பொருளடக்கம்

குறை ஒன்றும் இல்லை 3 

ஷாலு மை வைஃப்  4

எங்க பூமி 5

இலக்கிய வாசல்   6

ஜோக்ஸ் 7 

மணி ரத்னத்தின்  ‘ஓகே கண்மணி ’ டிரைலர்  8 

சரித்திரப் புத்தகங்கள்  -ஒரு தேடல் 9

சிவப்பழகி 10

ஹோலி 11

மத்திய பட்ஜெட் 12

அளவு 13

உத்தம வில்லன் டிரைலர் 14   

நான் ரசித்த படைப்பாளி 15 


பக்கம் 16க்கு மேல் படிக்க" older entries" கிளிக் செய்யவும்


மடல் ஏறுதல்   16 

இப்படை தோற்கின்   17

என்னை அறிந்தால் /அனேகன் விமர்சனம் 18 

சிவராத்திரி 19

மீனங்காடி 20

ஆத்திசூடி 21  

ஜோக்ஸ்   22 

ஹி  .ஹி 23

எதிரொலிக் கவிதை 24

சரித்திரப் புதிர்  விடை 25 

தலையங்கம்  26 

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
எம் எஸ் அவர்களின் அழகான பாடல் –  ராஜாஜி அவர்கள் எழுதியது. இந்த அருமையான  பாடலை மாற்றிப் பாடுவதற்கு அவர்கள் இருவரும் என்னை மன்னிக்கவும்! 


image

குறை ஒன்றும்இல்லை எனை மணந்த பெண்ணே
குறை ஒன்றும்இல்லை பொன்னே
குறை ஒன்றும்இல்லை கண்ணே

 
சமைக்கத்
தெரியாமல் விழிக்கின்றாய்  பெண்ணே
சமைக்கத்
தெரியாமல்  விழித்தாலும் எனக்கு
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த பெண்ணே
வேண்டியதைத்
தந்திட சரவணபவன் இங்கிருக்க
சமையல் நமக்கெதுக்கு
எனை மணந்த பெண்ணே
அடி பொன்னே  அடி பெண்ணே என்கண்ணே என்கண்ணே
 
 
டிவியை  எப்போதும் பார்க்கின்றாய்  பெண்ணே – உன்னை
சீரியல்விரும்பும்
பெண்களே  போற்றுவர்
என்றாலும்
எனக் கொன்றும்  குறையில்லை பெண்ணே
சோஃபாவில்
சிலையாக
அமர்ந்துள்ள அழகே
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த பெண்ணே
அடி பொன்னே
அடி பெண்ணே என்கண்ணே என்கண்ணே
 
அழகான   துணிமணி வாங்கிடவே  வேண்டி
அடிக்கடி
மாலுக்குச்  செல்கின்றாய் கிளியே
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த பெண்ணே
எதையும்
மறுக்காத உன்புருஷன் நானிருக்க
எதற்கும்
கவலையின்றி  மகிழ்கின்ற  பெண்ணே நீ
என்றும்  சிரித்திட ஏது குறை எனக்கு
ஒன்றும்
குறையில்லை எனை மணந்த பெண்ணே
அடி பொன்னே  அடி பெண்ணே என்கண்ணே என்கண்ணே

அந்தப் பாடலுக்குப் பதில்  இது: 

image



குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த கண்ணா
குறை ஒன்றும்
இல்லை கண்ணா  
குறை ஒன்றும்
இல்லை கன்னையா

 
வேலையே உயிரென்று
கிடக்கின்றாய் கண்ணா
வேலையில்
உயிராய்நீ   இருந்தாலும் எனக்கு
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த கண்ணா
கொள்ளயாய்
வேலைகள் மாமியார் தந்திருக்க  
ஆசைகள் எனக்கெதுக்கு
எனை மணந்த கண்ணா
என் மன்னா
என் வண்ணா  என் கண்ணா என் கண்ணா  
 
 
கிரிக்கெட்டை
எப்போதும் பார்க்கின்றாய்  கண்ணா – உன்னை
கிரிக்கெட்டை
விரும்பும் மக்களே  போற்றுவர்
என்றாலும்
எனக்கொன்றும்  குறையில்லை கண்ணா
கல்லாக  டிவி முன்
அமர்ந்துள்ள கண்ணா  
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த கண்ணா  
என் மன்னா
என் வண்ணா  என் கண்ணா என் கண்ணா  
 
கைபேசி தன்னிலே
நாள்முழுதும் தான்பேசி  
குடும்பக்
கவலைகள் மறந்திருக்கும் வண்ணா  
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த கண்ணா  
எதற்குமே
கலங்காத மனைவி நானிருக்க  
கொஞ்சமும்
கவலையின்றி  இருக்கின்ற கண்ணா நீ  
என்றும்  இருந்திட  ஏது குறை எனக்கு
ஒன்றும்
குறையில்லை எனை மணந்த கண்ணா  
என் மன்னா
என் வண்ணா  என் கண்ணா என் கண்ணா  
 
 

image

பக்கம் – 3 

ஷாலு மை  வைஃப்

image

“உங்க வைஃப் கார் ஒட்டக் கற்கும் போது நீங்கள் குறுக்கே நிற்காதீர்கள் ”. ஷாலு கார் ஓட்டக் கற்றுக்கொள்ளப் போகிறாள் என்றதும்  எனக்குத் தோன்றிய முதல் எச்சரிக்கை மணி.   

அதே சமயம் என் கார் என்னிடம் கெஞ்சியது –  என்னை ஏன்    கொடுமைப் படுத்தப் போகிறாய் ?  (படிக்காதவன் ரஜினி கார் மாதிரி என் காரும் அப்பப்ப பேசும் )

ஆனால் ஷாலு நினைத்ததை மட்டுமல்ல நினைக்காததையும் முடிப்பவள் என்பது பரத நாட்டிய எபிசோடிலேயே தெரிந்து விட்டது. டிரைவிங் ஸ்கூல் காரில் கற்றுக் கொள்ளலாம் என்ற என் கோரிக்கை வைப்பதற்கு முன்னே தள்ளி விடப்பட்டது – ராஜ்ய சபாவில் வைக்கப் பட்ட பி ஜே  பியின் மசோதா  மாதிரி. .  குருஜினி  சொல்லிவிட்டாராம். சொந்தக் காரில் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று. அப்போது தான்  முழு ஈடுபாடு இருக்கும்  என்று. ‘சரி நம்ம கார் . டிரைவிங் ஸ்கூல் டிரைவர்.  என்றேன். அதற்கும் பெரிய ‘நோ’ . குருஜினி  சீடப் பெண் ஒருத்தி இருக்கிறாளாம்.  அவள் தான் பக்தி சிரத்தையுடன் சொல்லித் தருவாளாம். 

ஒரு மாதத்திற்கு காரை அடமானம் வைக்கலாமா? இல்லை ஒரேயடியா விற்று விடலாமா என்றெல்லாம் கெட்டமனது  நினைக்க ஆரம்பித்தது.  ஆபீஸில் நண்பர்களுடன் இதைப் பற்றிக் கலந்து ஆலோசித்தேன். எல்லாப் பசங்களும் போகாத ஊருக்கு வழி சொன்னார்கள். காரோட நான் ஒரு மாதம் தலை மறைவா ஓடிடணுமாம். ‘போங்கடான்னு’ சொல்லிட்டு விதியை நம்பி என் கார் சாவியை ஷாலுவிடம் கொடுத்தேன். மனசுக்குள் பாசமலர் சீன் ஓடியது. ‘ஷாலு.. என் கண்ணையே உன்கிட்டே ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தப் பெட்ரோலைத் தான் எதிர்பார்க்கிறேன்’ 

image

அடுத்த நாள் டிரைவிங்  ஆரம்பிக்கப் போகிறது. ஷாலு ஏதோ புத்தகத்தை வைத்து சீரியசாகப் படித்துக் கொண்டிருந்தாள். ‘காபி  தாயேன் ஷாலு’  என்றதும் அவள் காபி போடப் போன போது அந்தப் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.  முதல் பக்கத்தில் வடிவாம்பா சாரி குருஜினியோட போட்டோ . அதுக்குப் பிறகு கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் என்று கோனார் நோட்ஸ் மாதிரி போட்டிருந்தது. முதல் கேள்வி காரின் படம் வரைந்து பாகங்களைக் குறி.அதுக்கு மேலே  படிக்குமுன் ஷாலு காபியுடன் வந்துவிட்டாள்.“ நோ! நோ ! இதெல்லாம் எங்க சமாசாரம் . நீங்க படிக்கக் கூடாது.”  

