பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்

Zebra finch - Wikipedia

போன் அலறியது. அல்லி தான் போனில்.

“மாமி!” என்றாள் அல்லி.

அங்கயர்க்கண்ணி மாமி, “அல்லி! ரொம்ப நாளைக்கப்புறம் உன் குரலைக் கேட்கிறேன். என்ன செய்தி” என்றாள்.

“மாமி, ‘வரிக்குதிரை சிட்டுக்குருவி’ – கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றாள் அல்லி.

“அது என்னடி? வரிக்குதிரை கேள்விப்பட்டிருக்கிறேன். சிட்டுக்குருவி கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன காம்போ, இட்லி- சாம்பார் மாதிரி?” என்றாள் மாமி.

“அதன் பெயர் சீப்ரா பிஞ்ச் (zebra finch)” என்றவள், தொடர்ந்தாள்.

“பறவைகள் ஒன்றோடொன்று தகவல் பரிமாறிக்கொள்வதைப் புரிந்துகொண்டதற்காக ஒரு விஞ்ஞானிக்கு $100,000 பரிசுத் தொகை கிடைத்தது.”

‘நம்ம பாரதியார் குயில் பாட்டு எழுதினாரே அது போலவா” என்றாள் மாமி.

அல்லி தொடர்ந்தாள்:

“மாமி, அது கவிதை. இது விஞ்ஞானம். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இருவழித் தகவல் தொடர்பை மேம்படுத்துவதில் முன்னேற்றம் அமைந்துள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் ஜூலி எலி (Dr. Julie Elie) இந்த ஆராய்ச்சி செய்துள்ளார்”.

“பறவைகளைப்பற்றி ஆராயும் விஞ்ஞானி பெயர் ‘எலி’யா? நல்ல வேடிக்கை” என்று சிரித்த மாமி அடங்கினாள்.

அல்லி தொடர்ந்தாள்:

“ஜூலி எலி என்ற அந்த விஞ்ஞானி, சீப்ரா பிஞ்ச் (zebra finch) எனப்படும் பறவைகளின் அகராதியில் உள்ள 11 முக்கியமான ஒலிகளையும், அவற்றின் அர்த்தங்களையும் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளார். இந்தப் பறவைகள் தாங்கள் யார், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மற்ற பறவைகளுக்குத் தெரிவிக்கத் தனித்துவமான ஒலிகளைப் பயன்படுத்துகின்றன என்று அவரது ஆய்வு கூறுகிறது. சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பறவைகளைத் தொடர்ந்து கவனித்து வந்த ஜூலி எலி, அவற்றின் ஒலிகளைப் பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு (Machine Learning) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்

பறவைகள் ஒரே மாதிரியான சத்தம் கொண்ட ஒலிகளைக் காட்டிலும், ஒரே அர்த்தம் கொண்ட ஒலிகளையே அதிகமாகக் எழுப்பிக்கொள்கின்றன என்பது இவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாகும். பறவைகள் தாங்கள் எழுப்பும் ஒலிகளின் அர்த்தத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், 2030-ஆம் ஆண்டிற்குள் விலங்குகளுடன் பேசும் ரகசியத்தை மனிதர்கள் முழுமையாகக் கண்டறிந்துவிடுவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.” என்ற அல்லி, “மாமி, இன்று நான் ஒரு சினிமா ரெபெரென்ஸ் சொல்லப் போகிறேன். கண்ணதாசன் பாடிய” பறந்து செல்லும் பறவையை கேட்டேன்” என்றாள்.

“அட நீயும் நானுமா”, என்று பாடிய மாமி: “விசில் படத்தில, விவேக் காமெடியில, மிருகங்கள் பேசுறதப் புரிஞ்சுக்கற மாதிரி காட்சிகள் வருமே.. அது போலத்தானே இது” என்று ஒரு போடு போட்டாள் மாமி!

இது ஒரு அதிசய உலகம்!

https://www.theguardian.com/science/2026/jun/26/human-animal-communication-step-closer-scientist-wins-prize-for-decoding-birdsong