குட்டீஸ் லூட்டீஸ்

image

நானும் என் நண்பர்களும் டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்த ஸ்டான்ட் -அப் காமெடி ஷோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். உடன் என் நண்பரின் ஐந்து வயது மகன் ரமேஷும் இருந்தான். 

சிறிது நேரம் ஷோவைப் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் , “டாடி, டி.வி.யில அந்த அங்கிள் நின்று கொண்டே ஜோக்ஸ்  சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை 

ஸ்டான்ட் -அப்  காமெடி என்று சொல்கிறீங்க . அவர் அதையே உட்கார்ந்து கொண்டு சொன்னால் ஸிட் -டவுன் காமெடின்னு   சொல்வீங்களா ” என்றானே பார்க்கலாம்.

அங்கு எழுந்த  சிரிப்பலையும் ,திகைப்பலையும்,விழிப்பலையும் அடங்க வெகு நேரமாயிற்று. 

– சிவமால் .


குட்டீஸ்க்காகப் பாட்டு எழுதியவர் அழ. வள்ளியப்பா அவர்கள். இன்றைய  தமிழ் நாட்டுப் பெரிசுகள் எல்லாம் அவருடைய பாடல்களைப் பள்ளியில் படித்த பெரிய மனிதர்கள் தான். 

சிறுவர்கள் மனதைக் குதூகலிக்கச் செய்து பாடவும், ஆடவும் செய்த கவிஞர் அழ.வள்ளியப்பா,   “குழந்தைக் கவிஞர்” என்ற அடைமொழிக்கு உரியவர்.

அவர் மிகவும் ஈடுபாடு கொண்டு நடத்திய மாத இதழ் “பூஞ்சோலை”. 

அவரது புத்தகங்கள்: 

  • பாடல்கள் தொகுதி 11
  • கதைகள் 12
  • கட்டுரை நூல்கள் 9
  • நாடகம் 1
  • ஆய்வு நூல் 1
  • மொழிபெயர்ப்பு 2
  • தொகுப்பு நூல் 1

ஆக, 37 நூல்கள் எழுதியிருக்கிறார். 

கைவீசம்மா கைவீசு பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக சிவாஜி கணேசனின் பாசமலர் உதவியது.  (அந்த வீடியோவை  இந்தக் குவிகத்தில் பார்க்கலாம் ) 

அவருடைய இரண்டுபாடல்களை வார்த்தை வடிவில்  

தந்திருக்கிறோம்

திருவிழாவாம் திருவிழா பாட லை ஒலி வடிவிலும்

தந்திருக்கிறோம்

படித்து, கேட்டு, மகிழுங்கள்: 

image
image

தவிப்பு – சேது கோபிநாத்

image

குவிகம் இலக்கியவாசல் சிறுகதைச்  சிறுவிழாவில் படிக்கப்பட்ட கதை!

ரங்கசாமி
அன்று காலையிலிருந்து கடுமையான மன இறுக்கத்துடன் காணப்பட்டார். மூலை, முடுக்கு,
பீரோ, பெட்டி, பரண், படுக்கை, புத்தக அலமாரி … எல்லாவற்றையும் குடைந்து குடைந்து
எதையோ தேடிக் கொண்டிருந்தார். ஏன், குப்பைக்கூடை, செருப்பு அடுக்கும் பெட்டி
ஆகிய   எதையும் விட்டு வைக்கவில்லை! அதை
எங்கே வைத்தோமென்று நினைவிற்கு வரவில்லை. எங்கே தேடுவது என்றும் புரியவில்லை!  தன் நினைவாற்றல் குறைவைத் தானே நொந்து
கொண்டார். 

எழுபது வயதான அவருக்கு இரத்தக்கொதிப்பு, சக்கரை வியாதி, மூட்டு வலி,
பார்வைப்பிரச்சினை, வழுக்கை … எதுவும் இல்லை! சற்று நரைத்த தலை மட்டும் உண்டு.
ஆனால், அவ்வப்போது வீட்டுச்சாவி, பேனா, செல்போன் போன்றவற்றை எங்காவது மறந்து
வைத்துவிட்டுத் தேடுவதுண்டு. பிறகு கிடைத்துவிடும். 

