குவிகம்  அக்டோபர்   2015 இதழில் வழக்கம் போல  25 பக்கங்கள் இருக்கின்றன !

நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்து  செல்லும்போது உங்களுக்கு முதல் பதினைந்து பக்கங்கள் மட்டும் தெரிந்தால் click older entries என்ற அறிவிப்பைக் கிளிக் செய்யவும். மற்றப்  பத்துப் பக்கங்களையும் பார்க்கலாம்.

அதேபோல்  click older entries என்ற தலைப்பை அது தோன்றும் சமயத்தில்  கிளிக் செய்தால்   சென்ற மாதங்களின் குவிகம் இதழையும் படிக்கலாம்.

பக்கத்தின் நடுவில்  " keep reading” என்று மெசேஜ் இருந்தால் அதைக் க்ளிக் செய்தால் முதலில் படித்ததன்  தொடர்ச்சி கிடைக்கும். 

இதுவரையில்  580   டிஜிட்டல் பக்கங்கள் உள்ளன . அவற்றை எப்போது  வேண்டுமானாலும் படிக்கலாம் !

தலையங்கம்

image


எங்கே போகிறோம்?

இந்திய எழுத்தாளர்கள்  23 பேர் தங்கள்  சாகித்ய அகாதமி விருதுகளைத் தேவையில்லை என்று திரும்ப அளிக்கும் நிகழ்ச்சி தற்சமயம் நிகழ்ந்து கொண்டு வருகிறது. மேலும் பதினைந்து  எழுத்தாளர்கள்  திருப்பித் தரத் தயாராயிருக்கிறார்கள் என்றும் சொல்லப் படுகிறது. 

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் :

 சாகித்ய விருது பெற்ற கல்பர்கி  என்ற எழுத்தாளரைக்   கொன்ற போது அகாதமி மவுனம் சாதித்தது. மேலும்  அனந்தமூர்த்தி , பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்களைத் தாக்கிய போதும் அகாதமி அமைதியாகவே இருந்தது. மதத்தின்  பெயரால் பேச்சுரிமை – எழுத்துரிமை நசுக்கப்படுகிறது. அதற்கும்

அகாதமி

கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது.  அகாதமியா ?  அரசு இயந்திரமா? 

இன்னும் நமது வேற்றுமையில் ஒற்றுமையை குலைக்கும் செய்திகள்: 

ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக ஃபட்வா  இட்டிருக்கிறார்கள். அவர் ஈரான் தயாரித்த ‘முகம்மது’  என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறாராம்.  

சிலர் பசுக்களைத் தெய்வமாகப் பார்க்கிறார்கள். சிலர் அதைச் சாப்பிடுவதைத் தங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பசு வதை தடை செய்யப் படுகிறது. பசுக்களை சாப்பிடுபவர்கள்  கொல்லப்படுகிறார்கள். அதைக் கண்டித்து மற்றவர் பசு மாமிசம் உண்ணும் விழா நடத்துகிறார்கள். 

அரசியல்வாதிகளும் பதவி விரும்பிகளும் தங்களுக்குப் பிடித்த அந்த ‘சிலரை’ ஆதரித்து மற்றவரை எதிர்த்து அறிக்கை விட்டு எரியும் நெருப்பில் எண்ணை விட்டுக் குளிர் காய்கிறார்கள். 

நாம் எங்கே போகிறோம்? 

மதம் என்ற இரும்புச் சங்கிலியை எடுத்துவிட்டு மனிதம் என்ற அன்புச் சங்கிலியில் இணைவோம்!

வெறுப்பு என்ற களையைக் களைந்துவிட்டு  நட்பு என்ற பயிரை வளர்ப்போம்!

எழுத்தாளர்களும், ஊடகங்களும் இவற்றைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

நமது நாடு முன்னேற அது தான் ஒரே வழி!


Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191  
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா

page

இலக்கியவாசல் -7

image

குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு

தலைப்பு                      : அசோகமித்திரன் படைப்புகள்                      
உரையாற்றுபவர்:       திரு சாரு நிவேதிதா

இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ்

இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கர்

             24 அக்டோபர், 2015 சனிக்கிழமை

                               மாலை 6.30 மணி

இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் சென்னை  600041 (திருவான்மியூர் சிக்னல் TO திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில் )

இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து  கொள்ள அழைக்கிறோம்.

ஷாலு மை வைஃப்

image


ஷாலுவை கல்பாக்கத்தில்  பார்த்த ஞாபகம் என் கண்ணில் அப்படியே நிற்கிறது. 