முதல் நாள் குருஜினியின் சீடப் பெண் வந்தாள். காருக்கு கற்பூரம் காட்டி ஷாலுக்கு நெற்றியில் வீரத் திலகம் இட்டு ஏதோ போருக்குப் போகும் ஜான்சி  கி ராணி ஸ்டைலிலே தயார் செய்தாள். இரண்டு பேரும்  காரைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தனர். அப்படி வரும் போது காருக்கு சந்தனப்  பொட்டு 18 இடத்தில் வைத்தார். நாலு டயரிலும் ஸ்டெப்னி  டயரிலும் ஒரு எலுமிச்சம் பழத்தை அழுத்தினார்கள். கற்பூர ஆரத்தியும் நடைபெற்றது. நல்லவேளை செந்தில் ஸ்டைலில் எரியும் கற்பூரத்தை பெட்ரோல் டாங்கில் போடவில்லை. எல்லா கதவையும் நன்றாகச் சாத்திவிட்டு  டிரைவர் சீட்டில் சீடரும் பக்கத்து சீட்டில் ஷாலுவும் உட்கார்ந்தார்கள்.பிறகு 11 தடவை இருவரும் பிராணாயாமம் செய்தார்கள்.   சீடர் ஸ்டார்ட் செய்தார்.முடியவில்லை  நான் ஏதோ  சதி செய்வதாக எண்ணி இருவரும்  ஆப்கானிஸ்தான் உளவாளி மாதிரி  என்னைப் பார்த்தார்கள். வண்டி கியரில் இருக்கிறது என்று கண்ணாடிக்கு வெளியில் கரடியாய் கத்தினேன். 

image

சீடர் புரிந்துகொண்டு கியரை சரிசெய்து வண்டியைக்  கிளப்பினார். சந்திராயானம் ராக்கெட் மாதிரி வண்டி பறந்தது. நல்ல வேளை காம்பவுண்ட் கதவைத் திறந்து வைத்திருந்தேன். இல்லையென்றால்  காரும் கதவும் அப்பளமாயிருக்கும். ‘தெருமுனையில் ஒரு ஸ்பீட் பிரேக்கர் இருக்கு’  என்று  நான் கத்தியதை இருவரும் காதில் வாங்கினமாதிரி தெரியவில்லை. ஈஸ்வரோ ரட்சது  என்று சொல்லிக் கொண்டே இன்ஸ்யூரன்ஸ் பேப்பர் சரியாயிருக்கா என்று பார்க்கப் போனேன். பத்தாவது நிமிடம் இருவரும் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார்கள். 

என்னாச்சு?

“ இப்படியா ஒரு ஸ்பீடு பிரேக்கர் வைச்சிருப்பான்!திருப்பதி மலை மாதிரி? ”

“ஏன் காருக்கு அடிபட்டுடிச்சா? ”

“காரைப் பத்தியே கவலைப் படறீங்களே! சிஸ்டர் மாமி அதைப் பாக்காம கொஞ்சம் பாஸ்ட்டா போனதினாலே அவங்களுக்கு முதுகு வலி வந்திடுச்சாம்." 

இன்னிக்கு இது போதும் என்று சொல்லிவிட்டு  நான் போய் காரை எடுத்து வந்து அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு சிஸ்டர் மாமியை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தோம். அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை. அதனால் ஆபீஸ் கவலை இல்லை. 

அன்னிக்கு  ராத்திரி முழுதும் அவள் தூங்கவேயில்லை. என்னையும் தூங்க  விடலை!

 ‘உங்ககிட்டே ஒண்ணு கேக்கணுமே! 

"இந்த காரிலே கியர் எதுக்கு? தேவையேயில்லை! அதை எடுத்துட்டா கார் நல்லா பாஸ்ட்டா ஓடுமில்லே! ”  

“அப்பறம் ரியர் வியூ மிர்ரரில் நம்ம மூஞ்சிக்குப் பதிலா பின்னாடி இருப்பவர் மூஞ்சி தான் தெரியுது. நம்ம மூஞ்சி தெரிஞ்சா மேக்கப் சரி பண்ணிக்கலாம். ”

“நாலு டயர்  எதுக்கு . ஆட்டோ மாதிரி மூணு போதாதா? ”

“காரிலே எப்படி எட்டு போடறது? ”

“சாதா பெட்ரோலுக்குப் பதிலா மூலிகை  பெட்ரோல் போட்டா சீப்பா முடியுமில்லே? ”

“பின்னாடி ஒரு ஸ்டியரிங்க் வைச்சா   திரும்பி உட்கார்ந்து சவுகரியமா ரிவர்ஸ் எடுக்கலாமே! ”

காலையில் எழுந்ததும் ஷாலு சொன்னாள். ’ நேத்து ராத்திரி முழுதும் யோசிச்சேன். அந்த சிஸ்டர் மாமி வேண்டவே வேண்டாம்! அவளே ஒரு அரைகுறை.’ 

இதைக் கண்டுபிடிக்க ஒரு ராத்திரி தேவையேயில்லை. அரை நிமிஷம் போதும். 

“அப்போ கார் திட்டம்  கேன்ஸெலா?”

“இல்லே அதுக்கு வேற ஒரு திட்டம் வைச்சிருக்கேன் "என்று சுஷ்மா சுவராஜ் பாணியில் பேசினாள்.

"யாரு உங்க குருஜினியே சொல்லித் தரப் போறாங்களா? ”

“இல்லே நான் உங்க கிட்டேயே கத்துக்கறேன்!”

அது தான் எனக்கும் சரியா பட்டது. ஆனாலும் கொஞ்சம் பிகு பண்ணிக்கிட்டு ஏதோ அவளுக்காகப் பெரிய தியாகம் செய்யற மாதிரி ஒத்துக் கொண்டேன். ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டேன்.  கார் கற்றுக்கொள்ளும் போதாவது நான் சொல்றதைக் கேட்கணும். அவள் தன்மான உணர்ச்சி அதற்கு முதலில் இடம் கொடுக்கவில்லை  இருந்தாலும் ‘நல்ல முயற்சிக்கு நாமும் கொஞ்சம் தியாகம் பண்ணுவோமே’ என்று ஒத்துக் கொண்டாள். 

அதற்குப் பிறகு தினமும் காலை ஆறு மணிக்கு கார் டிரைவிங்கிற்கு இருவரும் கிளம்பிடுவோம். இருபது நாட்கள்.இருபதே நாட்கள்!

பரவாயில்லை. நான் நினைத்ததைவிட நன்றாகவே கற்றுக் கொண்டாள். எவனாவது பின்னால் ஹாரன் அடிக்கும் போது தான் அவளுக்கு கெட்ட கோபம் வரும்.  ‘நாசமா போறவன் ஏன் இப்படி அலறறான்? ‘ 

கார் ஒட்டறதைப்  பத்தி நான் ஏதாவது மொக்கை . ஜோக் சொன்னாலும் பிடிக்காது. ஒரு நாளைக்கு என் நாக்கில சனி! ‘நீ அமெரிக்காவில பிரமாதமா ஒட்டுவே! ஏன்னா இந்த ஊரில எப்பவும் ராங்க் சைடிலேயே ஒட்டறேன்னு’ சும்மா ஜோக்குக்காக   சொன்னேன். அதற்கு தண்டனையா அன்றைக்கு முழுதும் ‘இந்தக் குத்தலா பேசற குணம் உங்க ஜீன்ஸ்லேயே இருக்கு ‘என்று அவள் மாமியார் நாத்தனார் கொழுந்தன் அவர்களுடன் என்னைக்  கம்பேர் பண்ணி மாடுலேஷனோட ஒரு ஒலிச்சித்திரம் மாதிரி சொன்னாள். 

image

இருபது நாளில்  அவள் சூப்பரா கார் ஒட்டக் கற்றுக் கொண்டாள். டிராஃபிக்கில் எல்லாம் சர்வ அலட்சியமா போறாள். பெரிய ரோட்டில பாஸ்ட் லைனில போகணும்னு துடிப்பா. நான் தான் அப்பப்ப அவள் இன்னும் எல் போர்டு என்பதை  ஞாபகப்  படுத்தணும். 

லைசன்ஸ் வாங்கப் போகும் போது சின்ன வயசிலேந்து நேற்றைக்கு வரை அவள் போன அத்தனை கோவிலுக்கும் தனித் தனியா வேண்டிக்கொண்டாள்.  ‘ஏன் டென்ஷன் ஆகிறே . ‘நீ நல்லாத்  தான் ஒட்டறே. தேவையானா ஒரு ஏஜெண்டு மூலமா போகலாம்’ என்றேன்.   “அதெல்லாம் முடியாது! லஞ்சம் கொடுத்து லைசன்ஸ் வாங்கக் கூடாது என்பது எங்க குருஜினியோட உத்தரவு’ என்றாள். 

குருஜினி படத்தை காரில் வைத்து லைசன்ஸ் வாங்கப் போனோம். ஆர்.டி.ஓ. இன்ஸ்பெக்டர் வரும் போதே கடு கடுன்னு ’ இவனுகளுக்கெல்லாம் கார் ஓட்ட லைசன்ஸ் கொடுக்கக்  கூடாது லைசன்ஸ் டு கில்’ தான் கொடுக்கணும். என்று சொல்லிக் கொண்டே வந்தான். ‘மிஸ்டர் நீங்க பின்னாடி உட்காருங்க என்று என்கிட்டே கறாரா சொன்னான்.  நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க என்று அவள் கிட்டே சொன்னான்.  ஸ்டைலா அவள் காரை எடுக்கும் விதத்திலேயே அவள் ஒரு டாப் டிரைவர் என்பது தெரியவந்தது. நூறு மீட்டர் போகும்போது தான்  அவன் அந்தப் படத்தைப் பார்த்தான். காரை ஓரமா நிறுத்தி  ஐடிலிங்க்போடுங்க என்று உத்தரவு போட்டான். பிறகு ஷாலுவிடம் ’ இந்த குருஜினியை உங்களுக்குத் தெரியுமா? ’ என்று கேட்டான். 

‘உங்களுக்கும் தெரியுமா ’ என்று அவள் கேட்டாள். . 