இம்முறை அவர் எங்கோ மறைத்து
வைத்தது ஒரு புத்தகம்! தினமும் பூங்காவில் அவர் சந்திக்கும், அரசு பணியிலிருந்து
ஓய்வுபெற்ற நண்பர், உலகநாதன் சில நாட்களுக்கு முன் படிப்பதற்காகத் தந்த புத்தகம்.  எப்படிக்  காணாமல் போயிருக்கும்? தன்னைத்தானே திட்டிக் கொள்வதைத் தவிர வேறு என்ன
செய்ய?

அவருடைய மகனும்
மருமகளும் ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் அலுவலர்கள். வீட்டுக்குச் சற்றுத்
தாமதமாகத்தான் திரும்பி வருவார்கள். ஐந்து வயதுப் பேரன் ஸ்கூல் வேன் மூலம் மாலை
நான்கு மணிக்கே வந்து விடுவான். பிறகு அவன் பெற்றோர் வரும்  வரை, தாத்தாவும் பாட்டியும்தான்
கவனித்துக்கொள்வர். அவரது மனைவி சில நாட்கள் முன்பு ஊருக்குப் போயிருந்தாள்.
எப்போது வருவாளோ..? பயணத்தின் போது படிப்பதற்காக சில பத்திரிக்கைகளை
எடுத்துக்கொண்டு போனாள். உலகநாதன் தந்ததையும் எடுத்துச் சென்றுவிட்டாளோ..?  

இருக்காது! மேசையை ஒட்டித் தரையில் இருந்த
குப்பைக் கூடையில் அது விழுந்து, நேற்று வேலைக்காரி அதையும் குப்பையோடு எடுத்துச்
சென்றாளோ…? கடவுளே! உலகநாதன் ஜாலியான ஆள்தான். ஆனால், வேறு நண்பர் அவரிடமிருந்து
வாங்கிச் சென்ற புத்தகத்தைத் திருப்பித்தர தாமதமாயிற்று என்று, உலகநாதன் சென்னைத்
தமிழில் ‘ஓங்காரமாக’த் திட்டியது, ரங்கசாமியின் நினைவிற்கு வந்து பயமுறுத்தியது.
இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!

வேலைக்காரி
வந்தாள். பாய்ந்து சென்று அவளிடம், “செல்வி, நேத்து சாயங்காலம் என் ரூமில
இருக்கிற குப்பைக்கூடையைக் கிளியர்
பண்ணினியே, அதுலே புஸ்தகம் ஏதாவது இருந்ததா?” என்று கேட்டார்.
அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றாலும், ஒரு புத்தகம்  குப்பைக்கூடையில் கிடந்தால் அதன் மதிப்புத்
தெரியாமலா இருக்கும்? அவள் வாய்விட்டுச் சிரித்துவிட்டு “சாமி, உங்களுக்கு
வயசாயிடுச்சு, மறதியும் சாஸ்தியாயிடுச்சு.
எங்கேயோ வச்சிட்டு எங்கேயோ தேடுறீங்க!” என்று கேலியாகச் சொல்லிவிட்டு
மும்மரமாகப் பாத்திரம் தேய்க்கத் தொடங்கினாள்.

 ரங்கசாமியின் கோபம்
மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை ஏறிவிட்டது. மறதியைப் பற்றிச் சொன்னால் பரவாயில்லை,
வயதாயிற்று என்று கேலி செய்கிறாளே?

ஆங்!
இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. பழைய பத்திரிக்கைகள், பாட்டில்கள், பிளாஸ்டிக்
பைகள் எல்லாவற்றையும் எல்லா அறைகளிலிருந்தும் சேகரித்து, மருமகள் நேற்று எடைக்குப்
போட்டாளே! அந்தக் குவியலோடு போயிருந்தால் ….? செல்வியிடம் வீட்டைப்
பார்த்துகொள்ளச் சொல்லிவிட்டு, தெருக்கொடியிலுள்ள பாண்டியன் கடைக்கு ஓடினார்.
ரங்கசாமியின் பதற்றதைப் பார்த்து, அவர் தேடி வந்தது ஒரு புத்தகம் என்றறிந்தவுடன்,
“ஐயா, நீங்களே தேடிப் பாருங்க, எனக்கு இங்கிலீசு வராது!” என்று
கூறினான். ஊஹூம்! வெறுங்கையுடனும், பெருந்தும்மல்களுடனும் வீடு திரும்பியதுதான்
மிச்சம்!

