தலையங்கம் – அப்துல் கலாமுக்கு ஒரு சலாம்

image

           

மாண்பு மிகு மனிதர் அப்துல்
கலாம்

அரும் பெரும் விஞ்ஞானி அப்துல்
கலாம்


அவர்,

விருதுகள் பற்பல பெற்றிருக்’கலாம்

அறிவியலின் ஆசானாக
இருந்திருக்கலாம்

நாட்டை முன்னேற்றப்  பாதையில் செலுத்தியிருக்கலாம்

இளைஞர்களின் கனவை நனவாக்கச்
செய்திருக்’கலாம்

மாணவர்களை நல்வழியில்
நடத்திச் சென்றிருக்கலாம்

யாவற்றுக்கும் மேலாக  தம்முடைய

எளிய வாழ்க்கை முறையினாலும்

இனிமையான பேச்சினாலும்

சீரிய சிந்தனைகளாலும்

நம்மைப் போன்ற சாமானிய
மனிதர்களின் மனதிலும் இடம் பெற்று, எல்லா தரப்பினரும் தாமாக முன்வந்து தங்கள் வேலைகளுக்கு ஒரு
நாள் விடுமுறை கொடுத்து அஞ்சலி செலுத்தும் அளவுக்கு மகாத்மா காந்திக்கு அடுத்த
படியாகத் தகுதி பெற்றவர், பெருமை பெற்றவர்  அப்துல்
கலாம் !

அவருக்குக் கண்ணீருடன் நாம்
செய்வோம் ஒரு சலாம்  !


ஆண்டு : 2                                                                   மாதம் : 8

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191  
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா

கலாமுக்கு நம் சமர்ப்பணம் by சுபா சுரேஷ்


யார் இந்த இளைஞர்கள் ?

எங்கே செல்கிறார்கள் ?

கட்சிக்கொடி இல்லை

கரை வேட்டிகள் இல்லை 

ஒரு வேளை இவர்கள் ,

படித்த இளைஞர்களுக்குக்  கணினி வழங்குவதாக அறிவித்திருந்தார்களே , அதைப் பெறுவதற்குச் செல்பவர்களாக  இருக்குமோ ?

 இல்லை,

வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதம் 200 உதவித்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தார்களே , அதைப் பெறுவதற்குச் செல்பவர்களாக இருக்குமோ ?

 இல்லை, 

100 நாள் வேலையில் கலந்து  கொள்ளச் செல்கிறார்களோ ?


இவற்றில் எதுவுமே இல்லை.

இவையெல்லாம் இளைஞர்களைக் கவர அரசியல் கட்சிகள் 

செய்யும் மாயைகள்.


இவர்கள் எல்லாம் கலாம் என்ற மந்திரச் சொல்லின் அடிமைகள்..

கலாமின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள்.


அப்துல் கலாம் 

“ ஒரு தனி மனிதன் எவ்வாறு இத்தனை இளைஞர்களைக் கவர்ந்தார்’  என்று இந்தியாவின் அத்தனை அரசியல்வாதிகளையும் ஒரே நாளில் சிந்திக்க வைத்த செம்மல்.

தேசத் தந்தை மகாத்மாவுக்கு அடுத்தபடியாகஒவ்வொரு இந்தியனின் மனதிலும் நீங்காது நிலைத்திருக்கப் போகும் மகான்.

உலக அளவில் இந்தியாவைத் தலை நிமிரச் செய்த ஏவுகணை நாயகன்.

வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொல்லி சோம்பலாய்த் திரிந்த ஒவ்வொரு இளைஞனையும் எழுச்சியுறச் செய்த மாமேதை.

எளிமையின் சிகரமாம் தமிழ் மண்ணின் மைந்தனாம் கர்ம வீரர் காமராஜருக்கு  அடுத்தபடியாகத் தமிழ் மண்ணிற்குக் கிடைத்த பொக்கிஷம்.

இந்தியாவின் ஒவ்வொரு  இளைஞனுக்கும் கனவு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை விளங்கச் செய்த ஞானி.

ஆசிரியப் பணியின் உன்னதத்தை ஒவ்வொரு ஆசிரியரும் உணர வைத்த நல்லாசிரியர்.