‘தெரியுமாவா? என் வைஃபோட   குருஜினியும் அவர்கள் தான். இந்த மாதம் அவள் பரத நாட்டியம் கற்றுக் கொள்கிறாள்.’  என்று பெருமையா சொன்னான்.  ஷாலுக்கு குஷி தாளவில்லை. சந்தோஷம்  பிடிபடவில்லை. அந்தப் பெருமையில் வண்டி நின்று விட்டது.  அவனை பயந்து கொண்டு பார்த்தாள். 

‘கவலைப் படாதீங்க ! நல்ல டிரைவர் கிட்டே கத்துக்கிட்டீங்கன்னா இந்த மாதிரி வண்டி ஸ்டாப் ஆகாது.! நீங்க பாஸ் !  மூணு நாள் கழித்து லைசன்ஸ் வாங்கிக்கங்க என்று சொல்லிவிட்டு இறங்கினான்.

ஷாலுக்குத் தெரியாமல் மெல்ல என்னைப் பார்த்து   கைகாட்டிவிட்டுப் போனான் அந்த ஆர் டி ஓ ஆபிசர்.  அவன் என் ஸ்கூல்மேட்!   

லைசன்ஸ் வாங்கின பிறகு தான் சொல்றாள் – என் கிட்டே கார் கத்துக்கணும் என்கிறது தான் குருஜினியின் ஆணையாம். நான் மாட்டேன்னு சொல்வேன் என்று பயந்து சீடப் பெண் மாமி செட் அப் செய்தாளாம்.   

இன்னொண்ணு சொல்ல மறந்திட்டேனே! ‘கார் ஒட்டக் கற்றுக் கொள்ளும் போது கேட்கக்கூடாத ஆயிரம் கேள்விகள்’ என்று ஒரு புத்தகத்தை அமேசானில் போட்டேன். அது இப்ப சூப்பர் ஹிட். 

பக்கம் – 4 

எங்க பூமி

image


இது தான் இங்கிருந்து புறப்படும் கடைசி விமானம். ஒருத்தரைக்கூட விட்டுவிடக் கூடாது என்பது தீர்மானமான உத்தரவு.

“ஒரு நிமிடம் எங்க பாப்பாக்கு உயிருக்கு உயிரா இருந்த எங்க நாய்க்குட்டி…எங்க பூமி.. . அதைக் கடைசியா ஒருமுறை பாத்துடறோம்.”

“ம்..ம்..சீக்கிரம்.!”

“பாப்பா! அங்க பாரு நம்ம பூமி..!  வா வா என்று உன்னைக் கூப்பிடுது !”

அப்போது. மரங்கள் எல்லாம் எரிவது போல ஒரு ‘ஹோ’ என்ற சத்தம் விமானத்திற்கு மறுபுறம் கேட்டது. அனைவரும் ஜன்னல் வழியாகப்பார்த்தார்கள். நெருப்பு ஆறு போல தூரத்தில் வருவது தெரிந்தது.

“கதவைச் சாத்துங்கள்” விமானம் புறப்படட்டும். என்ற சத்தம்கேட்டது. விமானம் புறப்படும் போது தான் .. “ஐயோ! எங்க பாப்பாவைக் காணோம்”

“அந்தக் குழந்தை தப்பித்து விட்டது. நாம் நெருப்பைப்
பார்க்கும் போது அது இறங்கி ஓடிவிட்டது. இப்போது என்ன செய்வது?”

“ஒரு உயிர் கூட இங்கு இருக்கக் கூடாது என்பது
உத்தரவாயிற்றே!”

“நமக்கு நேரமில்லை. கிளம்ப வேண்டியது தான்.”  

அதற்குள் நெருப்பு விமானத்தைச் சூழ்ந்து கொண்டது.
விமானத்தால் நகர முடியவில்லை. ஒரு சில நிமிடங்களில் அந்த விமானம் முழுதும் எரிந்து
சாம்பலாயிற்று. அதிலிருந்த அனைவரும்
அழிந்தே போயினர்.

“பூமி” என்று ஓடிப்போய் அதைக் கட்டிக் கொள்கிறாள். அருகில்
ஒரு சிறுவன்.

“நீ யார்?”

“நானும் உன்னை மாதிரித் தப்பி வந்தவன். பூமியைப் பார்த்து இங்கு
வந்தேன். இதோ பார் ஒரு சுரங்கப் பாதை. வா! நாம் மூவரும் செல்வோம்!”

சென்றார்கள்.

செயற்கைக் கிரகத்திலிருந்த விஞ்ஞானிகள் விமானம் எரியும்
காட்சியைத்    திரையில்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் கைகளைத் தட்டி ஆரவாரித்தனர்.

“கடைசி விமானமும் அழிந்து விட்டது. மனித வர்க்கத்தை
முழுவதுமாக அழித்துவிட்டோம். மனிதர்களைக் காப்பாற்ற செவ்வாய் கிரகம் எத்தனையோ
விமானங்களை அனுப்பியது. நாம் அவை அனைத்தையும் விண்வெளியில் அழித்தோம். இந்த
விமானத்தை அந்த நெருப்பு ஆறே அழித்துவிட்டது. இனி அந்த பூமியில் மனித வர்க்கமே
இல்லை. இன்னும் சற்று நேரத்தில் அந்த பூமி கிரகத்தை சூரிய வெப்பத்தில் இணைய
வைக்கப் போகிறோம். மனித வர்க்கம் முழுமையாக அழியப் போகிறது.  அதனையும் நாம் காணப் போகிறோம்.

அனைவரும் மறுபடி ஆரவாரித்தனர்.

“ஆ. இதென்ன? நெருப்பு ஆறு. இது பூமிக்குச்
சொந்தமானதல்லவா? இங்கு எப்படி வந்தது?. ஒளி மூலம் இங்கு வந்துவிட்டதா? அப்படியானால்
வெடித்துச் சிதறப் போவது பூமி கிரகம் இல்லையா? நமது கிரகமா?”

வெடித்து சூரிய வெப்பத்தில் இணைந்தது அந்த செயற்கைக்கிரகம்.

image

பூமி வெகு வேகமாக  சுற்றிச் சுற்றி ஓடி ஒரு பள்ளத்தில் விழுந்தது.
. அதைத் தொடந்து வந்த அந்த சிறுவனும் சிறுமியும் அதில் சறுக்கிக் கொண்டே
விழுந்தனர். எவ்வளவு காலம் சறுக்கினார்களோ தெரியவில்லை. தாமரை மலர் போன்ற இருக்கையில்
கண்ணை மூடி அமர்ந்திருப்பவர் மடியில் பூமி விழுந்து மறைந்தது. அவர் கண்ணைத்
திறந்து பார்த்தார். பிறகு அமைதியாகக் கூறினார்.  

“ வாருங்கள்! புதிய உலகம் படைப்போம். நீ ஆதி.. அவன் பகவன்
என்றார்.  

பக்கம் –  5 

குவிகம் இலக்கிய வாசல்

image

இலக்கிய சிந்தனை , இலக்கிய வீதி  இந்த வரிசையில் புதியதாக வரும் அமைப்பு  நமது  ’குவிகம் இலக்கிய வாசல் “ .

இதன் அடிப்படை நோக்கங்களாக மனதில் இருப்பவை :          

  •  தமிழ் இலக்கியத்திற்காக சற்று நேரம் செலவிடுவோம்! 
  • இலக்கிய ரசனையைப்  பகிர்ந்து கலந்து உரையாடுவோம்          
  • புதிய படைப்புகளை அறிவோம்! ·         
  • பார்வையாளர்களைப் பங்கெடுப்பவர்களாக மாற்றுவோம்!                               
image

தமிழன்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் இவ்விழாவில் பங்கெடுக்க அழைக்கிறோம்!.

தங்கள் மேலான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன  

பக்கம் –  6             

மேலே உள்ள படங்கள் பல சரித்திர நாவல்களின் அட்டைப் படங்கள். மொத்தம் 20 புத்தகங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. 

எங்கே உங்களால்  எத்தனை புத்தகங்களை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது? 

இதோ  கொஞ்சம் உதவி :

இடம் பெற்றுள்ள புத்தகங்கள் : 

கல்கி : பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு 

சாண்டில்யன்: யவனராணி, கடல்புறா ,மன்னன் மகள், கன்னி மாடம், ராஜ திலகம், 

விக்ரமன்: நந்திபுரத்து நாயகி

 நா. பார்த்தசாரதி : பாண்டிமாதேவி 

 ஜெகசிற்பியன்: பத்தினிக் கோட்டம் 

கோ.வி.மணிசேகரன்: சேரன் குலக்கொடி 

அரு.ராமநாதன்: வீரபாண்டியன் மனைவி 

ஸ்ரீ வேணுகோபாலன்: திருவரங்கன் உலா 

சுஜாதா: காந்தளூர் வசந்தகுமாரன் கதை  

கௌதம நீலாம்பரன்: கலிங்க மோகினி 

அகிலன் : வேங்கையின் மைந்தன் 

கண்ணதாசன்: சேரமான் காதலி 

பாலகுமாரன் : உடையார் 

விடை 25ம் பக்கத்தில்   


பக்கம் – 9 

image

( ஸ்ரீனிவாச ராகவன் )

பச்சை உடையணிந்த சிவப்பழகி

பசலையும் நாணமுள்ள உதட்டழகி 

தலை குனிந்து நிற்கிறாளே.

image

பக்கம் – 10 

அளவு ..