இரண்டு
நாட்களுக்கு முன்பு, பக்கத்திலிருந்த
“லெண்டிங் லைப்ரரி” லெட்சுமனனுக்கு பல ஆங்கில மாத ஏடுகளின்
பிரதிகளை நன்கொடையாகத் தந்தோமே! ஆம்… அவற்றோடு இதுவும் போயிருக்க வேண்டும். மதிய
உணவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த லெட்சுமனனைச் சரியான தருணத்தில் பிடித்துக்
கொண்டார். “ சார், கவலைப்படாதீங்க, நீங்க குடுத்த பதினெட்டுப்
புத்தகக்களையும் இன்னும் கட்டுப் பிரிக்காமல் வச்சிருக்கேன்!” என்று கூறி
அவர் வயிற்றில் குளிர்ச்சியான ஆவின் பால் வார்த்தான். ஆனால் ரங்கசாமி தேடியது
கிடைக்கவில்லை!

அன்று மாலை
மகனும் மருமகளும்  சற்று சீக்கிரமே வீடு
திரும்பிவிட்டார்கள். ஒரு பார்டிக்குப் போகவேண்டுமாம்.  பேரனும் பள்ளி வேனில் திரும்பி வந்து விட்டான்.
வழக்கம் போல் பூங்காவிற்குச் செல்லாமல் எதையோ தேடிக் கொண்டிருக்கும் ரங்கசாமியைப்
பார்த்து, அவர் மகன், “அப்பா! அவ்வளவு சீரியஸா என்னதான் தேடுறீங்க? நான்
தேடித் தரவா?” என்று கேட்டவுடன் பதறிப்போய், “வேண்டாம் ராஜா! நானே
தேடிக்கறேன் ஆபீஸிலேருந்து களைச்சுப்போய் வந்திருக்கீங்க, பாவம்!” என்று
கூறிவிட்டுத் தேடுதலைத் தொடர்ந்தார். 

பள்ளியிலிருந்து வந்தவுடன், தன்னை
அள்ளியணைத்துக் கொஞ்சி, ‘நேர் காணல்’ தொடங்கும் தாத்தாவிற்கு இன்று என்ன ஆயிற்று?
பேரன் பிரபு திகைத்து நின்றான். ராஜா பாத்ரூமிற்கும், அவன் மனைவி ராதா
அடுக்களைக்கும் சென்றுவிட்டனர்.

“தாத்தா!
என்ன தேடுறீங்க?” பிரபு கேட்டான்.

“பிரபுக்
கண்ணா! ஒரு புஸ்தகத்தை எங்கேயோ வச்சிட்டு மறந்து போயிட்டேம்ப்பா. அந்த மீசைக்காரத்
தாத்தா உலகநாதன் என்னைப் பார்க்க வருவாரே, அவருக்குத் திருப்பிக் கொடுக்கணும்!”
அழாத குறையாகப் பேரனிடம் முறையிட்டார். பிரபுவும் தாத்தாவிற்கு உதவியாகத் தேடித்
பார்த்துவிட்டு, எந்தெந்தப் புத்தகங்களையோ கொண்டுவந்து தந்தான்.

வழக்கமாகத்
தன்னை மாலை ஐந்து மணிக்கு விளையாடுவதற்காக பூங்காவிற்கு அழைத்துச் செல்லும் தாத்தா
இன்று ஏதோ தேடிக் கொண்டிருக்கிறாரே!  பூங்காவிலுள்ள
‘கிழவர் கிளப்’ தினமும் மரத்தடியில் கூடும். கிழவர்கள் வம்பு பேசிக் கொண்டிருக்க,
தான் மட்டும் சற்று நேரம் அங்கு விளையாடிவிட்டு வீட்டுக்கு வருவதுண்டு. பாட்டி
ஹார்லிக்ஸ் கலந்து கொடுப்பார். குடித்துவிட்டு ‘டி.வி’யில் ‘சோட்டா பீம்’
பார்பதுண்டு. இன்று யாருக்குமே ‘மூடு’ சரியில்லையே! பாட்டியும் ஊரிலில்லை.