இத்தகைய மகானுக்கு சமர்ப்பணமாக நாம் செய்ய வேண்டியது என்ன ?


ஒன்றே ஒன்று தான் 

இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்ற அவரது லட்சியக் கனவை நனவாக்க இந்தியக் குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் பாடுபடுவோம் ! உறுதியெடுப்போம் ! 

சுதந்திரத் திருநாள் ! – கோவை சங்கர்

image


    பண்பட்ட பாரினிலே மக்கட்கும் மாக்கட்கும்

          பேதமொன் றுண்டென்பார் பகுத்தறிவே யதுவென்பார்

    நுண்ணறிவின் பயன்தன்னை முழுமையொடு பெறுதற்கு

          நினைக்கின்ற நினைப்பிற்கு சுதந்திரமும் வேண்டும்

    எண்ணமதை யெளிதாகத் தெளிவோடு சொல்லிடவே

          எஞ்ஞான்றும் நாவிற்கு விடுதலையும் வேண்டும்

    திண்ணமொடு கூறியதைச் செம்மையுற செய்திடவே

          செயலுக்கு சுதந்திரமும் கிடைத்திடவே வேண்டும்!


    மக்கள்தம் எண்ணமதை சொற்களோடு செய்கைதனை

          அடக்கியே வேலைகள் வாங்கிடவே நினைத்தாலே

    சக்கரம்போல் சுழன்றிடலாம் அடக்குமுறை தாங்காது

          சுழற்சியின் வேகமோ ஒர்சில நாட்கள்தாம்

    நோக்கமிலை வாழ்வினிலே வாழ்க்கையோ யந்திரமே

          ஆர்வமிலை கருத்தினிலே வேலையிலை யறிவிற்கு

    நீக்கமற நிறைவதுவோ விரக்தியெனும் பேயதுவே

          விரைவினில் பலியாகும் நாட்டினது நலனதுவும்!


    அஞ்சாத நெஞ்சமதும் அடங்காத ஆர்வமதும்

          தளராத நோக்கமதும் குறையாத ஊக்கமதும்

    வெஞ்சமராம் குருதியில்லா விடுதலைப் போரிற்கு

          வெருட்டுகின்ற ஆயுதமாய் மருட்டுகின்ற கணையதுவாய்

    துஞ்சலையு மஞ்சாது உயிரையும் உடலையும்

          தியாகிகள் கொடுத்துமிக இடர்ப்பாடு கொண்டதெலாம்

    நெஞ்சமதை நிமிர்த்திடும் விடுதலையின் மகிமைதனை

          நெறியோடு ஆராய்ந்து அறிந்தநல் லுணர்வோடு!


    மகிழ்வோடு கொண்டாடும் சுதந்திரத் திருநாளில்

          பாரதமாம் அன்னைதனை கலங்காது காத்திடவே

    அகத்தினிலே யுவப்போடு உயிர்நீத்த உத்தமரை

          கண்பனிக்க பெருமையொடு கருத்தோடு நினைக்கின்றோம்

    செக்கிழுத்து கல்லுடைத்து தன்னலங்கள் துறந்திட்டு

          அந்நியரின் சிறையினிலே அடிபட்டு உதைபட்டு

    முகச்சோர் வின்றியே விடுதலை வாங்கவே

          உழைத்தநல் மாந்தர்க்கு அஞ்சலியும் செய்கின்றோம்!

உங்கள் வீடு பிள்ளையார் இணக்கமா? (Pillaiyaar Compliant)

image


நீங்கள் உங்கள் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு “இன்னும் சாப்பிடுங்கள் இன்னும் சாப்பிடுங்கள்” என்று உபசாரம் செய்வீர்களா?

விருந்தினர்களோ நண்பர்களோ ஒருமுறை  ‘போதும்’  என்று சொன்ன பிறகும் “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்ளுங்கள் "என்று கேட்பீர்களா? 

"போதும் வயிறு நிறைந்துவிட்டது” என்று கெஞ்சும்  மனிதர்களிடம்  " எனக்காக ஒண்ணே ஒண்ணு பிளீஸ் “ என்று கேட்கும் வர்க்கமா நீங்கள்? 