தமிழ் நாடு எவ்வளவு  தொன்மையான -அறிவில் முதிர்ச்சி அடைந்த நாடாக 2000 – 3000 ஆண்டுகளுக்கு முன்பே திகழ்ந்து வந்தது என்பதற்கு அளவு  இந்த அளவு  கோல். 

நேரத்தை, காலத்தை, நிறுத்தலை, முகத்தலை, நீட்டலை , பரப்பை ,எண்களை, பின்னங்களை  எவ்வளவு துல்லியமாக அளந்திருக்கிறார்கள் /அறிந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். 

அவர்கள் அளித்ததை நாம் அழித்து வருகிறோம்! 

image

கால அளவு :

1 குழி = 6.66 மில்லி செகண்ட்ஸ் ( கார்த்திகை நட்சத்திரம் ஒரு முறை மின்னும்  நேரம்)

10 குழிகள் = 1 மை (  கண் இமைக்கும் நேரம் ) =66.66 மில்லி செகண்ட்ஸ்
2 மை  = 1 கை நொடி =0.125 செகண்ட்
2 கை நொடி = 1 மாத்திரை  = 0.25 செகண்ட்
6 மை =  1 நொடி =0.40 செகண்ட்
2 மாத்திரை = 1 குரு =0.50 செகண்ட்
2 நொடி = 1 வினாடி = 0.80 செகண்ட் ( ஒரு இதயத் துடிப்பு)
2 ½ நொடி =  2 குரு = 1 உயிர் = 1 செகண்ட்
5 நொடி = 1 சணிகம்  = 2 செகண்ட்
10 நொடி = 1 அணு = 4 செகண்ட்
6 அணு = 1 நாழிகை-வினாடி  = 24 செகண்ட்
10 நாழிகை வினாடி = 1 கணம்  = 4 நிமிடம்
6 கணம் = 1 நாழிகை = 24 நிமிடம்
10 நாழிகை = 4 சாமம் = 1 சிறு பொழுது = 4 மணி
6 சிறு பொழுது = 1 நாள்  = 24 மணி
7 நாள் = 1 கிழமை (வாரம்)
15 நாட்கள் = 1 அழுவம் ( அரை மாதம்)
29.5 நாட்கள் = 1 திங்கள் (மாதம்)
2 திங்கள் = 1 பெரும் பொழுது ( காலம்)
6 பெரும் பொழுது = 1 ஆண்டு
64 ஆண்டு = 1 வட்டம்
4064 ஆண்டு = 1 ஊழி


சிறுபொழுது :


1. காலை : 6AM-10AM
2. நண்பகல்  10AM-2PM
3. ஏற்பாடு : 2PM-6PM
4. மாலை : 6PM-10PM
5. இடையாமம் 10PM-2AM
6. வைகறை  2AM-6AM


பெரும் பொழுது


இளவேனில்—————- சித்திரை  & வைகாசி 

முது  வேனில் ———— ஆனி  & ஆடி 

கார் காலம் —————–  ஆவணி & புரட்டாசி 

குளிர் காலம்—————   ஐப்பசி & கார்த்திகை 

முன்பனிக் காலம்——–  மார்கழி & தை 

பின்பனிக்  காலம்——–   மாசி & பங்குனி 

image

தங்கம் நிறுத்தல் அளவு

4 நெல் எடை = 1 குன்றிமணி எடை
2 குன்றிமணி எடை  = 1 மஞ்சாடி அல்லது பணவிடை
5 பணவிடை = 1 கழஞ்சு
8 பணவிடை = 1 வராகன் எடை
4 கழஞ்சு =  1 கக்ஸு
4 கக்ஸு  = 1 பலம்
1.5 கழஞ்சு = 1 பவுன் அல்லது சவரன்  = 8 கிராம்

நிறுத்தல் அளவு

32 குன்றிமணி = 1 வராகன் எடை

10 வராகன் எடை = 1 பலம்

40 பலம் = 1 வீசை

1000 பலம் = 1 கா

6 வீசை = 1 துலாம்

8 வீசை = 1 மணங்கு

20 மணங்கு =1 பாரம்

image

முகத்தல் அளவு

1 குணம்  = மிகச் சிறிய அளவு

9 குணம் = 1 மும்மி
11 மும்மி =  1அணு
7 அணு = 1 இம்மி
7 இம்மி = 1 நெல்
7 நெல் = 1 சிட்டிகை   (சிறிய அளவு )
360 நெல் = 1 செவிடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு =  1 உறி
2 உறி = 1 படி
8 படி =  1 மரக்கால் (குருணி)
96 படி = 1 கலம்
120 படி = 1 பொதி
2 மரக்கால் = 1 பதக்கு
2 பதக்கு = 1  தூணி  
5 மரக்கால் =  1 பாறை
80 பாறை =1 கரிசை
21 மரக்கால் = 1 கோட்டை    

நீட்டல் அளவு

8 சிறு கடுகு = 1 எள்:
8 எள் = 1 நெல்
8 நெல் = 1 விரல் (1.9444 cm )
12 விரல் = 1 சாண்   (23.3333 cm )
2 சாண்  = 1 முழம்  (46.6666 cm )
2 முழம் =  1 கஜம்
2 கஜம் = 1 பாகம்
22 கஜம் = 1 சங்கிலி
220 கஜம் = 1 பர்லாங்
8 பர்லாங் = 1 மைல்
5 பர்லாங் = 1 கிலோ மீட்டர்
625 பாகம் = 1 காதம் = 1.167 கிலோ மீட்டர்

பரப்பளவு:

குழி = 576 சதுர அடி  
காணி =100 குழி =132 சென்ட்  
வேலி = 7 காணி
மரக்கால் விடைப்பாடு =  8 சென்ட் ( 8 படி நெல் விதைக்கத் தேவையான இடம்)
ஏக்கர் =: 100 சென்ட்  = 12.5 மரக்கால் விடைப்பாடு

முழு எண்கள்

  • 1= onRu ஒன்று
  • 10= patthu பத்து
  • 100= nooRu நூறு
  • 1000= aayiram ஆயிரம்
  • 10,000= pathaayiram பத்தாயிரம்
  • 100,000= nooRaayiram நூறாயிரம்
  • 1000,000= meiyiram  மையிரம்  
  • 10^9= thoLLunn தொல்லுண்
  • 10^12= eegiyam ஈகியம்
  • 10^15= neLai நெளை
  • 10^18= iLanji இளஞ்சி
  • 10^20= veLLam வெள்ளம்
  • 10^21= aambal ஆம்பல்

பின்னங்கள்

  • 1= onRu ஒன்று
  • ¾= mukkaal முக்கால்
  • ½= arai அரை
  • ¼= kaal கால்
  • 1/5= naalumaa நாலுமா
  • 3/16= moonRu veesam மூன்று வீசம்
  • 3/20= moonRumaa மூன்று மா
  • 1/8= araikkaal அரைக்கால்
  • 1/10= irumaa இரு மா
  • 1/16= maakaaNi (veesam)  மாகாணி அல்லது வீசம்
  • 1/20= orumaa ஒரு மா
  • 3/64= mukkaal veesam முக்கால் வீசம்
  • 3/80= mukkaaN முக்காண்
  • 1/32= araiveesam அரை வீசம்
  • 1/40 araimaa அரை மா
  • 1/64= kaal veesam கால் வீசம்
  • 1/80= kaaNi காணி
  • 3/320= araikkaaNi munthiri அரைக்காணி முந்திரி
  • 1/160= araikkaaNi அரைக்காணி
  • 1/320= munthiri முந்திரி
  • 1/102,400= keezh munthiri கீழ் முந்திரி
  • ½,150,400= immi இம்மி
  • 1/23,654,400= mummi  மும்மி
  • 1/165,580,800= aNu அணு
  • 1/1,490,227,200= kuNam குணம்
  • 1/7,451,136,000= pantham பந்தம்
  • 1/44,706,816,000= paagam பாகம்
  • 1/312,947,712,000= vintham விந்தம்
  • 1/5,320,111,104,000= naagavintham  நாகவிந்தம்
  • 1/74,481,555,456,000= sinthai சிந்தை
  • 1/1,489,631,109,120,000= kathirmunai கதிர்முனை
  • 1/59,585,244,364,800,000= kuralvaLaippidi குரல்வளைப்பிடி
  • 1/3,575,114,661,888,000,000= veLLam வெள்ளம்
  • 1/357,511,466,188,800,000,000= nuNNmaNl நுண்மணி
  • ½,323,824,530,227,200,000,000= thaertthugaL தேர்த்துகள்  

நாணயம்

மிகச் சிறிய அளவு = 1 பால் (மர  வட்டம் அல்லது கடல்  கிளிஞ்சல்)

8 பாற்கள் = 1 செங்காணி
¼ செங்காணி = 1 கால்காணி ( செம்பு)
64 பாற்கள் : 1 காணாப்பொன் (காசு பணம்)
ஆங்கில அரசாங்கம்  வந்த பிறகு
16 அணா  = 1 ரூபாய்
1 அணா = 3 துட்டு
¼ அணா  = ¾ துட்டு
புழக்கத்தில் இருந்த நாணயங்கள்
காலணா, அரையனா, ஒரு அணா, நாலணா, அரை ரூபாய், ரூபாய்  

இத்தனை துல்லியம் எந்த மொழியிலாவது உண்டா? அணு தான் சிறியது என்று நினைத்தால் அதைவிட சிறிய அளவுகள் எத்தனை எத்தனை! பெருமைப் படுவோம் –  நமது முன்னோர்களின் திறமையை நினைத்து !