இடிந்துபோய்ப் படுக்கையில் சாய்ந்துகொண்டு, மூளையைச் சொறிந்து கொண்டிருந்த ரங்கசாமியிடம்,
“தாத்தா! இன்னிக்காவது அலிபாபா கதையை முழுசாப் படிச்சுச் சொல்லுங்க!”
வாழையிலை போன்ற ஒரு புத்தகத்தை நீட்டினான். வேண்டா வெறுப்புடன் அதை வாங்கி, “பிரபு,
நீ கிச்சனுக்குப் போயி, அம்மா போட்டுத் தர்ற ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு வா!”
என்று அவனை அனுப்பிவிட்டு, அலிபாபா படக்கதைப் புத்தகத்தை மேஜை மீது
விட்டெறிந்தார். அதற்குள்ளிருந்து ‘தொப்’பென்று அவர்  தேடிக்கொண்டிருந்த புத்தகம் விழுந்தது.

யாருக்கும்
தெரிந்துவிடக் கூடாதென்று, மனைவி ஊரிலில்லாதபோது, பேரனுடைய புத்தகத்துக்குள் ஒளித்து
வைத்துப் படித்துக் கொண்டிருந்த அந்த ஆங்கில மாத ஏடு- ஹ்யூ ஹெஃப்னர் வெளியிடும்
‘அடல்ஸ் ஒன்லி’ பத்திரிக்கையான ‘ப்ளே பாய்’ !

திருடனுக்குத்
தேள் கொட்டினால் கத்தவா முடியம்… ?

page

மதிப்பு முதலீட்டைப் பற்றி மாதாமாதம் எழுதி வருகிறோம். இந்த மாதம் அதற்கான வீடியோ ஒன்று மேலே உள்ளது. 

பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.  ( அனுப்பியவர்: சீனு )

நான் சூப்பர் சிவப்பு நிலா !!

சூப்பர் நிலா என்பது நிலா பூமிக்கு மிக அருகில் வரும் நாள். அன்றைக்குத் தான் நிலா நமக்கு மிகப் பெரியதாகத் தெரியும். 

முழுச்  சந்திர கிரகணத்தின் போது சூரியனின் கிரணங்கள் பூமியில் பட்டுச் சிதறுவதால் நிலா சிவப்பு நிறத்தில் இருக்கும். அதனால் அதற்கு இரத்த நிலா (BLOOD MOON ) என்று பெயர்  வைத்திருக் கிறார்கள்.  

image

சந்திர கிரகணம் எப்படி உண்டாகிறது என்பதற்கு கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைய தளத்தில் பார்க்கவும்.

http://www.timeanddate.com/eclipse/lunar/2015-september-28 

சூப்பர் நிலாவும் இரத்த நிலாவும் சேர்ந்து வருவது நமக்குக் கிடைக்கும்  ‘வான வேடிக்கை’ . 1982 ல் இந்த சேர்க்கை நடைபெற்றது. 

இப்போது 2015 செப்டெம்பர் 27 தேதி  இந்தக் கண்கொள்ளாக் காட்சி அமெரிக்காவில் தெரியவந்தது. 

image

சான்ஃபிரான்சிஸ்கோ : முழு சந்திர கிரகணம் 

ஆரம்பம் :  Sun, Sep 27, 2015 at 5:11 PM

உச்சம் :      Sun, Sep 27, 2015 at 7:47 PM

முடிவு :      Sun, Sep 27, 2015 at 10:22 PM

நேரம் :  5 மணி, 11 நிமிடங்கள் 

அடுத்த நிகழ்வு 2033ல் தான் நடைபெறப் போகிறது. 

நான்கு முழுச் சந்திர கிரகணம் தொடர்ந்து வந்தால் அதை டெட்ராட் (TETRAD) என்று சொல்கிறார்கள்.   2014-15ல் இந்த டெட்ராட் வந்திருக்கிறது.