"கூச்சப்படாமல் சாப்பிடுங்கள்” என்று சொல்லி அவர்கள் வயிறு முட்ட சாப்பிடச் சொல்லி வற்புறுத்தும்  இனமா நீங்கள்?

குஜராத்தில்  "ஆக்ரா" என்று ஒரு பழக்கம் உண்டு. அதில் விருந்தினர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து அவர்களைத் திக்குமுக்காடச் செய்வார்களாம். நீங்கள் அந்த வகையா?

“இப்போது தான் வீட்டிலே காப்பி  சாப்பிட்டு விட்டு வந்தேன்” என்று சத்தியம் பண்ணினாலும் , “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் காபி குடிச்சா ஒண்ணும் பண்ணாது” என்று போட்டுக் கொடுப்பவரா நீங்கள்?

‘அரை டம்ளர் டீ போதும்’ என்று கெஞ்சும் விருந்தாளிகளுக்குச் சின்ன  டம்ளர் தான் என்று சொல்லி அரைச்  சொம்பு காபியை அள்ளிக் கொட்டும் பரோபகாரியா நீங்கள்?

“சுகர் இருக்கு வேண்டாமே  ஸ்வீட்”  என்று பரிதாபமாகக் கெஞ்சும் விருந்தினர்களுக்கு “ பரவாயில்லை மாத்திரை ஒண்ணு சேர்த்துப் போட்டுக்கலாம்”  என்று இலவச மருத்துவம் பார்த்து ஸ்வீட்டை அவர் வாயில் திணிக்கும் கொடுங்கோலரா நீங்கள்?

இந்தக் கேள்விக்கெல்லாம் ‘ஓகே’ ‘ஆமாம்’ ‘அதனாலென்ன தப்பு?“ "இது தான் உபசரிப்பு முறை” என்றெல்லாம் சொல்லும் மனிதர்களுக்கு இப்போது ஆப்பு வந்துவிட்டது. 

பிள்ளையார் உருவில். 

நீங்கள் அனைவரும் பிள்ளையாரின் கடுங்கோபத்துக்கு – ஏன் சாபத்துக்கு உள்ளாவீர்கள்!

வாதாபியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிள்ளையார் புராணத்தில் இதைப்பற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாம்.  ( வாதாபியிலிருந்து தான் பிள்ளையார் தமிழகத்துக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே)

அதன்படி “அதிதியோ பவ”  என்றால் விருந்தினர்களை உபசரிக்க வேண்டும். ஆனால் விருந்தினர்கள் வேண்டாம் அல்லது போதும் என்று சொன்ன பிறகும்  தருவது பிள்ளையாருக்குச் செய்யும் துரோகம். ( இதற்கு ஒரு உப  கதை உள்ளது : பிள்ளையார் பசி தாங்காமல் பார்வதியிடம் சாப்பாடு கேட்டபோது பார்வதி எவ்வளவு உணவு கொடுத்தும் அவர் பசி தீரவில்லையாம் . பரமசிவனிடம் பார்வதி கவலையுடன் கேட்ட போது , பூலோகத்தில் விருந்தினர்களுக்குக் கொடுத்தது போக பாக்கி இருக்கும் அனைத்து உணவும் பிள்ளையாருக்குப் போய்ச் சேரக் கடவது என்று அருளினாராம்).

இப்போது சொல்லுங்கள், வேண்டாதவருக்கு அள்ளி அள்ளிப் போடும் நீங்கள் பிள்ளையார் கோபத்துக்கு ஆளாவீர்களா இல்லையா?

தார்மீக முறைப்படிப் பார்த்தாலும் நீங்கள் மிச்சம் பிடிக்கும் உணவு ஒரு ஏழையின் பசியைத் தீர்க்கும் அல்லவா? உங்கள் விருந்தினரின் தொப்பையையும் குறைக்கும் அல்லவா? 

ஆகையால் விருந்தினர்களே நீங்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகும்  உணவை உங்கள் தட்டில் கொட்டும்  அரக்கர்களிடம் “ போதும் ! போடாதீர்கள்!!பிள்ளையார் கோபித்துக்கொள்வார் ” என்று சொல்லுங்கள். நீங்களும் டைஜீன் தேடவேண்டாம்! சோடா குடிக்க வேண்டாம். 