பக்கம் –  13 

நான் ரசித்த படைப்பாளி   – ஜெயந்தன் ( எஸ். கே. என்)

image

ஜெயந்தன்

திரு ஜெயந்தன் (இயற்பெயர்: கிருஷ்ணன் (1938-2010).  தொடக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர்  பின்னர் வருவாய் துறையிலும் பணியாற்றிய பிறகு கால்நடைப் பராமரிப்புத்துறையில்பணியாற்றி ஒய்வு பெற்றவர். ‘கோடு’ என்னும் சிற்றிதழ் நடத்தி உள்ளார். கணையாழி, சுபமங்களாதவிர பிற பிரபல பத்திரிக்கைளிலும் பல படைப்புக்கள் வெளியாகி உள்ளன.

இவர் கதைகளில் நிகழ்களங்களும், கதைமாந்தர்களும் நமக்கு எங்கோ பரிச்சயமானவை என்று தோன்றும். அவற்றில் இவர் அளிக்கும்
பார்வையும் கோணங்களும் சுவாரசியம் தருகிறது.

நமக்குப் பழக்கப்பட்ட கதை அமைப்பில் இவரது
பெரும்பாலான சிறுகதைகள் இருந்தாலும், மாறுபட்ட கதை அமைப்பில்  – ஞானக்கிறுக்கன் என்கிற ஒரே கதை நாயகன் உடைய
சிறு கதைகள்  –  ‘இண்ட்டர்வியூ’ (பணிக்கான நேர்முகத்தேர்வின்
உரையாடல் மட்டுமே)  –  ‘சர்வாதிகாரியும் சன்யாசினியும்’ (முசோலினி,
பி. யூ. சின்னப்பா, கபீர் தாஸ், தெரஸா,
தாகூர், வினோபா  பாவே என்று பலரும் புகைப்படத்திலிருந்து இடையிடையே பேசுவது)  –   ‘ஆகஸ்ட்’ (தனது சக ஆசிரியையைத் தாக்கியதற்காக
சாந்தி டீச்சரை பதிமூன்று நீதிபதிகள் விசாரிப்பது) போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

ஆனந்தவிகடனில் வெளிவந்த “முனியசாமி”
என்கிற கதை வெகு காலமாக எனக்கு நினைவிலிருக்கும் சிறுகதை.

image

முப்பது வருடங்களாக தாசில்தாராக சுமார்
பதினைந்து அலுவலகங்களில் பணிபுரிந்த குமரய்யா, ஐம்பதிற்கும் மேற்பட்ட கடைநிலை
ஊழியர்களைப் பார்த்திருந்தும், முனியசாமியைப் போன்ற
சேவகனைப் பார்த்ததில்லை.

(எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ‘நான்
என்னமோ செய்து விட்டேனாக்கும்" என்று முகத்தில் துளி ‘நான்’  இன்றி கைகட்டி நிற்பது கீதையறிந்தோர் கண்டு
திளைக்க வேண்டிய அம்சம்)  

ஒருவாரம் விடாமல் பெய்த மழையில்
அடுப்புக்கு விறகில்லை என்று குமரய்யாவின் மனைவி சொன்னதற்காக கொட்டும் மழையில்
எங்கெங்கோ திரிந்து விறகு கொண்டு வந்து கொடுக்கிறார் முனியசாமி.

எதை
எதிர்பார்த்து இவன் இப்படி ஊழியம் செய்கிறான் என்று தாசில்தாருக்கு பெரும்
வியப்பு. அலுவலகத்தில் பிறரிடம் சொல்லி மாய்ந்து போகிறார்.

(‘மனுஷனுக்கு ஒரு பிரியம் பாருங்க ……..
நாம என்னா அப்படி அள்ளிக்குடுத்திடறோம்’)

மற்றவர்கள் குமரய்யா சொல்வதை
ஆமோதித்தாலும், துணைத் தாசில்தார் ராகவன் புன்னகை மட்டும் செய்கிறார். ராகவன்
எல்லோருக்கும் ஒரு மாதிரியான ஆசாமிதான். சாதாரணமாக தலையைத் தொங்கப்போட்டுக்
கொண்டிருக்கும் அவர், எப்போதாவது நிமிர்ந்து பார்த்து, தனது பிரசித்தமான
புன்னகையுடன் கண்ணாடியை இடதுகையில் எடுத்தார் என்றால் எதிராளியை வம்புக்கு
இழுக்கிறார் என்று அர்த்தமாம். ஒரு குமாஸ்தா வேலை கிடைத்ததும், தன் சுயப் பிரச்சினை
தீர்ந்துவிட்டதால் ‘சமூகத்தைப் பத்தியெல்லாம் நான் ஏன் சார் அலட்டிக்கணும்’ என்று
கேட்ட பங்கஜத்தையும், ‘உலகப் பிரச்சினை எல்லாம் எனக்கு எதற்கு? ஒரே பையனுக்கு வாரிசு
உரிமைப்படி வேலை கிடைத்துவிடுமே’ என்று சொன்ன உறவுக்கார போஸ்ட் மாஸ்டரையும் ஒரு
பிடி பிடிக்கிறார்.

தீபாவளி இனாம் வசூல் செய்து பகிர்ந்து
கொள்ளும் கடைநிலை ஊழியர்களிடம், இருபது ரூபாய் பணத்தைத் தருவதில் எந்த வருத்தமும்
இல்லை. ஆனால் வசூல் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் தலா ஐம்பது ரூபாய்க்காக அறுபது
பேரிடம் குழைந்து, அரை மனதுடன் தான் அவர்கள் கொடுக்கிறர்கள் என்பது தெரிந்தும்,
அவர்களை ஏன் வள்ளல் ஆக்குகிறீர்கள்? பியூன் என்பது கடைகெட்ட ஜென்மம் என்கிற
அவர்களின் நினைப்பை இந்த வசூல் நியாயப் படுத்துவது ஆகாதா? என்றெல்லாம் கேட்கிறார்.

அதற்கு கடைநிலை ஊழியர்கள் சார்பில்
முனியசாமி பதில் சொல்கிறார்.

‘இப்பிடி ஒவ்வொண்ணுக்கும் அர்த்தம்
பிரிச்சுப் பாக்க முடியுமா? ஓலகத்தில உள்ள அத்தனை பியூனும் பாட்டன் பூட்டன்
காலத்திலேர்ந்து வரதுதான? நிறுத்தினா யாருக்கு நஷ்டம்?’

பணத்தைக் கொடுத்துவிடுகிறார் ராகவன்.

மழையில் நனைந்ததில் ஒரு வாரம் காய்ச்சல்
என்று தெரிந்து போய்ப் பார்த்துவிட்டு வரும்போது ராகவன் கவனித்த ஒருவிஷயம்.
முனியசாமியின் இளைய சம்சாரம் கை முறிந்து கட்டுபோட்டுக் கொண்டிருக்கிறாள்.
மேற்கொண்டு கிடைத்த தகவல். முனியசாமி அலுவலகத்தில் தான் அவ்வளவு பவ்யம்.  இரண்டு மனைவியரும், முனியசாமி  முறைத்துப் பார்த்தாலே அடங்கிவிடுவார்களாம்.
இல்லாவிட்டால்.  வீட்டில் நெருதுளி தான்.
மனைவியின் கை முறிந்தது முனியசாமி கட்டையால் அடித்ததால்தான்.

image

இதை குமரய்யாவால் நம்ப முடியவில்லை.
ராகவனோ, இப்படி இருப்பது உலகத்தில் சகஜம் என்கிறார்.

(‘ஊருக்குப் பயப்படுபவன் பெஞ்சாதியை அதிகாரம்
செய்வான்–பெஞ்சாதிக்கு பயப்படுபவன் ஊரை மிரட்டுவான்’)

குழந்தைகளின் படிப்பிற்காகக் குடும்பம்  சொந்த ஊருக்குப்போய்விட, மாற்றல் கிடைக்கும்வரை
அலுவலகத்திலேயே ஒரு பகுதியில் தனியாகத் தங்கிவிடுகிறார் குமரய்யா. அந்தச்
சமயத்தில் முனியசாமியின் ‘கடமைகள்’ அதிகரித்துவிடுகிறது.

(பனிரெண்டு மணிநேர ‘எஜமான்’ இருபத்தி
நான்கு மணிநேர ‘எஜமான்’ ஆகிவிட்டார்.)

அந்த நாளும் வந்தது. மற்றலாகிப் போகும் குமரய்யாவின்
பிரிவு உபசார பாராட்டு விழா.

(பெயரே பாராட்டுக் கூட்டம் என்று
வைத்துவிட்ட பிறகு வேறென்ன… நீ கடி, நான் கடி என்று இருப்பவர்களே, மனுஷன் தொலைகிறான்
என்ற சந்தோஷத்தில் ‘இவர் கீழே வேலைசெய்கிற பாக்கியம்’ என்றுதான் பேசுவார்கள்.)