கல்பாக்கத்தில் ஒரு  சிறிய எளிமையான அழகிய வீடு. அங்கே பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக்கொண்டிருந்தது. நான், என் நண்பன், அவன் பெற்றோர்கள் நால்வரும்  அப்போது தான் பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்று முடித்தோம். அவள் பட்டுப்புடவையைத் தழையத் தழையக் கட்டிக்கொண்டு  கையில் காபி  ட்ரேயுடன் தயங்கித் தயங்கி வந்தாள். வைத்த கண் மாறாமல் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தான் முதலில்  காபி கிடைத்தது. காபி குடிக்கவேண்டும் என்பதே தெரியாமல் அவள் மற்றவர்களுக்குத் தரும் அழகையே ரசித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் இருக்கும் என் நண்பன் காபியைக் குடித்துக் கொண்டே மெதுவாக என் காதில் கேட்கும் அளவில்  ‘எனக்குப் பிடிக்கலை’ என்றான். 

அப்போது தான் நான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டேன். 

அதற்குள் அவள் அப்பா ’ பொண்ணுக்கு சங்கீதம் கத்துக் கொடுத்திருக்கிறோம். ஒரு பாட்டுப் பாடம்மா ’ என்றார்.  அவள் கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் ஜமக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாட ஆரம்பித்தாள். கர்நாடக சங்கீதம் வரும் என்று எதிபார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். “ சின்னஞ் சிறு வயதினிலே சித்திரம் தோணுதடி ’ என்ற ’ மீண்டும் கோகிலா’ ஸ்ரீதேவி பாட்டைப் பாடினாள். நான் அசந்து போய்விட்டேன். அதுவும் ஸ்ரீதேவி, மேலே வரிகள் ஞாபகமில்லாமல் தடுமாறிய இடத்தைப்   பாடும்போது அப்படியே ஓரிரு  வினாடி தடுமாறிவிட்டு நிமிர்ந்து எங்களைப் பார்த்து ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு கமல் பாடும் ‘கள்ளத்தனம் என்னடி’ என்ற வரிகளையும் அவளே தொடர்ந்து பாடினாள். நான் பிரமிப்பில் திகைத்து மனதுக்குள் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது என் நண்பன் மீண்டும் காதில் கிசுகிசுத்தான். "எனக்குப் பிடிக்கலை’ என்று.

‘எங்கள் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு ஊருக்குப் போய் பெரியவாளைக் கலந்து ஆலோசிச்சிட்டு முடிவைச் சொல்லுகிறோம்’ என்று  சம்பிரதாயமாகப் பேசிவிட்டு எல்லாரும் கிளம்பினோம். 

கார் கிளம்பி அவர்கள் வீட்டைக் கூடத் தாண்டவில்லை. என் நண்பன் மறுபடியும் என் காதில்  ‘எனக்குப் பிடிக்கலை’ என்றான். 

இது காரில் இருந்த மற்றவர்களுக்கும் கேட்டு விட்டது. ‘என்ன சொல்றான் இவன்? 

அப்போது தான் நானும் சுதாரித்துக் கொண்டேன். நாங்கள் வந்திருப்பது அவனுக்குப் பெண் பார்க்கத் தான்’ என்ற உணர்வு உறைக்கத் தொடங்கியது. அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை. பட்டென்று போட்டு உடைத்து விட்டேன். ” சார்! இதைக்  கேளுங்க! இவனுக்கு இந்தப் பெண் இல்லே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பிடிக்காது. ஏன்னா இவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான்.“ "டேய்..டேய்..” என்று அவன் கத்துவதைப் பொருட்படுத்தாமல் நான் மேலே சொல்லத் தொடங்கினேன். அவர்களும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு

அதிர்ச்சியுடன்

கேட்டார் கள். “என்னப்பா சொல்றே?”                                

 "ஆமாம் சார்!  இவன்  எங்க ஆபீஸில் இருக்கும் ஒரு பொண்ணைக்   காதலிக்கிறான்.“ 

அவர்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இப்படிப் படால் என்று சொல்லுவேன் என்று எதிர்பார்க்காத என் நண்பனும் என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்தான். 

"எல்லாம் அவள் சொன்னது தான் சார்.’ நீ உங்க அப்பா அம்மா சொல்ற பொண்ணைப்  பாரு. அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சௌக்கியமா இரு’ என்றாள்." 

"யாரு சொன்னா?”

“ஸ்டெல்லா புருஷோத்துமன்”

“யாரு புருஷோத்துமன்? ”

“அவளோட அப்பா!”

“அப்ப ஸ்டெல்லா கிறிஸ்டியனா?”

“இல்லே தெலுங்கு பிராமின் கிறிஸ்டியன்" 

"அவ அம்மா கிறிஸ்டியனாக்கும்!

"அவ அப்பா தெலுங்கு பிராமின்" 

"பாஷை தெலுங்கு வேறயா?”