இதற்காகவே   இப்போது கோபப் பிள்ளையார் என்ற ஒரு ஸ்டிக்கர் வருகிறது. உங்கள் வீட்டின் டைனிங் டேபிள் , சென்டர் டேபிள் , சமையலறை ஆகிய இடங்களில் அந்த ஸ்டிக்கரை ஒட்டி எங்கள் வீடு பிள்ளையார் இணக்கம் ( pillaiyaar compliant) என்று விருந்தினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! 

ECO FRIENDLY என்பது போல உங்கள் இல்லத்தைப் பிள்ளையார் friendly ஆக மாற்றுங்கள்!!

image

நாட்டுக்கும் நல்லது!

குவிகம் இலக்கிய வாசல்

image

குவிகம் இலக்கியவாசல் நான்காம் நிகழ்வு “சிறுகதைச் சிறுவிழா”’
சென்னை -ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில்
18.07.2015 அன்று மாலை நடந்தது .

நடுவர்கள் : 

நவீன விருட்சம் என்னும் காலாண்டு இதழைக் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நடத்திவரும் திரு அழகிய சிங்கர் அவர்கள்,

புகைப்படக் கலைஞரும், சிறுகதை எழுத்தாளருமான  திரு, கிளிக் ரவி அவர்கள்,

எழுத்தாளர்    திரு KG ஜவர்லால் அவர்கள்.

பகிர்ந்து கொண்டு சிறப்பித்த அன்பர்களும் அவர்கள் படித்த சிறுகதைகளும் :

சுபா சுரேஷ் –  "அனுபவம்"

திரு. மலைச்சாமி   “ஊமைக்கொலுசுகள்”

கவிஞர் ஆரா  "எதிர்பாராதது"

திரு. குமரி அமுதன் “எழுந்து நில்”

திரு. ஸ்ரீதரன்  "கண்ணாடிக் கதவுக்கு அப்பால்"

திரு. கொற்றவன்  "வீரன் தந்த பரிசு"

திரு ராஜகோபாலன்  "பிரேதத்துடன் ஒரு பயணம்"

திரு. சேது கோபிநாத்  "தவிப்பு"

திரு.  G B சதுர்புஜன்    "நடிகன்"

திரு. சரவணன்   “நிலாவின் பொம்மை”

திருமதி  R வத்சலா    "மூலை"

திரு. தொல்காப்பியன்    "மேகதூதம்"

திரு J ரகுநாதன்   “லாரா”

பரிசு பெற்றோர்

முதல் பரிசு : திரு J ரகுநாதன்

இரண்டாம் பரிசு ::  திரு கொற்றவன்


மூன்றாம் பரிசு : திரு சரவணன் – திரு GB சதுர்புஜன்


நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல எழுத்தாளர்  திரு. பிரபஞ்சன் அவர்கள்   படிக்கப்பட்ட இந்தக் கதைகளைக்  கொண்டு ஒரு  சிறுகதைப் பட்டறை முயற்சி   செய்யலாம் என்று ஒரு  யோசனை தெரிவித்தார். 

இது பற்றிய தங்கள் கருத்தைக் கதை படித்த அன்பர்களும் மற்றவர்களும்   தெரிவிக்கக் கோருகிறோம்.

லாரா – ஜெயராமன் ரகுநாதன்

(குவிகம் இலக்கியவாசல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை). 

image

( மேலே சொடுக்கினால் லாரா கதையை ஆசிரியரின் குரலிலேயே கேட்கலாம்) 

அந்தப்பெரியவரின் கை நடுங்கிக்கொண்டிருந்தது.
முதலில் பஸ்சின் வேகத்திலோ என்று எனக்கு ஏற்பட்ட சந்தேகம் சீக்கிரமே நீங்கியது.
இன்னொரு கையில் குடை வைத்துக்கொண்டிருந்தார். அதுவும் ஆடிக்கொண்டே இருந்தது
கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது.