பாராட்டுதலுக்கு நன்றி தெரிவிக்கும்போது
குமரய்யா அலுவலக சரித்திரத்தில் இல்லாத வகையில் கடைநிலை ஊழியரின் ஒத்துழைப்பையும்
சேர்த்துக்கொள்கிறார்.

(‘உண்மையில் சொல்கிறேன். இன்னொரு முனியசாமிய
இனி நான் சொச்ச காலத்திற்கும் பார்க்கப் போறதில்ல")

வழியனுப்புகையில், புதிதாக வந்த தாசில்தார்
நிலைப்படியிலேயே கைகுலுக்கிவிட்டு உள்ளே போக, ராகவன், ஹெட்கிளார்க், ரெவின்யூ
இன்ஸ்பெக்டர், கடைசியில் பெட்டி படுக்கையுடன் முனியசாமி வெளியே
வரத்தொடங்கினார்கள்.

ஏதோ பியூன் தேவைப்பட்டு புது தாசில்தார்
மணியடிகிறார்.

அனிச்சையாக, ‘எஜமான்’ என்று கையிலிருந்த பொருட்களை கீழே வைத்துவிட்டு விரைந்து உள்ளே
போய்விடுகிறார் முனியசாமி.

எல்லோரும்
குண்டு விழுந்தது போல திகைத்துப் போய்விடுகிறார்கள்.

குமரய்யாவிற்கு
இந்த ஊரில் அவரது மொத்த ஊழியமும் பங்கப்பட்டுவிட்ட  அவமானம்.

(“என்ன இப்படிப் பண்ணிப்பிட்டான்.
சிங்காரிச்சு மூக்கறுத்த மாதிரி.”)

ரெவின்யு
இன்ஸ்பெக்டருக்கு ‘அவனை’ அதிர அடிக்க என்னசெய்யலாம் என்ற ஆவேசமான யோசனை.

ராகவனின் கருத்தோ
வேறு

(‘இதுவரை
முனியசாமி செய்து வந்த பூஜையெல்லாம் தாசில்தார் என்கிற பீடத்திற்குத் தான். மேஜை
மணி அடிக்கப்பட்டதும் ‘ஐயா, ஆஜர்’ என்று சர்வங்கமும் பணிய கைகட்டி நிற்கவேண்டும், கட்டளையை நிறைவேற்ற வேண்டும்.
தாமதிக்கக் கூடாது என்றே அவர்களை உருவாக்குகிறோம். நமக்குத் தேவைப்பட்டபோது வேறு
விதமாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா ?  

நாம
நம்ம சௌகரியத்துக்கு ஒரு நோயாளியை உண்டாகிட்டு, அப்புறம் அவன் ஆரோக்யமாவும் நடந்துக்கலேன்னு வருத்தப்பட்டா எப்படி?)

எனினும்.
ராகவனுக்கு குமாரய்யாவின் கோபத்தை தணிப்பதுதான் முதல்கடமை.  

(கருத்துக்கள் மட்டுமே வெற்றியாகிவிட முடியாது. இடனரிதல், அவையறிதல் காலமறிதல் என்பதெல்லாம்
எதற்காக இருக்கிறது)

அவன் செய்தது
அயோக்யத்தனம்தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், அவன் புத்தியெல்லாம் ஏன் இப்படிப் போகிறதென்று நினைத்துக்
கொண்டிருந்ததாகக் கூறுகிறார். ராகவன் இப்படிச் சொன்னதும் அதுவும் முனியசாமியை
ஒருமையில் குறிப்பிட்டதும் அவமானத்தில் முக்கால் பங்கு துடை பட்டது போல்
உணர்கிறார் குமரய்யா.

* * * * * * * * * *
* *

தொகுப்பின்  முன்னுரையில் அசோகமித்திரன் குறிப்பிட்டது
போல,  இவரது கதைகள் அதில் எழுதப்பட்டிருப்பதோடு
முடிந்துவிடாது. அவற்றில் உள்ள அந்தரங்கமான கோபமும், அந்தக் கோபத்தின் அடிப்படை
நியாய உணர்வும் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும்.

இவரது மற்ற கதைகளில்
என்னை பாதித்தவை, ‘மொட்டை’ , ‘இவன்’ ‘பஸ்’, ‘பைத்தியம்’  என்று பல.  இணையத்தில் படிக்கக் கிடைக்கும் இவர் கதைகள்:

பகல்
உறவுகள்

பாஷை

பக்கம் – 15 

பக்கம் 16க்கு மேல் படிக்க" older entries" கிளிக் செய்யவும் 

மடல் ஏறுதல்

image

பழந்தமிழ் முறைப்படி காதல் பலிக்காத காளை  மடலேறுவான் என்று   சொல்லப்படுகிறது. திருக்குறளிலும் இதைப் பற்றிச் சொல்லப்படுகிறது!   

 சரி. அப்படி  ‘மடலூர்தல்/மடலேறுதல்’ என்றால்?  இந்த முறைப் படி பனை மரத்து மட்டைல ஒரு குதிரை வண்டி மாதிரி கட்டி, அதுல உக்காந்து போகணும்.-

           "பனை மரத்தின் கிளை பனை மட்டை எனப்படும். இது இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்வர். இதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் எனப்படும்.

              பனை மரக்கிளையால் செய்த குதிரையில் மயில் தோகை ( பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவிப்பர். மடல் ஏறும் தலைவன் உடம்பு முழுதும் சாம்பல் பூசியிருப்பான். கையில் ஒரு கிழியைப் (ஓவியம் வரையப்பட்ட துணி) பிடித்திருப்பான். ஊரின் நடுவில் உள்ள நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்திற்குச் செல்வான். தான் செய்த மடலின் மேல் ஏறி இருந்து, தன் கையில் உள்ள கிழியின் மேல் பார்வையை வைத்துக் கொண்டிருப்பான். வேறு எந்த உணர்வும் அவனிடம் காணப்படாது. தீயே தன் உடலில் பட்டாலும் அவனுக்குத் தெரியாது. மழை, வெயில், காற்று எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டான். இவ்வாறு தலைவன் மடலில் ஏறியதும் ஊரார்/நண்பர்கள் அதை இழுப்பர். தலைவன் தலைவியைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பான். இதுவே மடல் ஏறுதல் என்பதாகும்.“

            ஊரார் எல்லாம் வந்து தலைவி வீட்டில் பேசி மணமுடிப்பர்!  பெற்றோர் எதிர்த்தாலும் பின்னர் இவ்வாறு செய்து திருமணம் செய்வது ஒரு முறை. . மற்றொரு முறையில், தலைவியை மடலேறுவேன்  என்று மிரட்டி சம்மதம் வாங்குவது.   ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி, திருமங்கை ஆழ்வார் மிகுந்த பக்தியால் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்து மடலேறுவதாக அமைத்தது – சிறிய திருமடல், பெரிய திருமடல்.

கிட்டத்தட்ட நம்ம தனுஷ் வேலையில்லா பட்டதாரியில் ‘ஊதுங்கடா சங்கு’ பாடலைப் பாடுவது போலத் தான் மடல் ஏறுதலும். 

பக்கம் – 16 

இப்படை தோற்கின் …

image

போர்ப் படைகளின் அளவு :

ஒரு எண்ணிக்கை (ENTITY) = ஒரு தேர்ப்படை  அல்லது ஒரு யானைப்படை அல்லது ஒரு குதிரைப்படை  அல்லது ஒரு காலாட்படை 

ஒரு பத்தி = ஒரு தேர்ப்படை +  ஒரு யானைப்படை +                              3 குதிரைப்படை + 5  காலாட்படை = 10  எண்ணிக்கை

ஒரு குல்மம் =  3 பத்தி = 30 எண்ணிக்கை

ஒரு காணம்  = 3 குல்மம் = 90 எண்ணிக்கை

ஒரு பாகினி = 3 காணம் = 270 எண்ணிக்கை

ஒரு கிரிதலை = 3 பாகினி  = 810 எண்ணிக்கை

ஒரு சாமு = 3 கிரிதலை = 2430 எண்ணிக்கை

ஒரு அக்ரோணி  = 10 சாமு = 24300 எண்ணிக்கை 


மகாபாரத்தில் அர்ஜூன் , அபிமன்யு இறந்த மறு நாள்,                            8 அக்ரோணி சேனையை அழித்ததாகக் கூறப்படுகிறது.  அப்படியென்றால் 1,94,400 எண்ணிக்கையை அழித்தானா? 

image

தமிழகத்தில்,  சேனை என்பது மிகப் பெரிய அமைப்பு. ஒரு நாட்டில் 1-3 சேனைகள் இருக்கும். சேனைகளின் எண்ணிக்கை தேவைகளைப் பொறுத்தும் அது இருக்கும் இடத்தைப் பௌத்தும் மாறுபடும்.  சேனாதிபதி  சேனையின் தலைவர் – இன்றைய நாள்  மார்ஷலுக்கு இணை. 