செப்டம்பர் 27 கிரகணம் இந்த  டெட்ராடீன் கடைசி கிரகணம்.

இந்த நூற்றாண்டில் மொத்தம்  8 டெட்ராட் வரப்போகின்றன. 

இதற்காக குவிகம் இணை ஆசிரியர் அர்ஜூன்,  சான் பிரான்சிஸ்கோ கடல் வெளியில் எடுத்த படங்களை கீழே காண்கிறீர்கள:

இலக்கிய வாசல் -6

image

 

2015 செப்டம்பர் மாதத்திற்கான 

குவிகம் இலக்கியவாசலின் ஆறாம் நிகழ்வு

கண்ணப்பன் வாசுகி அரங்கம்  டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர் ,சென்னையில்    வழக்கம் போல மூன்றாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. 

அது ஒரு கருத்தரங்கம்! முழுதும் பங்களிப்பார்களுக்கென்றே அமைக்கப்பட்ட நிகழ்ச்சி!

 "திரைப்படப் பாடல்களில் கவிநயம்" என்ற தலைப்பில் மக்கள் தங்களுக்குப் பிடித்த- ரசித்த இலக்கிய நயம் மிகுந்த திரைப்பாடல்களை மற்றவர்களும் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்லவேண்டும். அது தான் அன்றையக் கூட்டத்தின் குறிக்கோள். 


தலைப்பு நிகழ்வோடு இம்மாதம் முதல் ஒரு சிறுகதையும், சில கவிதைகளும் படைப்பாளர்கள் வாசித்து அளிக்கவேண்டும் என்றும் தீர்மானமாயிற்று. 

அதன்படி செயலாற்றியவர்கள்: 

இம்மாதச் சிறுகதை      :-  திரு          கோ. சரவணன்
இம்மாதக் கவிதைகள் :-   திருமதி   கிருஷாங்கினி

(இவற்றைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்) 


பாடல்களில், கவிஞர்கள் பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், கு.மா.பாலசுப்ரமணியன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய்  போன்ற கவிஞர்கள் எழுதிய சிறப்பான வரிகளைப் பார்வையாளார்கள் கோடிட்டுக் காட்டினார்கள்: 

அந்த முத்துக்களில் சில உங்கள் பார்வைக்காக உருளுகின்றன: 


 படம்: மன்னன்  எழுதியவர்: வாலி 


அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது
உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
 
அபிராமி சிவகாமி கருமாயி
மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள்
நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம்
அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன்
நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும்
மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும்
அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம்
வேண்டுமே
அதை நீயே தருவாயே
 
 
பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு
எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு
அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன்
தீருமா
உன்னாலே பிறந்தேனே

படம்: பலே பாண்டியா  எழுதியவர்: கண்ணதாசன் 

அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய்
காயாதே என்னுயிரும் நீயல்லவோ
 அத்திக்காய்
காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய்
காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
 
கன்னிக்காய்
ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய்
அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளம் காய் ஆகுமோ
என்னை நீ
காயாதே என்னுயிரும் நீயல்லவோ
 
இரவுக்காய்
உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய்
நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவம் காய்
ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ
காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ


ஏலக்காய்
வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய்
கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம்
விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ
காயாதே என்னுயிரும் நீயல்லவோ
 

உள்ளமெலாம்
மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ 
வெள்ளரிக்காய்
பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ
கோதை எனைக்
காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும்
காயாதே தனிமையிலே காய் வெண்ணிலா


படம்: ஜீன்ஸ் எழுதியவர் : வைரமுத்து 


பூவுக்குள்
ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப்
பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும்
காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர்
இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே
அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
கல்தோன்றி
மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல்
அதிசயம்
பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற
காதல் அதிசயம்


image

படம்; ஆட்டோகிராஃப்  எழுதியவர் : பா.விஜய் 
 
ஒவ்வொரு பூக்களுமே  சொல்கிறதே..
வாழ்வென்றால் போராடும்  போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே
சொல்கிறதே..
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ.. மனமே நீ மாறிவிடு
மலையோ  அது பனியோ  நீ மோதி விடு
 
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்  காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயம் எல்லாம்  மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்.
யாருக்கில்லை போராட்டம்  கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்  அதை
தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
 
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்  வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்பேம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி விதைபோடு மரமாகும்
அவமானம் படுதோல்வி  எல்லாமே
உரமாகும்
தோல்வி இன்றி வரலாறா துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்  அதில்
தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

image

படம்: தங்க மீன்கள்  எழுதியவர் : நா.முத்துக்குமார் 

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் 
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.
 