“அவளுக்குத் தமிழ் டைப்ரைட்டிங்க் நல்லா தெரியம். ஹையர்  பாஸ் பண்ணியிருக்கா”

“நாம வேலைக்கா ஆள் எடுக்கிறோம்?” என் நண்பன் கத்தினான். 

இங்கே பாருப்பா! இந்த வயசுக்கப்பறம் நாங்க தெலுங்கு , சர்ச் எல்லாம் கத்துக்க முடியாது. பேசாம அவளை மறந்துட்டு, அவ சொன்னபடியே இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு" 

“அவளும் இதைத் தான் சொல்றா?”

“எவ?”

“ஸ்டெல்லா!”

“ என்னப்பா குழப்பறே ?”

“சார்! இவன் தான் ஸ்டெல்லாவை உயிருக்கு உயிராக் காதலிக்கிறான். ஆனால் அவ இவனைக் காதலிக்கலை. ஒரு தலைக் காதல் ”

“இந்தக் கண்றாவி வேறையா?”

“ சார்! அவளும் மனசுக்குள் இவனை லவ் பண்ணறா!  ! உங்களுக்காகத் தான் அவள் தயங்கறா! நீங்க ஒத்துக்கிட்டா தான் கல்யாணம் என்று உறுதியா இருக்கா . அது இவனுக்கே தெரியாது. நேத்துத் தான் என்கிட்டே சொன்னாள். ?" 

"அப்படியாடா?”

“பின்னே எதுக்கு இந்தப் பொண்ணைப் பார்க்க ஒத்துக்கிட்டானாம்?”

“அதை அப்பறம் சொல்றேன்! இப்ப மகாபலிபுரம் பீச்  கிட்டே போய் ஒரு  நிமிஷம் அந்த பிட்ஃஜா கடைக்குப் பக்கத்தில நிறுத்துங்க”  என்றேன்.

கார் நின்றது! 

நான் அவசர அவசரமா இறங்கி அவளை அழைத்து வந்தேன்.

“ டேய்! ஸ்டெல்லா இங்கே  எப்படிடா?”

“ சார்! இவ தான் ஸ்டெல்லா ! நான் தான் இவளை இங்கே காத்திருக்கச் சொன்னேன்.”

“ இவளை எனக்குத் தெரியுமே?” என்றாள் என் நண்பனின் அம்மா. 

“ என்னம்மா சொல்றே?”

“ஆமாண்டா! சாய் பஜனிலே  நாலைந்து தடவை பார்த்திருக்கிறேன். அழகா பஜன் பாடுவா! ”

“அவ உங்களை இம்ப்ரஸ் பண்ண அங்கே வந்தது உண்மை தான். ஆனா அவளுக்கு பஜன் பண்ணவும் பிடிக்கும். சர்ச்சிலே காயர் பாடவும் பிடிக்கும். அருமையான  குரல் இவளுக்கு ”

“ ஏங்க! எனக்கு இவளை ரொம்பப் பிடிச்சிருக்கு! நம்ம பையனைக் கல்யாணம் செஞ்சிக்க இவ ஒத்துப்பாளோ?”

“என்னம்மா இப்படிக் கேக்கறீங்க?”

‘ஏதோ ஒருதலை இருதலை அப்படின்னு சொல்றானே இந்தத் தறுதலை"

“ அய்யோ !அம்மா! இதுக்காகத் தான் நான் காத்துக்கிட்டிருக்கேன்!” என்றாள் ஸ்டெல்லா!

“ இவ்வளவு நல்ல பொண்ணைப்  பத்தி முதலிலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே ! ஏன் இந்த விபரீத பொண்ணு  பார்க்கிற விளையாட்டு ?. அவங்க என்ன நினைச்சுப்பாங்க?  

” அதை நானே சொல்றேன் அப்பா! இவனும் அந்த ஷாலுவும் ஏற்கனவே லவ் பண்றாங்க" 

“ இதென்னடா புதுக் கூத்து?" 

” இந்த மகாபலிபுரம் லைட் ஹவுஸ் கிட்டே தான் இவனுக்கும் ஷாலுவுக்கும் காதல் பிறந்தது" 

“எங்கே! அந்தக் குரங்குகள் எல்லாம் ஒடுதே அங்கேயா?”

“ஆமாம்பா! அந்த அனுமார் சீதையையும் ராமரையும் மட்டும் சேர்த்து வைக்கலை ! இவனையும் ஷாலுவையும் சேர்த்து வைத்ததே அவர் தான்." 

“ அப்ப நீ தான் அந்த அனுமாரா?” என்று கேட்ட அவன் தந்தை  "சரி ஸ்டெல்லா நீயும் காரில் ஏறிக்கொள். நாம் எல்லாரும் அந்த  ஷாலு வீட்டுக்குப் போய்  மன்னிப்புக் கேட்போம். அதோட இவனுக்காவும் பொண்ணும் கேட்போம்.“ 

” அப்பா! நீங்க கிரேட்! இவனுக்கு நம்மை விட்டா வேறு யாரு இருக்கா பொண்ணு கேட்க! அதனால் தான் இந்த நாடகம்" 

image

அங்கே ஷாலு வீட்டில் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தனர் ….