சேனைக்குக் கீழே இருப்பது தளம் . தளத்தின் அதிகாரி தளபதி  .   ( இன்றைய நாள் ஜெனரலுக்கு சமம் .    ( கப்பற்படையில் இவர் கலபதி என்று அழைக்கப்படுவார்

 ஒரு தளத்தில் 

  • 3 யானைப்படைகள்  –     ஒவ்வொன்றும்  300-500 யானைகள் 
  • 3 குதிரைப்படை  –  ஒவ்வொன்றும் 500-1000 குதிரைகள் 
  • 6 காலாட்படை – ஒவ்வொன்றும்  2000-3000 காலாள் 
  • 2 தாள்படை – காலாட்படையும் குதிரைப்படையும் இணைந்து – ஒவ்வொன்றும் 1000–2000 காலாளும்  500-1000 குதிரைகளும்  – .
  • 2 மருத்துவரணி  – ஒவ்வொன்றும்  200–300 மருத்துவர்களும் மருந்துகளும் .
  • 1 அல்லது  2 ஊசிப்படை  – தாக்கும் படை 

 ஒவ்வொரு தளமும் 3 அணிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் 

ஒவ்வொரு அணியிலும் 

1 யானைப்படை + 1 குதிரைப் படை + 2 காலாட்படை + 1 தாள்படை இருப்பர். 


பக்கம் – 17 

என்னை அறிந்தால்.. அனேகன்

image

தனுஷ் அநேக வேடங்களில் பட்டையக் கிளப்பும் படம். ரிச்சான படப்பிடிப்பு – கார்த்திக்கின் ஸ்டைலான வில்லத்தனம் – சாதாரண படத்தை வெற்றிப் படமாக மாற்றியிருக்கிறது!

image

இது ஒரு கௌதம் மேனன் படம் சந்தேகமில்லை. வேட்டையாடு கமல் போல அஜீத்தும்  தூள் கிளப்புகிறார். இடைவேளைக்குப் பிறகு படம் டாப் கியரில் போகிறது. 

பக்கம் –  18 

சிவராத்திரி

சிவனை  வேண்டி நாம் போற்றும் ராத்திரி சிவராத்திரி! 

சிவனுக்காக உருகி அழும் பாடல் இது!

அருமையான வரிகள்! உள்ளத்தை உருக்கும் பாடல்! 

சாஹித்ய கர்த்தா கோபாலகிருஷ்ண பாரதி என்றும் பொன்னையாப் பிள்ளை என்றும் இரு கருத்து நிலவுகிறது! விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.

 அருணா சாய்ராமின் இந்தப் பாடலைக் கேட்கும் போது அதன் வரிகளையும் படித்துக் கொண்டு வாருங்கள் ! ( நன்றி யுடியூப்) 

உங்கள் கண்கள் கலங்கும்!

இராகம்: சண்முகப்ரியா

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா – பெற்ற (தந்தை தாய்)

அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே (அந்தமில்)

அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த
அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த (தந்தை தாய்)

கல்லால் ஒருவன் அடிக்க ……
கல்லால் ஒருவன் அடிக்க… உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க

வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் என்னும்
வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட (கூசாமல்)

கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட

வீசி மதுரை மாறன்…..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ ….அய்யா …..பெற்ற
தந்தை தாய் இருந்தால் உலகத்தில்
உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ
அய்யா (தந்தை தாய்)

image
image

பக்கம் –  19 

மீனங்காடி

அணிகளின் அணிவகுப்பு

 

image

கொடுத்த ஆறு வாரம் முடிந்தது.  இன்று அவர்கள் தொகுத்து வழங்கும் ‘பிரஸன்டேஷன் ‘ தினம்.  இரண்டுகுரூப்பும் ஒன்றாகக் கலந்து கொள்ள அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் முன் அனுமதிவாங்கியிருந்தாள் மேரி. டிப்பார்ட்மெண்டின் முக்கியமான வேலைகளை – வரும் டெலிபோன்களைக்கவனிப்பது போன்றவற்றை மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டியது
என்று பாஸ் பிரசாத்தே உத்தரவு போட்டு விட்டார். ‘ மேரி! நீ
என்ன செய்கிறாய் என்பது புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! மூன்றாவது
மாடியில் ஒரு புதுக் காற்று  

வீசுது என்பது மட்டும் புரிகிறது!
தொடர்ந்து இதை வெற்றிகரமாக முடித்து விடு!
இதன் விவரம் எல்லாம் எனக்குப் பின்னால் தெரிவி! வேறு ஏதாவது உதவி தேவை
என்றாலும் தயங்காமல் கேள்! “

 

மேரிக்குக் கொஞ்சம் பயமாகத்தான்
இருந்தது. நான்கு அணிகளையும் தனித் தனியே சந்தித்து அவ்வப்போது அறிவுரைகள்
சொல்லிக் கொண்டு தான் வந்தாள்.
இருந்தாலும், ‘ பிரஸண்டேஷன் ‘ நாளுக்கு ஒவ்வொரு
அணியும் என்ன தயார் செய்திருக்கிறார்கள் என்பதை அவளால் கண்டு பிடிக்க
முடியவில்லை.  மிகவும் ரகசியமாகத்தான்
வைத்திருக்கிறார்கள் நான்கு அணிகளும்.
எப்படியும் இன்றைக்குக் காலை அவர்களின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்து
விடும்.  கொஞ்சம் ‘ திக் ‘ என்றுதான்
இருந்தது. மேரிக்கு!.

 

அன்று காலை ஒன்பது மணி.! மூன்றாம் மாடி
மக்களின் கூட்டத்திற்காக ‘ தாஜ் ‘ ஹோட்டலில் ஒரு ஹால் எடுக்கப் பட்டிருந்தது.  பிரசாத்தும் மற்றும் இதர டிபார்ட்மெண்ட்
மக்களும் இவர்கள் வேலைகளை எடுத்துக் கொண்டனர்.
பிரசாத் தனியாக ‘ குட்லக் ‘ என்று சொல்லி வழி அனுப்பினார்.

 

image

தாஜ் ஹோட்டலில் அந்த அரங்கத்திற்குப்
பெயர் ‘ மார்க்கெட் அரங்கம் ‘. – சரியான பொருத்தம் என்று மேரி நினைத்துக் கொண்டாள்.  ‘ எண்ணத்தைத்
தேர்ந்தெடுங்கள் ‘ அணி கடைசியில்!
மற்ற அணிகள் எப்போது மேடைக்கு வார வேண்டும் என்பதெல்லாம் தீர்மானித்தாள்
மேரி.  “ முதலில் விளக்கப் படம், பிறகு
கருத்துக்களைத் தொகுத்து வழங்குங்கள். கடைசியில் நாம் செய்ய வேண்டிய முயற்சிகளை
வரிசைப் படுத்துங்கள். இது தான் பொதுவான விதிகள் “ என்றாள் மேரி.

 

மேரி அரங்கத்தில் நுழையும்போது மிகவும்
உணர்ச்சி வசப்பட்டவளாக இருந்தாள்.
அந்த  அரங்கத்தை மக்கள் மாற்றிய
விதம் – மேடை அமைப்பு – தோரணங்கள் – பின்னணி இசை எல்லாம் சந்தோஷத்தின்
வெளிப்பாடாகத் தெரிந்தது.  எல்லா
நாற்காலிகளிலும் பலூனைக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.  வண்ணப் பூக்களின் அலங்காரம் அந்த அரங்கத்திற்கு
ஒரு மயக்கம் தரும் மணத்தைப் பரப்பியது.
அரங்கத்திற்கே உயிர் இருப்பது போல் இருந்தது. ‘ அவர்களின்
கடிகாரம் நன்றாக சாவி கொடுக்கப் பட்டிருக்கிறது ‘ மேரி
நினைத்துக் கொண்டாள்.  திரும்பிப்
பார்த்தால் – டோனி –  அவனுடைய வழக்கமான
மீனங்காடி உடையில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறான்.  மேரியும் அவன் அருகில் போய் அமர்ந்தாள்!.

 

முதலில் ‘ ஆட்டம்
கொண்டாட்டம் ‘ அணி !

 

image

“ ஹலோ! எங்கள் அணி ஆட்டம் கொண்டாட்டம்
அணி !  நாற்காலியில் உட்கார்ந்திருக்கும்
அனைவரும் இங்கே மேடைக்கு வாருங்கள்.
இப்படி அப்படி நில்லுங்கள் ! வரிசையில் நிற்க வேண்டாம் ! ‘ மோடி
மஸ்தான் ‘ வித்தை பார்க்க எப்படி நிற்பீர்களோ அப்படி நில்லுங்கள் !
வெரிகுட் ! அப்படித்தான் ! இப்போது நாங்கள் எங்கள் அணியின் விளக்கப் படத்தை ஒரு
விளையாட்டு மாதிரி நடத்தப் போகிறோம் !  அந்த அணியின் தலைவி பிரபா அறிவித்தாள்.

மேடையில் வண்ண வண்ண வட்டங்கள் வரையப்
பட்டிருந்தன. “ இது ஒரு புது விதமான மியூசிகல் சேர் ! பின்னணி இசை நின்றதும்
மக்கள் அனைவரும் ஒரு வட்டத்திற்குள் போக வேண்டும்.  அதில் ஒரு பேப்பர் இருக்கும்.  அதில் உள்ளதை ஒருவர் சத்தமாகப் படிக்க மற்றவர்
உடன் சொல்லணும் !  அந்தப் பேப்பரில் இரண்டு
கருத்து இருக்கும். ஒன்று – இந்த ஆட்டம் கொண்டாட்டத்தால் என்னென்ன சௌகரியம்
கிடைக்கப் போகிறது என்பது.  இரண்டாவது –
இந்தத் திட்டத்தை எப்படிச் செயல் படுத்துவது என்பது.  ஆரம்பிக்கலாமா ?  ஒரே ஒரு வேண்டுகோள் ! மக்கள் அனைவரும் அழகுப்
போட்டியில் நடப்பது போல் ‘ கேட் வாக் ‘ செய்ய வேண்டும்.
ஓகே ! மியூசிக் ! ஸ்டார்ட் !  படு குஷியில்
ஆரம்பித்தது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ! பாட்டும் நடையும் விசிலும் சேர்ந்து
கொண்டன !