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

வாட்ஸ் அப் about வாட்ஸ் அப்

கோயமுத்தூர் கவுண்டம்பாளயத்தில்  புதிதாகக் கல்யாணம் ஆன 20 வயதுப்  பெண் ஒருத்தி கணவன்  வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ் புக் பார்க்கத் தடை விதித்ததால் தூக்குப்போட்டுக் கொண்டு  இறந்து விட்டதாக TIMES OF  INDIA தெரிவிக்கிறது. 

Scolded for too much WhatsApp, Facebook, woman commits suicidePTI | Oct 13, 2015, 06.36 PM IST


என்ன கொடுமை இது? 

மக்கள் இந்தப் போதைக்கு அடிமை ஆகிவிட்டார்கள். 

image

மேலும் whatsup இல் பொய்யான தகவல்கள் நிறைய வருகின்றன. 

இதை ஷேர் செய்யுங்கள் என்று எண்ணற்ற தகவல்கள். மற்றவர்கள் நம் வீட்டில் போடும் குப்பைகளை நாம் சந்தோஷமாக நமது நண்பர்கள் வீட்டுக்குத் தள்ளுகிறோம். 

மோடி ஏன் உலகம் சுற்றுகிறார்? 

ஆயிரம் கீரைகளும் அதற்கான மருந்து குணங்களும் 

இந்தக் குழந்தை தெருவில் கிடந்தது 

சூரியன் எப்போது பச்சைநிறமாக இருக்கிறது ?

சாணி தெளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் 

இதை ஷேர் செய்தால் 37 நிமிஷத்தில்  பணம் வரும்

இதை அனுப்பினால் 19 ரூபாய்க்கு டாக் டைம்   கிடைக்கும்

இப்படி எத்தனையோ கற்பனைச்  செய்திகளை உண்மையைப் போல் – ஆராய்ச்சி செய்து எழுதுவது போல் எழுதும்  கும்பல் நிறைய வந்துவிட்டது.

இதற்கு ஒரு மாற்று வரவேண்டும்! வரும்!! 

எழுந்து நில் – குமரி அமுதன்

image

ஜீவா
பரபரப்புடன் இருந்தார். அன்று மாலை நேரு விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியின் ஆண்டு
விழாவில் அவர் பங்கேற்க வேண்டும்.

போட்டிகளில்
வென்ற மாணவர்கள் அவர் கையால் பரிசுகள் பெறப்போகிறார்கள். அந்த நிகழ்வை எண்ணி
மாணவர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். அந்த அளவிற்கு நாட்டுப்பற்றிலும்
விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வம் மிக்கவராய் விளங்கியவர் ஜீவா.

மாலைப்
பொழுது…..

விழா
தொடங்கியது.. வாழ்த்துரைகளுக்குப் பின் பரிசளிப்பு நேரம். மாணவர்களுக்குப் பரிசுகளுடன் உற்சாக உரைகளும் வழங்கினார் ஜீவா. நாட்டுப்பற்று, மொழிப்பற்று பற்றி
எல்லாம் குறிப்பிட்டுப் பேசினார். விழா நிறைவு  பெறும்  வேளை. தேசிய கீதம் ஒலிக்க
வேண்டியதுதான் பாக்கி.