“ என்னடி சொல்றே? இந்த மாப்பிள்ளைப் பையன் வேண்டாமா? அவன் கூட வந்த சினேகிதனைத் தான் கட்டிப்பியா? ”

“ நீ முதல்லே அவன் கிட்டே காபி கொடுக்கும் போதே நினைச்சேன்" 

"அந்த மாப்பிள்ளைப் பையன் காபி குடிச்சுட்டு ஏதோ விளக்கெண்ணை குடிச்சா மாதிரி இருந்தானே?  அப்பவே எனக்கு ஏதோ சந்தேகம்”

“ஐயோ நான் புது அத்திம்பேர் மூஞ்சியைச் சரியா பாக்கலையே?”

“நான் இன்னும் அவனை ஒகேயே பண்ணலை , அதுக்குள்ளே அத்திம்பேர்  உறவா? ”

“அப்பா! இது உல்டா மணிரத்னம் படம் மாதிரி. இல்லே ! தங்கச்சியைக்  கட்டிப்பேன்னு அரவிந்த்சாமி ரோஜாவில சொல்லலே?" 

“சரி! ஷாலு! உனக்கு ஓகே தானா? ”

“என்னப்பா! விடிய விடிய கதை கேட்டுட்டு சீதைக்கு அனுமார் அத்திம்பேர்   என்கிற மாதிரி கேட்குரே?”

“அது சரிடி! அவரை எங்கே பார்த்தே? ”

அது ஒரு  தனி கதைம்மா! அனுமார் சீதையும் ராமரையும் மட்டும் சேர்த்து வைக்கலை !“

"வேறென்ன பண்ணினார்? 

” எங்களையும் மகாபலிபுரம் லைட் ஹவுஸ் கிட்டே அவர்  தான்  சேர்த்து வைச்சார்!“

"அதென்னடி புதுக்கதை?”

ஷாலு சொல்ல ஆரம்பிக்குமுன் வாசலில் கார் வந்து நின்றது. 

மனோரமா

image


கோபிசாந்தா என்கிற மனோரமா என்கிற ஆச்சி என்கிற தமிழ்த் திரையின் நவரச நாயகி மறைந்து விட்டார். 

கின்னஸ் சாதனை படைத்தவர். ரேடியோ,டி.வி.மற்றும் நாடக மேடைகளில் தனது முத்திரையைப் படைத்தவர்.  

1500 படங்கள்,1000 மேடை நாடகங்கள், பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, தேசிய விருது (புதியபாதை படத்திற்காக) ,ஃபிலிம்பேர் விருது என்று விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர். 

தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார்.  

நாகேஷுடன்  நூற்றுக்கணக்கான படங்கள் நடித்து நகைச்சுவை மழையைப் பொழிந்தவர். 

செட்டி நாட்டுத்  தமிழ், சென்னைத் தமிழ்,

செந்தமிழ்,

பிராமணத் தமிழ், கிராமத்துத் தமிழ், பணக்காரத் தமிழ் என்று பல குரலில் பேசிய தமிழ்த் தாய் அவர்கள். 100க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியவர். 

மனோரமா என்றதும் நினைவுக்கு வரும் படங்கள் :

image

அன்பே வா, தில்லானா மோகனாம்பாள், சம்சாரம் அது மின்சாரம், கலாட்டா கல்யாணம், சின்னக் கவுண்டர், பொம்மலாட்டம், அபூர்வ சகோதரர்கள், புதியபாதை, சின்னத்தம்பி, ஞானப் பறவை ( சிவாஜிக்கு ஜோடி) ,பாட்டிசொல்லைத் தட்டாதே,காசே தான் கடவுளடா , கிழக்கு வாசல், கொஞ்சும் குமரி, சரஸ்வதி சபதம், அண்ணாமலை,  

குவிகம் மனோரமாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறது! 

page

மூன்று நிமிடம் ஓடும் பாசமலர் படத்தின் இறுதிக் காட்சியை இன்று  பார்ப்பவர்கள் ஓவர் ஆக்டிங்கிற்கு உதாரணம் என்று பேசக்கூடும் . 

ஆனால் அன்று இதைப் பார்த்துவிட்டு முரட்டுக் கண்களிலிருந்து கூடக்  கண்ணீர் பெருகியது! 

இன்றும் இதைப் பார்த்துவிட்டு உங்கள் கண்களில் கண்ணீர் கசியுமானால் நீங்கள் நிச்சயம் ஒரு பாச மலர் தான்.

page