என் மகன் வீட்டிலிருந்து Marine Platz என்னும் இடத்திற்கு ஒரு Dinnerக்காகத் தனியாகப் போய்க்கொண்டிருந்தேன்.

“உங்களுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே?”

என் பக்கம் திரும்பினார். ஆனால் பதில் இல்லை.

நடுங்கும் கைகளுடன் ஜன்னல் வழியே பார்க்க
ஆரம்பித்துவிட்டார். சில நிமிடங்களுக்குப் பின்னர் சட்டென்று என் பக்கம் திரும்பி
துல்லியமான ஆங்கிலத்தில் “ நீ இந்தியாவா அல்லது பாகிஸ்தானா?” என்று கேட்டார்.

“ இந்தியாதான்”. தென் இந்தியா"

“ நினைத்தேன். You have Dravidian Features” என்று ஆச்சரியப்பட வைத்தார். “
என்னுடைய பள்ளிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்திருக்கிறேன். ஓடகமண்ட்
வெல்லிங்டன்”. என் அப்பா அங்குதான் C in C ஆக இருந்தார். எனக்கு வயது பன்னிரண்டு
அப்போது"

“அப்படியா”

“ இரண்டு வருடங்கள்தான். பிறகு
திரும்பிவிட்டேன்”

உங்களின் ஆங்கிலம் பிரமிக்க வைக்கிறது என்றேன்.

“I am English ”

மறுபடி ஜன்னல் வெளியே பார்வை. சில பிரயாண
நிமிஷங்கள்.

“ உங்களின் அரசாங்கத்துக்குத் திராணியே
இல்லை”

 "ஏன்"

அதான் உங்கள் காஷ்மீரில் நடக்கிறதே".
நாங்களாக இருந்தால் அடித்துத் தீர்த்திருப்போம் இத்தனை நாட்களில். சும்மா
பேசிக்கொண்டு அதிகம் இழக்கிறீர்கள். எத்தனை பேர் இதுவரைக்கும். நாந்தான் விடாமல் BBCயில் பார்க்கிறேனே"

நான் மெளனமாக இருந்தேன்.

You know I am a second world war
veteran".
இதே ஜெர்மனியில் Hawker Demon ப்ளேன் ஓட்டி வந்து குண்டு வீசி
குப்பல் குப்பலாக மக்களைக் கொன்றிருக்கிறேன்".

இப்போது அவர் குரல் கொஞ்சம் வெறி ஏறினாற்போல
மாறியது.

“நானே பார்த்தேன். எவ்வளவு பெண்கள், குழந்தைகள். என் கை விரல் பட்டனில் பல
உயிர்கள் ஊசலாடியிருக்கின்றன. அப்படியே ஒரு கழுகின் பார்வையில் டைவ்.
"விஷ்” என்னும் அந்த ஒரு மாயக்கணத்தில் தெறிக்கும் குண்டுகள். நான்
விமானத்தை மேலே எழுப்பிப் பின்னால் பார்ப்பேன். அந்தக்காட்சி…..வார்த்தைகளில்
சொல்ல முடியாது. பளிச்சென்ற ஒளி உமிழப்பட்டு அந்த இன்ப சப்தத்தில் உயிர்கள்
அழியும் அந்த கடவுள் கணங்கள்".

மறுபடியும் மௌனம். தான் பேசியதை அவரே
ரசிக்கிறார் போல கண்கள் இடுங்க ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.

எனக்கும் ஒன்றும் சொல்லத் தோணவில்லை.

“ ராணுவம் என்றால் நாங்கள்தான். அந்த discipline. ”

மறுபடி ஜன்னலுக்கு வெளிய பார்வை போய்விட்டது.

இப்போது ஜன்னலில் அந்தப்பெரியவர் ஏதோ மாதிரி
கையை மெதுவாக தடவிக்கொண்டிருந்தார். ஆர்வத்துடன் பார்த்தேன். ஒரு சின்ன பூச்சி
கண்ணாடி மேல் நகர்ந்து கொண்டிருந்தது. பெரியவர் அந்த பூச்சிக்கு அருகில் தன
கையை வைத்து அது தன் கை மேல் ஏற வழிபண்ணிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் தவித்த
பின் அந்தப்பூச்சி அவர் கை மேல் மெதுவாக ஏறியது. நடுங்கிக்கொண்டிருந்த கையை
ரொம்பவுமே ஜாக்கிரதையாக நகர்த்தி தன் மற்றொரு கைக்கு அருகின் கொணர்ந்து இன்னொரு
கையால் “பட்டென்று” அடித்து நசுக்கினார்.