அந்தநேரத்தில்
உதவியாளரை அவசரமாக அழைத்தார் ஜீவா. உடனே அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

உதவியாளருக்கு
ஒரு ஐயம். அது நீண்ட நாள்களாகத் தொடர்ந்து வருவதும் கூட… அதை வெளிப்படுத்தும்
வகையில், பணிந்த குரலில், “ஐயா, நீங்க முன்னாள்  ராணுவ உயர் அதிகாரின்னு
சொல்லியிருக்கீங்க; உங்களுக்கு தேசிய கீதத்தின் அருமை அதிகமாகத் தெரியும் .    ஆனா நீங்க நாட்டுப் பாடல் ஒலிக்கிறத்துக்கு
முன்னாலேயே விழா மேடையிலிருந்து வெளியே வந்துட்டீங்க. இது சரி தானா? தேசிய
கீதத்துக்கு அவ மரியாதை செய்வது ஆகாதா?” என்று மிகுந்த தயக்கத்துடன்
கேட்டார்.

ஜீவா
அவரைக் கூர்ந்து நோக்கியபடி பதில் சொல்லத் தொடங்கினார்.

“ராணுவத்தில்
இருந்தபோது தேசிய கீதம் ஒலிக்கும் போதெல்லாம் எழுந்து நின்று மரியாதையை செய்தவன்தான்
நான். அதை ஒரு கடமையாக மட்டுமல்ல, பெருமையாகவும் கருதியவன் நான் !. இருபது
ஆண்டுகால நீண்ட பழக்கம் அது. இப்போதும் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நின்று
மரியாதை செய்ய என் நெஞ்சம் துடிக்கும்: உடம்பு பரபரக்கும். ஆனால், என்னால் அது
எப்படி முடியும்? என்று கலங்கிய விழிகளுடன் கேட்டார், போரில் இரு .கால்களையும்  இழந்து,
‘வீல் சேர்’ எனப்படும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஜீவா !  

page                                          

திண்ணை

இதை  தமிழின் முதல் இணைய பத்திரிகை என்று சொல்கிறார்கள்.

அவர்களின் சமீபத்திய இதழில் வெளிவந்த  தலைப்புகள்:

அந்தத் தலைப்புகளைக் க்ளிக் செய்தால் முழு விவரத்தையும் படிக்கலாம்! 

 

4 அக்டோபர் 2015

கௌரி கிருபானந்தனின் மிதிலாவிலாஸ் என்ற தெலுங்கு மொழிபெயர்ப்பு நாவலை வெளியிடுகிறார்கள்!

 

வழக்கமான கதை கவிதை அம்சங்களுடன் பொன்னியின் செல்வனைப் படக்கதையாக வெளியிடுகிறார்கள். பாராட்டுதல்கள்!

image

This gallery contains 2 photos.

அக்டோபர் 2, காந்தியடிகளின் பிறந்த நாள்!  அவரது கருத்தை ‘கவரும் வகையில்’  பாடலை எழுதிவர்                     “ கோவை சங்கர்" 

This gallery contains 3 photos.

இவ்வளவு சரித்திரப் புருஷர்களை ஏன் குவிகத்தில் வெளியிட்டிருக்கிறோம்?  அடுத்த தீபாவளி இதழிலிருந்து  புதிய தொடர்!  இந்திய சரித்திரத்தின் கதை! பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற  சரித்திரக் கதை அல்ல.  சரித்திரத்தின் நிகழ்வுகளை ஆராய்ச்சியாளர் பார்வையில் அளிக்கிறோம். எழுதப்  போவது யாரோ? அடுத்த இதழில்! page

This gallery contains 8 photos.

“அலாவுதீனும் அற்புத விளக்கும்” என்று நாம் படித்த அராபியக் கதையை – கமல் -ரஜினி- ஸ்ரீபிரியா நடித்த படத்தின் கதையை நியூயார்க் பிராட்வேயில் அழகான ம்யூசிகல் காமெடி ஷோவாகப் படைத்திருக்கிறார்கள்.  ஒரு நாடகம் ஒன்றரை வருடத்துக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது –  அதுவும் இன்றைக்குக் கூட அரங்கு நிறைந்த காட்சியாக நடைபெறுகிறது என்றால் அதன் சிறப்புக்குச் சொல்லவும் வேண்டுமா?  ஷோவில் பங்கு பெரும் கலைஞர்களின் எனர்ஜியைப் பற்றி அவசியம் சொல்லவேண்டும். ஓடித் தாவி குதித்துப்  பறந்து ஆடிப் … Continue reading