சிறுகதை என்றால் என்ன?

சிறுகதைகளை வாசிக்கக் கேட்பது என்பது அலாதியான அனுபவம்.

 இலக்கிய வாசல் நடத்திய புதுமையான மனதைத் தடவும் நிகழ்ச்சி  " சிறுகதை வாசித்தல்".

அதுவும் எழுதிய எழுத்தாளரே வந்து வாசிப்பது மிகவும் சிறப்பான அம்சம்.

அது சரி, சிறுகதை என்றால் என்ன? 

image

நியுயார்க்கர் பத்திரிக்கை மாதந்தோறும் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகளை  மற்ற எழுத்தாளர்களைக்கொண்டு வாசிக்க வைத்து podcast ஆக வெளியிடுகிறது. கதைகளைப் பற்றிய சிறிய உரையாடல்கள்,  அறிமுகங்களுக்குப் பிறகு கதைகளை எழுத்தாளர்கள் வாசிக்கிறார்கள். உலகம் முழுவதும் எழுதப்படும் விதவிதமான சிறுகதைகளைப் பற்றி அறிந்துகொள்ள நியுயார்க்கர் பத்திரிக்கையின் மாதாந்திர சிறுகதை podcast நல்ல வழியாக இருக்கிறது.  


நியுயார்க்கர் சிறுகதை podcastஐ  http://www.newyorker.com/series/fiction-podcast  என்ற சுட்டியில் கேட்கலாம்.

சிறுகதை என்றால் என்னா? சுஜாதா சொல்கிறார்!

image

சிறுகதை என்பது சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை.     A short fictional narrative in prose.  வேறு எந்த வரைமுறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது. சிறுகதைகளில் ஒரு பொது அம்சம் இருக்கிறது. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய் விட்டால் அது சிறுகதை அல்ல; பஸ் டிக்கெட். ஒரு வாரம் அல்லது ஒரு வருஷம் கழிந்தோ அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல சிறு கதைகளில் உள்ள பொதுவான அம்சம்

சிறுகதை என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. நல்ல நடையினால் சிறுகதை செதுக்கப்பட வேண்டும். சொல்லுகின்ற செய்தியை, கூர்மையாய்த் தெளிவாய்ச் சொல்ல வேண்டும். இதன் மூலமே சிறுகதையின் கலையம்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.

சிறுகதையின் இலக்கணம் இப்படி இருக்கலாம்:


1) சிறுகதை என்றால் அளவில் சிறியதாய்  

முழுமை பெற்று இருக்க வேண்டும்

2) தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.

3) சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.

4) அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.

5) விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.

6) குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.


7) பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.

8 ) சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.

9) நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை.

ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி – இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.

மற்றவர்கள் சொல்லுவது:

வசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனைப் பொறி தான் சிறுகதை. அது 10000 வார்த்தைகளுக்குள் அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம்  என்கிறார். எச் ஜி வெல்ஸ்.

ஒரு குறிப்பிட்ட ஒரே சம்பவத்தைச் சொல்லும் கற்பனை சிறுகதை என்கிறார். சாமர்ஸெட் மாம்.  அது துடிப்போடு மின்னலைப் போல் மனதோடு இணையவேண்டும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சீராக  கோடு போட்டது போல்  செல்ல வேண்டும் என்கிறார்.

ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவது சிறுகதையாகும்.

தி.ஜானகிராமன் சிறுகதை எழுதுவது பற்றி இப்படிக் கூறுகிறார்: 

ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக் கொண்ட விஷயம் உணர்வோ சிரிப்போ புன்சிரிப்போ நகையாடலோ முறுக்கேறிய துடிப்பான ஒரு கட்டத்தில் தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும் ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ளவேண்டும். தெறித்து விழுவது பட்டுக் கயிராக இருக்கலாம் அல்லது  எஃகு   வடமாகவோ பஞ்சின் தெறிப்பாகவோ குண்டு மருந்தின் வெடிப்பாகவோ இருக்கலாம். . 

தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கு மிக அதிகமாகத் துணை நின்றவை, தமிழில் வெளிவரும் வார, மாத இதழ்களே ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தப் படைப்பிலக்கியம் இன்று மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

பக்கம் ………………………………12