 

image

இந்த விளையாட்டுத் திட்டத்தால் ஏற்படும்
பயன்கள் – சௌகரியங்கள் என்ன தெரியுமா ?  டும் டும் டும் .

 

·        
சந்தோஷமான மக்கள் மற்றவரை சந்தோஷமாக வைப்பார்கள் – டும்
டும் டும்.

·        
ஜாலி புதுமைக்கு வழி காட்டும் – டும் டும் டும்.

·        
நமக்கு நேரம் போவதே தெரியாது – டும் டும் டும் .

·        
நல்லபடியா சந்தோஷமா வேலை செய்வது உடலுக்கும் நல்லது – டும்
டும் டும் .

·        
வேலையில் பரிசு வாங்குவதை விட வேலையே நமக்குப் பரிசாய்
அமைந்து விடும் – டும் டும் டும்.

 இவற்றை எல்லாம்
எப்படி அலுவலகத்தில் செயல் படுத்துவது என்று கேட்கிறீர்களா ? மியூசிக்
காதைப் பிளந்தது !

 ·        
ஆபீஸில் ஒரு பெரிய போஸ்டர் போடணும் ! அதில் “ இது ஒரு
விளையாட்டு மைதானம் – பெரிய குழந்தைகளுக்காக “ என்று எழுதணும் .

·        
நோட்டீஸ் போர்டில் தினமும் ஒரு ‘ ஜோக் ‘ எழுதி
வைக்க வேண்டும்.  ஒவ்வொரு மாதக்
கடைசியிலும் சிறந்த ஜோக்குக்காகப் பரிசு தர வேண்டும்.

·        
ஆபீஸ் ரூமில் பல இடங்களில் வித்தியாசமான பெயிண்ட் அடித்து
சுறுசுறுப்பான இடமாக அதை மாற்ற வேண்டும் .

·        
ஆபீசுக்கு உயிரூட்ட நிறைய செடி. கொடி, மீன்
தொட்டி வைக்க வேண்டும்.

·        
சாப்பாட்டு இடைவேளை போது கேண்டீனில் ‘ யாரு நல்ல
ஜோக்கர் ‘ என்று சின்னச் சின்னப் போட்டிகள் தினமும் நடத்தணும் !

·        
புதிய யோசனை யாருக்காவது தோன்றினால் ஆபீஸில் முக்கியமான
இடத்தில் ஒரு கலர் பல்ப் எரிகிற மாதிரி தயார் செய்யணும் !

·        
ஆபீஸ் மெமோ, நோட்டீஸ்,
சுற்றறிக்கை எல்லாவற்றிலும் ஒரு புதுமை இருக்கணும் !

·        
‘ ஐடியா மேடை ‘ என்று ஒரு மண்
மேடையை அமைத்து பேப்பர் கொடிகளில் யோசனைகளை எழுதி அங்கே குத்தி வைக்கச் செய்ய
வேண்டும்.   மறக்காமல் மாலையில் அதிகாரிகள்
அவற்றைப் படிக்க வேண்டும் !

·        
புதுப் புது விளையாட்டுக்களைக் கண்டு பிடிக்க ஒரு குழு
அமைக்க வேண்டும் !

 

image

‘ ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம் ‘ என்று பாட்டுடன்
அவர்கள் முடிக்க அரங்கமே அதிர்ந்தது.

(தொடரும்) 


பக்கம் – 20 

ஆத்திசூடி க..ங..ச ..

image
  1.  கண்டொன்று சொல்லேல் /  Don’t flip-flop.
  2.  ஙப் போல் வளை /  Bend to befriend.
  3.  சனி நீராடு /  Shower regularly.
  4.  ஞயம்பட உரை /  Sweeten your speech.
  5.  இடம்பட வீடு எடேல் /  Judiciously space your home.
  6.  இணக்கம் அறிந்து இணங்கு /  Befriend the best.
  7.  தந்தை தாய்ப் பேண் /  Protect your parents.
  8.  நன்றி மறவேல் /  Don’t forget gratitude.
  9.  பருவத்தே பயிர் செய் /  Husbandry has its season.
  10.  மண் பறித்து உண்ணேல் /  Don’t land-grab.
  11.  இயல்பு அலாதன செய்யேல் /  Desist demeaning deeds.
  12.  அரவம் ஆட்டேல் /  Don’t play with snakes.
  13.  இலவம் பஞ்சில் துயில் /  Cotton bed better for comfort.
  14.  வஞ்சகம் பேசேல் /  Don’t talk sugar-coat words.
  15. அழகு அலாதன செய்யேல் /  Detest the disorderly.
  16.  இளமையில் கல் /  Learn when young.
  17.  அறனை மறவேல் /  Cherish charity.
  18.  அனந்தல் ஆடேல் /  Over sleeping is obnoxious.


ஆத்திசூடியும் அதற்கு அழகான ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைய தளத்திலிருந்து எடுத்தாண்டது ! (நன்றி) 


பக்கம் – 21 

ஹி .. ஹி ..

image

முதலாமவன் :

 இதென்ன நியாயம் சார் எங்கள் ஸ்டேஷனரி ஸ்டோர்சில் ஒரு பாக்கெட் பென்சில்  ஷார்ட்டேஜாப்  போச்சு.  என்னிடமிருந்து முப்பது ரூபாய் பிடுங்கிட்டாங்க! 

இரண்டாமவன்:

உங்க பாடு தேவலையே! என் செக்க்ஷனில் ஒரு பாக்கெட் ஷார்ட்டேஜாப்  போச்சு.. என்னை சஸ்பென்டே பண்ணிட்டாங்க!

முதலாமவன் :

அடப்பாவமே! நீங்க என்ன வேலை சார் பாக்கறீங்க?

இரண்டாமவன்:

நான் பேங்கிலே கேஷியரா வேலை பாக்கிறேன்! 


image

கடவுள்: 

பக்தா ! என்னதான் நீ ஊழல் பல செய்திருந்தாலும் உன் பக்தியை மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்!


அரசியல்வாதி: 

தலைக்கு ஒரு லட்சம் கொடுத்தாலும் சரி ! தேவர்களையெல்லாம் நம்ம கட்சிபக்கம் இழுத்து தேவலோக ஆட்சி கட்டிலிலே என்னை அமர்த்தி விடுங்க ஸ்வாமி! அப்பறம் நீங்க என்ன வரம் கேட்டாலும் நான் கொடுக்கிறேன்!  


பக்கம் – 23

நான் கண்ட கன்னி (எதிரொலிக் கவிதை)

image


(இக் கவிதையில் வரும் ஒவ்வொரு வரியிலும் ஒரு கேள்வி புதைந்திருக்கும். அவ்வரியின் கடைசி வார்த்தை எதிரொலியாக வரும்போது அக்கேள்விக்கு விடை கிடைக்கும்)

                                                                                                          எதிரொலி 

என்றுமணங் கொள்வேனோ நான் கண்ட மாதை                      தை 
என்செய்தா  லுவகையுமே  கொள்வாளோ பூவை               பூ     வை  
என்னென்ன கொடுத்தாலே முகிழ்த்திடுவாள் மென்னகை   நகை 
என்னிடத்து யாதிருந்தால் மகிழ்ந்திடுவாள் என்செல்வம்   செல்வம் 

நன்மைதனி லென்செய்தால் சுவைத்திடுமோ இல்லறம்      அறம்
இன்பமொடு வாழ்ந்திடவே  விடவேண்டுமெம்  மாசை            ஆசை 
மனமகிழ்வு காட்டிடவே என்செய்தல் பண்பாடு                பண் பாடு 
துன்பத்தைக் கொடுப்பதுவும் வாழ்வுதன்னெப் பிரிவு                பிரிவு 

எப்படிநான் வாழ்ந்தாலே  இருந்திடுவாள் மனமொத்து           ஒத்து 
எப்பதவி கிடைத்தாலே மலர்ந்திடுவாள் மடந்தாய்              தாய் 
எப்படிதா னுறைந்தாலே புகழடைவள் குணக்குன்று   குணக் குன்று
என்னிருப்பின்  சுகமன்றி  வேறில்லை நன்னெறியே         நெறியே     

பக்கம் – 24 

1. பத்தினிக்கோட்டம்                             11. பாண்டிமாதேவி 

2. சேரமான் காதலி                                 12. பொன்னியின் செல்வன் 

3. திருவரங்கன் உலா                            13.யவன ராணி  

4. கடல்புறா                                              14. சேரன் குலக்கொடி 

5. ராஜ திலகம்                                         15. உடையார் 

6. சிவகாமியின் சபதம்                          16. மன்னன் மகள் 

7. வேங்கையின் மைந்தன்                   17. கன்னி மாடம் 

8. பார்த்திபன் கனவு                                18. பொன்னியின் செல்வன்

9. வீரபாண்டியன் மனைவி                   19. நந்திபுரத்து நாயகி 

10. காந்தளூர் வசந்தகுமாரன் கதை   20. கலிங்க மோகினி 

பக்கம் –  25