவிதை)

image


(இக் கவிதையில் வரும் ஒவ்வொரு வரியிலும் ஒரு கேள்வி புதைந்திருக்கும். அவ்வரியின் கடைசி வார்த்தை எதிரொலியாக வரும்போது அக்கேள்விக்கு விடை கிடைக்கும்)

                                                                                                          எதிரொலி 

என்றுமணங் கொள்வேனோ நான் கண்ட மாதை                      தை 
என்செய்தா  லுவகையுமே  கொள்வாளோ பூவை               பூ     வை  
என்னென்ன கொடுத்தாலே முகிழ்த்திடுவாள் மென்னகை   நகை 
என்னிடத்து யாதிருந்தால் மகிழ்ந்திடுவாள் என்செல்வம்   செல்வம் 

நன்மைதனி லென்செய்தால் சுவைத்திடுமோ இல்லறம்      அறம்
இன்பமொடு வாழ்ந்திடவே  விடவேண்டுமெம்  மாசை            ஆசை 
மனமகிழ்வு காட்டிடவே என்செய்தல் பண்பாடு                பண் பாடு 
துன்பத்தைக் கொடுப்பதுவும் வாழ்வுதன்னெப் பிரிவு                பிரிவு 

எப்படிநான் வாழ்ந்தாலே  இருந்திடுவாள் மனமொத்து           ஒத்து 
எப்பதவி கிடைத்தாலே மலர்ந்திடுவாள் மடந்தாய்              தாய் 
எப்படிதா னுறைந்தாலே புகழடைவள் குணக்குன்று   குணக் குன்று
என்னிருப்பின்  சுகமன்றி  வேறில்லை நன்னெறியே         நெறியே     

பக்கம் – 24 

1. பத்தினிக்கோட்டம்                             11. பாண்டிமாதேவி 

2. சேரமான் காதலி                                 12. பொன்னியின் செல்வன் 

3. திருவரங்கன் உலா                            13.யவன ராணி  

4. கடல்புறா                                              14. சேரன் குலக்கொடி 

5. ராஜ திலகம்                                         15. உடையார் 

6. சிவகாமியின் சபதம்                          16. மன்னன் மகள் 

7. வேங்கையின் மைந்தன்                   17. கன்னி மாடம் 

8. பார்த்திபன் கனவு                                18. பொன்னியின் செல்வன்

9. வீரபாண்டியன் மனைவி                   19. நந்திபுரத்து நாயகி 

10. காந்தளூர் வசந்தகுமாரன் கதை   20. கலிங்க மோகினி 

பக்கம் –  25

தலையங்கம்

கட்சிகள் எல்லாம்  ஓட்டுக்காகத் தான் எல்லாம் செய்கின்றன – நாட்டுக்காக இல்லை. 

கட்சிகள் தங்கள் வளர்ச்சியில் கண்ணாக இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! 

இது காங்கிரஸ் , பி.ஜே.பி முதல் சமீபத்திய  ஏ ஏ பி வரை எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும். 

ஆளும் கட்சியின் மசோதாவை முடக்க சென்ற முறை பி ஜே பி செய்ததை இப்போது காங்கிரஸ் செய்கிறது! கூச்சல்! குழப்பம்! ஒத்திவைப்பு! 

இன்னொருவர் முன்னாள் நீதிபதி! ‘மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்டு’ என்கிறார்.கோட்சேக்கு சிலை வைக்க வேண்டும் என்று சிலர் கூக்குரலிடுகின்றனர். 

இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர்  ‘தென்னகப் பெண்கள் கருப்பாக இருந்தாலும் நல்ல கட்டுடன் இருக்கின்றனர்’  என்று பேரவையில் பேசிவிட்டு நான் என்ன தப்பா சொன்னேனா? என்றும் வினவுகிறார். 

ஆனால் லண்டனில் பேசப்போன பெண்மணியை தேசிய ஆபத்து என்று கூறிப் போக விடாமல் பேச்சு உரிமையைப் பறிக்கிறார்கள்! 

ஒரு முதலமைச்சர் கட்சியின் அத்தனை  பேரும் அவருக்கு எதிராகத் திரும்பியும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்.  இன்னொரு முதலமைச்சர்  தீவிரவாதியை  சிறையிலிருந்து விடுவிக்கிறார். மற்றொரு அமைச்சரின் உதவியாளர் அவர் தொந்தரவு பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்.  

எல்லாவற்றிற்கும் மேலே சி பி ஐ ஆளும் கட்சியின் இயந்திரமாகச் செயல் படுகிறது! 

சாதாரண மனிதனைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை!              ( கவலைப் பட்ட ஆர். கே லக்ஷ்மண் அவர்களும் மறைந்து விட்டார்) 

இதெற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகள்  இடும் கட்டளைகளுக்கு அதிகாரிகள் (Bureaucrats) அடிமைகளாகச் செயல்படுவதனால் தான்.

அந்த அதிகாரி வர்க்கம் திருந்தினால் நாடே திருந்திவிடும்! 

செய்வார்களா? 

=====================================================

ஆண்டு : 2                                                                   மாதம் : 3

image


Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191  
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா


பக்கம் – 26