கையைத் துடைத்துக்கொண்டு" ப்ளடி ஜெர்மன்
இன்செக்ட்" என்றார். .

ஆச்சரியத்துடன் அவரைப்பார்த்தேன்.

“என்ன பார்க்கிறாய்? இன்றும் என்னிடம் ஒரு Hawker Demon தந்து பார். உங்கள் காஷ்மீரையே ஒரு
கலக்குக் கலக்கி அந்த பாகிஸ்தானியர்களை ஓட ஓட விரட்டிவிடுவேன்"


image

“நீங்கள் எங்கே இங்கே
ம்யுனிக்கில்” என்று பேச்சை மாற்றினேன்.

“போன வாரம் வந்தேன். என் மகள்
விஷயமாக”

“அப்படியா? உங்கள் மகள் இங்கேதான் இருக்கிறாரா?”

அவர் கண்ணில் பெருமை தெரிந்ததா என்று என்னால்
சொல்ல இயலவில்லை. மெளனமாக இருந்தார். அவரின் இந்த மௌன நிமிடங்கள் எனக்கு அதற்குள்
பழகி விட்டது.

“லாரா. அவள் ஒரு பச்சைக்கண் அழகி.
என்னைப்போல!”

இடுங்கின கண்களும் கோணின வாயும் அவர்
சிரித்தாற் போலப் பட்டது.

“இங்கிலாந்தில் பிரபுக்கள் அவளுக்காய்
காத்துக்கொண்டிருக்க, இந்த
ஊர் ஜெர்மன் பையனைக் கல்யாணம் செய்துகொண்டாள். காதலாம்! ஹக்”.

“ஏன் அவனை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

“அவன் ஒரு சாதாரண ஆர்கிடெக்ட். ஏதோ
கனவுகளை அவளிடம் விற்பனை செய்து அவளையே வாங்கி விட்டான். முட்டாள் பெண்”.
அவனுக்கு என் சொத்தின் மேல் ஒரு கண் இருந்திருக்கும்.
இவளுக்குப் புரியவில்லை.“

"இப்போது அவளைப் பார்க்க
வந்திருக்கிறீர்களா?”

“இல்லை. பார்க்க
முடியவில்லை”

‘ஏன்?“

"நான் வருவதற்குள் புதைத்து
விட்டார்கள்”

உறைந்தேன்.

“சால்ஸ்பர்கிலிருந்து காரில்
ஆட்டோபானில் வரும்போது விபத்து. ஸ்தலத்திலேயே மரணம் இருவரும்.”

“வருந்துகிறேன்”. தங்களின் சோகம்
மகத்தானது.“

வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

"ஜெர்மானிய …………” என்று
ஒரு கீழ்த்தரமான ஆங்கில வசவைப் ப்ரயோகித்தார்

“அவளுக்கு 50,000 யூரோக்கள்தானாம் இன்ஷுரன்ஸ். அவள்
கணவனின் தம்பி சுளையாக ரெண்டு லட்சம் யூரோக்களை பெற்றுக் கொண்டு விட்டான். என்ன
அபத்தமான விதிகள்  இந்த பாழாய்ப் போன நாட்டில்”..

நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டிருக்க,
நான்   எழுந்து இறங்கிவிட்டேன்.  அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.
சொல்லிக்கொள்ளவும் இல்லை.

டின்னரின் போது என் பிசினஸ் சகா படு உற்சாகமாக
இருந்தார்.

“ரகு! தெரியுமா, நமக்கு எண்பதாயிரம் யூரோ காண்ட்ராக்ட்!”

“ஓ! சூப்பர்! எங்கிருந்து?”

“லண்டன், இங்கிலாந்து! வாவ்! On the banks of Thames!”
என் சகா பாடினார்.

“வேண்டாம்" என்றேன் ஸ்பஷ்டமாக.